ஏழு முப்பத்தாறு

அவள் மிக நிதானமாக  தன் உடைகளைக் களைந்து கொண்டிருந்தாள். படுக்கையறையின் விளக்கு பளிச்சென எரிந்து கொண்டிருந்தது. பீரோவில் பதிக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தன் உடலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அவன்  தயாராக இருந்தான். அவனுடைய வேகத்தை உதாசீனப்படுத்துபவள் போல் தன் கூந்தலால் தன் மார்பை மூடிக்கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தின் அழகை பருகியபடி நின்றிருந்தாள். மெள்ள அவனருகில் வந்து அவள் படுத்துக் கொண்ட அடுத்த வினாடி ஆடு மேயும் புல் தரையானாள். அவன் அவள் மேல் இயங்கினான். இரவு நேர அமைதியிலும் விரையும் உணர்வை அவனால் நிறுத்த முடிவதில்லை. சதாசர்வ வினாடியும் அவனுள் ரயில் ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மெதுவாக நிதானமாக காரியத்தில் லயித்து செய்வதன் மகிழ்ச்சியை கைவிட்டு வருடங்களாகிவிட்டன. அவளின் அதிஅற்புதமான உடலின் கீழ்ப்புறத்தில் முகம் பதித்து கொண்டிருந்தாலும் செய்கையில் லயிக்காமல் கவனம் அளைந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட  வேண்டிய அலுவலகப்பணி போல் பதற்றம் படர்ந்ததோர், அர்த்தமற்ற வேகம் அவனுடைய பிரசன்னத்தை உறிஞ்சியது.

அவள் நிதானமாக தன் இரு கைகளை நகர்த்தி தலைக்கு மேல் வைத்துக் கொண்டாள். பிறகு சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை  கையில் வைத்துக் கொண்டு தன் முக பிம்பத்தை விதவிதமாக புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். இடப்புறம் இருந்த ஒரு கண்ணாடிப்பேழையிலிருந்து ஒரு தின்பண்டத்தை எடுத்து வாயில் போட்டுச் சவைத்துக்  கொண்டிருந்தாள். அவன் உச்சத்துக்குப் போவது போல் தெரிந்த சமயத்தில் மட்டும் லேசாக அவள் கவனம் சிதறியது. ஒரேயொரு முறை “ஹ்ம்” என்று முனகினாள். அவள் முனகும் சத்தம் அவன் காதில் விழுந்ததும் சிறு மகிழ்ச்சி அவனுள். பின்னர் கடமையை முடித்த உணர்வில் தன் கட்டுப்பாட்டை சிறிது இழக்கும் சுதந்திரம் கிட்டிவிட்டதாக எண்ணி பரவசத்தை ஒரு நொடி அனுபவித்து விட்டு அவளின் வலப்புறம் வந்து விழுந்தான். சுவாசம் இரைந்தது. அவன் மெல்லிய தொந்தி மேலும் கீழுமாக விம்மியது. கழுத்தில் வியர்வை அருவி. அயர்ந்து கண்ணை மூடினான்  

+++++

ஊதுபத்தி முத்தமிட்டதும் பட்டாசுத் திரியின் நீளத்தைக் குறைத்துக் கொண்டு தீக்கனல் நகர்வது போல் உஸ்-ஸென ஒரு சத்தம் கேட்டது. கனகம் மறைந்து கொண்டிருந்தாள். கால்விரல்கள் தொடங்கி ஒவ்வொரு அங்கமாக அவள் மறைந்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் அகல விரிந்த வண்ணம் அவனை நோக்கி எள்ளி நகையாடுவது போல் அவனைப்பார்த்தன. அவன் “கனகம்..கனகம்” என்று கூவினான். அவள் சிரம் மட்டும் மறைவதற்கு மிச்சம். “சிவா…சென்று வருகிறேன்” என்று சொன்னாள். “எங்கே செல்கிறாய் கனகம்?” என்று கத்தினான். “அப்பா வீட்டுக்கு…நாசிக் செல்கிறேன்..என்னைத் தேடாதீர்கள்”. கனகம் மறைவதை சிவாவால் தடுக்க முடியவில்லை.

வேட்டியை அணிந்து படுக்கையறை கதவை திறந்து முன்னறைக்கு வந்தான். விரிக்கப்பட்ட பாய் மேல் படுத்துக் கொண்டிருந்த அவன் வாரிசுகளையும் காணவில்லை.    

ஏழு முப்பத்தியாறு மணிக்கு முதலாம் பிளாட்பார்மிலிருந்து புறப்பட்டு சி எஸ் டி செல்லும் ஸ்லோ வண்டி தான் அவன் நிரந்தரமாய் பயணம் செய்யும் மும்பை லோக்கல். புளி முட்டையென அடைந்தபடி பயணம் செய்யும் மும்பைகர்களுக்கு ஜன்னலோர இருக்கை ஒரு சிம்மாசனம் மாதிரி. அவனுக்கு இன்று சிம்மாசனம். வழக்கமாய் அவனுடன் பயணம் செய்யும் சுபா அன்று வரவில்லை. அவள் உட்காரும் ஜன்னலோர இருக்கையில் இன்று சிவா அமர்ந்து கொண்டான். அவன் உட்காரும் இடத்தில் பருமனான பீகார்க்காரர். “சுனியேகா…ஹம் கா கெஹ்ரெ ஹெய்ன்!” என்று யாருடனோ போனில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். உரையாடலை முடித்தவுடன் அழுத்தமாக உரசி அவனை அரைக்க ஆரம்பித்தார். எல்லாம் சில நிமிடங்களுக்குத்தான். ரயில் கிளம்பி வேகம் பிடித்ததும் எத்தனை அசவுகர்யத்திலும் அவரவர் உட்கார்ந்திருக்கும் அல்லது நின்றிருக்கும் இடத்தை சுற்றி கண் தெரியா வட்டத்துக்குள் அடங்கிவிடுவர்.

