இசைக்கருவியொன்றை மீட்டும் ஒருவர் சரியான கம்பிகளை அழுத்துகிறோமா என்றோ கருவியை சரியாக ஏந்திக்கொண்டிருக்கிறோமா என்றோ யோசித்துக் கொண்டே வாசிப்பாரானால் அவரால் கேட்பவர்களை மகிழ்விக்க இயலுமா? இலக்கணப்பிழை அல்லது சொற்பிழை பற்றிய ஐயங்களுடன் தன்னுடைய வாழ்நாளின் அதிமுக்கியமான படைப்பை ஒரு எழுத்தாளரால் எழுதி விட முடியுமா? நாட்டியக் கலைஞர் கால்களை சரியான திசையில் உயர்த்தியிருக்கிறோமா என்ற குழப்பத்துடன் ஆடுகையில் அழகான நாட்டிய அனுபவத்தை பார்வையாளர்கள் பெறுவார்களா? கட்டுக்கோப்பான பயிற்சி கலைக்கு அத்தியாவசியமாகிறது. அயராத ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சியின் மூலமாக அடிப்படையான இலக்கணங்கள், இயக்கங்கள் மற்றும் உத்திகளில் முழுமையான Mastery கிடைத்துவிட்ட பிறகு தன் செயல் திறனில் அளவற்ற நம்பிக்கை கொள்கிறான் கலைஞன்.
செயல் திறனில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டு கலையுலகின் வாசல் வழி உள் புகுவோர் – அங்கு நுழையும் பாக்கியம் பெற்றோர் – யதார்த்த உலகத்தை தாண்டியதோர் அனுபவத்தை பெறுவதோடு பார்வையாளர்கட்கும் அவ்வனுபவத்தை பகிர்ந்தளிக்கின்றனர். உள்ளார்ந்த ஆனந்த உணர்வில் திளைத்தபடி பூரணத்துவத்தை நோக்கியதொரு பயணத்தை கலைஞர்கள் மேற்கொள்கிறார்கள். அமர நிகழ்த்து கலைஞர்கள் பலரின் கலை முறைமை இவ்வாறே இருந்திருக்கிறது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன.
யதார்த்த உலகம் மற்றும் நிகழ்த்து கலையில் ஏற்றுள்ள பாத்திரத்தின் உலகம் – இவையிரண்டிற்குமான இடைமுகத்தில் சஞ்சரிக்கும் கலைஞர்கள் சில சமயம் அபாயகரமான மனப்போக்கு நிலைகளில் சிக்குண்டு, மனச்சாய்வில் வீழ்ந்து அல்லலுறுவதும் உண்டு. அத்தகையதொரு கலை மங்கையின் கதையைச் சொல்லும் ஒரு திரைப்படத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தேன். 2010-இல் வெளியான பழைய படம் தான் என்றாலும், “Black Swan” திரைப்படத்தைக் காணும் சந்தர்ப்பம் இதற்கு முன்னர் அமையவில்லை. படம் வந்த பொழுது வாசித்த விமர்சனங்கள் இப்படத்தை காணும் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் ஏனோ திரையரங்கில் சென்று பார்க்க முடியவில்லை. “ஏ” சான்றிதழ் தரப்பட்டதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வாரிசுகளை வீட்டில் விட்டுவிட்டு திரைப்படம் பார்க்கும் பழக்கத்தை இது நாள் வரை கைக்கொள்ளாததால் “யூ” சான்றிதழ் படங்களையே திரையரங்கில் காண முடியும் என்றாகிவிட்டது.
அச்சத்தை உண்டு பண்ணும் அதே சமயத்தில் அழகால் கண்களை வசியப்படுத்துதல் “ப்ளாக் ஸ்வான்” திரைப்படத்தின் அரிய சாதனை. கொடூரமான கனவுகளைப் போல “ப்ளாக் ஸ்வான்” மிகவும் இருண்ட விளிம்புகளை நோக்கி மெல்ல சரிவதை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது. எழிலார்ந்த நடனம் பற்றிய படத்திற்குள் ஒரு திகில் நாடகம் முறுக்கி வைக்கப்பட்டுள்ளது. கனவைப் போன்று நகரும் இப்படத்தின் சிகரமாகத் திகழ்வது நடாலி போர்ட்மேனின் நயநுணுக்கமிக்க நடிப்பு. ; அவஸ்தையுறும் ஒரு பால்லரீனாவாக கச்சிதமாக தன் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.
