எனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்

Image

(தில்லிகை இலக்கிய வட்டத்தில் 11.8.2012 அன்று ஆற்றிய உரை)

எல்லோருக்கும் வணக்கம். நான் மேடையேறிப் பேசுவது இதுதான் முதல் முறை. நெஞ்சுக்குள் நடுக்கம். கொஞ்சம் பதற்றம். நாக்கு குழறலாம். உச்சரிப்பு குளறுபடியாகலாம். வானிலை அறிக்கை வாசிப்பது மாதிரி உன் மனதின் கால நிலை பற்றி எங்களுக்கு ஏன் சொல்லுகிறாய் என்று யாரும் எழுந்து என்னைக் கேட்பதற்கு முன்னால், நான்கு வரி பாரதி கவிதையை சொல்லி விட்டு என் உரையை ஆரம்பித்து விடுகிறேன்.

”பயமெனும் பேய் தனை அடித்தோம் – பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிரை குடித்தோம்

வியனுலகனைத்தும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்”

அசோகமித்திரன் எழுதும் கதைகளில் வரும் மாந்தர்கள் நாம் தினசரி வாழ்க்கையில் சந்திப்பவர்கள். சாதாரணத்துவத்தை எழுதிக் கொண்டே இருத்தல் குறித்த அவஸ்தைகளை புட்டுபுட்டு வைக்கும் எழுத்து அசோகமித்திரனின் எழுத்து.

எளிய சொற்கள் ; அலங்காரங்கள் இல்லாத நடை ; சாதாரண மனிதர்களே பாத்திரங்கள். சிக்கனமான வாக்கியங்கள் ; தேவைக்கு அதிகமாக ஒரு வாக்கியத்தையும் கதைகளில் பயன் படுத்தாதிருத்தல் ; தோலைச் சீவி உட்பொருளை அருகிருந்து உற்று நோக்கும் அணுகுமுறை. இவை அசோகமித்திரனுடைய சிறுகதையின் அம்சங்கள்.

அவருடைய கதைகள் வாழ்க்கையின் சுவையற்ற தன்மையை விவரித்தாலும்,  தினசரி தவிப்புகளைத் தாண்டிய, அதை விடப் பெரிதான ஏதொவொன்றை நுட்பமாக புலப்படுத்துபவை. அன்றாட கவலைகளை பேசிக்கொண்டே மானுடத்தின் உயர் உணர்வுகளை தொட்டுச் செல்பவை.

“கண்கள்” என்றொரு சிறு கதை. முதன்முதலாக கண்ணாடி அணிந்து சாலையில் செல்லும் ஒருவனின் சில நிமிட அனுபவங்களை சொற் சித்திரமாக தீட்டியிருப்பார் ஆசிரியர்.

“ஒரு சிலரை நேருக்குநேர் பார்த்துவிட்டால் உடனே தான் அவர்களுக்குக் கடமைப்பட்டவன் போன்ற உணர்வு வந்துவிடுகிறது.” என்று ஒரு வரி வரும். இவ்வரியை படிக்கும் போது தொடர்ந்து வாசிக்காமல் அந்த வரியையே அசை போட்டுக் கொண்டிருப்போம். சரி, இவ்வரியை அப்புறம் மேலும் யோசிக்கலாம் என்று முடிவெடுத்து கதையைத் தொடர்வோம். அதற்கடுத்து வரும் வரிகள் : “அது அந்த மனிதனுக்கும் தெரிந்துவிடுகிறது. பிச்சைக்காரர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு இது ஒரு காரணமோ?”

இப்படி வாசிப்பை தடுத்து நிறுத்தி சிந்தனையை முடுக்கும் வரிகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் எப்போது கதையை படித்து முடிப்பது? கதையில் தொடர்ந்து பல வரிகள் நம் மனதில் புகுந்து எண்ணவோட்டத்தை ஆக்கிரமிக்கும்.

