புனே டயரி

நேற்று நடந்தது

புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க மறந்துவிட்டேன். “ஃபால்ஸ் அலார்ம்” என்கிறார் வாட்ச்மேன். மற்ற பிளாட்டுகளிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. “இது இங்கே அடிக்கடி நடக்கிறது தான்” என்று வாட்ச்மேன் சொன்னதும் “எது? சாவி வீட்டுக்குள்ளேயே இருக்க கதவு வெளியிலிருந்து மூடிக் கொள்வதா?” என்று கடுப்புடன் கேட்கிறேன். “விசிட்டர் லௌன்ஜில் உட்கார்ந்துகிட்டே தூங்குங்க நாளைக்காலை பார்ப்போம்” என்கிறார். விசிட்டர் லௌன்ஜில் காற்றின் சத்தம் கேட்கவில்லை. மழை சத்தம் இல்லை. ரிசப்ஷனில் உறங்கும் வாட்ச்மேனின் பலமான குறட்டை சத்தம் மட்டும். எனக்கு கோபம். போர்வையை எடுத்து வந்திருக்க வேண்டும்! சட்டையையாவது அணிந்து வந்திருக்க வேண்டும். சாவியை மறக்காமல் எடுத்து வந்திருந்தால் செருப்பு அணியாததோ சட்டை அணியாததோ பெரிய தப்பாக தெரிந்திருக்காது. இரு கோடுகள் தத்துவம் என்று ஏதோ சொல்வார்களே!

புனே ஹார்ரர்

நகரத்துக்கு நான் வேண்டா விருந்தாளியோ! என் கேள்வியில் நியாயமிருக்கிறது என்றே நம்புகிறேன். திகிலிசை போன்று வீசும் காற்று, தானே மூடித் தாழ் போட்டுக்கொள்ளும் கதவு, ஆளரவமற்ற, காலியான ப்ளாட்டுகள், ம்….வார இறுதியில் இன்னொரு ஹார்ரர்…அறையில் தனித்திருந்து சலித்துப் போய் ஆறு மணியளவில் வாக்கிங் போகலாம் எனக்கிளம்பினேன். நேற்றிரவு இருந்த வாட்ச்மேனைக் காணோம். வரவேற்பு லாபியில் ஈ, காக்காய் இல்லை. நானூறு மீட்டர் தொலைவில் இருந்த கேட் வரை ஒருவரும் காணவில்லை. கேட்டைத் தாண்டி சாலையில் வந்தாலும் நிலைமையில் மாற்றமில்லை. ரோடில் கார்களோ, லாரிகளோ, ஆட்டோ ரிக்ஷாக்களோ- எவற்றையும் காணோம். ஒரு (மஹாராஷ்டிர) வடைக் கடை இருந்தது. ஷட்டர் போட்டிருந்தார்கள். ஷட்டரை லேசாகத் திறந்து வெளியில் நின்றிருந்த ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கடைக்காரர் மர்மமான முறையில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொட்டலத்தை வாங்கிக் கொண்டவர் அடுத்த கணம் காணாமல் போனார். அவர் போன ஸ்கூட்டர் சத்தமிட்டதா என்று இப்போது ஞாபகமில்லை. கடைக்குச் சென்று ஷட்டரைத் தட்டி “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். என் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என்பது போல் பார்த்தார். “டீ இல்லை, வடை பாவ் மட்டும் இருக்கிறது” என்று சொல்லி யோஜிம்போ திரைப்படத்தில் வரும் விடுதிக்காரர் பாத்திரத்தின் எக்ஸ்பிரஷனைத் தந்தார். நான் டோஷிரோ மிஃபுனே இல்லையே! வேகவேகமாக நடந்து அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டேன். வார இறுதி லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும்?