சுபா அன்று ஏன் வரவில்லை? அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கப் போவது பற்றி முன்னதாகவே அவள் சொல்லிவிடுவாள். இருவரும் சேர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே ஒரு முறை மட்டும் அவள் சொல்லவில்லை. அப்போது அவள் தொடர்ந்து ஏழு-எட்டு நாட்கள் வரவில்லை. திரும்பி வந்த போது கணவன் ரிதேஷை மருத்துவமனையில் சேர்த்திருந்தது என்று சொன்னாள். அவன் அதிகம் அதைப்பற்றி துருவித்துருவி கேட்கவில்லை. குடும்ப விஷயங்களை பற்றி அதிகம் விசாரிக்காத அவனின் குணம் அவளுக்கு ரொம்பவும் பிடித்ததாக அவள் அடிக்கடி சொல்வாள்.

ரிதேஷ் சிவாவுக்கும் சிநேகிதன். பல வருடங்களாக நண்பர்கள். மும்பை வந்த புதிதில் ஒரே அறையில் தங்கிய நாட்களிலிருந்தான நட்பு. சுபாவை ரிதேஷின் திருமணத்திற்குப் பிறகே அறிவான். ஆனால் சிவாவின் தோழி என்று ஆனதெல்லாம் அண்மைய தினங்களில் தான். அதற்கு முன்னர் நண்பனின் மனைவி என்ற மரியாதையான தூரத்தில் தான் பழக்கம். விபத்தாக ஒரு நாள் அவளை ஏழு முப்பத்தியாறு லோக்கலில் சந்திக்க நேர்ந்தது. இதே மாதிரியான விபத்துச் சந்திப்பு தொடர்ந்து மூன்று முறை நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் அவர்களின் சந்திப்புகள் விபத்தாக இல்லாமல் திட்டமிட்டே தொடர்ந்தன. சுபா அவனுக்காக குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பாள். வண்டி பிளாட்பாரத்துக்கு வந்த பின்னர் முட்டியடித்து ஏறி சுபாவுக்காக ஜன்னலோர இருக்கையை பிடித்து வைப்பான் சிவா. எதிரெதிர் சீட்டிலோ அல்லது பக்கத்திலோ உட்கார்ந்து கொள்வார்கள். எதிர் சீட்டை விட பக்கத்தில் உட்கார்ந்த நாட்கள் அதிகம். மாலையில் வேலை நேரம் முடிந்ததும் இருவரும் சேர்ந்தே வருவார்கள் என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பும் லோக்கல் என்றில்லாமல் எந்த நேரம் அவர்கள் சி எஸ் டி வருகிறார்களோ அதைப் பொறுத்து இரயிலை பிடிப்பார்கள்.

மழை கொட்டும் நாட்களில் கூட இருவரும் ஒரே இரயிலில் தான் சேர்ந்து பயணிப்பார்கள். அப்படியான ஒரு மழை நாளில் நகரம் நீரில் மூழ்கிய போது சிவாவும் சுபாவும் தத்தம் அலுவலகத்திலேயே தங்கியிருக்க வேண்டியதாயிற்று. அன்றிரவு அவர்கள் இருவரும் தென்மும்பை முழுக்க மகிழ்ச்சியாய் காலாற நடந்தார்கள். கேட் வே ஆப் இந்தியாவில் சற்று நேரம் கடலைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இரவு பனிரெண்டு மணிக்கு முன்னதாக தத்தம் அலுவலகத்துக்கு திரும்பினர். அடுத்த நாள் மதியம் ரயில்கள் ஒடத் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து தானே திரும்பினர். ரிதேஷ் கார் எடுத்துக் கொண்டு வந்து தானே ஸ்டேஷனுக்கு வெளியே காத்திருந்தபடியால் சுபா வெளியேறி பத்து நிமிடங்களுக்குப் பின்பு சிவா ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான். பெருமழை நாளிரவு காற்றாட அவர்கள் தென்மும்பையை வலம் வந்தபோது சுபா சில நிமிடங்களுக்கு தன் கையை அவனுடைய கையுடன் கோர்த்துக் கொண்டு நடந்ததை அடிக்கடி நினைத்துப் பார்த்து பரவசமடைவான்.

சிவாவின் மனைவி கனகத்துக்கு சுபாவைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்காது. ரிதேஷும் சுபாவும் அவன் வீட்டுக்கு வருவது சில வருடங்கள் முன்னர் நின்றுவிட்டது. சிவாவுக்கு இரண்டாம் குழந்தை பிறந்த போது சுபா நடந்து கொண்ட விதம் விசித்திரமாயிருந்தது. இரண்டாம் குழந்தைக்கு கர்ப்பமானதை பற்றி ஏன் தனக்கு தெரிவிக்கவில்லை என்று கனகத்தை கடிந்து கொண்டாள். இரண்டு தோழிகள் செல்லமாய் கோபித்துக் கொள்வது போல இருக்கவில்லை அது. சிவாவும் ரிதேஷும் தான் நண்பர்கள். கனகத்துக்கும் சுபாவுக்கும் நட்பெல்லாம் கிடையாது. கணவர்கள் நண்பர்கள் என்பதால் ஒரு தொடர்பு. அவ்வளவே. “தனக்கு இன்னும் குழந்தை பொறக்கலையேன்னு ஒரு பொறாமை” என்று கனகம் சிவா காதில் முணுமுணுத்தது அநேகமாக ரிதேஷ் – சுபா காதில் விழுந்திருக்கும். அதனாலோ என்னமோ சுபாவும் ரிதேஷும் சிவா வீட்டுக்கு வந்தது அன்றே கடைசி.

இரு குடும்பங்களுக்கிடையிலான தூரம் சுபா மற்றும் சிவாவுக்கிடையிலான ரகசிய நட்புக்கு ஏதுவாக இருந்தது. “என்ன! ரயிலில் மட்டும் சந்தித்துக் கொள்ளும் அளவுக்குச் சுருங்கிவிட்டது நம் நட்பு” என்று அவ்வப்போது குறைப்பட்டுக் கொள்வது போல் சொல்வாள். “ஆனாலும் இது எனக்கு பிடித்து தான் இருக்கு” என்று அவன் தன் தோளால் இடிப்பாள்.

