3 கவிதைகள்

அவன்

நானும் அவனும்
கண்ணுக்குப் புலப்படா
கயிறினால் பின்னப்பட்டிருக்கிறோம்

ஒருவருக்கொருவர்
முதுகு காட்டி
அருகில் மிக அருகில்
இருந்தாலும்
ஒருவரின் கண்ணை
அடுத்தவர் பார்த்ததில்லை

அதோ பார் கூழாங்கல்
என்று சொன்னால்
அவன் கண் கரும்பாறையை பார்க்கும்

எனக்கு சிரிக்கத் தெரியாது
அவனுக்கு சிரிப்பதை நிறுத்தத் தெரியாது
அடுத்தவர்க்கென சிரிப்பது அவன் வாடிக்கை
சிரிக்கும் கணங்களுக்காக
வழி மேல் விழி வைப்பது என் பழக்கம்

அவனின் சிரிப்பொலி ஒரு நாள் நின்றது
அப்போது எனக்கு சிரிப்பு வந்தது

என் சிரிப்பொலி கேட்டதும் அவன் கேட்டான் ;
“கயிறு திறந்துவிட்டதா?”

“இல்லை, இதயம் திறந்துவிட்டது” என்ற என் பதில்
அவன் மோனத்தை அடர்த்தியாக்கியது

என் சிரிப்பொலி இன்னும் வலுத்தது

+++++

குண்டு பூதம்

நண்பர்களை
விருந்துக்கு அழைத்ததில்லை
என்று யோசித்துக் கொண்டிருந்த போது
இல்லாதவர்களை
விருந்துக்கு என்ன…
சாவுக்கும் அழைக்க முடியாது
என்று என்னுள்
இருக்கும்
இரண்டு கொம்பு துருத்தி நிற்கும்
குண்டு பூதம் சொல்லிற்று
பல இலைகளை விரித்து
எனக்கு நானே செய்து கொண்ட
விருந்துபசாரத்தில்
இல்லாத நண்பர்களின்
உணவையும் நானே செறித்தேன்
குண்டு பூதம்
இளைத்துப் போனது

+++++

பதக்கம்

பதக்கம் ஒன்று
காணாமல் போனது
என்றோ பெற்ற பதக்கம்
இழந்து போனதில்
பெரும் வருத்தம்
நிகழ் காலத்தில்
பதக்கத்தை காணவில்லை
எதிர் காலத்துக்குள்
எங்கானும் சென்று ஒளிந்திருக்குமா?
பதக்கம் பெற்ற இடத்தில்
சென்று தேடினால் பயனுண்டென
இறந்த காலம் பயணமானேன்
பதக்கத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தவனை கேட்ட போது
அது பற்றி எதுவும் கேள்விப்பட்டதில்லையென கை விரித்தான்

பண்டிகை காட்சிகள்

firni
நிறைவு என்ற பதத்துக்கு
நிறைய என்று பொருள் கொண்டு
கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது
நிறைய வகைகளில் “நிறைய”..
“கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய”
“சென்ற வருடத்தை விட நிறைய”
“மைத்துனரின் வீட்டை விட நிறைய”
என!
கொஞ்சமிருப்பவரும்
“நிறைய” காண்பிப்பதற்கு
நிறைய கடன்களைப் பெற
நிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும்.
அந்தஸ்தை நிரூபிக்க
நிறைய பரிசுகள் !
நிறைய உடைகள் !
நிறைய இனிப்புகள் !
நிறைய விருந்துகள் !
நிறைய வாழ்த்தட்டைகள் !
நிறைய மனநிறைவும் இருக்கும்
நண்பனொருவன் தன் குடும்பத்தை
வெளிநாடு அழைத்துச் சென்று
வெண்பனி சூழ்ந்த
பயணியர் விடுதிக்குள்
கொண்டாடியதாய் கேள்விப்படும் வரை !