சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த உயிரமைப்பின் ஒரு சின்னத் தூண் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற எண்ணத்தின் மீதும், பிற விலங்குகள் மற்றும் தாவரங்களை விட அதிக விலைமதிப்பு ஏதும் அதற்கில்லை என்ற எண்ணத்தின் மீதுங்கூட அனுதாபங்கொள்ளத் தொடங்கினான்.
“சரி”
அவனுடைய மூத்த உறவினள் ஒரு வெள்ளி நாணயத்தைக் கண்ணாடி நிலையின் மேல் சுண்டினாள். பின், அதை தன் உள்ளங்கைக்குக் கீழ் அமிழ்த்திப் பிடித்துக் கொண்டு, தீவிரமான முகபாவத்துடன் அவனை உற்று நோக்கினாள். மந்தமான மனச்சோர்வான பார்வையை அவளின் வெள்ளைக் கரத்தின் மீது பதித்தான். “பூ” என்றான்.
“பூ? இதற்கு முன் முதலில் நீ முடிவெடுக்க வேண்டும். பூ விழுந்தால் அந்தப் பெண்ணை மணந்து கொள்வாயா?”
“மணக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்”
“ஆ….தலை!”
“அப்படியா”
“இது என்ன முட்டாள்தனமாக பதில்?”
அவனுடைய உறவினள் சத்தம் போட்டுச் சிரித்தாள். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கீழே எறிந்துவிட்டு அந்த அறையிலிருந்து எழுந்து சென்று விட்டாள். அவள் அதிகம் சிரிக்கக் கூடியவள். அவளின் தெளிவான சிரிக்கும் குரல் வெகு நேரம் ஒலித்தது. இது அவ்வீட்டு ஆண்களினுள் ஒரு விசித்திரமான விதத்தில் செவிவழிப் பொறாமையைக் கிளப்பியது.
புகைப்படத்தை பொறுக்கியெடுத்து அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். இந்தப் பெண்ணை மணப்பது நல்லது என்று எண்ணினான். இந்த அளவு அவனால் நேசத்தை உணர முடிகிறதென்றால், தங்கள் தலைவிதியை மூத்த சகோதரர்களிடமும் தந்தைகளிடமும் ஒப்படைத்துவிட்டு அவனை மணக்க ஜப்பானில் நிறைய பெண்கள் தயாராக இருக்க வேண்டும். அது எத்தனை அழகான விஷயம் என்று அவன் எண்ணினான். அசிங்கம் என்பது தான் மட்டுமே…எண்ணத்திரியை இழந்தான், ஏனெனில் அற்பமான சுய பிரக்ஞை அவனுக்கு விழிப்புணர்வைத் தந்தது.
“சரியாகச் சொன்னால், திருமணத் துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு லாட்டரி மாதிரி. ஒரு நாணயத்தைச் சுண்டி முடிவெடுப்பது போன்றது” – அவனுடைய உறவுக்காரப் பெண் இதைச் சொன்னபோது, அவளுடைய உள்ளங்கைக்குள் இருக்கும் வெள்ளி நாணயத்திடம் தன் தலைவிதியை ஒப்படைப்பதில் அவன் உற்சாகமாகக் கூட உணர்ந்தான். ஆனால், அவள் அவனை வெறுமனே கேலி செய்கிறாள் என்பதை விளங்கிக்கொண்ட பின்னர், வராண்டாவின் விளிம்பில் இருந்த குட்டி ஏரியின் மீது அவன் தன் தனிமைப் பார்வையைத் திருப்பினான்.
என்னுடைய மனைவியாக வேண்டியவள் வேறொருத்தியாக இருப்பாளென்றால், அவளின் முகம் நீரில் பிரதிபலிக்கட்டும் என்று ஏரியிடம் பிரார்த்தித்தான். கால, வெளியூடாக காண முடியும் என்று அவன் நம்பினான். அந்த அளவுக்கு அவன் தனிமையில் இருந்தான்.
நீரின் மேற்பரப்பை உன்னிப்பாகப் பார்த்தபோது, கடவுள் எறிந்த கூர்மையான கருங்கல் ஒன்று அவனது பார்வைத் துறையில் சரிந்தது. இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு ஜோடிக் குருவிகள் கூரையிலிருந்து நீரில் விழுந்தன.
“இது இப்படித்தானோ!” என்று முணுமுணுத்தான்.
நீரின் மேற்பரப்பில் சலசலப்பு பரவி மீண்டும் அமைதி படர்ந்தது. மிக ஆர்வத்துடன் ஏரியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். நீரின் அமைதியான மேற்பரப்பைப் போல அவனது இதயம் ஒரு கண்ணாடியாக ஆனது. திடீரென்று ஓர் ஒற்றைக் குருவியின் பிம்பம் அதில் தெரிந்தது. அந்தக் குருவி பாடியது. பாட்டின் அர்த்தம் இது தான்:
“குழப்பத்தில் தொலைந்திருக்கும் உங்களுக்கு உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் உருவத்தை நான் காட்டினாலும் ஒரு வேளை நீங்கள் நம்பாமல் போகலாம். அதனால், உங்களின் அடுத்த பிறப்பில் உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் பிம்பத்தைக் காட்டுகிறேன்.”
அவன் குருவியிடம் பேசினான், “குருவியே உனக்கு நன்றி. குருவியாக மறு பிறப்பெடுத்து அடுத்த ஜென்மத்தில் உன்னை நான் மணப்பேன் என்றால், இதோ இந்தப் பெண்ணையே இவ்வுலகில் மணந்துகொள்கிறேன். ஒருவன் அவனுடைய அடுத்த பிறப்பின் தலைவிதியைப் பார்த்துவிட்டான் என்றால், இப்பிறப்பின் இவ்வுலகில் அவன் இழக்கப்போவது எதுவுமில்லை. என் அடுத்த உலகின் அன்பான அழகான மனைவி எனக்கு இவ்வுலகில் எனக்கான திருமண முடிவை எடுத்திருக்கிறாள்”
புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுக்கு தெளிவான மனதின் வாழ்த்துகளுடன் அவன் கடவுளின் பெருந்தன்மையை உணர்ந்தான்.