சில நாட்கள் அவள் வாய் பேசாமலேயே பயணிப்பாள். என்ன ஆச்சு என்று அவன் கேட்டால் பதில் ஏதும் சொல்ல மாட்டாள். அவள் கண்கள் பனித்தது போல் இருக்கும். “ரிதேஷோட சண்டையா?” என்பான். அவள் “ரிதேஷோட என்னிக்கும் சண்டை போட்டது கிடையாது. சாது அவர். கூட தங்கியிருக்கே மாமியார்க் கிழவி தான்” என்று சொல்லி ஜன்னலுக்கு வெளியே பார்வையை பதித்துக் கொள்வாள்.

தாதர் ஸ்டேஷன் வந்த போது பருமனான பீஹார்க்காரரின் குரட்டையொலி உச்சத்தை எட்டியிருந்தது. தாதர் ஸ்டேஷனில் பாதி கம்பார்ட்மெண்ட் காலியானது. தன்னிருக்கையிலிருந்து சிவா எழுந்து நின்று கொண்டான்.

சிவா தன் தலைமை அதிகாரியிடம் ஒரு சந்திப்பில் இருந்த போது சுபா எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தாள். அந்த எஸ் எம் எஸ் படிக்கப்படாமலே இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு எஸ் எம் எஸ். போன் அதிர்தலை அப்போது தான் ‘கவனித்தான். அனுப்புனரின் பெயரை பார்த்ததும் அவனுள் ஓர் உற்சாகம். சந்திப்பு முடிவடைந்த பின் சிகரெட் இடைவெளி எடுத்துக் கொள்வதற்காக அலுவலக வாசலுக்கு வந்தான்.

முதல் எஸ் எம் எஸ் : “ஆஃபிஸ் போயிட்டியா…மாமியாரை கூப்டுகிட்டு அவர் ஹைதராபாத் போயிருக்கார்.. என் நாத்தனார் வீட்டுக்கு…கனகம் நாசிக் போயிட்டதா சொன்னியே, அவள் என்னிக்கு திரும்பறா?…ராத்திரி வீட்டுக்கு சாப்பிட வாயேன்”

இரண்டாம் எஸ் எம் எஸ் : “என்ன பிசியா? மாமியார்க் கிழவி போன் பண்ணிச்சு…நான் லேடி டாக்டர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன்..போய்ட்டு வரேன்…ஒரு மணி நேரத்துல திரும்பி வருவேன்”

சிகரெட் புகைத்து முடித்து விட்டு கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். நகைச்சுவை எனும் போர்வையில் நேரடியாகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் மறைமுகமாகவும் அவன் அவளிடம் பலமுறை வெளிப்படுத்திய விருப்பமும் வேண்டுகோளும் அது தான். இத்தனை நாள் அவற்றையெல்லாம் புறக்கணித்து வந்திருக்கிறாள். இன்று அவளாகவே வீட்டுக்கு அழைக்கிறாள். ரிதேஷும் அவன் அம்மாவும் இதற்கு முன்னர் பலமுறை ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவன் அவள் வீட்டுக்கு வரும் விஷயத்தை பிரஸ்தாபித்தபோது “டோன்ட் டாக் நான்-சென்ஸ்” என்று சொல்லிவிட்டவள் இன்று ஏன் அழைக்கிறாள்? எண்ணங்களை அனுபவமாக மாற்றும் வாய்ப்பா இல்லையேல் பெண்டாட்டி ஊருக்கு சென்றிருப்பதால் தினமும் ஓட்டலில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருநாளாவது வீட்டுச் சாப்பாடு சாப்பிடட்டுமே என்ற கரிசனமா? என்னவும் நடக்கலாம் என்னும் சாத்தியத்தை யோசிக்கையில் அவனுள் ஒரு சிலிர்ப்பு. மொபைல் போனை கையில் வைத்து உருட்டிக் கொண்டே யோசித்தான்.

ஏழாம் மாடியில் இருந்த பிளாட்டின் மணியை அழுத்தினேன். ஜாளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மெயின் கதவு திறந்ததும் அவள் தெரிந்தாள். இடைவரை நீளும் கூந்தலில் அவள் வைத்துக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் வாசத்தை நுகர்வதாக உணர்ந்தேன். நான் உள்ளே நுழைந்ததும் கதவு சார்த்தப்பட்டது. எனக்கு வியர்த்திருந்தது. ஹாலில் ஏஸி இயங்கும் சத்தம் லேசாக வந்தது. கருப்பு நிற சேலை அணிந்திருந்தாள். வெண்முத்துப் பல் தெரிய புன்னகைத்தாள்.

கை, கால் அலம்பிக் கொள்ள டவல் கொடுத்தாள். முகம் கழுவி ஈரத்தை துடைக்கும் போது ஒரு கணத்துக்கு நான் எங்கிருக்கிறேன் என்ற கேள்வி எழுந்தது. “க….” என்று வாயைத் திறப்பதற்குள் என் பார்வையில் சுபா தெரிந்தாள். சுபாவுடன் அவள் வீட்டில் தனியாக இருக்கிறோம் என்ற எண்ணம் என்னுள் ஊடுருவியது.

அவள் எனக்கு சாதம் பரிமாறிக் கொண்டிருக்கிறாள். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் என்று அமர்க்களமான சமையல். “எதுக்கு இவ்வளவு அயிட்டம்?” என்று சுபாவிடம் கேட்டேன். “முதல் தரம் இல்லையா..அதனால் தான்” என்றாள். அவள் கண்கள் மின்னின. சமையலறை சென்று ஒவ்வொன்றாய் எடுத்து வந்து பரிமாறும் போது அவள் நடையில் இருந்த துள்ளல் கவனிக்கக் கூடியதாய் இருந்தது. “ நீ சாப்பிடலியா?” என்று கேட்டேன். “இல்லை..விரதம்…உப்பில்லாத அயிட்டம் தான் சாப்பிடுவேன்” என்றாள்.

