அன்றைய ‘பட்டுப் பாதை’யில் அமைந்திருந்த நிஷாபூரின் அந்தத் தெரு, ஒரு வணிக வீதியாகக் காட்சியளிக்கவில்லை; அது அச்சமும் தூசியும் சுருண்டோடும் வற்றிய நதிபோல் கிடந்தது. வீசிய காற்றில் இரும்பின் கசப்பு கலந்திருந்தது; அது போர் நெருங்கி வருவதன் எச்சரிக்கை. அத்தரின் அந்தச் சிறு மருந்தகத்தின் கதவு திறந்திருக்க, உள்ளே பரீதுத்தீன் அத்தர் காய்ந்த சாமந்தி மலர்களைப் பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அங்கே நிலவியது நறுமணங்களின் தியானம்.
சட்டென்று யாரோ உள்ளே நுழைந்தார்கள். அத்தர் நிமிர்ந்து பார்த்தார். எல்லாவற்றையும் மீறி அவர் முகம் மலர்ந்தது. அந்த அகன்ற தோள்கள், அவர் என்றும் மறக்க முடியாதவை. பால்கின் பண்டிதர், பழைய நண்பர் — பஹாவுத்தீன் வலத்.
ஒரு காலத்தில் நிலா வெளிச்சத்தில், சூடான ரொட்டியைப் பிட்டுண்ணும் வேளையில் பிரபஞ்ச ரகசியங்களைப் பேசிய அதே முகம். இன்று ஆயிரம் உயிர்களைக் காக்கும் பெரும் பொறுப்பால் சோர்வடைந்து கிடந்தது.
“வந்துவிட்டாயா?” என்றார் அத்தர்.
“உன்னைச் சந்திக்காமல் நிஷாபூரைக் கடக்க மனம் ஒப்பவில்லை,” என்றார் பஹாவுத்தீன், நண்பரை அணைத்தபடி. “மங்கோலியர்கள் அமு தர்யாவைக் கடந்துவிட்டார்கள். அவர்கள் மனிதர்கள் அல்ல, சாம்பலையும் விழுங்கும் காட்டுத்தீ. என் குழு விடியற்காலையில் மேற்கே புறப்படுகிறது. அத்தர், எங்களோடு வந்துவிடு.”
அத்தர் தன் தராசைப் பார்க்கவே இல்லை. அமைதியாகச் சொன்னார்:
“பஹாவுத்தீன், நீ விளக்கை அணையாமல் காக்க ஓடுகிறாய். இருளைக் கண்டு ஏன் ஓட வேண்டும் என்று நானிங்கு நிற்கிறேன்.”
பஹாவுத்தீன் பெருமூச்சு விட்டார். அது, பதில் முன்பே தெரிந்துவிட்ட ஒரு மனிதனின் மௌன அங்கீகாரம்.
அப்போதுதான், கதவோரம் நின்றிருந்த அந்தச் சிறுவனை அத்தர் கவனித்தார். அவன் பஹாவுத்தீனின் மகன் — ஜலாலுத்தீன்.
அத்தர் அந்தச் சிறுவனை முன்னரே கவனித்திருக்கிறார். ஒருமுறை தாயின் ஆடையைப் பற்றிக் கொண்டிருந்த குழந்தையாக; இன்னொரு முறை மத்ரஸாவிற்கு வெளியே ஏகாந்தமாக தூசியில் குச்சியால் கோடுகளிட்டுக் கொண்டிருந்த சிறுவனாக. அந்தச் சிறுவனின் மௌனத்தில், சாதாரணக் காற்றைச் சலனப்படுத்தும் ஏதோ ஒரு தெய்வீகம் இருப்பதை அவர் உணர்ந்திருந்தார்.
சிறுவன் இப்போது மேசை மீதிருந்த ஒரு கண்ணாடிக் குடுவையை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள், நறுமண எண்ணெயில் மூழ்கியிருந்தது ஒரு வாடிய ரோஜா.
“அந்த ரோஜாவைப் பார்க்க உனக்கு வருத்தமாக இருக்கிறதா ஜலாலுத்தீன்? செடியிலிருந்து பிரிக்கப்பட்டு, இந்தக் குடுவைக்குள் அது சிறைபட்டுக் கிடக்கிறதே?” என்று கேட்டார் அத்தர்.
சிறுவன் கண்களை எடுக்காமலே சொன்னான்:
“இல்லை மாஸ்டர், அது சிறைப்படவில்லை. அது தோட்டத்தையே மறந்துவிட்டது. ஏனெனில், அது இப்போது எண்ணெயின் நறுமணமாகவே மாறிவிட்டது. மீண்டும் அது செடியிடம் போகத் தேவையில்லை. அது அந்த எண்ணெயையே ஒரு தோட்டமாக மாற்றிவிட்டது.”
அத்தர் உறைந்து போனார். சூஃபித்துவத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும் அந்தக் குழந்தை ஒரு நொடியில் சொல்லிவிட்டது.
அத்தர் ஜலாலுத்தீனின் கைகளைப் பற்றிக்கொண்டார். அந்தச் சிறுவனின் கண்களில் தெரிந்த தாகம், அவரைப் பேசத் தூண்டியது.
