மறைந்தார் மடிபா

Madiba1

(wwww.gandhitoday.in -இல் இன்று வெளியான என் கட்டுரை – http://www.gandhitoday.in/2013/12/blog-post_7.html)

குடும்ப உறுப்பினர் ஒருவர் கடைசிப் படுக்கையில் இருக்கிறார் எனும் போது நாம் அடையும் அதே பதற்றம் ஜூன் மாதத்திலிருந்து. நடுவில் ஒரு முறை சமூக தளங்களில் அவர் இறந்து விட்டாரென்ற செய்தி பரவிய போது…அய்யய்யோ அது உண்மையாக இருந்து விடக் கூடாதே என்ற பிரார்த்தனை. உடன் அதனை ட்வீட் செய்த நண்பருக்கு போன் செய்து ‘இது உண்மையா என்று கேட்டேன்?” அவர் “இல்லை…தவறான செய்தி” என்று சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இன்று காலை எழுந்ததும் இதே போல ஒரு செய்தியை அதே சமூக தளத்தில் கண்ட போது, தொலைக்காட்சியைப் போட்டு அதில் ஓடும் செய்தியைப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். ஓர் ஒப்பற்ற தலைவரை இழந்த பிறகு இது போன்ற ஒரு தலைவர் இனிமேல் பிறக்கப் போவதில்லை என்ற ஏக்கம் தோன்றி சோகமும் துக்கமும் இரு மடங்காகிவிடுகிறது.

யார் அவர்? அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? எந்நாட்டவர் இல்லை அவர். அவரை நேரில் பார்த்ததில்லை. இவ்வளவு ஏன் தொலைக்காட்சிகளிலோ வீடியோக்களிலோ அவர் உரையாற்றி கேட்டதில்லை. அவர் எழுதியவற்றை வாசித்ததில்லை.

Madiba2

ஒரு முறை ‘Invictus” என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். மூத்த நடிகர் மார்கன் ஃப்ரிமேன் நெல்சன் மாண்டேலாவாக நடித்திருந்தார். மாண்டேலா தென்னாப்பிரிக்க அதிபர் ஆனவுடன் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் பின்னப்பட்ட திரைக்கதை. மாண்டேலா அதிபராகிவிட்ட படியால் இனி நமக்கெல்லாம் இங்கு வேலையில்லை என்று வேலையை ராஜினாமா செய்து விட்டு அதிபர் மாளிகையை விட்டு வெளியெறும் வெள்ளை அதிகாரிகளிடம் அவர் பேசுகிற காட்சி என்னை எழுந்து உட்காரச் செய்தது. தன்னுடைய மெய்க்காவலர்ப் படையில் முன்னால் (வெள்ளைக்கார) அதிபரின் மெய்க்காவலர்களையும் சேர்த்துக் கொள்கிற காட்சியில் ”மடிபா..என்ன செய்கிறீர்கள்?” என்று அவருடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் மெய்க்காவலரொருவரும் அவரை கேட்கும் போது ”அவர்கள் திறமை படைத்தவர்கள். கறுப்பு மெய்க்காவலர்களுக்கு தேவையான அனுபவத்தை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.” என்று வெறுப்பைக் களையச்சொல்லும் இடம் மாண்டேலா என்ற மகத்தான மனிதரின் உயர்வை அறியச் செய்தது.

மடிபா என்ற குலப்பெயரால் தென்னாப்பிரிக்க மக்களால் அன்புடன் அழைக்கபடும் மாண்டேலாவைப் பற்றி நான் படிக்க ஆரம்பித்தது 2009-இல் தான்.

அதிபர் ஒபாமா ஜூனில் தென்னாப்பிரிக்க விஜயம் மேற்கொண்ட போது அவரின் மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்க்கவில்லை. தன் ஆதர்ச நாயகன் என்று ஒபாமா கருதும் சொல்லிக் கொள்ளும் மடிபாவை மரணப்படுக்கையில் காணும் தைரியம் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கக் கூடும்.
2010 இல் கால் பந்து உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடப்பதற்கு முக்கியக் காரணம் மாண்டேலாதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் ஆரம்ப நாள் நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்ட மாண்டேலா கடைசி நாள் விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று எல்லோரும் எண்ணினர். ஆரம்ப விழா உற்சவங்களில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாண்டேலாவின் கொள்ளுப் பேத்தி ஜெனினா மாண்டேலா ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கி மாண்டு போனார் ; இத்துயரச் சம்பவ துக்கத்திலிருந்த மாண்டேலா இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டாரென்று எல்லோரும் நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வாழ்க்கையை அடுத்தவரின் மதிப்பீடுகள் கொண்டு வாழாத மாண்டேலா கடைசி நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். அதுதான் மாண்டேலா!