ரசம் சாப்பிட்ட பிறகு தயிர் பரிமாறவில்லை. தட்டில் சாதத்தை போட்டு தயிருக்கு பதிலாக இளஞ்சூடான பாலை ஊற்றினாள். “உவ்வே…என்ன செய்கிறாய்?” என்று கேட்கிறேன். “ ஏன் பால் சாதம் சின்ன வயசிலே சாப்பிட்டதில்லையாக்கும்?” என்று கேட்டுக் கண்ணடிக்கிறாள். அவள் என்னருகே வந்து தட்டில் சர்க்கரையைத் தூவி தன் கையால் பிசையும் போது அவள் உடல் லேசாக என்னை மோதுகிறது. அவள் புடவையின் தலைப்பு சொருகிய இடுப்பின் வெண்மை என்னை சுண்டியிழுக்கிறது. இரண்டு கவளத்தை எனக்கு ஊட்டி விடுகிறாள். நான் போதும் என்கிறேன். “இன்னும் ஒரு வாய் பால் சாதம் சாப்பிட்டாக வேண்டும்” என்று சொல்லி என் தலையை பிடித்துக் கொண்டு என் வாயில் திணிக்கிறாள். “தட்ஸ் லைக் எ குட் பாய்” என்று சொல்லி சிரிக்கிறாள். தட்டில் எஞ்சியிருந்த பால் சாதத்தை அவள் சாப்பிட்டு முடிக்கிறாள்.

அவள் பாத்திரங்களை கழுவி முடித்து சமையலறையை துடைத்து முடிக்கும் வரை ஹாலில் காத்திருக்கிறேன். “டீ வி வேணும்னா போட்டுக்குங்க” என்கிறாள். “இல்லை…பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு சோபாவுக்குப் பக்கத்தில் இருந்த ஏதோவொரு ஆங்கிலப்பத்திரிக்கையையின் பக்கங்களைப்  புரட்டுகிறேன்.

வெண்ணிற கூந்தல் கொண்ட, உயரமான நடிகை ஒருத்தி ஒற்றை இறகை தன்னிரு கைகளில் ஏந்தி வனப்பு மிக்க தன் முலைகளை  பார்வையாளர்களின் கண்ணில் படாமல் மறைத்தபடி கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் பக்கவாட்டில் நின்றிருந்த குட்டையான ஆனால் மிடுக்கான ஒரு நாயகன் நாயகியின் கழுத்தில் முத்தத்தை பதித்துக் கொண்டிருந்தான். அடுத்த பக்கத்தில் வெளியாகியிருந்த படத்தில் அதே நடிகை இம்முறை சிங்காரம் செய்து கொண்டு படுக்கையின் ஒரு தலையணையில் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த தலையணைக்கு இணையான இன்னொரு தலையணையில் அழகான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு முகமூடி வைக்கப்பட்டிருக்கிறது. மேலை நாடுகளில் வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்துக்கான விமர்சன கட்டுரையின் அங்கமாக அந்தப் படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த திரைப்படத்தின் இயக்குனர் படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீசுக்கு முன்னரே காலமாகியிருந்தார்.

பாத்திரங்களை தேய்க்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது. என் முகம் ஆங்கிலப்பத்திரிக்கையின் திரைப்பட விமர்சனக் கட்டுரையின் படங்களில் பதிந்திருக்கிறது. இந்நேரம் சுபா பாத்திரங்ளை தேய்த்து முடித்திருக்க வேண்டுமே….ஐயோ…நேரம் ஓடிக் கொண்டிருக்கிறதே….கையில் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கை ஒரு பாம்பைப் போல என் கைகளில் நெளிந்து கொண்டிருந்தது. சுபாவைப் பார்க்க முடியவில்லை. அவள் சமையலறையிலிருந்து இன்னும் வெளியே வந்தபாடில்லை. “சுபா..சுபா” என்று குரலெழுப்பினேன். அதல பாதாளத்தில் இருந்து ஒலிப்பது மாதிரி ஒலித்த என் குரல் எனக்கே  கேட்கவில்லை. பாத்திரம் தேய்க்கும் ஒலி பூதாகாரமாக வளர்ந்து கொண்டே வந்தது. பத்திரிக்கையை உதறிவிட்டு என் காதை பொத்திக்கொண்டேன்.

போன் ஒலிக்கிறது. சுபா அழைக்கிறாள். சிவா ஹல்லோ சொன்னதும் சுபாவின் குரல் ஓய்வில்லாமல் ஒலிக்கிறது. “ஹாய்…நேத்து ராத்திரி மாமியாரோட பெரிய சண்டை….ரொம்ப பிடுங்கல் தாங்கல…ஒண்ணு நான் இருக்கணும் இல்லை உங்கம்மா இருக்கணும்னு ரிதேஷ் கிட்ட சொல்லிட்டேன்…பாவம்…எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு ரொம்ப பாடுபடுகிறான்…ஆனால் என்னை எதிர்த்து அவனால் பேசி விட முடியுமா….கனகம் இன்னும் திரும்பி வரலை தானே?…டின்னர் பிளான் ஓகே தானே?” மூச்சு விடாமல் பேசுகிறாள்.

“சுபா…கனகத்தோட போன் வந்துது…என் மாமனார் சீரியசா இருக்காராம்…இன்னிக்கி சாயந்திரம் நாசிக் போகணும்”

“…..”

“ஹல்லோ…ஹல்லோ”

லைன் துண்டிக்கப்பட்டுவிட்டது எனப் புரியாமல் சிவா சிறிது நேரம் ஹல்லோ சொல்லிக் கொண்டிருந்தான். ஏன் துண்டித்துவிட்டாள்? நண்பனுடன் வாடிக்கையாகக் கொள்ளும் சிறு பிணக்கா? அல்லது தானழைக்கும் போது பொய்க்காரணம் சொல்லி மறுதலிக்கிறான் என்கிற ஏமாற்றவுணர்வால் தோன்றிய ஆக்ரோஷமா? அவள் திரும்ப போனில் அழைப்பாள் என்ற எதிர்பார்ப்பு நேரமாக ஆக வலுவிழந்து கொண்டே வந்தது. எனினும் ஒரு கடினமான தெரிவைச் செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான கட்டத்துக்குள் சிக்காமல் வாயில் வந்த பொய்க்காரணம் தன்னைக் காத்தது என்ற தெளிவு அவனுள் நிம்மதியை பிறப்பிக்கச் செய்தது. அத்தெரிவின் அறம் மற்றும் ஒழுக்கப் பரிமாணங்களெல்லாவற்றையும் விட அவனுடைய மறுப்பின் உண்மையான காரணம் என்ன என்பதை அவன் அறிந்தேயிருந்தான். எதிர்பார்ப்புக்கும் அனுபவத்துக்கும் இடையே இருக்கக் கூடிய முரண்…பால் சாதத்தின் எதிர்பார்ப்புச் சுவை அனுபவச் சுவைக்கு மாறாக இருந்தால்….அனுபவத்தின் சுவை வேறாக இருந்து..அது அவனுக்குப் பிடிக்காமல் போய்…இதே முரண் அனுபவம் சுபாவுக்கும் ஏற்பட்டு..நட்பை நிரந்தரமாக இழந்துவிட்டால்….சிறிது நேரம் கழித்து அமைதியாக யோசிக்கும் போது தன்னுடைய முடிவை சுபா நிச்சயம் புரிந்து கொள்வாள் என்று சிவா நம்பினான்.