ஒரு நகரத்திற்குப் பயணமானபோது அங்கு பார்த்த ஒரு வீதி பலமுறை என் கனவில் வந்த ஒரு வீதிக் காட்சியைப் போலவே இருந்தது. ஒரு பக்கம் வரிசையாக வீடுகள். இன்னொரு பக்கம் அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கிடையே ஓடும் சிறு நதி. நகருக்கு நடுவே இருக்கும் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரிக்கு நடுவே அழகான வண்ணவண்ணப் படகு வீடுகள் தெரிந்தன. ஏரியைச் சுற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்று புற நகரை அடைந்த போது நான் பார்த்த தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்து நிலையமும் என் கனவில் ஒரு கட்டில் போட்டு அதில் நான் படுத்திருந்த இடத்தைப் போலவே இருந்தது. கனவில் அந்த இடம் ரொம்ப கூட்டமாய் இருந்தது. நிஜத்தில் அந்த பேருந்து நிலையம் காலியாய் இருந்தது. என் கனவில் வந்தது போன்றே ஷட்டருடனான கடைகள் இருந்தன. ஆனால் மூடியிருந்தன.
கனவில் நான் இருக்கும் இடம் பாகிஸ்தானின் நகரம் ஒன்று என்பதாக நினைத்துக் கொண்டிருப்பேன். சியால் கோட்டாக இருக்கலாம் என்று கனவுக்குள் எண்ணம் ஓடும். நிஜத்தில் பார்த்த நகரத்துக்கும் ஊக நகருக்கும் இடையே உள்ள தொலைவு இருநூறு கிலோமீட்டர் தான். இருநூறு கிலோமீட்டர் என்று சொல்லிக் கொள்வது எத்தனை presumptuous! நடுவே எல்லை இருக்கிறது. எல்லையில் பிரச்னை. எல்லையின் தொலைவு பற்றியச் சிக்கல். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை இருநூறு கிலோமீட்டராக எப்படி சுருக்கிவிட முடியும்? கனவில் நான் எல்லை தாண்டியதாக எண்ணியது பிழை. எல்லைக்குள்ளாகத்தான் இருந்திருக்கிறேன். கனவின் எல்லைக்குள்.
கண்ட கனவில் வந்த மனிதர்களை கவனிக்கவில்லை. அறிவிப்பு பலகைகள், பேருந்து எழுத்துகள் எதுவும் கனவில் தோன்றவில்லை. அவை தந்திருக்கக்கூடிய தகவல் கொண்டு இடத்தை சரியாக அனுமானித்திருக்கலாம். கனவு என்பதே நமக்கு நாம் சொல்லிக் கொள்வதும் உணர்ந்து கொள்வதும் தான். பலகைகளில் பேருந்துகளில் எழுத்துகள் தெரிந்திருந்தாலும் அவை நமக்குத் தெரிந்த மொழியில் எழுதப்படாவிட்டாலும் நாம் நினைத்துக் கொண்ட ஊரின் மொழியாகவே அது நமக்குத் தெரியும். போர்டில் ஃபார்ஸி எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவனுக்கு கனவில் வரும் ஃபார்ஸியை வாசித்துவிட முடியும் பிரக்ஞையில் அவனறிந்த மொழியாகிய தமிழ் கொண்டு. கனவுகளின் மொழி பிரக்ஞையின் மொழி.
நிஜப்பேருந்து நிலையம் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு பல வருடங்களாகிவிட்டனவாம். சியால்கோட்டுக்கு ஐம்பதுகளின் முடிவு வரை பேருந்துகள் சென்று கொண்டிருந்தனவாம்! இந்தத் தகவலின் துணை கொண்டு அடுத்த முறை கனவில் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்தால் சியால்கோட்டுக்கு பேருந்து பிடித்துச் சென்றுவிடலாம். சியால்கோட்டில் அதே வீதிக்காட்சியையும் பார்த்துவிடுவோம். ஏனெனில் வீதிக்காட்சியை பிரக்ஞைக்குள் ஏற்றிக்கொண்டால் கனவில் அதனை இருநூறு கிலோமீட்டர் நகர்த்துவது அத்தனை சிரமமில்லை. ”நிஜமாகவே” சியால்கோட்டிற்குள்ளும் அதே பேருந்து நிலையத்தை வந்தடைந்து விடுவோம்.
பெருநிலப்பரப்பில் வழிபாட்டுரிமை என்று பேசப்படுவது காஷ்மீரிகளுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து மறுக்கப்படும் ஒன்று. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, காஷ்மீரின் முக்கியச் சின்னமான ஜாமியா மஸ்ஜித் 136 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது முதல் முறை அல்ல. இது போன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பலமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி மூடப்பட்டிருக்கிறது.
ஹஸ்ரத் பாலுக்குச் சென்ற போது அங்கு வைக்கபட்டிருந்த அறிவிப்பு பலகை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது – “இது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமே ; வேறு எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது”. தொழுகை செய்ய வருபவர்களை இப்படியா பயமுறுத்துவது?
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஆறு மாதங்களுக்கு, காஷ்மீர் மக்கள் பட்ட இன்னல்கள் நெஞ்சை உலுக்கின. ஆறு மாதங்கள் மொபைல் இணைப்புகள் இல்லாமல் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்! டெல்லியில் தற்போதைய ஆட்சியும் அதன் முக்கிய இரட்டையரும் இங்கு அதிகம் விரும்பப்படுவதில்லை என்பது கண்கூடு.
உ.பி முதல்வர் டெம்ப்ளேட்டில் செயல்படுகிறார் தற்போதைய லெஃப்டினன்ட் கவர்னர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8/5/2022), இந்தியத் தொல்லியல் கழகத்தின் (ஏ எஸ் ஐ) பாதுகாப்பில் இருக்கும் வரலாற்று நினைவுச்சின்னத்திற்குள் முன்னறிவிப்பின்றி நிழைந்து ஹோமம் நடத்துகிறார். இது இதுவரை கேள்விப்படாத ஒன்று. இதற்கு ஏஎஸ்ஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராணுவத்தின் பங்கு பற்றி பலரிடம் பேசினேன். ஊக்கமளிக்கும் கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரரிடம் நான் கேட்ட கேள்விக்கு – அவர் இந்தியாவை வெறுக்கிறாரா என்றால் – சுருக்கமான பதில் – “ஆம், அது இயற்கைதானே”.
ஒவ்வொரு 20 அடிக்கும் ஒரு முழு ஆயுதமேந்திய சிப்பாய் தெருக்களைக் கண்காணிப்பதைக் காணலாம்.
விரும்பத்தகாத அரசியல் பார்வைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காஷ்மீரிகள் மிகவும் இனிமையாகவும், மரியாதையாகவும், விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருப்பதைக் கண்டேன்.
பல சீக்கியர்கள் காஷ்மீரில் வாழ்வதைப் பார்த்தேன். பஹல்காமில் ஒரு சீக்கியரும் ஒரு காஷ்மீரியும் பங்காளிகளாக நடத்தும் ஓர் உணவகத்தில் உணவுண்டேன். சீக்கியர்கள் பள்ளத்தாக்கில் வாழும்போது பண்டிட்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர் என்பது குழப்பமாக உள்ளது.
