குர்ஆனும் விவிலியமும்

இயேசுவைப் பற்றிய இஸ்லாமின் பார்வை குறித்து சில தினங்கள் முன் எழுதியிருந்தேன். போதனைகள், நம்பிக்கைகள் இவற்றைப் பொறுத்தமட்டில் விவிலியமும் குர்ஆனும் தனித்துவமான பார்வையைக் கொண்டவை. இரண்டு சகோதர நம்பிக்கை அமைப்புகளுக்குள் குறிப்பிடத்தகுந்த வித்தியாசங்கள் உண்டு.

இவ்விரண்டு சமயங்களுக்கிடையிலான நுணுக்கமான வித்தியாசங்களைப் பற்றி சிந்திக்கையில் எனக்கு வைதீக பௌத்த நம்பிக்கைகளுக்கிடையிலான ஒப்பீடு நினைவுக்கு வரும் – “look same yet distinct”.

இந்தக் குறிப்பின் நோக்கம் வித்தியாசங்கள் குறித்து சிந்திப்பது இல்லை. சொல்லப்போனால், குர்ஆனிலும் விவிலியத்திலும் உள்ள ஒரே மாதிரியான அர்த்தங்களை வெளிப்படுத்தும் அல்லது பொதுவான கருப்பொருட்களைக் கொண்ட வசனங்களைப் பகிர்வது.

உதாரணத்திற்கு, விவிலியமும் சரி குர்ஆனும் சரி கடவுளையும் சக மனிதர்களையும் நேசிக்கச் சொல்கின்றன.

குர்ஆன் 2:195 – “அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; நன்மை செய்யுங்கள்; அல்லாஹ் முஹ்ஸின்களை – நன்மை செய்வோரை – நேசிக்கின்றான்.”

மத்தேயு 23:37-39 – “இயேசு அதற்கு,, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’

இதே கருத்தைச் சொல்லும் இன்னொரு உதாரணம் :-

குர்ஆன் 2:286 – “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

மத்தேயு 6:9-13 – “நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

ஈகையின் முக்கியத்துவம் குறித்து –

குர்ஆன் 2:273 – “பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.”

லூக்கா 12:33 – “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுவதுமில்லை, பூச்சி அழிப்பதுமில்லை.”