அடுத்த நாள் சிவா ஏழு முப்பத்தியாறில் செல்லவில்லை. அன்று அவன் சுபாவின் கண்ணில் படாமல் இருத்தல் சரியாக இருக்கும் என்று எண்ணினான். மூன்றாம் பிளாட்பார்மில் இருந்து கிளம்பும் ஏழு நாற்பத்திரெண்டு விரைவு வண்டியில் ஏறினான்.

அதற்கடுத்து வந்த நாட்களில் முதல் பிளாட்பார்மில் வழக்கமாக சுபா காத்திருக்கும் இடத்தில் அவன் கண்களில் அவள் தென்படுவதில்லை. ஏழு முப்பத்தியாறில் விபத்துச் சந்திப்புகளும் நிகழ்வதில்லை. தானேயிலும் சரி ; மும்பையிலும் சரி ; சுபா சிவாவின் கண்ணில் படவில்லை. பால் சாதத்தை மன-நாசியில் முகர்ந்தவாறே மனித நெரிசல் மிக்க ஏழு முப்பத்தியாறில் அவன் ரயில் பயணங்கள் தொடர்ந்தன.

ஒரு நாள் அவன் வீட்டு வாசலை யாரோ தட்டினார்கள். அன்று அவன் அலுவலகம் செல்லவில்லை. நேரத்தை தூங்கிக் கழித்துக் கொண்டிருந்தான். வாசற்கதவை திறந்தவனின் முன்னால் நின்றிருந்தாள் சுபா. அதிர்ச்சியா ஆனந்தமா என்று பகுக்க முடியாத ஓர் உணர்வில் வாயடைத்து நின்றான். அவன்  வாய் திறக்க இயலாதவாறு இருந்தன பின்வந்த சுபாவின் செய்கைகள். கேள்விகள் கேட்கவோ மறுப்பு சொல்லவோ பிணங்கவோ இதுவல்ல நேரம் என்று உணர்ந்தவர்களாய் தாமதிக்காமல் ஒருவரில் ஒருவர் கலக்க ஆரம்பித்தனர். கூடல் நிகழ்வுகள் நேரக்கட்டமைப்புக்கு வெளியே நடந்தன. ரயில் ஓடும் சத்தம் அவனுள் அன்று கேட்கவில்லை. விரைவுணர்வு விடை பெற்றுக் கொண்டது. சுபாவின் கவனம் முகம் பார்க்கும் கண்ணாடியிலோ தின்பண்டம் நிரப்பி வைக்கப்பட்ட பேழையிலோ செல்லவில்லை. பங்கெடுப்பு இருவர் தரப்பிலும் குறைவில்லாமல் இருந்தது. கூடல் நிறைவு பெற்ற பின் சந்தோஷத்தின் உச்சியில் அவனை ஏற்றிச் சென்றதற்கு நன்றி செலுத்துமுகமாக அவளுக்கு இறுதி முத்தம் கொடுத்த போது சுபா கனகமாக மாறியிருந்தாள்.

+++++

கனகத்தையே அவன் நோக்கிக் கொண்டிருந்தான்.  புன்னகை நிரந்தரமாக படிந்தது போன்ற பாவனையில் இதழ்களை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் கனகம். அப்போது தான் சிவாவுக்கு நேரப்பிரக்ஞை வந்தது. அன்று என்ன கிழமை , இரவா அல்லது பகலா என்ற தெளிவு எதுவும் இல்லாதவனாய். அவன் மேல் படர்ந்திருந்த  கனகத்தின் கரத்தை மெள்ள விலக்கிவிட்டு எழுந்தான்.

வேட்டியணிந்து படுக்கையறைக் கதவை திறந்து கொண்டு முன்னறைக்கு வந்தான். அவன் வாரிசுகள் இருவரும் பாய்களில் நிம்மதியாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சுவர்க்கடிகாரம் 7.36இல் நின்று போயிருந்தது.     

(காலச்சுவடு நவம்பர் 18 இதழில் வெளியானது)

ரயில் பெருச்சாளிகள்

சென்னை செல்லும் மனைவி குழந்தைகளை ரயிலேற்றி விடுவதற்காக நிஜாமுத்தின் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஆன் – லைன் வழி முன் பதிவு செய்த ஈ-டிக்கெட் சகிதம் வண்டிக்காக காத்திருந்தோம்.

தண்டவாளத்தில் தடிதத பெருச்சாளிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தண்டவாளத்துக்கடியில் சிறு சிறு பொந்துகளுக்குள் நுழைந்தவாறும் வெளிவந்தவாறும் இயங்கிக் கொண்டிருந்தன. ரயில் நிலையங்களில் ஒரு சுண்டெலி கூட ஏன் தென்படுவதில்லை? வெறும் பெருச்சாளிகளைத் தான் காண முடிகிறது. இவ்விதமாக என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

என் மொபைல் போனில் கீழ்க்கண்ட வரிகளை டைப் செய்தேன் :-

இரயில் நிலையங்களில்

சுண்டெலிகள் காணப்படுவதில்லை

வெறும் பெருச்சாளிகள் தாம்

சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

பெருச்சாளிகளைக் கண்டதும் உயிர் பெற்ற என் கற்பனையிலிருந்து உதித்த வரிகள் இவை. இவ்வரிகள் கவிதையாகுமா? பல முறை கவிதை போல ஏதோவொன்றை எழுதி விட்டு இது கவிதையா இல்லையா என்று யோசித்து மண்டையைப் பிய்த்துக்கொள்வது என் வழக்கமாகிவிட்டது. வெறும் நான்கு வரிகளை எழுதிய பிறகு என் கற்பனை தடை பட்டு விட்டது.