“ஜலாலுத்தீன், இந்தச் சிறு குடுவைக்குள் இருக்கும் எண்ணெய் அந்த ரோஜாவைத் தன்னுள் கரைத்துக்கொண்டது போல, ஒருவன் இறைவனை அடைய ஏழு பள்ளத்தாக்குகளைக் கடக்க வேண்டும்,” என்றார் அத்தர் மெல்லிய குரலில்.
“முதலில், தேடல். உன்னிடம் இருக்கும் எல்லா ஆசைகளையும் நீ துறக்க வேண்டும்; உள்ளுக்குள் ஒரு தீராத தாகம் பிறக்க வேண்டும். அதுவே முதல் பள்ளத்தாக்கு. பின்னர், காதல். அங்கே உன் அறிவு வெறும் சாம்பலாகும். எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாத ஒரு பைத்தியக்காரத்தனமான காதல் அது. அந்தக் காதலின் வழியே உன் இதயம் திறக்கும்போது, அறிவு எனும் மூன்றாவது பள்ளத்தாக்கு தோன்றும். அங்கே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் உன்னிடம் தன் மெய்யான ரகசியத்தைப் பேசத் தொடங்கும். நான்காவது, பற்றின்மை. ‘நான்’, ‘எனது’ என்ற அகந்தை கரைந்து, உனக்கு முன்னே இந்த உலகம் வெறும் தூசியாகத் தெரியும் நிலை. அங்கிருந்து நீ ஒன்றித்தலின் பள்ளத்தாக்குக்குச் செல்வாய். அங்கே பலவாகத் தெரியும் கோடிக்கணக்கான உருவங்களும் உண்மையில் ஒன்றே என்பதை உன் ஆன்மா உணரும். அடுத்தது, மயக்கம். ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு அங்கே பதில் இருக்காது; மௌனம் மட்டுமே பதிலாக எஞ்சும். இறுதியில், ஏழாவது பள்ளத்தாக்கு — அழிவு. ஒரு சிறு துளி மகா சமுத்திரத்தில் விழுந்து மறைவதைப் போன்ற தருணம் அது. அங்கே ‘நீ’ மறைந்துவிடுவாய்… அங்கே கடவுள் மட்டுமே எஞ்சியிருப்பார்,” என்று சொல்லி முடித்தார் அத்தர்.
சிறுவன் ஜலாலுத்தீன் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அந்தப் பள்ளத்தாக்குகளை அவன் ஏற்கனவே தன் மனக்கண்ணால் கடந்துவிட்டது போல அவன் முகம் ஒளிர்ந்தது.
அத்தர் சிறுவனின் தலையை வருடினார். “இன்று நீ ஏழாவது பள்ளத்தாக்கின் ரகசியத்தைப் பேசிவிட்டாய். இனி நீ படிக்க வேண்டியது புத்தகங்களை அல்ல, உன் ஆன்மாவை.”
அத்தர் தனது வாழ்நாளின் முக்கியப் படைப்பாகக் கருதிய ‘அஸ்ரார் நாமா’வின் (ரகசியங்களின் நூல்) கையெழுத்துப் பிரதியை எடுத்து அந்தச் சிறுவனிடம் வழங்கினார்.
“பஹாவுத்தீன், நீ ஒரு ஏரியை வழிநடத்திச் செல்கிறாய். ஆனால் அந்த ஏரியின் பின்னால் ஒரு மாபெரும் சமுத்திரம் (சிறுவன் ஜலாலுத்தீன்) தொடர்ந்து வருவதை நீ அறியமாட்டாய்,” என்றார்.
விடியற்காலையில் வணிகக் குழு புறப்பட்டது. நிஷாபூர் மரண அமைதியில் மூழ்கியது.
சில மாதங்களில் மங்கோலியர்கள் நிஷாபூரை அடைந்தார்கள். ஒரு வீரன் அத்தரைச் சிறைபிடித்து சாலையில் இழுத்துச் சென்றான்.
வழியில் ஒரு செல்வந்தன் கூவினான்: “அந்தப் பெரியவரை விட்டுவிடு, அவருக்குப் பதிலாக ஆயிரம் தங்கக் காசுகள் நான் தருகிறேன்!” அத்தர் வீரனிடம் சொன்னார்: “இப்போது விற்காதே. இதற்கு மேல் நல்ல விலை வரும்.”
சிறிது தூரம் சென்றதும் ஏழை விவசாயி ஒருவன் வந்தான். “என்னிடம் தங்கம் இல்லை, இந்தப் பழைய வைக்கோல் மூட்டையைத் தருகிறேன், அவரை விட்டுவிடு,” என்றான். அத்தர் புன்னகையுடன் சொன்னார்: “இப்போதே விற்றுவிடு வீரனே! அதுதான் என் மெய்யான மதிப்பு.”
அடுத்த கணம் அவர் கழுத்தில் வாள் இறங்கியது. அத்தர் எனும் அந்த ஒரு துளி, கடலில் கலந்தது.
மேற்கில் எங்கோ, ஜலாலுத்தீன் தன் மார்போடு அந்த நூலை அணைத்தபடி நடந்து கொண்டிருந்தான். தனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அந்த ஞானச் சமுத்திரம், ஒருநாள் ‘மஸ்னவி’ எனும் பெயரில் உலகெங்கும் பிரவாகமெடுக்கப் போவதை அந்தப் பிஞ்சு மனம் அப்போது அறிந்திருக்கவில்லை.

Leave a comment