நாங்கள் தில்லி திரும்ப விமானத்தைப் பிடிக்க விமான நிலையத்தை அடையும் அதே நேரத்தில், விமான நிலையப் பகுதிக்கு அருகிலிருக்கும் அலுவலகமொன்றில் வேலை பார்க்கும் ஒரு காஷ்மீரி பண்டிட் (மீள்குடியேற்றத் திட்டத்தில் பள்ளத்தாக்கு திரும்பியவர்) வேலையிடத்திலேயே இரு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தெற்கு காஷ்மீரில் இன்னும் மிலிடன்ஸி ஓயவில்லை. சுற்றுலாப் பயணிகளைச் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் முடிந்தவரை நெடுஞ்சாலை NH44 வழியாக மட்டுமே ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அனந்த்நாக் செல்லும் சில உள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
தி காஷ்மீரி ஃபைல்ஸ் பிரபலமான திரைப்படம் அல்ல – நான் சந்தித்த கடைக்காரர்களிடம் நடத்தப்பட்ட முறைசாரா கருத்துக்கணிப்பின் அடிப்படையில். ஒரு சால்வை விற்பனையாளர் குறிப்பிட்டார் – நாங்கள் படத்தை எங்கே பார்ப்பது? – ஆம், இரண்டு தசாப்தங்களாக முழு பள்ளத்தாக்கிலும் சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் இல்லை. நம்ப முடிகிறதா?
இந்தக் கோடையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை மொய்க்கின்றனர். ஐனவரியிலிருந்து மே மாதத் தொடக்கம் வரை ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகளை காஷ்மீர் வரவேற்றுள்ளது. இதை ஒரு மகிழ்ச்சி தரும் முன்னேற்றமாக சராசரி காஷ்மீரிகள் கருதுகின்றனர்.
படம்: ஜாமியா மஸ்ஜித், ஶ்ரீநகர் – காஷ்மீரிகளின் மத-கலாச்சார நரம்பு மையம்
திங்கட்கிழமையை ஒரு நாள் தள்ளி வைத்தால் அடுத்த தினமும் திங்கள் முழுக்கவும் தவிர்த்தால் ஞாயிறும் திங்கள் வெள்ளிக்கிழமை மாலையில் நிரந்தரமாய்த் தங்கிவிட நேரத்தைக் கேட்டுக் கொண்டேன் பரிசீலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே திங்களுக்கு வெகு அருகில் சென்றுவிட்டது நேரம் நகர்ந்து சென்ற பின்னர் நேரும் வெறுமையில் திக்குத் தெரியாமல் கண்கள் கூசி தோராயமாய் திங்களை நோக்கி ஓடினேன் நேரத்தை நோக்கி என்று சொன்னால் இன்னும் பொருந்தும்
Hazrat Bal, Sri Nagar, Kashmir (from Dal Lake Side)
பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு இருக்கிறதாம். பொதுவாக ஶ்ரீநகரில் வெளி மாநிலத்துக் காரர்கள் எவரையும் டாக்ஸி ஓட்ட விட மாட்டார்கள். அவர் எப்படி ஶ்ரீநகரில் டாக்ஸி ஓட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. குல்ஸார் எங்களை ஓட்டல் வாசலில் விட்டுச் சென்றவுடன் அருகிருந்த டீக்கடையில் காஷ்மீரப் பானம் காவா அருந்திக் கொண்டிருந்தோம். ஹஷீமுக்கு நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் எப்படித் தெரிந்தது எனத் தெரியவில்லை. டீக்கடையை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது எங்களைப் பார்த்து கையாட்டினார். பேக்கேஜ் டூரில் இடம்பெற்றிராத ஹஸ்ரத் பால் தர்கா ஷரீஃபுக்கு ஹஷீமுடன் போகலாமென உடனடியாக முடிவெடுத்தேன்.
ஹஸ்ரத் பால் சென்றடைந்தபோது இரவுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. என்னை உள்ளே அனுமதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்தது. தலைமுடியை மறைக்கும் படி குல்லா அணிய வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். ஹஷீம் தன் குல்லாவை எடுத்து வந்திருந்தார். பிராரத்தனைக் கூடத்துக்கு முன்னதாக காவலர்கள் நின்றிருந்தனர். தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு காவலர் என் பெயர் என்ன என்று கேட்டார். என்ன பெயர் சொல்வது என்று சில கணம் தயங்கினேன். பின்னர் அசல் பெயரைச் சொன்னேன். அவர் ஏற்கனவே நான் இந்து என்று ஊகித்திருக்க வேண்டும். “இரவுப் பிரார்த்தனை முடிந்த பின் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றார் போலீஸ்காரர். தர்காவின் பின் புறம் இருந்த டால் ஏரிக்கருகே நின்று காத்துக் கொண்டிருந்தோம். தொழுகை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. மைக்கில் ஒலித்த தொழுகையில் கவனத்தை குவித்து ஏரியின் மேல் பார்வையை பதித்திருந்தேன்.
பிரார்த்தனை முடிந்தது. நாங்கள் பிரதான வாயில் வழியாக முதல் பிரார்த்தனை பகுதிக்குச் சென்றோம். அந்தப் பகுதியில் சிலர் இன்னமும் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். கையை எப்படி வைத்துக்கொள்வது? அவ்வப்போது கோயிலில் கையைக் கூப்புவது போல் வைத்துக் கொண்டேன். இது தர்காவல்லவா? கை கூப்புதல் சரியாக இருக்காது. கையைக் கட்டிக் கொண்டேன். நான் இயல்பாக இல்லை என்று எனக்கே தெரிந்தது. தொழுகையில் இருந்த சிலரைத் தாண்டி கண்ணாடிக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான டயரி போன்ற ஒன்றை எனக்கு ஹஷீம் காண்பித்தார். கறுப்பு மையில் மணிமணியாக அரபி மொழியில் குர்ஆன் மூலமும் ஒவ்வொரு அடிக்கு கீழே சிவப்பு மையில் பர்சியனில் அந்த அடியின் அர்த்தமும் எழுதப்பட்டிருந்தன. பர்சியனை உர்து என்று சொன்னார் ஹஷீம். தொழுகையாளர்களுக்கு எங்களின் பேச்சு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஹஷீமுடன் அதிகம் பேசவில்லை. “இந்த குர்ஆனை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஹஷீம். அதைக் கண்டு கொள்ளாமல் நான் மூலப்பிரார்த்தனை அறைக்குள் சென்றேன். தொழுகை முடிந்து மக்கள் எழுந்தனர். குர்ஆன் ஓதிய அந்த இளவயது மௌல்வியிடம் சென்று ஒவ்வொருவராய் கைகுலுக்கி விடை பெற்றனர். மௌல்வி அங்கிருந்து கிளம்பும் முன்னர் என்னைப் பார்த்தார். பின் என்னருகே வந்து கை கொடுத்தார். “சப் கைரியத்?” என்று வினவினார். நான் தெற்கிலிருந்து வருவதாகச் சொன்னேன். அது ஒரு சம்பிரதாயமான பேச்சு. நான் தெற்கா, மேற்கா, வடக்கா என்று என் belongingness குறித்த குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு! மௌல்வி “குதா ஹாஃபீஸ்” எனச் சொல்லி இன்னுமொரு முறை கைகுலுக்கி விடை பெற்றார்.