வாஷிங் மெஷின் புதிர்

தங்கச்சங்கிலி இரவல் வாங்கினா- பாமா விஜயம் படப்பாடலை நான் வாழ்வேன் என்று நினைத்ததில்லை. புனேவுக்கு குடி புகுந்த பிறகு வாஷிங் மெஷினை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். வீட்டு புரோக்கர் குல்வீர் அறைகலன்களையும் வாடகைக்கு தருகிறேன் என்றான். ஐந்தாறு நாட்களாயின. வாஷிங் மெஷின் வந்த பாடில்லை. ஆடைக்குவியல் வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் சாவியை கேட்டில் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். சாயந்திரம் கேட்டிலிருந்து சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது “குல்வீர் வந்தாரா” எனக் கேட்பேன். யாரும் வரவில்லை என்று விடை கிடைக்கும். ஒரு நாள் பால்கனியில் நீல நிற வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. பழைய மெஷின். எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே கண்களையிழந்து பிதுங்கியிருந்தது. ஆடைக்குவியலில் அன்று அணிந்திருந்த ஆடையும் சேர்ந்தது. அடுத்த நாள் விழி பிதுங்கிய மெஷினின் இடத்தில் இன்னொரு மெஷின். அதற்கு பிளாஸ்டிக் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தேன். தண்ணீர் பிய்ச்சியடித்து தொப்பலாக நனைந்து போனேன். வாஷிங் மெஷின் உருவில் வந்த வாஷிங் “பேசின்” அது என்று புரிந்தது. அடுத்த நாள் வாஷிங் “பேசின்” அங்கேயே கிடந்தது. ஆனால் கூடவே இன்னொரு வாஷிங் மெஷின் சேர்ந்திருந்தது. புதிது போல் தோற்றம் அதற்கு. ஆடைக்குவியலின் உயரத்தை பார்த்து வெட்கம் தாளாமல் சில துணிகளை எடுத்து புதிதாகச் சேர்ந்திருந்த வாஷிங் மெஷினுள் போட்டேன். வரும் வார இறுதியில் தோய்த்துவிட வேண்டும். குல்வீர் சாவியில்லாமல் எப்படி வீட்டுக்குள் வருகிறான் என்ற கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது.

தொடரும் ஹார்ரர்

இது முற்றிலும் புதிது. இரண்டு வார இறுதிகளாக நிகழ்வுகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் ஒரு கதை சொல்லல் நிகழ்வு. முரகாமியின் the elephant vanishes கதையை யாரோ வாசிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கதை பற்றிய கருத்துகள் பகிரப் படுமாம். இந்த வாரம் toast masters federation-இன் ஒரு நிகழ்வு. Cyber security பற்றி சக அலுவலர் ஒருவர் உரையாற்றப் போகிறாராம்! இவையொன்றும் புதிதல்ல. எது புதிது எனில் வாராது வந்த இரண்டு அழைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருப்பதுதான் புதிது.

படைத்தோனின் அறிகுறிகள்

ஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.



படைத்தோனின் அறிகுறிகள்

உறுதியாய்
பதிக்கப்பட்ட மலைகள்
என் போலன்றி,
சற்றும் அசையாதவை
தூண்களில்லா சுவர்க்கங்கள்
தனிமையை போக்கக்
கூடவே பயணிக்கும் நதிகள்
பகலில் வழிகாட்டிகள்
இரவில் நட்சத்திரங்கள்
வானில் வரிசையாக
பறக்கும் பறவைகள்
கொட்டும் மழை
கொழிக்கும் பயிர்கள்
திறந்து விடப்பட்ட
ஒன்றில் ஒன்று
கலவாத சமுத்திரங்கள்
வணிகக் கப்பல்கள்
மிதந்து செல்ல கடல்கள்
உண்ணச் சுவையான மீன்கள்
வலிமையான காற்று
ஊதிக் கலைந்த மேகங்கள்
படைத்தவனைத் தேடிக் களைத்து
படைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்
தன் கையில் வைத்து
பூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே
உன்னை பார்க்க வைப்பாயா
உன்னை கேட்க வைப்பாயா
முறையிடுகிறேன் அவனிடம்
இரண்டு நாட்களில்
ஏழு சுவர்க்கங்களை சமைத்தவன்
கிப்லாவை நோக்கி
என்னை மண்டியிட வைத்தான்
நண்பர்கள்
கால்நடைகள்
அனைத்தையும்
என்னையும்
சிறந்த அச்சினால்
கருவறைக்குள் உருவாக்கியவன்
அனைத்தும் பார்ப்பவன்
அனைத்தும் கேட்பவன்
என்னையும் பார்க்கிறான்
என்னையும் கேட்கிறான்
நம்பிக்கை கொள்ளச் செய்பவன்
பயங் கொள்ளச் செய்பவன்
இரண்டும் அவனே
படைத்தோனின் படைப்புகள்
நம்பிக்கையூட்டுகின்றன
படைத்தோனை நினையாதபோது
பயந்தோன்றுகிறது
பூமியெனும் ஓய்விடத்தின் மீது
வானமெனுந்திரை போட்டிருக்கிறான்
புசிக்க ஓராயிரம் கனி வகைகள்
காடுகளில் விலங்குகளை நிறைத்திருக்கிறான்
அவனடையாளங்களில்லா
இடமேது இப்பிரபஞ்சத்தில்
அவன் என்னை பார்க்கிறான்
அவன் என்னை கேட்கிறான்
சந்தேகங்கள் தவறன்று
நிரூபணம் கேட்ட ஆபிரகாமும்
இறைத்தூதனன்றோ
மூலிகைகள்
ஆலிவ்கள்
திராட்சைகள்
இன்னும் பலவற்றில் உள்ளன
அவனிருப்பின் அறிகுறிகள்
அவனே சிறந்தவன்
கருணை மயமானவன்

ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்

Rashomon

“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.

ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.

ரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.

மூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் காண்பித்துக் கொள்வது.

நிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா? அல்லது கண்ணோட்டமே யதார்த்தமா?

அலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

உறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.

தன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.

அகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா? சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா? அல்லது மனைவியா? அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா? எந்த கதை உண்மை? உண்மையில் என்ன நடந்தது? யார் பொய் சொல்லுகிறார்கள்? பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.

திரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.

நன்றி : பதாகை

கரணிய மெத்த சுத்தம்

Trees

சாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்‌ஷுக்களின் குழுவொன்று பிக்‌ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்‌ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்‌ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்‌ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி சூத்திரத்தை அவர்களுக்கு போதித்தருளினார். இந்த சூத்திரத்தை சுத்தத்தை உச்சரித்து வருமாறும் இது அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பிக்‌ஷுக்கள் வனத்திற்கு திரும்பிய பிறகு இச்சூத்திரத்தை பயிற்சி செய்து வரலாயினர். பிக்‌ஷுக்களின் பயிற்சி மர தேவதைகளினுள் மனமாற்றத்தை உண்டாக்கிற்று. பிக்‌ஷுக்களின் இதயத்துள் எழுந்த அன்பெண்ணத்தின் விளைவாக தேவதைகள் இளகின. பிக்‌ஷுக்கள் அங்கேயே தங்கி அமைதியாக தியானப்பயிற்சிகளில் ஈடுபட அனுமதித்தன.

பாலி நெறிமுறை நூல்களில் இரு இடங்களில் இச்சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தநிபாதத்திலும் குத்தகபத்தயாவிலும் இச்சூத்திரம் இடம் பெறுகிறது. தேரவாதத்தில் சொல்லப்படும் நான்கு பிரம்மவிஹாரத்தில் மெத்த (அன்பெண்ணம்) வும் ஒன்றாகும் ; சக-மனித ஒற்றுமையுணர்வை, தியானத்திற்கான  மனக்குவியத்தை வளர்ப்பதற்காக இச்சூத்திரத்தின் வாசிப்பு பரிந்துரைக்கப் படுகிறது. பின் வந்த பௌத்த நெறி முறைகளில் மெத்த பத்து பாரமிதைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

தேரவாத பௌத்த வழிபாட்டு முறைகளில் மெத்தா சுத்தத்தின் வாசிப்பு பிரபலம் ; இந்த சூத்திரத்துக்கு பயம் நீக்கும் சக்தியிருக்கிறதென்ற நம்பிக்கை பௌத்த சமயத்தில் பரவலாகக் காணப்படுகிறது.

தனிஸ்ஸாரோ பிக்குவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் கீழே –

குறிக்கோள் திறமுடையோரில்
அமைதி நிலைக்குள் நுழையும் எண்ணமுடையோர்
இதைச் செய்தல் அவசியம் ;
இயலுமையுடன் இருத்தல்,
நேர்க்குணம் மிக்கவராய்,
எளிதில் போதனையேற்கத்தக்கவராய்,
மென்மையானவராய்,
அகந்தையற்றவராய்,
சிற்சில கடமைகளுடன்,
இலேசாக வாழ்ந்து,
அமைதியான குணங்களுடன்,
தலை சிறந்து,
எளிமையானவனாய்,
ஆதரவாளர்களின் எண்ணிக்கை மேல் பேராசையின்றி.
ஞானியர் ஒறுக்கும்
சிறு செயலையும்
செய்யாமலிரு

சிந்தி: இளைப்பில் மகிழ்ச்சி கொள்ளட்டும் ;
அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.
உயிர்கள் எத்தன்மையாய் இருப்பினும்,
வலியுள்ளோரும் நலிவுற்றோரும், விதிவிலக்கின்றி
நீளமானதும், பெரிதாக இருப்பதும்
நடுத்தரவடிவினதும், குட்டையானதும்
நுட்பமானதும், வெளிப்படையானதும்
காண்பதும், காணப்பெறாததும்
அருகிருப்பதும், தள்ளியிருப்பதும்
பிறந்ததும், பிறப்பை நாடுவதும்

அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.
ஒருவரும் அடுத்தவரை ஏமாற்ற வேண்டாம்
அல்லது எங்கும் யாரையும் வெறுக்க வேண்டாம்
அல்லது கோபத்தாலோ, எரிச்சலாலோ
அடுத்தவர் துயருற நினைக்க வேண்டாம்

தன் மகவை, ஒரே மகவைக் காக்கும் பொருட்டு
தன் உயிரைப் பணயம் வைக்கும் தாயொருத்தியைப் போல்
அனைத்துயிர்கள் குறித்தும்
எல்லையிலா இதயத்தை வளர்த்துக் கொள்.

முழுப் பிரபஞ்சத்தின் மீதான நல்லெண்ணவுணர்வுடன்
எல்லையில்லா இதயத்தை வளர்த்துக் கொள்.
மேலே, கீழே, எல்லா பக்கங்களிலும்
தடையில்லாமல், பகைமை அல்லது வெறுப்பின்றி
நின்று கொண்டோ, நடந்தவாறோ,
அமர்ந்து கொண்டோ, அல்லது படுத்துக் கொண்டோ,
ஒருவன் விழிப்புடனிருக்கும் வரை
கவனத்துடனிருக்கும் தீர்மானம் கொள்ள வேண்டும்.

இதுவே
இங்கு, இப்போது
உன்னத இருத்தல்
என்றழைக்கப்படும்.

தவறான கருத்துகளுக்கிடம் கொடாமல்
ஒழுக்கத்துடன், முழுமையான தரிசனத்துடன்
புலனின்ப ஆசைகளை முறியடித்த
ஒருவன்
கருப்ப அறைக்குள்
மறுபடி உறங்குவதில்லை

ஆபுத்திரன் – 3

உதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ;  அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ;  பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள்.

“உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ

உடற்கழு தனையே லுன்மகன்  றன்னை

எடுத்துப் புறங்காட் டிட்டனர்  யாரே

உயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில்

செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது

அவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி

எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்”       (23 : 74 – 79)

அவள் வாழ்வில் அதுவரை நடந்தவற்றை இராணிக்குச் சொன்னாள். உதயகுமாரனுக்கும் தனக்கும் இருந்த முன்பிறவித் தொடர்பை விளக்கினாள். பஞ்ச சீலத்தை இராணிக்கு போதிக்கிறாள். செய்த தவற்றைப் பொறுக்க வேண்டும் என்று சொல்லி இராணி வணங்கினாள். மணிமேகலை அதைப் பொறுக்காமல் “என் கணவனின் தாயாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இத்தேசத்து மன்னனின் தேவியாகவும் நீங்கள் இருக்கிறீர்கள் ; எனவே என்னை நீங்கள் வணங்குதல் சரியாகாது” என்று சொல்கிறாள். (சிறை விடு காதை)

மணிமேகலை இராசமாதேவியின் அரண்மனையில் இருக்கிறாள் என்று மாதவி கேள்விப்பட்டு, அவளும் சுதமதியும் அறவண அடிகளைச் சென்று அதைப் பற்றி சொல்கிறார்கள். அறவண அடிகள் இராசமாதேவியின் அரண்மனைக்குச் சென்று சந்திக்கிறார், மரியாதைகளுடன் அவரை வரவேற்ற இராணிக்கு வாழ்வின் நிலையாமையை விளக்கி பேதைமை முதலான பன்னிரு நிதானங்களை அறிவுறுத்தினார்.

“தேவி கேளாய் செயதவ யாக்கையின்

மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்

பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்

இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்

பேதைமை செய்கை யுணர்வே யருவுரு

வாயி லூறே நுகர்வே வேட்கை

பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்

இற்றென வகுத்த இயல்பீ ராறும்

பிறந்தோ ரறியிற் பெரும்பே றரிகுவர்

அறியா ராயி னாழ்நர கறிகுவர்”                             (24 : 101 – 110)

 

அருகில் நின்றிருந்த மணி மேகலையிடம் “நீ பிற அறங்களைப் பற்றி அறிந்தவுடன் உனக்கு இதைப் பற்றி விளக்கமாக உரைப்பேன்” என்று சொல்கிறார்.