சினிமாக் கொட்டகை வாசலில் அமர்ந்து பிச்சையெடுக்கும் ஒர் அம்மாளைப் பற்றி வரும். கண்களில் சதை வளர்ந்து அவள் கண் குருடாகும் நிலையில் பிச்ச்சையெடுத்துக் கொண்டிருப்பாள். அதே பிச்சைக்காரி இரவில் நடைபாதையில் தூங்குவாள். சுற்றிலும் பூரான், சுண்டெலி என்று ஜந்துக்கள் அலைந்து கொண்டிருக்கும். இவற்றை வருணித்துக் கொண்டே “சிறு தூறல் போட்டால்கூட ஒதுங்க இடம் தேட வேண்டும். கடைகளுக்கு முன்னால் வழக்கமாகத் தூங்குகிறவர்கள் இருப்பார்கள். புது ஆளுக்கு இடம் கிடைக்காது.” என்று சுருக்கமாக சொல்லி நம் மனசாட்சியை சுருக்கென குத்தி விட்டு கதை நகரும்.

கதையில் எழுத்தாளர் பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் மிகச் சுவையாக இருக்கும். அவற்றில் இரண்டை இங்கே பகிர்கிறேன்.

”ஏகப்பட்ட நசுங்கல்கள் கொண்ட ஒரு சிறிய அலுமினியத் தட்டு அவளருகில் இருக்கும்”

”குடுகுடுப்பைக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஏதோ சங்கேத மொழி போல இருக்கிறது”

 உண்மையில் சொல்லப் போனால் கதையில் வரும் எல்லா வரிகளையுமே இவ்வுரையில் மேற்கொளாய் சொல்ல வேண்டும்.

பழைய பிளேடுகளை பிச்சை கேட்கும் ஒரு குடுகுடுப்பைக் காரர் கதையில் வருவார். கம்பீரமான காஸ்ட்யூம் அணிந்து பார்ப்பவரின் கவனத்தை கவரத் தக்கவராக வலம் வரும் குடுகுடுப்பைக் காரரை யாரும் முக்கியமான ஆளாக கருதுவதில்லை. அவர் நல்ல நல்ல விசேஷமான வாழ்த்துச் செய்திகள் கூறினாலும் கூட பழைய பிளேடு தவிர அவருக்கு கிடைக்கக் கூடியதொன்றுமில்லை.

முச்சந்தி சாலைக்கு நடுவில் கண்ணாடி அணிந்தவனைக் கொண்டு போவார் ஆசிரியர். ஒரு தொலைக்காட்சி காமிரா தோற்கும் வகையில் நாற்புற காட்சிகளை தெளிவுற சொற்களால் படம் பிடித்து நம் கண் முன் கொண்டுவருவார். டிராபிக் விளக்குகள், ட்ராபிக் கான்ஸ்டபிள்கள், அதிரடியாக சாலையைக் கடப்பவர்கள் என்று துல்லியமான காட்சி வர்ணனை.

”சாலைக் கடப்பு நிபுணர்கள்” என்று ஒரு சொற்றொடர் வரும். இவர்கள் வேறு யாரும் அல்லர் ; தைரியமாக மயிரிழை வித்தியாசத்தில் விபத்துகளை தவிர்த்து சாலையைக் கடந்து செல்பவர்கள். இத்தகைய ஒரு நிபுணரின் அருகில் சென்று அவருக்குப் பின்னால் நின்று அவரை அடிக்கு அடி சரிவர பின் தொடர்ந்தால் சாலையை எளிதில் கடந்து விடலாம் என்று அவரின் பின்னால் பச்சை விளக்கு விழுவதற்காக காத்திருக்கிறான்.

