திருவண்ணாமலை

நாம் கவனமாக இருக்கிறோம். மரியாதையாகப் பேசுதல், கடுஞ்சொற்களை பயன்படுத்தாதிருத்தல், எல்லா குறைகளையும் பொறுமையாக செவிமடுத்தல், எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் உரிய  விளக்கங்களை இயன்ற வரை தருதல், உயர்மட்டம் எடுக்கும் முடிவுகளை பூச்சுகள் எதுவும் இல்லாமல் உடனுக்குடன் அறியத்தருதல், விடுப்பு வேண்டுகோள்களை நிராகரிக்காமல் இருத்தல், கான்பரன்ஸ் அறையின் கதவை மூடாமல் சர்வஜாக்கிரதையாக சந்திப்புகளை நிகழ்த்துதல், தப்பித்தவறி கூட சொந்த வாழ்க்கை குறித்து எதுவும் கேட்டுவிடாதிருத்தல்..….இதற்கு மேல் என்ன செய்ய….…பிஓஎஸ்எச் கையேட்டின் ஒரு ஷரத்தைக் கூட இதுவரை மீறியதில்லை.   ஆனால் இவர்கள் வேலையை விட்டுச் செல்லும்போது சேற்றை வீசிவிட்டு செல்வார்கள்…நிலமென்னும் நல்லாள் காட்டும் அதே பொறுமையை கடைபிடிப்பதோடு அல்லாமல் கூடவே மாறாப் புன்னகையைச் சூடிக் கொண்டு வழியனுப்ப வேண்டும்.  

நிரந்தரமாகவே நம்மைப் பற்றி கீழே, பக்கவாட்டில், வெளியே என அனைவரிடமும்  விசாரித்தவாறே இருக்கும்  மேலதிகாரிகள் இத்தகைய சமயங்களில் சும்மாவா இருப்பார்கள்?

இப்போதே இங்கிருந்து நீங்கிச் சென்றுவிட வேண்டும்! உடனடியாக…எவன் கண்ணிலும் படாமல்…ஆனால் முடியவேயில்லையே! கண்ணுக்குப் புலப்படா சங்கிலிகள் உடலெங்கும் கட்டப்பட்டுள்ளன. அந்தச் சங்கிலிகளுக்கு  பயம் என்று  பெயர் வைத்துக் கொள்ளலாமா? பயம் எங்கு உள்ளது? மனத்திலா? அல்லது உடலிலா? 

சென்ற வாரம் ஒரு நண்பருடன் போனில் நடத்திய உரையாடல் நினைவில் வந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த நண்பருக்கு போன் செய்திருந்தேன். திருவண்ணாமலையில் இருப்பதாகச் சொன்னார். கொச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். நிறுவனத்துக்கு என்னாயிற்று என்று கேட்டேன். வேலையாட்களிடம் ஒப்படைத்துவிட்டதாகச்  சொன்னார். அடேங்கப்பா….கிட்டத்தட்ட 25 கோடி வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் முதலாளி வேலையாட்களிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறாரே என்று அவருடைய தைரியத்தை வியந்தேன். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது தொழில் தொடங்கியிருக்கிறாரோ! இல்லையாம்! ஓர் ஆசிரமத்திற்கருகே வீடெடுத்துத்  தங்கி ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்துவருகிறாராம்! மனைவியும் மகனும் கூட  விரைவில் அவருக்கு ஒத்தாசையாக அவர் பணி செய்யும் ஆசிரமத்துக்கே  வந்துவிடப் போகிறார்களாம்! 

“எதிர்காலம் குறித்து பயம் இல்லையா” என்ற என் கேள்விக்கு –

“திருவண்ணாமலை வந்து சில நாட்கள் தங்கிப்பார்…உடல் குறித்த பயம் நீங்கிவிடும்” என்றார் 

“பயம் மனத்தில் அல்லவா இருக்கிறது?” 

“பயம் உடலில் இருக்கிறது. உடலிலிருந்து பயம் நீங்கும் போது மனதிலிருந்து நீங்கிவிடும்”

கீழ்ப்படியாமை சொட்ட கடும் சொற்களை தாங்கியவாறே “நான் வேலையை விட்டுச் செல்ல நீதான் காரணம்” என்னும்படி நீண்ட குற்றச்சாட்டு பட்டியலுடன் வந்த ராஜினாமா மின்னஞ்சலை வாசித்த போதும், இதை மேலதிகாரிக்கு அனுப்பியபின் அவரிடமிருந்து வரவிருக்கும் “சிசிடிவி ஏன் சரியாக வேலை செய்யவில்லை? அதை நீ அணைத்து வைத்திருக்கிறாயா?” என்பது போன்ற ஐயம் பொங்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிச்சொல்லி இன்னொரு அக்கினிப்பிரவேசம் செய்ய வேண்டிய சாத்தியக்கூறை யோசித்தபோதும், அடிவயிற்றில் “விர்விர்” என்று ஏதோ உள்ளூர இழுக்கும் மெல்லிய ஆனால் மிகத் தெளிவான வலியற்ற வலி உணர்வை உற்று கவனித்த போது, நண்பர் சொன்னது சரியென்றுபட்டது. உடலில் உள்ளது பயம். உடலில்தான் உள்ளது பயம். திருவண்ணாமலை செல்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டரைக்கு நான்கு கண்ணாடி அறையை உடனடியாக திருவண்ணாமலையாக மாற்ற ஏதேனும் உபாயம் உண்டா என நண்பனிடம் அடுத்த தொலைபேசி உரையாடலில் கேட்கவேண்டும்.

நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-2/amp/)

படைத்தோனின் அறிகுறிகள்

ஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.