குடும்பத்தை ரயிலேற்றி விட்டு வீடு திரும்பியதும், மேற்கண்ட ’பெருச்சாளிக் கவிதையை’ தொடரும் முயற்சியில் ஈடுபட்டு முழுத் தோல்வி கண்டேன்.

பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒன்று என் ஞாபகத்துக்கு வந்தது. நான் தில்லி வந்த புதிதில் ஒரு சிறு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன். ஒரு வட இந்திய நகருக்கு அலுவலக வேலை தொடர்பாக பயணம் சென்றிருந்தேன். மூன்று நாள் அங்கே தங்கியிருந்து நிறுவனத்தின் சில சப்ளையர்களையும் வாடிக்கையாளர்களையும் சந்திக்கும் வேலை எனக்களிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது நாளே என் அதிகாரி எனக்கு போன் செய்து என்னை அன்று இரவே தில்லி திரும்பச் சொன்னார். அடுத்த நாள் ஏதோ அவசர வேலையாம். அதனால், மாலையில் கிளம்பும் ரயிலில் டிக்கட் எடுக்க காலை பத்து மணிக்கு ரயில் நிலையம் வந்தேன்.

இரண்டே இரண்டு கவுன்டர்கள். க்யூ ரயில் நிலையத்தின் பிரதான வாசல் வரை நீண்டிருந்தது. கவுன்டர் வரை வந்தடைய பல மணி நேரம் பிடிக்கும் போலிருந்தது.

ஒரு ஆள் என்னை அணுகினான். அவன் வேகமாக பேசின ஹிந்தியை என்னால் ஆரம்பத்தில் தெளிவாகப் பின்பற்ற முடியவில்லை. ஊரிலிருந்து புக் செய்து கொண்டு வந்திருந்த டிக்கட் என் கையில் இருந்ததை பார்த்திருப்பான் போலிருந்தது. “என்னிக்கான டிக்கட் உங்க கிட்ட இருக்கு” என்று கேட்டான். முதலில் நான் பதில் சொல்லவில்லை. “டிக்கட்டை கேன்சல் செய்யாதீங்க சார்….நான் வாங்கிக்கறேன்” என்றான்.

“என் டிக்கட்டை வாங்கி நீ என்ன செய்யப் போகிறாய்? இது நாளை மாலை கிளம்பும் ட்ரெயினின் டிக்கட் இது”

”இந்த டிக்கட்டை கேன்சல் செஞ்சீங்கன்னா…30% சார்ஜைக் கழிச்சிருவாங்க. நான் 10% மட்டும் கழிச்சிட்டு உங்களுக்கு பணம் தந்துடுவேன். இல்லைன்னா உங்களுக்கு வேற டிக்கட் வேணும்னா அதை அரேஞ்ச் பண்ணித் தருவேன்”

அவனிடம் கூடுதல் விசாரித்ததில் விஷயம் இதுதான். என்னுடைய டிக்கட்டை வேறு யாருக்கோ “ப்ரிமியத்தில்” விற்று விடுவான். வேறு யாரோ கேன்சல் செய்ய வந்த டிக்கட்டை எனக்கு கொடுத்து விடுவான். அதற்காக ஒரு “சர்வீஸ் சார்ஜ்” மட்டும் பெற்றுக்கொள்வான். ”ஆண் பயணி” என்று குறிப்பிடப்பட்டுள்ள டிக்கட்டை சில சமயம் பெண் பயணிகளுக்கு கூட விற்றிருக்கிறானாம். ”அது எப்படி சாத்தியம்? டிக்கட் பரிசோதகர் கண்டிபிடித்தால் பயணிக்கு பிரச்னையாகுமே?” யெனக் கேட்டதில் “எல்லாம் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம்..ஆண் பால் – பெண் பால் வேற்றுமைகள் பாராட்ட மாட்டார்கள்” என்று நக்கலடித்தான். அவனுடைய பெயர் சந்து என்று தெரிவித்தான்.

அன்று மாலை ரயிலுக்கான டிக்கட்டை ரயில் கிளம்புவதற்கு அரை மணி நேரம் முன்னதாக தருகிறேனென்றான். அடுத்த நாள் பயணத்திற்கான என் டிக்கட்டையும் நான் அப்போது தான் தருவேன் என்று சொல்லி விட்டேன்.

நான்கு மணிக்கு ரயில் நிலையம் வந்து விட்டேன். ஒரு சிறு தோல் பை மட்டும் தான். பால் இனிப்புகள் விற்கும் ஒரு கடை முன், இரண்டாம் பிளாட்ஃபார்மில் நிற்குமாறு சந்து சொல்லியிருந்தான். ஏற வேண்டிய ரயில் இரண்டாம் பிளாட்ஃபார்மிற்கு வந்து விட்டது. நகத்தை கடித்தவாறு நின்றிருந்தேன். சந்து ஒரு வழியாக வந்து சேர்ந்தான்.

“இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்க டிக்கட் என் கைக்கு வந்துடும்…உங்களோட நாளைய டிக்கட்டை குடுங்க” என்றான்.

“குடுக்கறேன்…அதுக்கு முன்னாடி இங்க நிக்கற ரயிலுக்கான கன்ஃபர்ம் டிக்கட் என் கைக்கு வந்தா மட்டும் தான் குடுப்பேன்”

“அப்ப டிக்கட்டை நீங்களே வச்சுக்குங்க….எனக்கு ஒண்ணும் வேணாம்….”

“என்னப்பா சொல்ற..நீ தானே எனக்கு டிக்கட் தரேன்னு சொன்னே”

“நான் இல்லேன்னா சொன்னேன்…..இருங்க ஒரு நிமிஷத்துல வரேன்” என்று சொல்லி நகர்ந்தான் சந்து.