அங்கே ஒர் இனிமையான பாத்திரம் நமக்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. “ஈர்க்குச்சி நுனியில் பஞ்சைச் சுற்றிய பிரஷ்” அதாவது “பட்ஸ்” விற்கும் ஒரு நோஞ்சான் பெண் பதற்றம் மிகு ட்ராபிக் சிக்னலில் இவனை சந்திக்கிறாள். “வாங்கிக்கோங்க” என்றவாறு இவன் பின்னே நிற்கிறாள். இவன் வேண்டாம் என்று சொல்கிறான். அவள் மேலும் இவனை மன்றாடுகிறாள். அன்று ஒன்று கூட விற்கவில்லை என்று ஆதங்கப் படுகிறாள். இவன் அவளிடம் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து, “பட்ஸ் வேண்டாம் ; பத்து ரூபாய் வச்சுக்க” என்று சொல்லி சாலைக் கடப்பு நிபுணரின் பின் செல்ல யத்தனிக்கிறான். பச்சை விளக்கு விழுந்து விட்டது. அவளோ அவன் பின்னே தொடர்ந்து வருகிறாள். கிட்டத்தட்ட நடுசாலையில் அவனை நிறுத்தி “இதை வைச்சுக்க, சார். கார் எல்லாம் ரொம்ப நல்லாத் துடைக்கும்.” என்று சொல்லி ஒரு மஞ்சள் துணியை தருகிறாள்.  இவன் என்னிடம் கார் இல்லை ; சைக்கிள் கூட இல்லை என்றவாறே மஞ்சள் துணியை அவளிடம் திருப்பித் தர முயல்கிறான். “கண்ணாடியைத் துடைக்க வச்சுக்குங்க” என்று சொல்லிக் கொண்டு ஒரு மோட்டார் வண்டிக்காரருக்கு “பட்ஸ்” விற்க சென்று விடுகிறாள். அவன் அந்த மஞ்சள் துணியை எப்படிப் பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டே சாலையில் நின்று கொண்டிருப்பது போல கதை முடிவடைகிறது.

படித்து வெகு நேரம் பின்னும் இக்கதை நம்முடன் பேசுகிறது. சமூகத்தின் apathy-யை விளிம்பு நிலை மக்களின் மேலுள்ள அக்கறையின்மையை இதை விட அழகாக சொல்லமுடியாது என்றே படுகிறது ! நம் பார்வையை துடைக்க நம் எல்லாருக்குமே ஒரு மஞ்சள் துணி தேவைப்படுகிறது என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறது “கண்கள்” சிறுகதை.

இரண்டாவதாக நாம் பேசப்போவது “அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்ரம்” என்ற சிறுகதை. 1956 இல் தீபம் இதழில் வெளியானது. எளிமையான கதை. நெஞ்சை பிழியும் கதை. அற்ப விஷயங்களில் இருக்கும் ஈடுபாடு, அதன் பொருட்டு பிறரை மன்னிக்க முடியா மனப்பான்மை – இவ்விரண்டும் ஏற்படுத்தும் எதிர்பாரா விளைவுகளை நெகிழ்ச்சியுடன் சொல்லும் இக்கதை.  

வீடு மாறி செய்திதாள்கள் போடப்படுவது சாதாரணமாக நிகழக்கூடியது தான். அதை வாசிப்பவருக்கு அது நம் வீட்டுக்கு போடப்படவேண்டிய செய்தித்தாள் இல்லை என்று தெரியும். இருந்தாலும், அதை புரட்டி பார்க்காமல் இருப்பதில்லை. இது மாதிரி தான் நிகழ்கிறது இக்கதையில். தவறுதலாக போடப்பட்ட செய்தித்தாளை வாசிக்கிறார் ராமசாமி அய்யர். அந்நேரம் புளி விற்கிறவன் வருகிறான். ஆறு வீசை புளியை வாங்கி செய்தித்தாளில் வைத்து வீட்டுக்குள் எடுத்து போகிறார். இதனால் செயதித்தாளில் புளி படிந்து லேசாக சேதமாகிவிடுகிறது. அந்த செய்தித்தாள் பக்கத்து வீட்டு இளைஞன் ஸ்ரீராமுடையது என்று தெரிந்தவுடன் இயன்ற வரை புளியை தட்டி பேப்பரை கொடுக்கிறார். முதல் பக்கத்தில் பிரபலமான தென்னிந்திய நடிகையின் முழு உருவப் படம் வந்திருக்கிறது. நடிகையின் படமெங்கும் புளியின் கறை. அழகியின் முகம் அலங்கோலமாகியிருந்தது. ஸ்ரீராம் கோபமுற்று ராமசாமி அய்யரிடம் சண்டை போடுகிறான். வாக்கு வாதம் ஏற்படுகிறது.