படைத்தோனின் அறிகுறிகள்

உறுதியாய்
பதிக்கப்பட்ட மலைகள்
என் போலன்றி,
சற்றும் அசையாதவை
தூண்களில்லா சுவர்க்கங்கள்
தனிமையை போக்கக்
கூடவே பயணிக்கும் நதிகள்
பகலில் வழிகாட்டிகள்
இரவில் நட்சத்திரங்கள்
வானில் வரிசையாக
பறக்கும் பறவைகள்
கொட்டும் மழை
கொழிக்கும் பயிர்கள்
திறந்து விடப்பட்ட
ஒன்றில் ஒன்று
கலவாத சமுத்திரங்கள்
வணிகக் கப்பல்கள்
மிதந்து செல்ல கடல்கள்
உண்ணச் சுவையான மீன்கள்
வலிமையான காற்று
ஊதிக் கலைந்த மேகங்கள்
படைத்தவனைத் தேடிக் களைத்து
படைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்
தன் கையில் வைத்து
பூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே
உன்னை பார்க்க வைப்பாயா
உன்னை கேட்க வைப்பாயா
முறையிடுகிறேன் அவனிடம்
இரண்டு நாட்களில்
ஏழு சுவர்க்கங்களை சமைத்தவன்
கிப்லாவை நோக்கி
என்னை மண்டியிட வைத்தான்
நண்பர்கள்
கால்நடைகள்
அனைத்தையும்
என்னையும்
சிறந்த அச்சினால்
கருவறைக்குள் உருவாக்கியவன்
அனைத்தும் பார்ப்பவன்
அனைத்தும் கேட்பவன்
என்னையும் பார்க்கிறான்
என்னையும் கேட்கிறான்
நம்பிக்கை கொள்ளச் செய்பவன்
பயங் கொள்ளச் செய்பவன்
இரண்டும் அவனே
படைத்தோனின் படைப்புகள்
நம்பிக்கையூட்டுகின்றன
படைத்தோனை நினையாதபோது
பயந்தோன்றுகிறது
பூமியெனும் ஓய்விடத்தின் மீது
வானமெனுந்திரை போட்டிருக்கிறான்
புசிக்க ஓராயிரம் கனி வகைகள்
காடுகளில் விலங்குகளை நிறைத்திருக்கிறான்
அவனடையாளங்களில்லா
இடமேது இப்பிரபஞ்சத்தில்
அவன் என்னை பார்க்கிறான்
அவன் என்னை கேட்கிறான்
சந்தேகங்கள் தவறன்று
நிரூபணம் கேட்ட ஆபிரகாமும்
இறைத்தூதனன்றோ
மூலிகைகள்
ஆலிவ்கள்
திராட்சைகள்
இன்னும் பலவற்றில் உள்ளன
அவனிருப்பின் அறிகுறிகள்
அவனே சிறந்தவன்
கருணை மயமானவன்

ஆப்பிள் தோட்டம்

பீம்தாலிலிருந்து நைனிடால் நகருக்குள் நுழையாமல் பவாலி என்னும் ஊர் வழியாக ராணிகேத்-தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு கோயிலுக்கருகே ஓட்டுநர் வண்டியை நிறுத்துகிறார். இந்தியில் ஏதோ ஒரு பெயரை சொல்கிறார். அவர் என்ன பெயரைச் சொன்னார் என்பதை சிரத்தையுடன் கவனிக்கவில்லை. ஓட்டுநர் வண்டியை நிறுத்தியது பிடிக்கவில்லை. சீக்கிரமே ராணிகேத் சென்றடைய வேண்டும் என்றிருந்தது எனக்கு. அங்கு ஒரு ரிஸார்ட்டில் ஒரு suite புக் செய்திருந்தேன். “எனக்கு தேநீர் குடிக்க வேண்டும்” என்றார் ஓட்டுநர். வேண்டா வெறுப்பாக காரிலிருந்து இறங்கினேன். மனைவியும் என் இளைய மகளும் கூட இறங்கினார்கள். பெரியவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அது ஒரு ஆசிரமம். துர்கா தேவி சந்நிதியும், அனுமார் சந்நிதியும் இருந்தன. சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிந்தனர். கோயிலின் பின்புறம் ஒரு சுவாமிஜியின் சிலை இருந்தது. சுவாமிஜிக்களுக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு அதிகம் ரசிக்கவில்லை. ஆனால் ஒன்று கவனித்தேன். கோயில் செல்வச் செழிப்புடன் இருந்தது. புத்தம்புதுக் கோயிலைப் போல் இருந்தது. கோயிலை விட்டு வெளியேறுவதற்கு முன் சுண்டல் பிரசாதத்தை பெற்றுக் கொண்டோம்.

கோயிலையொட்டி சிற்றோடை இருந்தது. அதை அசுத்தப்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலில் அது நதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் அது நதியாக உருமாறலாம். நதியில் அதிக நீர் மட்டம் இல்லை. பூச்சிகளைப் போல் சின்னஞ்சிறு மீன்கள் கூட்டமாய் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு சிறுவன் பிஸ்கட்டுத் துண்டின் பொடியை நீரில் வீசினான் ; நூற்றுக்கணக்கான மீன்கள் அப்பொடியைக் கவ்விக்கொள்ளும் போட்டியில் அழகாக ஒரு புள்ளியில் குவியும் காட்சி மிக ரம்மியமாய் இருந்தது. ஒரு கணந்தான். மீண்டும் மீன்கள் தத்தம் திசைகளில் பிரிந்து சென்றன.

நாங்கள் கோயிலுக்கு வெளியே வந்தோம். ஓட்டுனர் வண்டியைக் கிளப்பிய போது கோயிலின் பெயர் என்ன என்று கேட்டேன். kainchi dham என்றார். Kainchi என்றால் கத்திரிக்கோல் என்று அர்த்தம் ; dham என்றால் தலம்.