பின்னர் ஒரு முதியவர் என்னை அணுகி என் பெயரைக் கேட்டார். ஹஸ்ரத் பால் ஷரீஃப் பற்றிய தகவல்களை எனக்குச் சொல்லலானார். நபிகள் நாயகத்தின் ரெலிக் எந்தெந்த நாட்களில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் என்று விவரமளித்தார். நான் சற்றும் எதிர்பாராத வகையில் ரெலிக் இருக்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். மூடியிருந்த அறையின் பூட்டுகளில் என் தலையை லேசாக இடித்த மாதிரி வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணித்தார். அவர் சொன்னது மாதிரி செய்து இரு நிமிடங்கள் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தேன். அந்த இரு நிமிடங்களில் சில கணங்களுக்கு தவறுதலாக என் கரங்களை கூப்பினேன். என் தலையில் கையை வைத்து வாழ்த்தினார் அம்முதியவர்.
ஓட்டலுக்குத் திரும்பும் வழியில் ஹஷீம் கேட்டார் – “கண்ணாடிக்குள் வைத்திருந்த அந்த கையெழுத்து குர்ஆன் பிரதியை ஏன் போட்டோ எடுக்கவில்லை? உங்களுக்கு வரலாற்று விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என நினைத்தேன்.”
“அஃப்கோர்ஸ்…அந்தப் புத்தகத்தில் என்ன விசேஷம்?”
“முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தன் கையால் எழுதிய குர்ஆன் அது என்று சொன்னேனே”
“எப்போதய்யா சொன்னீர்?”
“நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் கை கூப்பி நின்றிருந்தீர்களே”
வெட்டி உரையாடல்கள், எப்போதாவது சில நண்பர்களுடைய அறிமுகம் என நடைமுறை வாழ்க்கையில் காணும் அனுபவங்களை ஒத்தவாறு சுவையற்றதாகவே சமூக வளைதளங்களில் நேரம் கழிந்து வந்தது. இடும் கருத்துகள் ஏதோ இந்தவுலகை மாற்றியமைக்கப்போவது போலக் கூவுதற்கும் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றங்களை பறைசாற்றிக் கொள்வதற்குமான அரங்காக மட்டுமே சமூக வளைதளங்களைப் பயன்படுத்தி வந்த எனக்கு அவற்றுக்கு உயிர் காக்கும் வல்லமை உண்டு என்ற நேரடி அனுபவத்தைத் தந்த நாள் 23/4/2021.
கொவிட் பாசிடிவாகி ஏழு நாட்களாகியிருந்தன. ஜூரம் குறையவில்லை. 22ந்தேதி நடுஇரவு SPO2 தொண்ணூறாக குறைந்துவிட்டது. இரண்டு மணி நேரம் கழித்து 86. மனைவிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. சில பெரிய மருத்துவமனைகளுக்கு போன் செய்தாள். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்குமா என்று கேட்டவுடன் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி லைனை கட் செய்தார்கள். ஊரில் நண்பர்களுக்கு போன் செய்து என் காதில் விழாவண்ணம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். என் ஜுரத்தை விட அவளின் அவஸ்தை எனக்கு மிகுந்த சங்கடமளித்தது.
நண்பர் ஒருவரை அழைத்துக் களைத்துப் போயிருந்த குரலில் மெதுவாகப் பேசினேன். தொண்டை வறண்டு போயிருந்தது. அவரின் பதிலை கண்ணை மூடிக்கொண்டே கேட்டேன். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனை கிடைப்பது அரிது என்றார். அவருக்கும் கொவிட் பாசிடிவ். ட்வீட் செய்கிறேன் என்று அவர் சொன்ன போது அவநம்பிக்கையோடு தான் போனை வைத்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பாராதபடி என் நண்பர் இட்ட சின்ன டிவிட்டர் நிலைத்தகவலை படித்துவிட்டு அறிமுகமில்லாத அரசியல் பிரமுகரின் தொண்டர் ஒருவர் அதிகாலை ஐந்து மணிக்கு தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.
படுக்கைத் தட்டுப்பாடு நிலவிய இரண்டாம் அலை நாட்களில் நடுத்தர அளவிலான மருத்துவமனையில் எனக்கு இடம் கிடைத்ததையும்,
ஸ்கேனிங் சென்டரில் மிக நீண்ட க்யூ வரிசையில் நான் நின்றிருந்த போது அந்தத் தொண்டர் போனில் யாருடனோ பேசி என்னுடைய முறை உடனடியாக வரும்படி செய்ததையும்,
விதிமுறைக்கெதிராக மார்பு ஸ்கேன் ரிப்போர்ட் வரும் முன்னதாகவே (CT Severity Score 17/25) மருத்துவமனை என்னை அனுமதித்துக் கொண்டதையும்,
அனைத்து மருத்துவமனைகளிலும் பிராண வாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த வேளையில் நான் படுத்திருந்த சிறு மருத்துவமனைக்கு மட்டும் ஒரு சின்ன லாரி நிறைய சிலிண்டர் கிடைத்ததையும் –
அற்புதம் என்ற சொல்லினாலன்றி வேறெந்த சொல்லால் குறிப்பது? நன்றியுணர்வு ஆன்மாவின் மது என்பார் ரூமி. என் உயிர் காக்கப்பட்ட நன்றியுணர்வின் போதை என் வாழ்நாளெல்லாம் நீடித்திருக்கும்.