இருபத்தியெழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து அப்போதைய வெள்ளைக்கார ஜனாதிபதி – டி கிளர்க் அவர்களுடன் நீண்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு பின்னர் சுமுகமான ஆட்சி மாற்றங்களுக்கு வழிவகுத்து, வெள்ளை – கறுப்பு இன மக்களின் ஒருங்கிணைந்த பொதுவாழ்வுக்கு அயராது உழைத்த மாண்டேலாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. அப்பரிசை ஏற்கும் போது அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது.

அனைத்துலக மானிடச் சமூகத்தின் சுதந்திரம், சமாதானம், மற்றும் மனித கௌரவத்துக்கென எல்லாவற்றையும் தியாகம் செய்தோருக்காக ஆப்பிரிக்காவின் தென்புள்ளியில் ஒரு மகத்தான வெகுமதி தயாராகிக் கொண்டிருக்கிறது ; விலைமதிப்பிலா பரிசு உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது.
இப்பரிசு பணத்தினால் மதிப்பிடப்படுவதன்று. அபூர்வமான உலோகங்களின் நம் முன்னோர்கள் நடந்த மண்ணின் மடியில் புதைந்து கிடக்கும் மதிப்பு வாய்ந்த ரத்தினங்களின் ஒட்டுமொத்த விலையின் வாயிலாகவும் மதிப்பிட முடியாதது; எந்தவொரு சமூகத்திலும் மிகவும் பலவீனமான குடிமகன்களும் மிகச் சிறப்பு வாய்ந்த பொக்கிஷங்களுமான குழந்தைகளின் மகிழ்ச்சியினால் அளவிடப்படுவது அது.

பட்டினியால் சித்திரவதையுறாமல், நோயால் சூறையாடப்படாமல், மானபங்கம், அறியாமை, சுரண்டல் போன்றவற்றால் அவதியுறாமல், மென்மையான ஆண்டுகளின் கோரிக்கைகளின் கனத்தை மீறும் காரியங்களில் அவர்கள் ஈடுபடும் அவசியமிலாமல் நம் குழந்தைகள் கிராமப்புறங்கள் புல் வெளிகளில் ஆனந்தமாக விளையாட வேண்டும்

மறத்தலும் மன்னித்தலும் இல்லாமல் இரு புறங்களில் தனித்து இருந்த இரு சமூகங்களின் ஒன்றிணைதல் சாத்தியமில்லை. நிறவெறிச் சட்டங்கள் உடைபட்டு, அதிபரான பிறகு வெள்ளை இனத்தவரின் ஒண்றினைவுக்கு வழிவகுக்கும் பல்வேறு துவக்க முயற்சிகளுக்கு வித்திட்டார் மாண்டேலா. வலிகளின் நினைவுகளில் மூழ்கியிருந்து காயங்களை மறைக்காமல் வைத்திருப்பதில் ஒட்டு மொத்த சமூகத்தின் முன்னேற்றம் தடை படுவதை வாழ்நாளின் கடைசி வரை வலியுறுத்தியவர்.

இருபத்தியேழு வருடங்கள் அவர் சிறை சென்ற வழக்கின் பப்ளிக் பிராசிக்யூடருடன் பிற்காலத்தில் விருந்துண்டு நட்பு பாராட்டியதும், அவர் சிறை சென்ற காலத்து தென்னாப்பிரிக்க பிரதமரின் விதவை மனைவியுடன் தேநீர் அருந்த பல நூறு கிலோ மீட்டர்கள் அவர் பயணம் செய்ததும் நம் கண் முன்னர் வாழ்ந்த இரண்டாம் காந்தியை நமக்கு அடையாளம் காட்டிய பல்வேறு நிகழ்வுகளில் சில.

”மரணம் என்பது தவிர்க்க முடியாதது. ஒரு மனிதன் அவனுடைய மக்களுக்கும் அவனுடைய நாட்டுக்கும் செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டதாகக் கருதுவானாயின், அவன் அமைதியான கடைசி துயில் கொள்வான். நான் அத்தகைய முயற்சியை எடுத்ததாக நம்புகிறேன். எனவே நான் நித்திய உறக்கம் கொள்வேன்” என்று அவர் ஒரு முறை எழுதினார்.

மடிபாவின் நித்திய உறக்கத்தின் இன்றைய துவக்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளிலும் உறைந்திருக்கும் மாண்டேலாவை வெளிக்கொணரும் துவக்கமாக இருக்கட்டும்.

Madiba3