 இரண்டு நாட்கள் கழித்து ராமசாமி அய்யர் வேப்ப இலைகளை எடுத்துப்போவதை ஸ்ரீராம் பார்க்கிறான். ராமசாமி அய்யரின் மகனுக்கு அம்மை போட்டிருப்பதை ஸ்ரீராமின் அம்மா அவனிடம் சொல்கிறாள். வேலைவாய்ப்பு அலுவலகம், நூலகம், சினிமா – இங்கெல்லாம் ஸ்ரீராமுக்கு அன்று போக வேண்டியிருந்தது. அங்கெல்லாம் போவதற்கு முன்னால் சுகாதார இலாகாவுக்கு ஒரு மொட்டை கடிதம் எழுதி தபால் பெட்டியில் போடுகிறான். மாலையில் திரும்பி வருகிற ஸ்ரீராமுக்கு அதிகாரிகள் வந்து ராமசாமி அய்யரின் மகனை சுகாதார விதிகளின் படி வீட்டிலிருந்து எடுத்து போனதை பற்றி அவன் அம்மாவிடமிருந்து தெரிய வருகிறது. ராம சாமி அய்யர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து மகனை தேடி செல்கிறார். எவ்வளவு வேண்டியும் அதிகாரிகள் குழந்தையை வீட்டுக்கு எடுத்து போக முடியாது என்று மறுத்து விடுகின்றனர்.

 ஸ்ரீராமின் குற்றவுணர்வை மிக அழகாக இவ்விதம் பதிவு செய்கிறார் அசோகமித்திரன் :-

 “ஸ்ரீராமால் நிலை கொண்டு இருக்க முடியவில்லை. சாப்பாட்டை ருசித்து உண்ண முடியவில்லை. வீட்டு வெளிச்சுவர் அருகே நின்றுகொண்டு தெருவில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்துக்கும் மேலாகிவிட்டது. ஊரோசை அடங்கத் தொடங்கிவிட்டது. ரயில் நிலையம் அவன் வீட்டிலிருந்து அரைமைல் தூரத்தில் இருந்தது. அங்கு வண்டிகள் வந்து போகும் ஊங்கார சப்தம், லெவல் கிராஸிங்கில் அடிக்கும் மணியின் சப்தம், சக்கரங்கள் இருப்புப் பாதையில் உருளும் சப்தம், இவை எல்லாவற்றையும் ஸ்ரீராமால் மிகத் தெளிவாகக் கேட்க முடிந்தது. தன்னைச் சுற்றி ஊர் அடங்கி ஒடுங்கிப் போவதை அவன் அதற்கு முன்னால் உணர்ந்து கவனித்தது கிடையாது. வைத்தியக் கல்லூரியில் படிக்கும் அந்தக் கோடிவீட்டுப் பையனும் விளக்கை அணைத்து விட்டான். தெருவின் இரண்டு வரிசை வீடுகளும் கருத்த நிழல்களாகக் காணப்பட்டன. ஸ்ரீராமின் கண்கள் கனத்தன. அவன் படுக்கையில் சாய்ந்தான். அவனால் தூங்க முடியவில்லை. அவன் மறுபடியும் தெருவுக்கு வந்தான். அவன் வேஷ்டி மட்டும் அணிந்திருந்தான். அந்த வேளையில் எல்லாம் இருட்டாக இருந்தது. எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் தன்னந்தனியாகத் தெருவில் காத்திருந்தான்.”

கதையில் அந்த குழந்தை வீடு திரும்பாமலேயே இறந்து விடுகிறது..

ஒரு மாதம் கழித்து கனமான மனதோடு ராமசாமி அய்யர் வீட்டுக்கு செல்கிறான். குழந்தையின் சுகமின்மையைப் பற்றி சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தியது தான்தான் என்று தெரிவிக்கிறான். ராமசாமி அய்யர் அதற்கு அமைதியாக தன் மனைவியை அழைத்து ஸ்ரீராமிடம்“இவளிடம் சொல்லு” என்கிறார். தான் செய்த தவறை ராமசாமி அய்யரின் மனைவியிடம் ஸ்ரீராம் சொல்கிறான். அவள் தன்னை கொடூரமாக சாபமிடப்போகிறாள் என்று எண்ணிக்கொண்டிருந்த ஸ்ரீராமிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறாள்.

ஸ்ரீராம் என்ற இளைஞனின் பாத்திரம் மிக இயல்பாகப் படைக்கப் பட்டிருக்கிறது இள ரத்தத்துக்குரிய கோபம், கோபத்தை செயலில் காட்டிவிடும் அசட்டு தைரியம்…..விளைவு வேறு மாதிரியானவுடன் ஸ்ரீராமின் மனதில் தோன்றும் அளவுக்கு மீறிய அமைதியின்மை….அமைதியின்மை மெதுவாக குற்றவுணர்வாக மாறும் இடங்கள்….கடைசியில் உண்மையை ஒப்புக்கொள்ளும் மன திடம்…..அசட்டு இளைஞன் பக்குவமான மனிதனாக transform ஆவதை உருக்கமாக சொல்கிறது இக்கதை.