ட்வீட் செய்த நண்பர் பெயர் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவர் பெயரை இங்கே குறிப்பிடவில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் பௌத்த இலக்கியத்தை மூல நூல்களிலிருந்து மட்டுந்தான் வாசிப்பது என்று ஆரம்பித்தேன். சக்கரவாளம் நூல் வடிவில் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லாத நாட்கள் அவை. லங்காவதாரம், லோட்டஸ் சூத்திரம், பிரஜ்ன பாரமித சூத்திரம் என்று நேரடி மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து அர்த்தம் புரிந்து கொள்ள யத்தனித்தேன். இதன் அடிப்படையில் என்னால் ஒரு கட்டுரையோ பத்தியோ எழுதிவிட முடியாது என்று எனக்குத் தெளிவாயிற்று. விரைவிலேயே அம்முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று. சத்சங்கம், கதாகாலட்சேபம் என ஆத்திகர்களின் பிரயத்தனத்தைப் புரிந்து கொண்ட தருணம் அது. விகாரங்களில், புத்த கோயில்களில் நடக்கும் தம்ம உரைகளைக் கேட்கத் தொடங்கினேன். முக்கால் வாசி நான் கேட்ட உரைகள் அனைத்துமே இணைய வழி. எந்தவொரு சமய நெறியானாலும் அதற்கு விளக்கம் மற்றும் மறு விளக்கம் தருவோர் அந்த சமய மரபை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தும் பணியை ஆற்றுகின்றனர்,
அசுவகோஸரும், நாகார்ஜுனரும், பின்னால் வந்த ஆச்சாரியர்களும் பௌத்த நெறியை விளக்கியும், காலத்துக்கும் சமூக மாற்றத்துக்கும் ஏற்ற மாதிரி மறு விளக்கங்களைத் தந்தும் பௌத்த மரபை உயிர்ப்புடன் வைப்பதில் அரும் பணியாற்றினர். நம்முடைய காலத்தில் அத்தகைய ஆசாரியர்களாக நான் கருதுவது இருவரை. ஒருவர் வணக்கத்துக்குரிய தலாய் லாமா. இன்னொருவர் ஜனவரி 22 அன்று நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட வியட்நாமிய ஜென் சாது தீக் நியட் ஹான்.
இருவரும் நெருங்கிய நண்பர்கள். திக் நியட் ஹான் இறந்த சில மணி நேரங்களில் தலாய் லாமா வெளியிட்ட இரங்கல் கடிதத்தில் “நான் என் நெருங்கிய நண்பனை இழந்துவிட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இருவருமே நல்ல பேச்சாளர்கள். பௌத்த கோட்பாடுகளை சம காலத்திய மொழியில் அதிகம் மேற்கோள்கள் காட்டாமல் எளிய விதத்தில் விளக்க வல்லவர்கள். பௌத்தத்தின் முதன்மைக் கோட்பாடான பிரதீத்ய சமுத்பாதம் ( சார்பியல் கோட்பாடு) பற்றி ஒரு மேலை நாட்டினர் கேட்ட கேள்விக்கு தலாய் லாமா அவர்கள் ஒரு மேசையை உதாரணம் காட்டி விளக்கினார். அவரின் பதில் எனக்களித்த புரிதலை அதற்கு முன்னர் நான் எட்டியிருக்கவில்லை. ஒரு முறை பிரஜ்ன பாரமித சூத்திரம் பற்றி ஒரு முக நூல் லைவ்-வில் அவர் உரையாற்றும் போது “சூன்யதா” கோட்பாடு என்பது எப்படி பிரதீத்ய சமுத்பாதக் கோட்பாட்டில் மையங் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுற விளக்கினார். தலாய் லாமாவின் இவ்விரு உரைகளைக் கேட்டு உள்வாங்கிக் கொண்டதனாலேயே தேரவாதம், மகாயானப் பிரிவை – வெறும் “அகடமிக்கான” “செயற்கையான” வகைப்படுத்தல் – என்று இலங்கைச் சாது வால்போலா எழுதியதை படித்தபோது அதனுடன் ஒத்துப் போக முடிந்தது.
ஒரு காணொளியில் ஓர் இளம்பெண் “மனதில் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்கச் செய்வது எப்படி?” என தலாய் லாமாவைக் கேட்டாள்.
“எதிர் மறை உணர்ச்சிகள் இரண்டோடு தொடர்புடைத்து. ஒன்று, சுயத்தை மையப்படுத்திக் கொள்ளும் மனப்பான்மை. (Self-centred Attitude). இரண்டு, நம் கண் முன் தெரிவனவற்றை அவை தோன்றுவது மாதிரியே நிஜம் எனக் கருதிவிடல். (Grasping)”
அனாத்மன், சூன்யதா தத்துவங்களைச் சற்று லேசாக விளக்கிவிட்டுத் தொடர்கிறார்.
“பிரஜ்னாவை வளர்த்துக் கொள்வதும், உபாயா-வை அதாவது கருணையை நிலை நிறுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளுதலுமே எதிர்மறை உணர்ச்சிகளை முழுமையாக அகற்றும் வழி”
திக் நியாட் ஹான் அவர்கள் Being Peace என்னும் தன்னுடைய நூலில் பிரஜ்னாவும் உபாயாவும் ஒன்றே என்கிறார். தெளிவாய் புரிந்து கொள்ளுதலும் பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவதும் ஒன்றே என்கிறார். ஒருவரைத் தெளிவாக புரிந்து கொண்டால் அவர் மேல் அன்பு செலுத்துதலின்றி வேறொன்றும் செய்யத் தோன்றாது. நல்ல புரிதலை வளர்த்தெடுக்க அனைத்து உயிர்களையும் கருணை விழிகளுடன் நோக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புரிதல் நிபந்தனையற்ற அன்புக்கு வித்திடும். அன்பு நிலையில் இயல்பாகவே மக்களின் துன்பத்தை தணிக்கும் காரியங்களில் நம் மனமும் உடலும் ஈடுபடும். விழித்திருத்தல், அறிதல், புரிதல், அன்புடைத்தல்- இந்நான்கையும் தன்னிடத்தே கொண்டிருப்போன் புத்தன். புத்தன் நம் அனைவரிலும் இருக்கிறான்.
புத்தம் சரணம் கச்சாமி எனும் போது புத்தனும் என்னில் சரணடைகிறான் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் பாதியில்லாமல் முதல் பாதி பூர்த்தியாகாது அல்லவா? ஆனால், விழித்திருத்தல், புரிதல், அன்பு முதலானவற்றை கருத்தியல் ரீதியாக இல்லாமல் நம் பழக்கத்தில் உறையும் இயலபான குணங்களாக நாம் கொண்டிருக்க வேண்டும் என்று புத்தன் அவசியப்படுகிறான். நாம் அனைவருமே புத்தர்கள், ஏனெனில் நம் வாயிலாகவே புரிதலும் அன்பும் உணரக் கூடியதாகவும் செயல்திறனுள்ளவையாகவும் மாறும். பௌத்தம் உண்மையாக இருக்க வேண்டுமானால் “புத்தகாயம்” இருத்தல் அவசியம் – விழிப்பு நிலையின் அடிப்படையில் எழும் செய்கையின் உடலகம். புத்தகாயம் இல்லாவிடில் பௌத்தம் என்பது வெறும் சொல்லாக மட்டுமே இருக்கும்.