+++++

கைடுகளுடனான உரையாடல் பல விஷயங்களை அறியத் தூண்டியிருக்கின்றன. கைடுகள் மிஸ்-கைடு செயவது வாடிக்கையான விஷயம் என்றாலும் கைடுகள் அவசியம். வரலாற்றுச் சின்னங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கும் செயல் முறை எளிமையாகுதல் கைடுகளினால் மட்டுமே சாத்தியம். அவர்கள் தரும் வரலாற்றுத்தகவல்கள் நம்மை உண்மைத்தகவல்களை நோக்கிய உந்துதலை ஏற்படுத்தும். சில வருடம் முன்னர் ஓர் ஆங்கிலேய நண்பருக்குத் துணையாக ஆக்ரா சென்றேன். நடுவில் ஒரு கைடை எங்கள் காரில் ஏற்றிக் கொண்டோம். அவர் பெயர் அன்வர். டிப்டப்பாக கருப்பு கோட், கருப்பு கண்ணாடி அணிந்து சினிமா ஸ்டார் போல தோற்றமளித்தார். வி ஐ பி கைடு என்ற அடையாள அட்டையை காண்பித்தார். நானும் நண்பன் அட்ரியனும் பெருமிதப்பட்டோம். அன்றைய ஒரு நாளைக்கு நாங்களிருவரும் அன்வரின் தயவில் வி ஐ பிக்கள் ஆனோம். வழக்கம் போல தாஜ்மகால் நுழைவுச்சீட்டை நீண்ட வரிசையில் நிற்காமலேயே வாங்கினோம். தாஜ்மகாலுக்குள் பல்வேறு விளக்கங்களை கொடுத்துக் கொண்டே ஒரு தகவலை எங்களிடம் சொன்னார் அன்வர். இஸ்தான்புல்லின் நீல மசூதியை கட்டிய ஆர்கிடெக்ட்தான் தாஜ்மகாலையும் கட்டினார். அந்த தகவல் எனக்கு பயங்கர ஆச்சரியத்தை தந்தது. அட்ரியன் இஸ்தான்புல் நீல மசூதியை பார்த்திருக்கிறான். நான் திரைப்படங்களில் நீல மசூதியை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் பார்த்தது ஏக் தா டைகர் இந்திப்படத்தில். சல்மான் கானும் கட்ரினா கைஃபும் நீல மசூதியின் பின்னணியில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பார்கள். நீல மசூதிக்கும் தாஜ்மகாலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்பதை உரிய தரவுகள் வாயிலாக மறுத்துக் கூறும் அறிவு அன்வரின் உதவியால்தான் கிட்டியது. நீல மசூதி கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகே தாஜ்மகால் கட்டும் பணி துவங்கியது. தாஜ்மகால் முழுமையாக கட்டி முடிக்கப்பட 21 வருடங்களானது. அன்வரை சந்தித்திருக்காவிட்டால் தாஜ்மகாலின் ஆர்க்கிடெக்ட் உஸ்தாத் அகமது லஹோரி என்பது எனக்கு தெரிய வாய்ப்பே இல்லை. அன்வர் கொடுத்த தகவல் ஏற்படுத்திய ஆச்சரியவுணர்ச்சி தாளாமல் அந்த தகவலை சரி பார்க்கும் உந்துதல் மேலிட நான் திரட்டிய மேலதிக தகவல்கள் முகலாய பேரரசு பற்றி நானறிய உதவியது. பொய்மையும் வாய்மையிடத்து என்பது இது தான் போல! அன்வருக்கு என் நன்றிகள்!

blue mosque

ராணிகேத் வந்தடைந்த அடுத்த நாள் குமாவோன் மலைச்சாலைகளில் நாற்பத்தியைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து துனகிரி வைஷ்ணோ தேவி கோயில் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது குகுசினா என்னும் இடம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் ட்ரெக்கிங் செய்து பாபாஜி குகையை அடைய வேண்டும். அது தான் எங்கள் இலக்கு. துனகிரி அம்மன் கோயிலின் சாலையோரத் திருப்பத்தில் நபினை சந்தித்தோம். நபு என்பது அவன் செல்லப்பெயர். நாற்பது வயதிருக்கும் அவனுக்கு. சராசரி குமாவோன் வாசிகளின் அச்சுஅசல் நபு. அவன் நெற்றியில் பொட்டு. செவ்வாய்க்கிழமையாதலால் வைஷ்ணோ தேவி கோவிலில் நல்ல கூட்டம்! வாடகை ஜீப்புகள் எல்லாம் பிஸி. குகுசினா வரை எங்கள் காரிலேயே போவது என முடிவு செய்தோம். முன்னிருக்கையில் நபு. பின்னிருக்கைகளில் எங்கள் குடும்பம்.

Kainchi Dham – சுவாமிஜியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் காடு தாண்டி மலை தாண்டி பாபாஜி குகைக்கு குடும்பத்துடன் வருகை தருவதன் பின் என்ன அர்த்தம்? இது முரணாகாதா? தயவு செய்து குழம்ப வேண்டாம். இது ஒரு காதல்! பல வருடம் முன்னர் – எந்த வருடம் என்று ஞாபகமில்லை – படித்த புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்னுள் ஏற்படுத்திய ரசாயன மாற்றம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் இது ஒரு சாரமில்லாத வெற்று ஆர்வமாகக்கூட இருக்கலாம். என்னை இதயபூர்வமாக அழைத்தால் நான் அங்கு தோன்றுவேன் என்று தன் பிரியப்பட்ட சீடனுக்கு உறுதி தந்த அந்த மரணமிலா குரு மகாவதார் என்ற அடைமொழியால் பக்தர்களால் போற்றப்படுகிறார். பாபாஜி பற்றிய வரலாற்று பூர்வ தகவல்கள் மிகச் சொற்பம். எனினும் Para Gliding, Apple Garden, Highest Golf Course முதலான ராணிகேத்தின் ஈர்ப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு புதல்விகளின் விருப்பமின்மையையும் புறக்கணித்துவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு அதிகம் பேர் போகாத ஒரு குகைக்கு நான் போவதை பகுத்தறிவு கொண்டு எப்படி விளக்குவது? என் வாழ்க்கை என் விருப்பம் என்று சொல்வது எளிதாயிருக்கும்.

ஒரு புத்தகம் விவரிக்கும் சம்பவம் இத்தனை ஆர்வத்தையா ஏற்படுத்தும்? பொன்னியின் செல்வன் விவரிக்கும் அனுராதபுரம் நகரப்பகுதி வர்ணனைகள் படிக்கப் பிடித்தன. சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி நகர வர்ணனைகளுந்தான்! புத்தக வர்ணனைகளுக்காக மட்டும் அனுராதபுரத்துக்கோ வாதாபிக்கோ (இந்நாளைய பதாமி) டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. இந்த குகைக்கு வர வேண்டும் என்ற விழைவுக்கும் காரணகாரியமான ஒரு விடை இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை.