மூன்றாவது சிறுகதை பற்றி பேசுவோம். குடும்பத்தில் யாராவது ஒருவர் – மனைவியோ, குழந்தைகளோ – நம்முடன் பேசுவதை நிறுத்திக் கொண்டால் நமக்கு எப்படி இருக்கும்? மனைவிகள் கோபத்தைக் காட்டும் போது மவுனத்தை ஆயுதமாக பயன் படுத்துவதை நாமெல்லோரும் கண்கூடாகப் பார்த்து வந்திருக்கிறோம். சில மணி நேரங்களுக்குள் அது சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கும் வரை நாமும் ரிலாக்ஸ்டாக இருப்போம். மவுனம் சில நாட்களுக்கு தொடருமானால், நாம் கவலையுறுவோம். மவுனத்தோடு புறக்கணிப்பும் சேர்ந்து கொண்டால்….என்ன செய்வது? எப்படி இதனை கையாளப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டு, வன்மம், வன்முறை என்று உருமாறும் சாத்தியக்கூறு இருக்கிறது.

அசோகமித்திரனின் “கணவன், மகள், மகன்” என்ற சிறுகதையில் வரும் மங்களம் என்ற பாத்திரம் அப்படியல்ல. குடும்பத்தினரின் எல்லா உதாசீனங்களையும் தாங்கிக் கொண்டு ”ஆயுட்காலப் பழக்க தோஷமாக”  தனிமையிலும் துக்கத்திலும் காலத்தை கடத்தும். அவளை சுற்றி நிகழ்வது என்ன என்பது அவளுக்கு புரிவதேயில்லை. யாரும் அவளுக்கு சொல்வதும் இல்லை. அவள் கணவன் ”தங்கமான மனிதன்” என்று பெயரெடுத்தவர். குடும்பத்துடனும், மங்களத்திடமும் பாசமாக இருந்தவர் தான். அவர் இன்னொரு குடும்பத்திடமும் பாசமாக இருந்திருந்தது அவளுக்கு அவர் காணாமல் போன பிறகு தான் தெரிய வருகிறது.

இவ்வாறு ஒரு பத்தி வரும் : “மங்களத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் புதிராக இருந்தது. அவள் இவ்வளவு நாட்கள் எந்த மனிதனோடு வாழ்க்கை நடத்தினாள் ? இருபத்தைந்து ஆண்டுகள் கூடவே இருந்தும் கூட அவளறியாத ரகசியங்கள் இவ்வளவு அவனிடமிருந்ததா ? அவன் மறைத்தானா அல்லது அவள் தான் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டாளா ? இவ்வளவு குருடாக இருந்தவளால் கணவன் மீது பிடிப்பு வைத்திருக்க முடியுமா ? அதனால் தான் அவன் ஓடிவிட்டானா ?”

கதையின் இன்னொரு பாத்திரமான மங்களத்தின் மகள் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலைக்கு செல்லுமுன் ”கைக்கு மோர் சாதம்” எடுத்து சென்றாள். அன்றுதான் அவளுக்கு கல்யாணம் நடந்ததாக மங்களம் கேள்விப்பட்டாள். மகளிடமே கேட்க மங்களத்துக்கு ஆசைதான். ஆனால் கேட்க வாயே வரவில்லை, மகளாவது சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை.