நடைமுறை ரீதியில் புத்தகாயம் என்னும் பௌத்த மீப்பொருண்மையியலின் கருத்தை இதை விட எளிதாக எவராலும் புரிய வைக்க முடியாது. எனவேதான் மறைந்த ஜென்குருவின் நூல்கள் பௌத்த பாதையின் உண்மையான வழிகாட்டிகளாக உள்ளன.
நூறுக்கும் மேலான பௌத்த நூல்களை ஆங்கிலத்தில் மேலை வாசகர்களுக்காக எழுதியவர் திக் நியாட் ஹான். அவர் எழுதிய “தி ஆர்ட் ஆப் மைண்ட்புல்னஸ்” ஒரு கிளாசிக். அதை படித்தது பல வருடங்களுக்கு முன்னால். பௌத்தத்தின் அடிப்படைப் புரிதல் இல்லாமலே கூட எளிதில் அணுகத் தக்க நூலாக அது இருந்தது. பின்னர் பௌத்த கோட்பாட்டுப் பரிச்சயம் வந்த பிறகு அந்நூலை மறு வாசிப்பு செய்த போது திக் நியாட் ஹான் பௌத்தத்துக்கு செய்யும் அரும்பணியின் ஆழமும் அகலமும் நன்கு புரிந்தது.
புராதன பௌத்த கோட்பாடுகளைச் சம காலத்தில் மேற்கு நாட்டார் அணுகும் வண்ணம் எளிமையான அறிமுகம் செய்து வைக்கின்றன அவருடைய நூல்கள். அதே சமயம், சுய உதவி நூல்களைப் போல் ஒலிக்கும் நூல்களல்ல அவை. ஜென் பௌத்த மரபை, அவர் பிறந்து வளர்ந்த வியட்நாமில் புழங்கும் மகாயான பௌத்த மரபை நீர்க்கச் செய்யாமல் நூல்களை எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் எழுதிய கடைசி நூல் மிகச் சமீபத்தில் அக்டோபர் 2021இல் வெளியாகியிருக்கிறது.
2014இல் மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு முடங்கிய அவர் எத்தகைய முன்னேற்றமும் இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பிரான்ஸில் ஒரு மருத்துவமனையில் இருந்தார். ஒரு நாள் தம்மை தென் பிரான்ஸில் இருக்கும் அவருடைய ப்ளம் கிராம மடாலயத்துக்கே எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். பிரான்ஸ் மடாலயத்துக்குத் திரும்பிய சில வாரங்களில் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. “தோட்டத்தில் உலாவவும், மரத்தடியில் அமரவும், பறவைகள் ஒலியைக் கேட்கவும்” தம்மால் முடிவதாக ஒரு பத்தியில் குறிப்பிட்டிருந்தார். ரத்தக்கசிவின் காரணமாக பேசும் சக்தியை இழந்திருந்த அவர் கடைசி வரை பேச முடியாமலேயே இருந்தார்.
2016இல் தாயகம் வியட்நாமுக்கு அருகில் இருக்கும் தாய்லாந்தில் உள்ள அவருடைய மடாலயத்தில் தங்க விருப்பப்பட்டார். 2016இல் அவர் தாய்லாந்துக்கு வந்தார். தாய்நாட்டில் அவர் துறவறம் பெற்ற ட்யூ (tueh) புத்த கோயிலில் வந்து தங்க வியட்நாம் அரசாங்கத்திடம் பல முறை அனுமதி வேண்டினார். இறுதியில் 2018இல் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர் தன் பயணத்தை எங்கு 1951இல் துவக்கினாரோ அந்தப் புத்த கோயிலிலேயே இறக்கும் வரை தங்கியிருந்தார்.
1966இல் அமெரிக்க பயணத்தில் இருந்த போது தாய் நாட்டுக்கு திரும்பும் அனுமதி மறுக்கப்பட்டது. போருக்கெதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தவர் – தென் வியட்நாமும் சரி வட வியட்நாமின் கம்யூனிஸ்ட் போராளிகளும் சரி – இரு சாராருக்கும் வேண்டாதவர் ஆனார். 1966 இல் அமெரிக்காவில் அவர் விட்ட ஓர் அறிக்கை வியட்நாமில் மட்டுமில்லை, வல்லரசான அமெரிக்க அரசிடமிருந்தும் அவரை தூரப்படுத்தியது. அந்த அறிக்கையில் அவர் சொன்னது : “நான் எவர் பக்கத்திலும் இல்லை. அமைதியின் பக்கம் இருக்கிறேன். போர் நிறுத்தமே நான் வேண்டுவது. எந்த அரசியல் நிலைப்பாட்டையும் நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.” 1966 இலிருந்து 39 வருடங்கள் அவர் அகதியாக இருந்தார். பிரான்ஸ் அவருக்கு அடைக்கலம் தந்தது.
கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் அவர்களுடனான திக் நியாட் ஹானின் நட்பு அமெரிக்க மக்களிடையே வியட்நாம் ஆக்கிரமிப்புக்கெதிரான கருத்து வலுப்பெற காரணமாக அமைந்தது. துறவி கேட்டுக் கொண்டதற்கிணங்கி மார்டின் லூதர் கிங் தன் உரைகளில் வியட்நாம் போர் எதிர்ப்பையும் ஒர் அஜெண்டாவாக சேர்த்துக் கொண்டார். திக் நியாட் ஹானின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார். எப்போதும் நடப்பது போல் போரில் ஈடுபட்ட இரு பக்கத்தைச் சார்ந்தவருக்கே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மார்டின் லூதர் கிங் தன் பரிந்துரையைப் பற்றி இரகசியமாக வைத்துக் கொள்ளாமல் ஒரு பேட்டியில் பகீரங்கமாகச் சொல்லிவிட்டார் என்பதால் நோபல் பரிசு இறுதிப்பட்டியலில் துறவியின் பெயர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று நோபல் கமிட்டி விளக்கம் அறிவித்தது. “மென்மையான உள்ளங்கொண்ட இந்த வியட்நாமியத் துறவியை விட (பரிசுக்கு) தகுதியானவர் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. அமைதிக்கான அவரது யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டால் உலக சகோரத்துவத்துக்கும் மனித குலத்திற்கும் ஒரு அழியா நினைவுச்சின்னத்தை உருவாக்கும்” – இது மார்டின் லூதரின் சொற்கள்.
