நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதைத் தொகுப்பின் தலைப்புக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு — “நூர் அலா நூர்”. இந்தத் தலைப்பு எதைச் சொல்ல வருகிறது? திருக்குர்ஆனின் கவித்துவமான ஒரு வசனத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் இந்தத் தலைப்பு. இதனை ‘ஆயத் அந்நூர்’ (ஒளியின் வசனம்) என்பார்கள்.
“அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.” (24:35)
இதில் வர்ணிக்கப்படும் ஒளிக்குள் ஒளிதான் “நூர் அலா நூர்”. இது ஒரு நுணுக்கமான ஓவியம் போன்ற படிமம். ஒரு சிறு தீ, அதனைச் சூழ்ந்து இன்னொரு பெருந்தீ. இங்கே எண்ணெய் எவ்வளவு தூய்மையானது என்றால், நெருப்புத் தீண்டுவதற்கு முன்பே அது ஒளிரும் நிலையில் (Potential Energy) இருக்கிறது. அந்த எரிபொருளுக்குத் தீயைத் தழுவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அது தானாகவே சுடர்விடத் துடிக்கிறது. “தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?” என்று பாரதி கேட்டது இங்கே நம் நினைவில் அலைமோதுகிறது. அந்தச் சிறு தீ நம்முடைய ஆன்மத் தீ; அந்தத் தீயுடன் இறைவனின் வழிகாட்டல் என்னும் பெருந்தீ இணையும் போதுதான் அது ‘நூர் அலா நூர்’ ஆகிறது.
இந்த வசனம் சொல்லும் ஒளியைப் புரிந்து கொள்ள பிளாட்டோவின் ‘குகை உவமை’ (Plato’s Cave) ஒரு சிறந்த பாலம். பிளாட்டோவின் கதையில், குகைக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனிதர்கள் சுவரில் விழும் நிழல்களை மட்டுமே உண்மை என்று நம்புவார்கள். யாரோ ஒருவன் குகையை விட்டு வெளியேறி, நிழல்களுக்கு ஆதாரமான சூரியனை (உண்மை ஒளியை)க் கண்டடைகிறான்.
நபிகளாரின் வாழ்விலும் ஹிரா குகை ஒரு திருப்புமுனை. இருண்ட குகைக்குள் தியானத்திலிருந்த அவர்களுக்குத்தான் “வாசிப்பாயாக” என்ற முதல் ஒளிக் கீற்று கிடைத்தது. குகை என்பது உலக மாயைகளின் இருள்; அங்கிருந்து விடுபட்டு ‘ஒளியை’ நோக்கி வருவதே ஆன்மீகப் பயணம். பிளாட்டோ சொல்வது போல நிழல்களை (மாயைகளை) விடுத்து, மூல ஒளியைத் தேடுவதையே இந்த வசனம் வலியுறுத்துகிறது.
“நெருப்புத் தீண்டாவிடினும் அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும்” என்ற வரிகள் ஒரு மனிதனின் இயல்பான நற்பண்புகளை (Fitra) குறிக்கின்றன. சில மனிதர்கள் எந்தப் போதனையும் இல்லாமலே இயல்பாகவே அறத்தின் பக்கம் நிற்பார்கள். அவர்களிடம் அந்தத் தூய எண்ணெய் இருக்கிறது.
“அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று; மேல்திசையைச் சேர்ந்ததுமன்று” என்ற வரி மிக முக்கியமானது. இது கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தத்துவத்தின் ஆன்மீக வடிவம். உண்மை என்பது கிழக்குக்கோ மேற்கிற்கோ சொந்தமானதல்ல; அது எங்கும் நிறைந்திருக்கும் பொதுவான பேரொளி. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் இறைவனைச் சுருக்கிவிட முடியாது என்பதை இந்தத் திசையற்ற ஜைத்தூன் மரம் உணர்த்துகிறது.
இன்றைய உலகில் நாம் எப்போதும் வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தைத் தேடி அலைகிறோம். ஆனால் இந்த வசனம், அந்த வெளிச்சம் நமக்குள்ளேயே ஒரு கண்ணாடிப் பாதுகாப்புடன் இருப்பதை நினைவூட்டுகிறது. அந்தப் பாதுகாப்புக் கண்ணாடி (இதயம்) எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ, அவ்வளவு தூரம் வெளிச்சம் வெளியே பாயும். நம்முடைய அகங்காரம், பொறாமை போன்ற தூசிகள் அந்தக் கண்ணாடியை மறைக்காமல் பார்த்துக் கொண்டால், நமக்குள்ளிருக்கும் அந்த ‘நூர்’ அகிலம் முழுமைக்கும் வழிகாட்டும்.
இருள் என்பது தனியாக ஏதும் இல்லை; அது ஒளியின்மை மட்டுமே. இந்த உவமை வெறும் புறக் காட்சிக்கான விவரிப்பு அல்ல; மனித ஆன்மாவின் அமைப்பைப் பற்றிய ஒரு ஆழமான மெய்ஞ்ஞானக் குறியீடு.
Leave a comment