அர்ஜுனன் காதல்கள் – உலூபி

@ Dolls of India
@ Dolls of India

வளைந்தோடும் நதியின் கரையில்
நீராடும் பார்த்தனின்
இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.
வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய்
அது பாதத்தை தீண்டிடவும்
நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான்.
ஒளி ஊடுருவும் மாளிகையின்
அறையில் விழித்தான்
வெளியே நாற்புறமும்
மீன்களும்
நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன
பார்த்தனின் முன் எரிகுண்டம் ;
நெய்யிட்டு
தீ வளர்த்தான்.
அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது
அருகிருந்த பாம்பின் கண்களில்
படர்ந்திருந்த இச்சைத்தீ.
கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம்
பாம்பு
பெண்
பாம்புப்பெண்
தீச்சடங்கு முடியவும்
“இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்
பார்த்தனை நோக்கினாள்
திரௌபதியும் யுதிஷ்டிரனும்
இணைந்திருந்த அறையினுள்
விபத்தெனவே நுழைந்ததனால்
விதித்துக் கொண்ட வனவாசம் ;
கவர்ந்திழுக்கும்
சர்ப்பப்பெண்ணுடன்
கூடுதல் முறையாகுமா?
பாம்புப்பெண்
அவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்
“சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை
உமக்கு நீரே வழங்கிக்கொண்ட
வனவாசத்தில்
உம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்
கூடுதலில் பாவமில்லை”
மாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்
மானிடப் பெண்ணாக எழுந்து
இதழ் குவித்து நெருங்கினாள்
அர்ஜுனன்
காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்.
நதியின் உயிரினங்கள்
அறையின் திரையாகின

oOo

பின்னொருநாளில்
நதிக்கரை மேடொன்றில்
வலியுடன் கண் விழித்தான்
விஷ பாணம் தாக்கி
புண்ணான அவனுடலை
பாம்புப்பெண்
நாவால் வருடினாள்
சற்றருகே ஒரு வாலிபன்
வில்லும் அம்புமாய்
பின்னே ஒரு வெள்ளைக் குதிரை
யாரிவன் என்னைப் போல்?
எங்கிருக்கிறோம்?
கனவிலா? நனவிலா?
உடலெங்கும் பாம்பு
ஊர்ந்து வைத்தியம் பார்த்தது
சலசலக்கும் நதியில்
முதலைகள் மூன்று நீந்திச் சென்றன.
இவைகளை முன்னர் சந்தித்திருக்கிறோமோ?
இறந்தகால நிகழ்வுகளும்
நிகழ்கால பிரக்ஞையும்
ஒன்றிணைந்து குழம்பாகி
வேறுபாடு காணவியலா கலவையாயின

oOo

“விஷமற்ற பாம்பினங்களில்
நான் அனந்தன் ;
ஆயிரம் பிரபஞ்சங்கள்
கடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”
கண்ணன் சிரிக்கிறான்

 

நன்றி : பதாகை