எனக்கு ஒரே டென்ஷன். பேசாமல் இன்று இரவு இந்த ஊரிலேயே தங்கி விட்டு கன்ஃபர்ம் டிக்கெட்டில் அடுத்த நாள் பயணப்படலாமா என்று யோசித்தேன். ஆஃபீசில் டிஏ தர மாட்டார்களே? அதிகாரி ”ஒன்ன யாரு எக்ஸ்ட்ராவா ஒரு நாள் அந்த ஊரில் இருக்க சொன்னாங்க…நீ ஊரு சுத்திப் பார்க்கறதுக்கெல்லாம் கம்பெனி பணம் குடுக்காது” என்று திட்டவட்டமாகப் பேசுவாரே? ஹோட்டல் அறை நானூறு ரூபாய் ஆகிறது. அத்தனை செலவு செய்யும் நிதி நிலைமை இச்சம்பவம் நடந்த காலத்தில் என்னிடம் இருந்திருக்கவில்லை.

ரயில் கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கோச்சுகள் நிரம்பத் துவங்கின. ரயில் பிளாட்ஃபார்முக்குள் நுழையும் போது ஜெனரல் டப்பாவுக்குள் நிறைய பேர் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்திருந்தேன். அவர்களெல்லாரும் யார்டில் ஒளிந்திருந்து பின்னர் ஜெனரல் டப்பாவில் ஏறியிருப்பார்களோ? ஒரு முறை மும்பை சென்ட்ரல் (அப்போது பம்பாய் சென்ட்ரல்) ஸ்டேஷனில் பொது டப்பாவில் இடம் இருக்கிறதே என்று அமரப்போனால் ஒரு முரட்டு ஆள் “ஹ்ம் எடுங்க பதினைந்து ரூபாய்” என்றான். நான் எடுத்திருந்த அன்ரிசர்வ்டு டிக்கட்டை அவனிடம் காண்பித்தான். ஏளனமாய் சிரித்து விட்டு, ”இந்த இடத்தில் உட்கார வேண்டுமென்றால் எனக்கு பைசா கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நின்று கொண்டே வா” என்றான். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பயணி பதினைந்து ரூபாய் கொடுத்து காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். “எழுந்திரு” என்றான் முரடன். நான் கோச்சில் இருந்து இறங்கி பொது கோச்சிற்கு அருகே நின்றிருந்த சீருடையிட்ட ரயில் அதிகாரியிடம் போய் முறையிட்டேன். “அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீ கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டிரு…ட்ரெய்ன் கிளம்பினவுடன் அவர்கள் இறங்கிவிடுவார்கள்..அப்புறம் நீ காலியா இருக்கிற சீட்டில் உட்கார்ந்துக்கலாம்” என்று ஆறுதல் சொன்னார். அப்போது முரடன் அவரை நெருங்கி “சலாம் யாதவ் சாப்” என்றான். எனக்கு முதுகு காண்பித்துக்கொண்டு முரடன் தோளில் கை போட்டு கலகலப்பாக பேச ஆரம்பித்த யாதவ் என்கிற ரயில் அதிகாரிக்கு பின்னால் நான் ஒருவன் நின்று கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஞையே இல்லை.

சந்து ஒரு வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொண்டு வந்து என்னிடம் நீட்டினான். பால், வயது எல்லாம் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தன.

“இது கன்ஃபர்ம் ஆயிருச்சா” என்று கேட்டேன்

“சார்ட்டில் பேரு இருக்காது..ஆனா S-9 கோச்சில் ஏறி நில்லுங்க. யோகேஷ் என்று ஒரு டிடி டிக்கட் செக் பண்ண வருவார். அவர் கிட்ட பேசியாச்சு. உங்களுக்கு சீட் அலாட் பண்ணுவார். அவருக்கு டீ காபிக்கு காசு குடுங்க போதும்.”

தயக்கத்துடன் அந்த டிக்கட்டை பெற்றுக் கொண்டேன். அடுத்த நாளுக்கான என் டிக்கட்டை அவனிடம் கொடுத்தேன்.

“டிக்கட் மட்டும் போதாது சார்…என் சர்வீஸ் சார்ஜ் யாரு தருவாங்க….ஏற்கெனவே சொன்னேனே…..இருநூறு ரூபாய் குடுங்க”

டிக்கட் விலையே நூற்றி இருபது ரூபாய் தான். என் பர்ஸை எடுக்கும் போது தான் அவரைப் பார்த்தேன். “யோகேஷ்” என்ற பேட்ஜ் அணிந்திருந்தார்.

“சலாம் யோகேஷ் சாப்” என்றான் சந்து.

யோகேஷ் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு “என்னடா உங்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் அறிவு வராதா? சந்து இந்த தடவை கண்டிப்பா ஜெயில் தான் உனக்கு” என்று என் கையிலும் அவன் கையிலும் இருந்த டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டார்.

“என்ன சார்..உங்களைப் பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது…இந்த மாதிரி ஆளுங்க கிட்டேர்ந்து ப்ளாக் டிக்கட் வாங்கறீங்களே?”

நான் பதற்றமும் வெட்கமும் கலந்த தொனியில் “இல்லை சார்..அவசரமாக ஊருக்கு போக வேண்டியிருந்தது.” என்றேன்.

“ஹ்ம்ம்..போங்க…இந்த வெய்ட் லிஸ்ட் டிக்கட்டை வச்சுகிட்டு நீங்க ஜெனரல் டப்பாவில் தான் ஏற முடியும்…போங்க” என்றார்.

நான் அவரைப் பார்த்து “சார்…சார்..உதவி பண்ணுங்க சார்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அந்நேரத்தில் சடக்கென சந்து ஓடி விட்டான். யோகேஷ் “புடிங்க அவனை” என்றார். அவர் சொன்னதை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. “திருட்டு பசங்க” என்று என் காது பட சொன்னார். பிறகு என்னைப் பார்த்து “போங்க சார்…சிக்னல் போட்டுட்டாங்க…அன்ரிசர்வ்டு பொட்டில ஏறிக்கங்க” என்று சொன்னார்.