இக்கட்டத்தில் சிறுகதையில் வரும் வரிகள் இவை :

”பதினைந்து நாட்கள் கழித்து உமாவாகவே தனிக்குடித்தனம் போகப் போவதாகச் சொன்னபோதும் கேட்க முடியவில்லை. அவளுடைய மாப்பிள்ளை இளவயதுக்காரனா, வயதானவனா, சைவமா, அசைவமா என்று கூடக் கேட்க்கவில்லை. உமாவாகவும் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததாக தோன்றவில்லை. வீட்டிலிருந்த பாத்திரங்களிலேயே சிலவற்றை அவள் எடுத்துப் போனாள். அவள் கல்யாணத்தை நினைத்து வாங்கி வைத்திருந்த வெள்ளிப் பாத்திரங்களில் குங்குமச் சிமிழ் ஒன்றுதான் மிஞ்சியிருந்தது. எவர்சில்வர் பாத்திரங்களில் நான்கைந்து இருந்தன. அவள் அம்மாவை மேற்கொண்டு சீர், வரிசை என்று கேட்கவில்லை. அவளுடைய கணவன், அவள் கல்யாணம் செய்து கொண்டது எதைப் பற்றியும் தனியாகச் சொல்லவும் இல்லை.”

மகன் பாத்திரம் கணவன், மகள் பாத்திரங்களை விட குரூரம். சுயநலத்தின் மொத்த உருவம். மகன் ராமு எங்கு போகிறான் என்று ஒரு நாளும் மங்களத்துக்கு சொல்வதில்லை. ஒரு நாள் இரவு முழுக்க அவன் வீடு திரும்பவில்லை. மங்களம் அவன் வாடிக்கையாக செல்லக் கூடிய இடங்களுக்கெல்லாம் தானே சென்று தேடினாள். ஆஃபீசிலிருந்து ஐந்து மணிக்கும் மனமகிழ்மன்றத்திலிருந்து எட்டு மணிக்கும் கிளம்பிவிட்டான். விடியற்காலை வரை கண்ணயராமல் காத்திருந்த அன்னையிடம் இரவு எங்கு சென்றிருந்தான் என்பதை ராமு சொல்லவேயில்லை.

குடிப்பழக்கத்துக்கு ஆளாகிய ராமுவின் ஈரல் பழுதுபட்டு அவன் மருத்துவமனையில் படுத்துக்கிடந்தபோதிலும் அவளால் “குடிக்காதேடா” என்று கூற முடியவில்லை.

மங்களத்தின் மனவோட்டத்தை அசோகமித்திரன் இவ்விதம் படம் பிடித்திருப்பார் :

“அவன் குடிப்பது அவளுக்கு தெரியும் என்ற நிலையை உண்டாக்க மனம் வேண்டவில்லை. அவளுக்குத் தன் மகனறிய அவனைக் குடிகாரன் என்று அவள் நினைப்பது கூடச் சாத்தியமாயில்லை. அவனும் அவள் அறியாதவள் என்றுதான் நினைக்க விரும்புவான். இவ்வளவு முற்றிப் போயும் தெரியாமல் இருக்குமா என்ற தோன்றாது. அவளுக்குத் தெரியாதது போல அவள் நடந்து கொள்ளவேண்டும்; அவளுக்குத் தெரியாது, அவளுக்கு தெரிவதை அவன் விரும்பவில்லை என்பது போல அவன் நடந்து கொள்ளவேண்டும்.”

புருஷனிடம் தான் இப்படி இருந்தாயிற்று. மகனிடமுமா என்று அவளுக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது, ஆனால் அழ முடியவில்லை என்று கதை முடியும்.

மங்களம் என்கிற பாத்திரத்தின் உளவியல் சிக்கல்களை கருணையுடன் எழுத்தாளர் இழை பிரிக்கிறார். இவ்வுரைக்காக ஆய்வில் ஈடுபட்ட போது, இலங்கை கவிஞர் அனார் அவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அனார் இக்கதையை பற்றி இவ்வாறு சொன்னார் “எளிமையான எழுத்து, ஆனால் வலிமையும் வலியும் நிறைந்த எழுத்து” என்று வர்ணித்தார். அது மிக apt ஆன comment என்று நினைக்கிறேன்.

இக்கதையின் மங்களம் பாத்திரத்துக்கு பொருத்தமான ஒரு கவிதையை தன் படைப்பிலிருந்து எடுத்து வாசித்துக் காட்டினார். அனார் எழுதிய ”இறுதி நிலைகள்” என்ற கவிதை இவ்வாறு செல்லும் :