பழைய காதலியை மறக்க முடியாமல் அவளின் பழைய விலாசத்துக்கு கடிதம் எழுதுதலை உணர்ச்சி பூர்வ விஷயம் என்றில்லாமல் வேறு எப்படி புரிந்து கொள்வது? பழைய காதலி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற தவிப்பேற்படும்போது அவள் இருந்த விலாசம் என்று நாம் கேள்விப்பட்ட இடத்துக்கு கடிதம் அனுப்புகிறோம். அது போலவே இது!

autobiography_yogi_book

பாபாஜி குகை ட்ரெக்கிங் கஷ்டமாக இருந்தது. ஃபிட்னெஸ் கொஞ்சம் கூட இல்லாமல் தஸ்புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டே ஏறினேன். என் குடும்பத்தினர் வேகமாக ஏறி எனக்கு முன்னால் சென்றுவிட்டனர். காவி ஜிப்பா போட்டுக் கொண்டு ஓர் இளைஞர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டேன். பதினைந்து நிமிடங்கள் என்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டதற்கு சிட்னி என்றார். ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன். ஒரு புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேனே அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்.

பாபாஜி குகைக்கு சற்று முன்னர் ஒரு மண்டபம் கட்டியிருந்தார்கள். மகாவதார் பாபாஜி லாஹிரி மஹாஷயருக்காக தோற்றுவித்த மந்திர மாளிகையைக் குறிப்பதான இடத்தில் கட்டிய மண்டபம் இது என்பது நபுவின் தகவல்.

பாபாஜி குகையில் சற்று நேரம் அமைதியாக கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தோம். மூச்சு வாங்குதல் நின்றது. நபு குகையைப் பற்றி பேசலானான். அவன் சிறுவயதினனாக இருந்த போது பாபாஜி குகை திறந்திருந்ததாகவும் அதற்குள் இறங்கி உள்ளே சென்றால் இருட்போர்வையில் இனிய சுகந்தங்களின் வாசனை மூக்கை துளைக்குமாம். ஆனந்த உணர்வு மேலிடுமாம். குகைக்குள் டார்ச் லைட்டுகள் வேலை செய்யாதாம். அமெரிக்கர் ஒருவர் ஆர்வமிகுதியில் ஆய்வு செய்கிறேன் என்று குகைக்குள் புகுந்து வெகுநேரமாக வெளியே வராமல் யோகதா ஆசிரமக்காரர்கள் அவரை குகையிலிருந்து வெளிக்கொணர்ந்த போது சித்தம் கலங்கிய நிலையில் இருந்ததாகவும் இதன் காரணமாக குகை வாசல் அடைக்கப்பட்டது எனவும் நபு சொன்னான். நபு சொன்னது விறுவிறுப்பைக் கூட்டிற்று எனினும் அது எத்தனை உண்மையாக இருக்கும் என்ற ஐயம் எழாமலில்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்கிறேன். கைடுகள் இது போன்ற மந்திரம் மாய விஷயங்களை அதிகம் கலந்து பேசுவார்கள். மாநில சுற்றுலா துறையின் வரவேற்பு வளைவுகளும் போர்டுகளும் “தேவ்பூமி” என்னும் உரிச்சொல்லுடன் உத்தராகண்டை விவரித்துக் கொள்வது போலத்தான் இது!

நாங்கள் குகையிலிருந்து இறங்கத் தொடங்குகையில் வெளிநாட்டு ஜோடி ஒன்று குகையை நோக்கி ஏறி வந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். இத்தாலியின் மிலானோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களும் அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்கள்.

நபுவுக்கும் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கும் இடையில் என்ன வித்தியாசம்? எழுத்தாற்றல் என்பதைத் தவிர வேறென்ன? எழுதப்பட்ட சொற்கள் சக்தி படைத்தவையாக ஆகின்றன என்பதற்கு ஒரு ஆதாரம் என்றால் இந்த புத்தகத்தைச் சொல்லலாம் என்பது என் கருத்து. மனிதசக்தி உடல்-மனம் என்னும் இருமையின் எல்லைகளை தகர்த்துவிடக் கூடியது என்பதன் சிறு துளி சொற்களின் துணை கொண்டு நமக்கு விவரிக்கப்பட்டிருக்கும்.

நபு என்னுடனும் என் மனைவியுடனும் பேசிக் கொண்டே வந்தான். அவனுடைய குடும்ப வாழ்க்கை, அவனுடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு மறுமணம் செத்துக்கொள்ளாதிருந்தது, சுவாமி சத்யேஸ்வரானந்தா-வுடனான அவனுடைய தொடர்பு (அவனுக்கு நபின் என்று பெயரிட்டது அவர்தானாம் – குமோவோன்காரனுக்கு வங்காள மொழிப்பெயர் வந்ததன் ரகசியம் இவ்வாறு துலங்கியது), குக்குசினாவில் இருக்கும் ஒரே ஓட்டலின் சொந்தக்காரர் ஜோஷியுடன் அவனுடைய மனஸ்தாபம் என்று பல தகவல்களைப் பகிர்ந்தான். நடிகர் ரஜினிகாந்த் பாபாஜியிடமிருந்து பெற்ற மூன்று மந்திரங்கள், அசைவ உணவு சாப்பிடும் போது அவற்றை ரஜினிகாந்த் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று பாபாஜி அறிவுறுத்தியது என்று அவன் ஒன்றன்பின் ஒன்றாக தகவல்களை பகிரும் போது நானும் பாபா திரைப்படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாமா என யோசித்தேன். ஆனால் சொல்லவில்லை. நபுவுக்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்றொரு செல்லப்பெயர் உண்டாம். பாபாஜி குகைக்கு வருவோரில் 60% தென்னிந்தியர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தந்தான். அவர்களுக்கெல்லாம் நபுவே கைடாக இருப்பதால் இந்த பெயர் வழங்குகிறதாம். நபுவுக்கும் பிற வடஇந்தியர்கள் போல தென்னிந்திய மாநிலத்தவர்களை மாநில வாரியாக பாகுபடுத்த தெரியவில்லை. எனவே அவன் சொன்ன கணக்குப்படி 60% முழுக்க தமிழர்களாக இருப்பார்கள் என்று சொல்வது கடினம். அதிகமாக தென்னிந்தியர்கள் பாபாஜி குகைக்கு வருவதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று நபு நம்புகிறான்.

