நித்தியத்தின் கண்ணோட்டம்

தபஸிருந்த முனிவருக்கு

நிழலளித்து

காத்திருந்தது மரம்

 

வெளுத்தசடா முடித்திரை பின்னிருந்து

கண்திறந்த முனிவர் மேல்

பச்சையிலைகளின் தூவல்

 

காலத்துக்கப்பால் பயணம் செய்து

கண்விழித்த முனிவரின் உடலில்

காலத்தின் சின்னங்கண்டு சிரித்தது

மார்க்கண்டேய மரம்

 

“உயிரமைப்பே!

நான் ஓர் உயிர்

உன் வாழ்வின் நீளம்

அதிகம் என நகைக்கிறாயோ..! “

 

முனிவர் ஓடையில் குதித்து

ஆனந்தமாய் குளிக்கையில்

இலைகளை அசைத்து

உடலைக் குளிர்வித்தது மரம்

 

இயற்கையின் கருவியே நாமெனும் அறிவை

மரம் எய்தும் முடிவிலி காலம் வரை

காற்றே இலைகளை அசைப்பதை

நித்தியத்தின் படிக்கட்டுகளில் ஏறி

நட்சத்திரமாய் மாறி மின்னப்போகும்

முனிவர் பார்த்துக்கொண்டிருப்பார்