சாமர்த்தியங்களுடன் வருவான்
நேர்மையுடன் வருவாள்
தந்திரங்களை வழங்குவான்
நம்பிக்கைகளை வழங்குவாள்
நிறங்களை மாற்றிக்கொண்டிருப்பான்
ஒளியினை அணிந்துகொண்டிருப்பாள்
தொடுவான்
உணர்வாள்
அவனுடையவைகள் சுயநலன்கள் சார்ந்தவை
அவளுடையவைகள் தியாகங்கள் சார்ந்தவை
நிரந்தரமற்ற திசைகளில் அவனது பயணங்கள்
அவளது இருப்பு ஊன்றப்பட்ட பாறை
விரைவில் உதிர்ந்துவிடுகின்ற காயங்கள் அவனுக்கு
வலியில் ஆழமாகின்ற காயங்கள் அவளுக்கு

நான்காவது ”எலி’ என்று ஒரு சிறுகதை. மிகவும் ரசனையாக எழுதப்பட்ட கதை. ஓர் எலியைக் கொல்வதற்காக ஒருவன், சூடாக அப்போதுதான் போடப்பட்டுக்கொண்டு இருக்கும் மசால் வடை ஒன்றை வாங்கிக்கொண்டு வருவான். ‘இதை நான் தின்பதற்காக வாங்குகிறேன் என்று இந்த கடைக்காரன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஓர் எலியைக் கொல்வதற்காக வாங்கிப் போகிறேன் என்று தெரிந்தால் வருத்தப்படுவானோ?’ என்று அவன் மனசுக்குள் நினைத்துக் கொள்வான். எலிப்பொறியில் வடையைப் பொருத்தி வைத்துவிடுவான். மறுநாள் காலை எலி பொறிக்குள் சிக்கியிருக்கும். அதை எடுத்துக்கொண்டு போய் ஒரு மைதானத்தில் விடுவிப்பான். மைதானத்தில் தள்ளாடி அங்கும் இங்குமாய் ஓடும் எலியை ஒரு காகம் கொத்தி சாகடித்துவிடும். அதன்பின் அசோகமித்திரன் கடைசி வரியாக எழுதியிருந்ததுதான் ரொம்ப டச்சிங்! ‘அந்த வடை துளியும் தின்னப்படாமல் முழுசாக இருந்தது கண்டு அவன் மனம் கலங்கியது’ என்று எழுதியிருப்பார். சாகிற எலி கடைசி நேரத்தில் அந்த வடையைச் சுவைத்துவிட்டாவது சாகக் கூடாதோ! பாவம், அதற்குக் கொடுப்பினை அவ்வளவுதான்!

இவ்வுரைக்காக நான் தேர்ந்தெடுத்தவை இந்நான்கு சிறுகதைகள் தாம். இருந்தாலும் இன்னுமொரு கதை பற்றி சுருக்கமாக பேசி இவ்வுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

எந்த கதைகளை பற்றி பேசுவது என்று என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் “பிரயாணம்” என்ற சிறுகதை படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். அப்படியென்றால் முதலில் அச்சிறுகதையை படியுங்கள்; அதைப் பற்றி எழுதுங்கள் ; பிறகு மற்ற கதை பற்றி எழுதுங்கள் என்றார். இணையத்தில் சிறுகதை படித்தேன். 1969-இல் எழுதப்பட்ட கதை அது. ஆரம்பத்தில் சொன்னேன் ; அசோகமித்திரனின் புனைவுலகம் சாதாரண மனிதர்களையும் சாதாரணத்துவத்தையும் கொண்டிருப்பது. “பிரயாணம்” சிறுகதை அப்படியில்லை. வாசித்து முடித்தவுடன்…..கதையின் கடைசி வாக்கியத்தை படித்தவுடன் ஒரு நீண்ட மௌனம். பிரமிப்பு. இதயத்துள் இச்சிறுகதை தந்த எழுச்சியை  வார்த்தையினால் விளக்க முடியாது. தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் உச்சத்தை தொட்ட கதை இது என்று பல இலக்கியவாதிகளால் போற்றப் படும் “பிரயாணம்” சிறுகதை என்னை கடும் மௌனத்தில் ஆழ்த்தியது. மனதை சிந்தனையில் தள்ளும் கதைகள் நல்ல கதைகள் என்று வகைப்படுத்தப் படுகின்றன. நீண்ட மௌனத்தில் தள்ளும் கதைகள் எந்த ரகத்தை சார்ந்தன? “மிக அசாதாரண மனிதர்களின் மிக அசாதாரண வாழ்க்கைக்கணங்களைச் சொல்லும் முக்கியமான கதை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுதியிருந்தார்.