வழியில் ஒரு குடிசை வீடு. அங்கு சற்று நேரம் இளைப்பாறினோம். குடிசைக்காரர் குடிசையில் டீக்கடை நடத்துகிறார். கேட்டால் மேகியும் செய்து தருவார். உத்தராக்கண்ட் மலைப்பிரதேசங்களில் மேகி கிட்டத்தட்ட கோதுமை போல அரிசி போல staple food. டீ வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். நானும் என் மனைவியும் தமிழில் பேசுவதைக் கேட்ட குடிசைக்காரர் எனக்கு குடிசை வாசலில் தொங்கும் ஒரு புகைப்படத்தை காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் கையில் தடியுடனும் தலைப்பாகையுடனும் ஜிப்பா அணிந்து நிற்கும் புகைப்படம். நாங்கள் உட்கார்ந்திருந்த குடிசை வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படம். 2013 இல் எடுக்கப்பட்ட படம் என்றார். 2013க்குப் பிறகு அவர் வரவில்லை என்றும் சொன்னார். அந்த ஒற்றை குடிசையைத் தாண்டாமல் ரஜினிகாந்த்தால் கூட நிச்சயம் பாபாஜி குகைக்குச் சென்றிருக்க முடியாது. தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.

லாஹிரி மஹாஷயர் பாபாஜியை ரத்தமும் சதையுமாக சந்தித்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தர்க்கம் அணுவளவும் இல்லை எனினும் 400 கி மீ பயணம் செய்திருக்கிறேன் ; எதற்கும் மெனக்கெடாத நான் ஐந்து கி மீ டரெக்கிங் செய்து அந்த குகையை அடைந்திருக்கிறேன். நான் வந்த தூரத்தை விட அதிக தூரத்திலிருந்து வந்தவர்களை சந்தித்திருக்கிறேன். 1861லிருந்து 1935 வரை பாபாஜியை வெவ்வேறு கட்டத்தில் சந்தித்தவர்கள் பகிர்ந்த அனுபவங்களை பற்றி வாசித்திருக்கிறேன். அவற்றை வாசிக்கும் போது நம்பிக்கையின்மையை என்னால் தவிர்த்துவிட முடிகிறது. திறந்திருந்த பாபா குகையிலிருந்து வந்த சுகந்தம் பற்றி நபி சொல்லும் போது எனக்கு ஆதாரம் வேண்டியிருக்கிறது. முரண்கள் நிறைந்த மனித வாழ்க்கையின் அங்கமாகிய நானும் முரண்கள் நிரம்பியவனாகவே இருக்கிறேன். தர்க்கம் ஒரு வாள். அதை ஏந்தி நாம் விரும்பாதவற்றை வெட்டித் தள்ளுகிறோம். நமக்கு விருப்பமானவற்றின் திசையில் அந்த வாளை சுழற்றாமல் இருக்கிறோம்.

neemkaroli baba
Neem Karoli Baba

குகுசினா வந்த பிறகு குமாவோனில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. Kainchi Dham பார்த்தீர்களா என்று கேட்டான் நபு. நீம் கரோலி பாபா பற்றி சொன்னான். கத்திரிக்கோல் தலத்தில் நான் பார்த்த சிலை நீம் கரோலி பாபாவினுடையது. – “ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி தொடங்குவதற்கு முன்னர் பல வியாபாரம் தொடங்கி நொடித்துப் போனார் ; இந்தியா வந்து நீம் கரோலி பாபாவிடம் வந்து தன் குறையை சொன்னார். பாபாவின் கையில் ஓர் ஆப்பிள் இருந்தது. ஆப்பிள் பாபாவுக்கு மிகவும் பிடித்தது. அந்த ஆப்பிளை சிறிது கடித்து சீடன் ஸ்டிவ்-க்கு தந்தார். இனிமேல் அனைத்தும் வெற்றியில் முடியும் என்று ஆசீர்வதித்தார். ஆப்பிள் உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி கம்பெனியானது. தன் நிறுவனத்துக்கு ஆப்பிள் என்று ஸ்டிவ் பெயரிட்டதற்கு காரணம் நீம் கரோலி பாபா மீது ஸ்டிவ்க்கு இருந்த பக்தி. ஸ்டீவ் வாயிலாக நீம் கரோலி பாபா பற்றி கேள்விப்பட்ட மார்க் ஸுக்கர்பர்க் (ஃபேஸ் புக்) 2015 இல் Kainchi Dham விஜயம் செய்தார்”

நபு சொன்ன தகவலை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஸ்டிவ் ஜாப்ஸுக்கு இந்திய குருவா? ஓர் ஹிப்பியாக ஸ்டீவ் ஜாப்ஸ் எழுபதுகளில் இந்தியா வந்திருப்பதை பற்றி படித்திருக்கிறேன். மகேஷ் யோகி, ரஜ்னீஷ் போன்றவர்கள் அமெரிக்க இளைஞர்களிடையே அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கிளப்பிய கிளர்ச்சியின் விளைவே ஸ்டிவின் இந்திய விஜயத்துக்கு காரணம் என்பதாகவே என் புரிதல்.

நபு சொன்ன விஷயங்களில் என்னை மிகவும் துண்டுதலை உண்டுபண்ணியது ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இந்த தகவல் தான். நீம் கரோலி பாபா யார்? எப்போது வாழ்ந்தார்? நபு சொன்ன விஷயம் உண்மையா? கைடுகள் வழக்கமாக அடித்து விடுவது போன்றதான பொய்த்தகவலா?