“Black Swan” ஓர் உடனடி குற்றவுணர்வில் தோய்ந்த இன்பத்தை நல்குகிற படம். பகட்டான காட்சியமைப்புகள் நிறைந்தது. காட்சி ரீதியாக ஒரு சிக்கலான படம். மனதை மரத்துப்போகச் செய்யும் கடும் பாலே நடன இயக்கங்களின் பின் புலத்துடன் மனோவியாதியை இணைத்துக் கதை சொல்ல அபரிமிதமான தைரியம் வேண்டும். கொந்தளிக்கும் உருவத்தொகுதிகளும் இரு நாட்டியக்காரிகளுக்கிடையிலான போட்டியும் மிகநேர்த்தியாக வெளிப்பட்டிருக்கின்றன.
பால்லரீனா நினா (நடாலி போர்ட்மேன்) திண்ணிய தசையும், மெலிந்த உடலமைப்பும் கொண்டவள் ; , படுக்கையில் இருந்து எழும் போதெல்லாம் அவளின் உடலில் அங்கங்கு கீறல்கள் தோன்றும். எனினும் அவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல் ஒரு நாள் தவறாமல் நடன ஸ்டூடியோ சென்று ரத்தம் கசியும் கால்பெருவிரலூன்றி சுற்றாட்டம் ஆடுவாள்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்தே நினாவின் மனம் பிறழ்ந்து கொண்டிருப்பதை பூடகமாக காட்டிக்கொண்டே வருகிறார் இயக்குநர் அரொநோஃப்ஸ்கி. எல்லா திகில் படங்களைப் போல நாயகிக்கு மிக அருகில் மோதியவாறு காமெராவை வைத்து படம் பிடித்திருப்பது பிற பாத்திரங்களோ அல்லது பொருட்களோ நாயகிக்கு வெகு அருகில் திடீரென தோன்றி பார்வையாளர்களை பயமுறுத்துவதற்காக மட்டுமில்லாமல் நினாவின் சித்தப்பிரமையையும் தனிமை மருட்சியை குறிக்கவும் தான்.
நினாவின் தாய் எரிகா (பார்பரா ஹெர்ஷே). மூச்சு முட்டுமளவுக்கு தாய்மைப் பாசத்தை காட்டுபவள். மகளைச் சுற்றி மிகைப்பாசத்துடன் வட்டமிடுபவள். மகளின் உணவுப்பழக்கம் முதல் ரத்தம் வருமளவுக்கு தோலை சொறிந்து கொள்ளும் பழக்கம் வரை எல்லாவற்றையும் கவனிப்பாள். இத்திரைப்படத்தில் பிற காட்சிகளைப்போல – உடையும் எலும்புகள், ரத்தம் கசியும் நகங்கள், துளை விழுந்த காயங்கள், காயங்களின் தையல்கள் –இவைகள் மெய்த்தன்மை கொண்டவை என்று கொள்ள முடியாது. அவைகள் நினாவின் கனன்றெழும் கற்பனைகளாகவும் இருக்கலாம்.
நியூயார்க் நகர பாலே கம்பெனியின் கலை இயக்குநர் தாமஸ் (ஃபிரெஞ்சு நடிகர் வின்செண்ட் கேஸ்ஸல் – திரைப்படத்தின் ஒரே தெளிவான பாத்திரம்) “ஸ்வான் லேக்” என்ற புகழ் பெற்ற பாலே நாடகத்தை புது நடிகையை வைத்து மேடையேற்ற திட்டமிடுகிறான் ; நினாவை வெள்ளை அன்னம் மற்றும் கறுப்பு அன்னம் எனும் இரட்டை வேடங்களுக்கு தேர்ந்தெடுக்கிறான்.. வெள்ளை அன்னம் பாத்திரத்தில் நினா வெகு எளிதாகப் புகுந்து விடுவாள் என்று தாமஸுக்கு தெரிகிறது. ஆனாம் கறுப்பு அன்னம் பாத்திரத்தின் இருண்ட பகுதிகளுக்கு உருக்கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்கு. அதனால் லிலி (மிலா குனிஸ்) என்ற இன்னொரு நாட்டியக்காரியையும் வரவழைக்கிறான். லிலியின் சாமர்த்திய குணமும் தந்திர குணமும் கறுப்பு அன்ன வேடத்திற்கு பொருத்தமானவளாக்குகிறது. ஸ்வான் ராணியின் பாத்திரத்துக்கு நினாவின் மாற்றாக லிலியாக நியமிக்கப்படுகிறாள் – ஆகவே நினாவின் எதிரியாகவும் ஆகிறாள்.