ரயிலின் ஹார்ன் ஒலித்தது. நான் வேகமாக எஞ்சின் பக்கத்தில் இருக்கும் ஜெனரல் டப்பாவை நோக்கி ஓடினேன். ஜெனரல் டப்பாவை அடையவும் ரயில் நகரத் துவங்கியது. டப்பாவுக்குள் ஏற முடியவில்லை. மக்கள் வெள்ளம். படிக்கட்டிலும் பயணிகள். அவர்கள் உள்ளே என்னை நுழைய விடவில்லை. ரயிலின் வேகம் அதிகரிக்கவும், என் வேகம் குறைந்தது. ஏமாற்றவுணர்வு விரக்தியாக மாறி “ரயிலே…போய்க்கொள்” என்று மனதுக்குள் சொல்லியவாறே பிளாட்ஃபார்மில் நின்றேன். ஒரு பென்ச்சில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன்,

தில்லிக்கு திரும்ப பேருந்து கிடைக்குமா என்று பார்க்க ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது சந்துவும் யோகேஷும் ஒரு டீக்கடை வாசலில் ஒன்றாக நின்று சிகரெட் புகைப்பதை பார்த்தேன். அவர்களை அணுகி நீங்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட டிக்கட்டை திருப்பித் தாருங்கள் என்று கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். நான் சாலையை க்ராஸ் செய்யக் காத்திருக்கும் போது தில்லி செல்லும் பேருந்து ஒன்று பச்சை விளக்குக்காக காத்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். அதில் ஏறிக் கொண்டேன்.

+++++

திரு எழுத்தாளர் அவர்களே

நீங்கள் அனுப்பிய படைப்பை படித்த பிறகு அதை எதில் பகுப்பது என்பது புரிபடவில்லை? என்ன Genre இது? கவித்துவமான பாவனையோடு துவங்கினீர்கள். பின்னர் அனுபவ பகிரல் தொனியோடு புனைவு மாதிரி எழுதியிருக்கிறீர்கள். அனுபவம் ஒரு ஃப்ளேஷ் பேக் மாதிரி வருகிறது. அந்த ஃப்ளேஷ் பேக்கிற்குள் ஒரு ஃப்ளேஷ் பேக் என்று இன்னொரு கதை (அல்லது அனுபவப் பகிரல்). தமிழ்த் திரைக்கதை ஆசிரியர்களின் பாதிப்பு உங்கள் கற்பனையில் தெரிகிறது.

பெருச்சாளிகள் என்ற ஒரு உருவகம் எதை குறிக்கிறது என்று புரிந்து கொள்ள பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இரயில் நிலையத்தை கதைக் களமாக வைத்து எழுத வேண்டும் என்ற உத்வேகத்தில் காட்டாற்று வெள்ளமாக உங்கள் எழுத்து ஆழமின்றி அலைகிறது. உள்ளடக்கத்தில் செறிவு இல்லை. இறுக்கமான வடிவமின்றி பஞ்சு மாதிரி சொல்ல வந்த விஷயம் நாலா திசைகளிலும் பறக்கிறது.

இரயில் நிலையத்தை களமாக வைத்து பல முக்கியமான இலக்கிய படைப்புகளை படைப்பாளிகள் படைத்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ரபீந்திரநாத் டாகோர் எழுதிய “Hungry Stones” சிறுகதை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் அதுவும் ஒன்று.

ரஸ்கின் பாண்ட் எழுதிய “Do you believe in Ghosts?” என்ற கவிதை ரயில் நிலையத்தில் நிகழும் ஒரு உரையாடலை சொல்கிறது.

“பேய்கள் இருக்கின்றன என்று நீ நம்புகிறாயா?”

மூன்றாம் பிளாட்ஃபார்மில்

நின்றிருந்த ஒருவன் என்னைக் கேட்டான்.

“நான் பகுத்தறிவுவாதி” – நான் சொன்னேன்

“நான் கண்ணால் காணக்கூடியவற்றையே நம்புபவன் ;

உதாரணமாக உன் கைகள், உன் கால்கள், உன் தாடி”

“ஓ! அப்படியானால் என்னைத் திரும்பவும் பார்”

என்றவன்

உடன் காணாமல் மறைந்து போனான்.

நீங்கள் அனுப்பியதை பிரசுரிக்கப் போவதில்லை என்ற எங்கள் முடிவை புரிந்து கொண்டிருப்பீர்கள். உருப்படியாக எதுவும் எழுதினீர்களேயானால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அன்புடன்

எடிட்டர்

+++++

சென்னையிலிருந்து திரும்பி வரும் மனைவியையும் குழந்தைகளும் ரிசீவ் பண்ண நிஜாமுத்தின் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது பெருச்சாளி ”கவிதையை” மேலும் தொடர உத்வேகம் பிறந்தது.

இரயில் நிலையங்களில்

சுண்டெலிகள் காணப்படுவதில்லை

வெறும் பெருச்சாளிகள் தாம்

சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

மொத்தமாக முன் பதிவு செய்து

அதீத விலையில் விற்கும்

தரகர்களை சொல்லவில்லை

பயணச் சீட்டின்றி

கூட்டமான ரயிலில்

பயணம் செய்பவர்களை சொல்லவில்லை

ஓசியில் தருகிறார்கள் என்று

மாதத்துக்கொரு முறை

நீள் பிரயாணம் செய்யும்

ரயில் ஊழியர்களை சொல்லவில்லை

முன் பதிவு செய்யும்

ரயில்வே இணை தளம் சரியாக இயங்காமல்

காளானாய் முளைத்திருக்கும்

தனியார் ட்ராவெல் ஏஜன்சிகளை சொல்லவில்லை

நிஜப் பெருச்சாளிகளைத்தான் சொல்லுகிறேன்

தண்டவாளங்களை

காற்றில் தொங்குவது மாதிரி

தொங்கவிட்டு

அடியில் வாழும்

பெருச்சாளிகளைத் தான் சொல்லுகிறேன்.

சென்னை ரயில் வந்து சேர்ந்தது. குடும்பத்தைக் காணும் ஆவலில் “கவிதை” எழுதிய டிஷ்யூ பேப்பரை உட்கார்ந்திருந்த பென்ச்சிலேயே போட்டுவிட்டு எழுந்தேன்.

டாக்ஸியில் ஏறி வீடு செல்லும் வழியில் ரயில் நிஜாமுத்தின் வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த என் கேள்விக்கு என் மனைவி அளித்த பதில் என்னை அதிர்ச்சியடைய செய்தது.

”நாக்பூர் ஸ்டேஷனில் இரண்டு மணி நேரம் போட்டு விட்டார்கள். யாரோ சிறு பையன் ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு பெருச்சாளி கடித்து இறந்து விட்டானாம்”