 “பிரயாணம்” சிறுகதை அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce) என்ற அமெரிக்க எழுத்தாளரின் “தி போர்டட் விண்டோ” (The Boarded Window) சிறுகதையின் “காப்பி” என்று சொல்கிறார்கள். அசோகமித்ரன் காப்பி அடித்தாரா இல்லையா என்று நமக்கு தெரியாது. அவருக்கும் அதே கற்பனை வந்திருக்கலாம். இல்லை காப்பியே அடித்திருந்தாலும் ”மறு படைப்பு” என்று கருதத் தக்க சிறப்பம்சங்களை “பிரயாணம்” கதையில் சேர்த்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். நான் மூலக் கதையை படித்ததில்லை. எனவே, ஒரு வலைப்பதிவர் சொன்ன கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். “இரண்டு கதைகளுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. ’பிரயாணத்தில்’ அசோகமித்ரன் கடந்திருக்கும் உயரம் அவ்வளவு எளிதில் மற்றவர்களால் எட்ட முடியாதது. பல தளங்களை சாதாரணமாகத் தாண்டிச் சென்றுள்ள கதை. பியர்சின் கதையில், முடிவு ஒரு அதிர்ச்சியான திருப்பம். அவ்வளவே. கதையில் திரும்பப் படிக்க ஒன்றுமில்லை. ’பிரயாணத்தின்’ முடிவு மனதை என்னவோ செய்து கொண்டேயிருக்கச் செய்வது. கதையைத் திரும்பத்திரும்பப் படிக்கத்தூண்டுவது.”

இம்மன்றத்தில் பேச வாய்ப்பளித்த தில்லிகைக்கு என்னுடைய உளமார்ந்த நன்றிகள். என்னுடைய பயத்தையும் நம்பிக்கையின்மையையும் காரணம் காட்டி தப்பிக்க நினைத்த என்னை, தப்பிக்க விடாமல் “உன்னால் முடியும் தம்பி தம்பி” என்று பாடாத குறையாய் என்னை ஊக்குவித்த தரன் அவர்களுக்கு  என் இதயங் கனிந்த நன்றிகள். பல்லை கடித்துக் கொண்டு அல்லது பல்லை கடிக்காமல் பொறுமையாக நான் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.

6 Comments

 1. Bhaskar says:

  நல்ல உரை. அசோகமித்திரன் எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய “௧௮ வது அட்சரக் கோடு ” நாவலும் மிக நன்றாக இருக்கும்.

 2. muthuletchumi says:

  முதல் முறை உரையாற்றுகிறீர்கள் என்பது எதுவும் நீங்கள் சொல்லியிருக்காவிட்டால் நாங்கள் அறிந்திருக்கமுடியாது. தெளிவாகவும் நிதானமாகவுமே நீங்கள் பேசி இருந்ததாகப் பட்டது.. 🙂 வாழ்த்துகள்

 3. hemgan says:

  மிக்க நன்றி முத்துலட்சுமி.

 4. hemgan says:

  நன்றி பாஸ்கர். 18வது அட்சக்கோடு பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. விரைவில் படிக்க முயல்வேன்.

 5. N Kalyan Raman says:

  பிரயாணம் கதையைப் பற்றி ஓரிரு வரிகள் சொல்லியிருக்கலாம்.

  1956-இல் தீபம் கிடையாது. அந்தக் கதை தீபத்தில் 1965-ஆம் ஆண்டு வெளிவந்திருக்கலாம்.

  1. hemgan says:

   கொடுத்திருந்த சமயம் இருபது நிமிடமே என்பதால் பிரயாணம் பற்றி அதிகம் பேசவில்லை.

   அவனுக்கு பிடித்த நக்‌ஷத்திரம் 1956 தீபம் இதழில் வந்ததாக அழியாசுடரிலோ, தொகுப்புகளிலோ படித்தேன். அத்தகவலையே இவ்வுரையில் பயன் படுத்திக் கொண்டேன். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

   உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இத்தளத்தில் இருக்கும் பிற படைப்புகளையும் படித்து, கருத்து தெரிவியுங்கள்.

   அன்புடன்
   கணேஷ் வெங்கட்ராமன்

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.