தாமஸ் கம்பெனியின் பிரதான நடனக்காரி பெத்தை (வினோனா ரைடர்) தூக்கி எறிந்த காரணத்தினாலேயே நினாவுக்கு அந்த வேடம் கிடைக்கிறது. பெத் படத்தின் சில காட்சிகளில் மட்டும் வருகிறாள் – கெட்ட வார்த்தை சொல்லி சீறிக் கொண்டும், நினாவின் மேல் பழி கூறிக் கோண்டும். பின்னர் ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் படுத்த படுக்கையாகிறாள். எரிகாவின் பாத்திரம் போலவே, பெத்தின் பாத்திரமும், நினாவின் சித்தப்பிரமையையும் இறுக்கத்தையும் மேலும் அதிகமாக்கும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கிறது. மனக்குழப்பம் அயராது நினாவை பாடாய் படுத்துகிறது.
கலையில் தோஷமிலாப் பூரணத்துவத்தை எட்டுவதற்கான நினாவின் ஓட்டம் அவளின் உடல்நலம் மற்றும் நட்புகளை காவு வாங்குகிறது. பாலியல் முறைகேடுகள் வாயிலாகவும் “உன்னை மறக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும்” என்ற வார்த்தை தூண்டுதல்களாலும் தாமஸ் நினாவுக்கு கடுமையான உந்துதல் கொடுக்கிறான். ஆனால் இருண்மைக்கு நினா தன்னை பலியாக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. தன்னுடைய யதார்த்தம் பற்றிய பிரக்ஞையை கொஞ்சம் கொஞ்சமாக நினா இழக்கிறாள்.
ட்சைகோவ்ஸ்கியின் தலை சுற்ற வைக்கும் ஆர்கெஸ்ட்ரா, நியுயார்க் நகர பாலே நட்சத்திரம் பெஞ்ஜமின் மில்லபீட்-டின் நடன அமைப்பு மற்றும் மேத்யூ லிபாடிக்கின் விரைவான ஒளிப்பதிவு – இவைகள் இந்த உளவியல் நாடகத்தின் சுருதியை கூட்டுகின்றன. ”ஸ்வான் லேக்” பாலே நாடகத்தின் முதல் காட்சி துவங்குகையில் படம் முழுமையான கனவுத் தன்மையை எட்டி விடுகிறது ; நினாவின் உடம்பில் சிறகுகள் முளைப்பதுவும் பின்மேடையில் நிகழும் கொடூரமான தாக்குதல் காட்சிகள் வெடுக்கென மறைதலும் என ஒரு சர்ரியல் உலகுக்குள் நுழைந்து விடுகிறது.
நாடகத்துக்குள் ஒரு நாடகம் என்ற பாணியில் “ப்ளாக் ஸ்வான்” படத்துக்குள் இடம் பெறும் “ஸ்வான் லேக்” பாலே நடனத்தின் கதையின் குறியீடுகளையே “ப்ளாக் ஸ்வான்” திரைக்கதை வைத்து பின்னப்பட்டிருக்கிறது.
நாட்டிய ஒத்திகை காட்சிகளிலும் நாட்டியக் காட்சிகளிலும் நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் போர்ட்மேன். இதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதம் பயிற்சி செய்தாராம். லிலியாக வரும் மிலா குனிஸ் போர்ட்மேனின் பாத்திரத்துக்கு எதிர் பொருத்தமான இணையாக நடித்திருக்கிறார். போர்ட்மேன் தன் அகன்ற விழிகள் வாயிலாக பயத்தை வெளிப்படுத்துகையில் மிலா புன்னகை கலந்த தன்னம்பிக்கையை தன் உடல் மொழியில் வெளிப்படுத்துகிறார்.
1 Comment