அறவண அடிகள் விடை பெறும் சமயத்து அவரை வணங்கி மணிமேகலை அங்கு குழுமியிருந்த மாதவி, சுதமதி மற்றும் இராசமாதேவி ஆகியோரை நோக்கி “இச்சான்றோர் சொன்ன நன்மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந்நகரிலிருப்பேனாயின் உதயகுமரன் மரணம் காரணமாக என்னைப் பற்றி தவறாகப் பேசுவர்; இனி நான் இங்கிருந்து செல்வதே சிறந்தது. இனி ஆபுத்திரனாடடைந்து பின்பு மணிபல்லவமடைந்து புத்தபீடிகையைத் தரிசனம் செய்து யாங்கணுஞ்சென்று நல்லறம் செய்து கொண்டிருப்பேன் ; எனக்கு இடரேற்படுமோ என்று நீங்கள் இரங்க வேண்டாம்” என்று சொன்னாள். அவர்களிடமிருந்து விடை பெற்று சூரியன் மறைந்த மாலைப் பொழுதில் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் துதித்து வணங்கி, மேக மார்க்கமாக பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புறத்திலுள்ள ஒரு பூஞ்சோலையில் இறங்கினாள். அங்கிருந்த முனிவனொருவனை வணங்கி “இந்நகரின் பெயர் யாது? இதனையாளும் அரசன் யார்?” என்று கேட்டாள். “இதன் பெயர் நாகபுரம். இதனையாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன் என்பான். இவன் பிறந்த நாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தறியாது ; மண்ணும் மரங்களும் பல வளங்களை அளிக்கும் ; உயிர்களுக்கு ஒரு நோயும் இல்லை” என்று அம்முனிவன் அரசன் பெருமையைக் கூறினான்.

 

உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

நீலக்குடை

@ Ben Kelley
@ Ben Kelley

வித விதமான

கவலைகள்

படைப்பூக்கமிழக்காமல்

ஒன்றன் பின் ஒன்றாக

தோன்றிய வண்ணம்

சங்கிலியை

அறுத்தெறிந்து

ஓரிரு மகிழ்ச்சியை

உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு

உவகை தலை தூக்குகையில்

அதீத மகிழ்ச்சி

அபாயம் தரும்

என்று உள்ளுணர்வு சொல்ல

மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன்

இனி அபாயமில்லை

என்ற நிம்மதியுணர்வை

அடையாளம் காணாமல்

முழுநேரக் கவலையில்

என்னை புதைத்துக் கொண்டேன்

 +++++

 என் கண்ணீர்த்துளிகளை

மழைத் துளிகள்

மறைத்து விடுதல்

சவுகர்யம்.

நதி உற்பத்தியாகும்

இடத்தை மலைகளும்

குகைகளும்

மறைத்திருக்குமாம்

என் கண்ணீர் நதிக்கு இந்த நீலக்குடை

சாலையோரக் குட்டைகளில்

சேரும் என் கண்ணிரின் வெள்ளத்தை

யாரும் அருந்தப் போவதில்லை

என்ற ஆறுதல் எனக்கு

குடை, ஆகாயம்,

மழை, மழை நீர்க்குட்டை, நீல நிறம் –

இவைகள்

எனக்கு உற்ற தோழர்கள்

எனக்கென்ன கவலை

மழை நிற்கும் வரை !

கவலையின்றி

அழுது கொண்டிருக்கலாம்.

 +++++

மரம்


மரம் போலவொரு
அழகான கவிதை
என் வாழ்நாளில்
என்னால் எழுத முடியாது.
பசி மிகுந்த
மரத்தின் வாய்
பூமித் தாயின்
வழியும் முலைகளில்
பொருத்தப்பட்டிருக்கும்.
கடவுளை தினமும்
பார்த்துக் கொண்டிருக்கும் மரம்
தன் இலைக் கரங்களை எழுப்பி
தொழுகை புரியும்.
கோடை காலங்களில்
வண்ணாத்திக் குருவியின் கூடுகளை
தொப்பிகளாக அணிந்து கொள்ளும்.
மார்பில் பனி பூசிக் கொண்ட
மரங்கள்
மழையுடன் கூடும்
என் போன்ற முட்டாள்களால்
கவிதை மட்டுமே
கிறுக்க இயலும்
கடவுளால் மட்டுமே
மரத்தினை படைத்தல் சாத்தியம்.

[ ஜாய்ஸ் கில்மர் எழுதிய “Trees” என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்]