மலைப்பிரதேசத்தில் மொபைல் சிக்னல் சரியாக இல்லை. Data Roaming-உம் வேலை செய்யவில்லை. ராணிகேத் ஓட்டலிலும் இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை இணையத் தொடர்பு கிட்டியது. Did Steve Jobs visit Kainchi Dham? என்ற கேள்விக்கு விடை தேடினேன்.

steve_jobs-apple
Steve Jobs (Founder of Apple)

இரண்டு குறிப்புகள் கிடைத்தன. நீம் கரோலி பாபாவின் பக்தர் ஒருவர் கீர்த்தனை இசையமைப்பாளர். sacred music என்னும் இசை வகைமையின் முன்னோடி எனக் கருதப்படுபவர். அவர் பெயர் ஜெய் உத்தல். உத்தல் படித்த ரீட் கல்லூரியின் மாணவர் ஸ்டீவ் ஜாப்ஸ். மாணவர் ஸ்டீவை ஒரு முறை சந்திக்கும் போது உத்தல் நீம் கரோலி பாபாவுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். ஸ்டீவ் அந்த உரையாடலில் கிடைத்த விவரங்களால் ஈர்க்கப்பட்டு தன் நண்பர் ஒருவருடன் இந்தியப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார். அக்டோபர் 1974இல் Kainchi Dham வருகிறார். துரதிர்ஷ்டவசமாக நீம் கரோலி பாபா 1973இலேயே பூதவுடலை துறந்துவிட்டிருக்கிறார். ஸடீவ் பாபாவை சந்திக்கவில்லை. உத்தலுடனான உரையாடலே தன்னை இந்தியா செல்லத் தூண்டியது என்று ஸ்டீவ் பல முறை குறிப்பிட்டுள்ளதாக ஸ்டீவுடன் சேர்ந்து இந்தியா பயணம் சென்ற நண்பர் பிற்காலத்தில் உத்தலுக்கனுப்பிய மின்னஞ்சலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு குறிப்பு கிருஷ்ண தாஸ் என்று இன்று அறியப்படும் ஜெஃப்ரே கெகல் என்பவரைப் பற்றியது. இவர் நீம் கரோலி பாபாவின் நேரடி சீடர். பாபாவினுடைய தன் முதல் சந்திப்பை பற்றி இவ்வாறு விவரிக்கிறார் :-

“அவருக்கு ஆப்பிள் பழங்கள் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தோம். எனவே ஆப்பிள்களை எடுத்து வந்திருந்தோம். எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஆப்பிள்களை அவரிடம் கொடுத்தோம். அவற்றை வாங்கிக்கொண்டார். உடன் அந்த ஆப்பிள்களை அறையில் இருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டார். “இவருக்கு நான் கொடுத்த ஆப்பிள்கள் பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்று நினைத்தேன். என்னை நோக்கினார். ‘நான் என்ன செய்தேன்?’ என்று கேட்டார். நான் சொன்னேன் : ‘எனக்கு தெரியாது’. ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். நான் மீண்டும் ‘எனக்கு தெரியாது’ என்று சொன்னேன். அவர் திரும்பவும் ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். ‘நீங்கள் செய்யும் எதுவும் சரி’ என்று பதில் சொன்னேன். அவர் சிரித்தார். பிறகு சொன்னார் “ஒருவனுக்கு கடவுள் இருப்பானாயின், அவனுக்கு எதுவும் தேவையில்லை. அவனிடம் ஆசைகள் இராது’ அவர் சொன்னதைக் கேட்டதும் நான் என்னைப் பற்றி யோசித்தேன். என்னிடம் எவ்வளவு ஆசைகள்! நான் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன். இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அவர் என் எண்ணத்தை படித்திருந்ததை எனக்கு காட்டினார். என்னுள்ளில் நான் உணரத்தக்க வகையில் எனக்கு வழி காட்டினார்”

வானிலை சற்று மோசமடைந்திருந்ததால் ஓட்டலிலிருந்து கிளம்ப தாமதமானது. இதனால் தில்லிக்கு கிளம்புமுன் Apple Garden பார்க்கலாம் என்று போட்ட திட்டம் நிறைவேறவில்லை. மோசமான வானிலை காரணமாக Para Gliding spot அன்று மூடியிருந்தது. Golf Course மூடுபனியில் கவிந்திருந்தது. ஓட்டுனர் Kainchi Dham அருகே தேநீர் குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினார். நாங்கள் காரில் இருந்து வெளியே இறங்கவில்லை. அதே இடத்தில் இரண்டு நாட்கள் முன்னர் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவள் “அப்பா! இந்த கோவிலுக்கு போகவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு சின்னவள் “நாங்க அன்னிக்கே போயிட்டோம்… இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகணும்னா நீயும் போய் கும்பிட்டுட்டு வந்துடு” என்று பெரியவளைக் கேலி செய்தாள்.

  1. இதில் குறிப்பிடப்படும் புத்தகம் பரமஹம்ச யோகானந்தர் எழுதிய சுயசரிதம் – Autobiography of a Yogi. இந்நூலின் 34ம் அத்தியாயத்தை இணையத்தில் வாசிக்க → https://www.crystalclarity.com/yogananda/chap34.php
  2. நீம் கரோலி பாபா பற்றி → https://en.wikipedia.org/wiki/Neem_Karoli_Baba
  3. ஸ்டீவ் ஜாப்ஸ்-ஸின் இந்திய விஜயத்தின் பிண்ணனி குறித்து → http://www.abc.net.au/radionational/programs/rhythmdivine/jobs-holy-man-and-apple-logo/4609698

ஏரி – கவிஞர் சல்மா

ஸல்மா

ஏரி
ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
ஏரி சலனமற்றிருக்கிறது
சில நாட்களுக்கு முன்
தயக்கமின்றி உன்னிடமிருந்து
காலியான மதுக்கோப்பைகளை
விட்டெறிந்திருந்தாய் அதில்
மறுக்காமல் பெற்றுக்கொண்டது
ஏரி
பிறகொரு நாள்
நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
நேற்றுகூடக்
கசந்துபோன நம் உறவினை
இகழ்ந்து எச்சில் துப்பினாய்
தண்ணீரில்
எந்தக் காலமொன்றில்லாமல்
எல்லாக் காலங்களிலும்
உன் கழிவுகளைக் கொட்டி
உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
இன்று இதில் எதையும்
நினைவுறுத்தாது
உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்
உன் அசுத்தங்களை
அடித்துக் கொண்டுபோக
இது நதியில்லை
ஏரி
சலனமற்றுத் தேங்கிய நீர்
பத்திரமாய்ப் பாதுகாக்கும்
ஏதொன்றும் தொலைந்துபோகாமல்
எனது வண்ணத்துப் பூச்சிகள்
அறைச் சுவரில்
நான் விட்டுச் சென்ற
எனது வண்ணத்துப் பூச்சிகள்
தமது பசை உதிர்ந்து
பறந்து சென்றிருக்கலாம்
நான் திரும்புவதற்குள்
 