அறுபதுகளில் போர் உச்சத்தில் இருந்தபோது திக் நியட் ஹான் மற்றும் அவருடைய சங்கத்துறவிகள் ஒரு தீர்மானம் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. குண்டுகளால் மக்கள் காயப்பட்டுக் கொண்டிருக்கையில் துறவிகள் தம் போக்கில் தியானத்தில் மூழ்கியிருக்க வேண்டுமா? அல்லது மடாலயத்தை விட்டு வெளியே வந்து தெருக்களில் குண்டடி பட்டு வீழ்ந்துகிடக்கும் மக்களுக்கு உதவிகள் செய்து அவர்கள் உயிர் காக்க வேண்டுமா? அவர்கள் இரண்டையும் செய்ய முடிவெடுத்தனர். மக்களின் உயிரைக் காத்தல் மற்றும் அதை மனக்கவனப்பயிற்சிக்குள் (mindfulness practice) மக்கள் பணியை உள்ளடக்கியவாறு செய்தல் – இப்படிப் பிறந்தது தான் திக் நியட் ஹான் உருவாக்கிய பௌத்த சமயக் கொள்கை – Socially Engaged Buddhism.
“சமூக ஈடுபாடு கொண்ட பௌத்தம் என்பது அனைத்து உயிர்களின் முழுமையான, சிக்கலான, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையைப் புரிந்துகொள்வதில் இருந்து எழும் ஒரு தர்ம நடைமுறையாகும். எல்லா உயிர்களையும் காப்போம் என்பது போதிசத்துவர் சபதம். நமது விடுதலையும் பிறர் விடுதலையும் பிரிக்க முடியாதவை என்பதை அறிவதும், தர்மத்தின் கண்ணால் உலகைப் பார்ப்பதும், கருணையுடன் உறுதியோடு தக்க செயல் புரிதலும் இதன் அம்சங்களாகும்.” (Donald Rothberg and Hozan Alan Senauke, from the essay – Turning Wheel).
சமூக ஈடுபாடுள்ள பௌத்தம் குறித்த கோட்பாட்டு அடிப்படைகளை 1951இல் எழுதிய ஒரு கட்டுரை நூலில் விரிவாக எழுதியிருந்தார் திக் நியட் ஹான். வியட்நாம் போரின் போது கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வாய்ப்பு அமைந்தது. ஆசியாவிலும் மேற்கிலும் இருந்த பௌத்த அமைப்புகளுக்கிடையிலான தொடர்புகளை நிறுவி பௌத்த அறநெறிகளின் அடிப்படையிலான சமூக-அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வியட்நாம் போர் நல்ல கேஸ்-ஸ்டடியாக அமைந்தது. போருக்குப் பின்னர், அடிப்படைகளைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தியும் கிடைத்த அனுபவங்களின் பாடங்களை மேற்படி சேர்த்து செம்மைப் படுத்தியும் சமூக பௌத்தத்தை தான் இறக்கும் வரை முன்னெடுத்தவாறிருந்தார்.
மகாயான நூல்களில் போதிசத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி போலவே சமூக ஈடுபாட்டு பௌத்தத்திற்கென்று திக் நியட் ஹான் 1993இல் உருவாக்கிய பதினான்கு உறுதி மொழிகளில் நான்காவது உறுதிமொழி இது – “ துன்பத்தை தவிர்க்கவோ, துன்பத்தைக் காண்கையில் கண்களை மூடிக் கொள்ளவோ வேண்டாம். உலக வாழ்க்கையில் துன்பத்தின் இருத்தலைப் பற்றிய விழிப்புணர்வை இழக்க வேண்டாம். சந்தித்தல்கள், உரையாடல்கள், இயங்குதல்கள் வாயிலாக துன்பப்படுபவர்களுடன் தொடர்பில் இருக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டாம். இத்தகைய வழிமுறைகளைக் கைக்கொள்ளுதல் மூலமாக உலகின் துன்ப வாழ்க்கைப் பற்றிய பிரக்ஞையை உம்மிலும் மற்றவர்களிலும் எழுப்புங்கள்”
தாய் நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் நெடுங்காலம் வசிக்கும் கட்டாயம். கடந்த நான்காண்டுகளாக அவர் ட்யூ கோயிலில் தங்கியிருந்து தன் இறுதி நாட்களை கழித்த சமயங்களிலும் உளவாளிகளைப் பக்தர் வேடத்தில் வேவு பார்க்க அரசு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். தலாய் லாமாவுக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான சிக்கல்கள். தாய்நாட்டிலிருந்து வேறு நாட்டில் தஞ்சம் கோர வேண்டிய சூழ்நிலை. சொந்த தேசத்துக்கு, அவர் வசித்த பொடாலா மாளிகைக்கு அவர் திரும்பிச் செல்வது நடக்காத காரியம் என்னும் கசப்பான உண்மையின் போதம். எனினும், இவ்விரு குருமார்களையும் காணும்போதும் அவர்களின் உரைகளைக் கேட்கும் போதும் பார்வையாளர்களின் மனதில் வந்தமரும் அமைதி அவ்விருவரின் “புத்தகாயங்களின்” நீட்சி என்பதாக எண்ண முடியும். தம் விடுதலை மற்றவர்களின் விடுதலையைச் சார்ந்திருக்கிறது என்பதை உள்வாங்கியவர்களாய், ஒவ்வோர் அடியையும் உள்வாங்கிய உண்மையின் வழி நடத்தலில் எடுத்துவைப்பதாகக் கொள்ளமுடியும்.