பாதைகள்

 அலமாரியில்
அறைச் சுவரில்
சுழலும் மின்விசிறியில்
மோதித் தெறிக்கும் வெளவால்
பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து
கடலின் நீலத்தையும்
மலைகளின் கூட்டங்களையும்
கடந்து வரும் பறவைகள்
இதுவரை
தொலைத்ததில்லை
தம் வழியை
 
பிறழ்வு
நான் பார்த்தறியாத
உலகைக்
குற்றவுணர்வுகளின் சங்கடங்களின்றி
எனக்குத் திறந்துவிடும்
உன் ஆர்வத்தில் தொடங்கிற்று
நமது உறவின் முதலாவது பிசகு
வெகுவான பிரயாசைகளுக்கும்
மூச்சு முட்டல்களுக்கும் பிறகே
உருவாக்குவேன்
துளியளவு ஆட்சேபணையை
வாழ்வின் எழுதப்படாத ஒழுங்குகளைக்
காதோரத்தில் கிசுகிசுத்துக்கொண்டேயிருக்கும்
அசரீரிகள்
இன்றைய உணவை
இக்காலத்தின் எனது உடைகளை
அவற்றின் வேலைப்பாடுகளை
இன்னும் என் உடலில் மறைக்கப்பட
வேண்டிய அவயவங்களை
காலில் சுற்றி வீழ்த்தும்
கண்ணுக்குப் புலப்படாத வேலிகள்
அச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை
தன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு
இந்த இருப்பின் தடங்களை
நாளையும் சரிபார்க்கவென மட்டுமே
அஸ்தமிக்கும் இந்தப் பொழுது
யாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற
நேற்றைய உணவின்
விதியிலிருந்து விலகி
கூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு
இந்த வெற்றுப் படுக்கைகளை
தந்துவிட்டு
வெட்டவெளியொன்றில்
தூங்க ஓரிடம் தேடினால் என்ன?
இன்று
ஒரு நாளைக்கேனும்
இந்த சங்கடங்கள் தன்னால்தானென
நம்மில் ஒருவர்
பொறுப்பேற்றால் என்ன
அல்லது
நம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல
இன்னொருவர் உதவினால் என்ன
இதில் ஏதும் இல்லையெனில்
ஏதேனும் வழியொன்றைத்
தேட முயல்வோம்
இந்த இரவை விடியாமல் செய்ய
காலப் பதிவு

விபத்திலிருந்து மீண்ட நாளின் உடை

நாம் சந்தித்துக் கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரணச் செய்தி
வந்து சேர்க்கையில்
என் கண்களைக் கடந்த
சிவப்பு வண்ணக் கார்
நகர்வதில்லை காலம்
படிந்து உறைகிறது
ஒவ்வொன்றின் மீதும்
 (இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)

புத்தரும் ராவணனும் – பகுதி 1

lankavatara1

ராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி?

அதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்! சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார்? எப்போது எழுதப்பட்டது? என்ற விவரங்கள் தெரியாது.

”லங்காவதார” என்பதன் சொற்பூர்வ அர்த்தம் “இலங்கைக்கு நுழைதல்” என்பதாகும். புத்தர் இலங்கை சென்ற போது இந்த சூத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. இலங்கை சென்றவர் வரலாற்று புத்தர் என்று சொல்ல முடியாது. ஆனால் பிரபஞ்ச புத்தர் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாமே? பிரபஞ்ச புத்தருக்கும் இலங்கையில் குழுமியிருந்த போதிசத்துவர்களின் தலைவராக இருக்கும் மகாமதி என்கிற போதிசத்துவருக்குமிடையில் நிகழும் உரையாடலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு மகாயான நூலான அவதாம்ஸக சூத்திரத்தில் பிரபஞ்ச புத்தர் தன் உரையை ஒரு தொன்ம லோகத்தில் நிகழ்த்துவார். ராட்சஸர்களின் தலைவனாக உருவகப்படுத்தப்படும் ராவணனுடனான சம்பாஷணை என்றாலும் அது இலங்கையில் நடக்கிறது என்று சொன்ன படியால் லங்காவதார சூத்திரத்துக்கு ஒரு பூலோக பரிமாணம் கிடைத்து விடுகிறது.

வடமொழியில் இயற்றப்பட்ட இந்த சூத்திரத்தை இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பௌத்த அறிஞர்கள் வெவ்வேறு கால கட்டத்தில் சீன மொழியில் தந்திருக்கின்றனர். தற்போது கிடைக்கும் பதிப்புகளில் குணபத்ரரின் மொழிபெயர்ப்பு தான் காலத்தால் முந்தியது.

லங்காவதார சூத்திரத்தின் முதல் மொழிபெயர்ப்பு கி..பி 420க்கும் கி பி 430க்கும் இடைப்பட்ட காலத்தில் தர்மரக்‌ஷர் என்பவரால் செய்யப்பட்டது. ; இரண்டாம் மொழிபெயர்ப்பு ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்திருக்கிறது. இதைச் செய்தவர் குணபத்ரர். மூன்றாவது மொழிபெயர்ப்பு வெளிவர மேலும் நூறு ஆண்டுகள் பிடித்தன. மொழிபெயர்ப்பாளர் போதிருசி. கடைசி மற்றும் நான்காவது மொழிபெயர்ப்பு சிக்ஷானந்தா என்பவரால் எட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. முதல் மொழிபெயர்ப்புக்கும் கடைசிக்கும் கிட்டத்தட்ட முன்னூறாண்டுகள் இடைவெளி.

தர்மரக்‌ஷரின் மொழிபெயர்ப்பு காலப்போக்கில் அழிந்துவிட்டது ; நமக்கு கிடைக்கவில்லை.