பிரஜ்னபாரமித சூத்திர விளக்கக் கட்டுரையொன்றில் இலை பற்றிய குட்டிக் கதையொன்றைக் கூறுவார் திக் நியாட் ஹான். – “இலையுதிர் காலத்தில் ஒரு நாள் ஒர் இலையுடம் பேசிக் கொண்டிருந்தேன். ‘இலையுதிர் காலம் என்பதாலும் மற்ற இலைகள் உதிர்ந்துவிட்டதாலும் பயமா என்று அந்த இலையிடம் கேட்டேன். இலை என்னிடம், ‘இல்லை. வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் நான் உயிருடன் இருந்தேன். நான் கடினமாக உழைத்து மரத்தை வளர்க்க உதவினேன், என்னில் பெரும்பகுதி இம்மரத்தில் உள்ளது. தயவு செய்து நான் இந்த வடிவம் மட்டுமே என்று சொல்லாதீர்கள், ஏனென்றால் இந்த இலை வடிவம் என்னில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. நான் முழு மரம். நான் ஏற்கனவே மரத்தின் உள்ளே இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், நான் மீண்டும் மண்ணுக்குச் செல்லும்போது மரத்தை தொடர்ந்து வளர்ப்பேன். அதனால்தான் நான் கவலைப்படவில்லை. நான் இந்த கிளையை விட்டு தரையில் கிடக்கும்போது நான் மரத்தை கை அசைத்து அவளிடம், ‘நான் உங்களை விரைவில் சந்திப்பேன்’ என்று கூறுவேன்.”
புத்தகாயத்தை தட்டி எழுப்புதலைத் தன் வாழ்நாள் பணியாகச் செய்து கொண்டிருப்போர் மரணிப்பதில்லை. பிற உயிர்களின் விடுதலையைத் தன் விடுதலையாக எண்ணி வாழ்ந்தோர் இறந்தும் மற்றவர்களுடனேயே உதிரத் தயாராக இருக்கும் இலை போல காற்றாக வெளியாக வானாக மேகமாக தங்கிவிடுகிறார்கள்.
இலை குட்டிக் கதை இடம் பெற்ற அதே கட்டுரையின் இறுதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் –
“நாளை, நான் தொடர்ந்து இருப்பேன். ஆனால் நீங்கள் என்னை மிகவும் கவனமாக தேடிப் பார்க்க வேண்டும். நான் பூவாகவோ, இலையாகவோ இருப்பேன். உங்களுக்கு வணக்கம் சொல்வேன். நீங்கள் போதுமான கவனத்துடன் இருந்தால் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள். வணக்கம் சொல்வீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.”
முட்களற்ற சமன் செய்யப்பட்ட இயலுமெனில் பூக்கள் இறைந்து கிடக்கும் பாதையில் வழி நடத்தக்கூடாதா!
காலில் குத்திய கல்லை நோக்குகையில் பளிச்சென பிரகாசம் கல்லின் மறு பாதி இருண்டு கிடந்தது இருட்டும் பிரகாசமுமாய் கல்லின் இரு புறங்கள் கல் இருள்கிறதா பிரகாசிக்க முயல்கிறதா
புவியும் ஒரு கல் அதன் இருளின் ஒளியின் மூலம் ஒன்று
செல்லும் பாதையைச் சலித்துக் கொள்ளாதே
பாதையில் நடக்கையில் கவனத்துடன் ஒரு பாதி இருண்டு மறு பாதி ஒளிரும் கல்லைத் தேடு
எனக்கு மிகவும் பிடித்த திக் நியட் ஹான் கவிதை. இக்கவிதையை வாசிக்கும் போது லோட்டஸ் சூத்ரா நம் நினைவில் வராமல் போகாது. அதில் வரும் ததாகதர் உரை போன்று ஒலிக்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை வரிகளை கருணை பற்றிய தியானத்திற்கான காட்சி ஊக்கியாக மறைந்த ஜென் மாஸ்டரின் சீடர்கள் பயன்படுத்துவார்களாம்.
இன்றிரவு முழு நிலவு என்பதனால் நட்சத்திரங்களை நம் பிரார்த்தனையில் அழைப்போம் பளீரென்ற ஒற்றைக் குவிய மனத்தினூடே தியானத்தின் ஆற்றல் இப்பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து வாழும் உயிர்களும் இன்றிரவு இங்கு குழுமியுள்ளன அச்சத்தின் சமுத்திரத்தினுள் இப்பூமி மூழ்குதலைக் காண்பதற்கு
நடுஇரவு மணிச்சத்தம் ஒலித்தவுடன் பத்து திசைகளிலும் அனைவரும் தம் கைகளை பிணைத்து மகாகருணை எனும் தியானத்திற்குள் நுழைவர்
வாழ்வின் காயங்களைத் துடைக்கும் தூய நீரைப் போன்று இதயத்திலிருந்து கருணை சுரக்கிறது
மன மலையின் உயரங்களிலிருந்து புத்துயிர் தரும் தண்ணீர் அருவியாகப் பொழிந்து நெல் வயல்கள் ஆரஞ்சுப் புதர்கள் வழியே பாய்ந்து செல்லும்
விஷப்பாம்பொன்று இவ்வமுதத்தின் ஒரு துளியை ஒரு புல் தாளின் நுனியிலிருந்து பருகுகிறது அதன் நாவிலிருந்து விஷம் மறைந்துவிடுகிறது
மாரனின் அம்புகள் வாசமிகு மலர்களாக மாற்றம் கொள்கின்றன
நோய் நீக்கும் நீரின் அற்புதச் செயல் திறன் – புதிரான பரிமாற்றம்! ஒரு குழந்தை அந்தப் பாம்பை அதன் கள்ளங்கபடமற்ற கரங்களில் ஏந்துகிறது
புராதன தோட்டத்தில் இலைகள் இன்னும் பச்சை பனி மீது சிரிக்கும் மின்னும் கதிரொளி இன்னமும் புனிதவூற்றின் கிழக்கு நோக்கிய பாய்ச்சல்
அவலோகிதனின் கையிலிருக்கும் சிறு கிளையோ அல்லது என் இதயமோ நோய் தீர்க்கும் நீர் ஒன்றே
இன்றிரவு அனைத்து ஆயுதங்களும் நம் காலடியில் வந்து வீழும் தூசாக மாறும்
ஒரு மலர் இரு மலர்கள் ஒரு கோடி மலர்கள் பச்சை வயல்களில் தோன்றும்
என் பரிசுத்தக் குழந்தையின் இதழ் சிரிப்புடன் மீட்பின் வாயில் திறக்கும்
கல்லூரி கால உயிர் நண்பர்கள் பழைய பெண் சினேகிதிகள் அதிகம் சந்திக்காத நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இப்போதும் என்னை நேசிப்பதாகவே சொல்லுகிறார்கள் கல்லூரி கால என் நெற்றித் திருநீறையும் குடும்ப விழாக்களில் பாடிக்காட்டிய சாஜன் திரைப்படப்பாடலையும் நன்னூல் யாப்பிலக்கண விதிகளை நான் விளக்கிய நாட்களையும் அடிக்கடி நினைவு கூர்ந்தவாறே! அவர்கள் அறிந்த நான் இன்னும் இருக்கிறானா? அவர்கள் அறியாத அவன் இங்கிருக்கிறேன்