திபெத்திய மொழியிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஆய்ந்து, 1923-இல் ஜப்பானிய சமஸ்கிருத மொழி வல்லுனரும் பௌத்த பிரசாரகருமான புன்யூ நான்ஜோ அவர்களால் அச்சிடப்பட்ட வடமொழி பிரதியுடன் ஒப்பு நோக்கிய பின் பேராசிரியர் சுஸுகி பின் வரும் முடிவுகளுக்கு வருகிறார் (1) குணபத்ரரின் பதிப்பு மற்ற பதிப்புகளை விட சுருக்கமானதும் எளிமையானதுமாகும் (2) சமஸ்கிருத வடிவத்தின் அத்தியாயப் பிரிவுகளோடு சிக்‌ஷானந்தரின் மொழிபெயர்ப்பு மற்றும் திபெத்திய மொழிபெயர்ப்புகள் ஒத்துப் போக்கின்றன. (3) போதிருசியின் புத்தகத்தில் அத்தியாயங்களின் எண்ணிக்கை அதிகம் ; மூலத்தின் பெரிய அத்தியாயங்களை சிறு சிறு பிரிவுகளாக பிரித்து எழுதியிருக்கிறார். (4) குணபத்ரரின் பதிப்பில் அத்தியாயப் பிரிவுகளே இல்லை.

குணபத்ரரின் மொழிபெயர்ப்பு மிகவும் பழமையானது. குணபத்ரருக்கும் போதிருசிக்கும் இடையிலான நூறாண்டு இடைவெளியில் மூன்று உதிரி அத்தியாயங்கள் பிற்காலத்திய மொழிபெயர்ப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இலங்கை மன்னன் ராவணன் பிரபஞ்ச புத்தரை சந்திப்பதும், அகவெளியின் சத்தியத்தை விரித்துரைக்கச் சொல்லி கேட்பதும். “லங்காவதார சூத்திரத்தின் விரிவாக்கத்துக்கான மேலோட்டமான முகவுரையாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த அத்தியாயம் இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது பின்னர் இணைக்கப்பட்டது தான் எனபதில் சந்தேகமில்லை” என்று பேராசிரியர் சுஸூகி கருதுகிறார்.

ராம-ராவண கதை கி.பி மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டுகளில் திட்டவட்டமான காவிய வடிவத்தை எய்தியிருக்கக் கூடும் என்று வரலாற்றறிஞர்கள் சொல்கின்றனர். பிற்கால மகாயான பௌத்தர்கள் லங்காவதார சூத்திரத்துக்கு ஓரு ராமாயண இணைப்பு கொடுத்து விட வேண்டும் என்ற விழைவில் ராவண – பிரபஞ்ச புத்தர் சந்திப்பை முன்னுரையாக சேர்த்திருக்கக் கூடும். “குணபத்ரரின் மொழிபெயர்ப்பை வாசிக்கையில் ராவண நிகழ்வின் இடைச்செருகல் சூத்திரத்தை புரிந்து கொள்வதில் எந்த சிறப்பு உதவியையும் ஆற்றவில்லை என்பது தெளிவாகும்” என்கிறார் சுஸுகி.

+++++

Nanjio

நான் கேள்விப்பட்டது. பெருங்கடலின் மத்தியில் அமைந்த மலாய மலைச் சிகரத்தின் உச்சியில் இருந்த இலங்கைக் கோட்டையில் ஆசிர்வதிக்கப்பட்டவர் தங்கியிருந்தார். ஆபரணங்களால் செய்யப்பட்ட மலர்களால் அம்மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிக்‌ஷுக்களும், திரளான போதிசத்துவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர்களெல்லோரும் வெவ்வேறு புத்த நிலங்களிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருந்தனர். மகாமதி போதுசத்துவரின் தலைமையில் அங்கு கூடியிருந்த போதிசத்துவர்கள்-மகாசத்துவர்கள் பல்வேறு சமாதி நிலைகளின் வித்தகர்கள்; பத்து வித சுய-தேர்ச்சிகள், பத்து ஆற்றல்கள், ஆறு வித மனோ சித்திகள் – இவைகள் கை வரப் பெற்றவர்கள். மனதின் நீட்சியாகவே புறவுலகம் இருக்கிறது என்ற உண்மையின் மகத்துவத்தை அறிந்தவர்கள். வெவ்வேறு உயிர்களின் மனபோக்கை, நடத்தையைப் பொறுத்து வடிவம், போதனை மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று புரிந்தவர்கள். ஐந்து தர்மங்கள், மூன்று சுபாவங்கள், எட்டு விஞ்ஞானங்கள் மற்றும் இருவகை அனாத்மங்கள் – இவை பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள்.

கடல்-நாகங்களின் அரசனுடைய அரண்மனையில் போதனை செய்து விட்டு ஏழு நாட்களின் முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டவர். திரும்பியிருந்தார். சக்கரர்களும், பிரம்மனும், நாக கன்னிகைகளும் அவரை வரவேற்றனர். மலாய மலையின் மேலிருந்த லங்கா மாளிகையை நோக்கிய படி சிரித்தவாறே அவர் சொன்னார் “இறந்த காலத்தில் அருகர்களாகவும், முழு நிர்வாண நிலை அடைந்தவர்களாகவும் இருந்த புத்தர்களால், மலாய மலைச்சிகர உச்சியில் இருக்கும் இலங்கைக் கோட்டையில் தர்மம் எனும் உண்மை அவர்களுடைய உரையாடலின் கருப்பொருளானது – உயரிய ஞானத்தை அடைதல் வாயிலாக உள்ளார்ந்த சுயத்தில் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க உண்மை அது ; தத்துவம் பேசும் தத்துவாசிரியர்களாலோ, ஸ்ராவகர்கள் மற்றும் பிரத்யேகபுத்தர்களின் பிரக்ஞை வாயிலாக கற்பனை செய்து பார்க்கவோ இயலாத உண்மை. யக்‌ஷர்களின் எஜமானனான ராவணனுக்காக நானும் அங்கு இருப்பேன்”

ததாகதரின் ஆன்மீக ஆற்றலால் அருளப்பெற்று, ராவணன், ராட்சசர்களின் தலைவன், அவரின் குரலையும் சிந்தனையையும் செவி மடுத்தான். “ஆசீர்வதிக்கப்பட்டவர் கடல் நாகங்களுடைய அரசனின் அரண்மனையை விட்டு, சக்கரர்கள், பிரம்மன் மற்றும் நாககன்னிகைகள் புடைசூழ, கடலின் மேலோடும் அலைகளை நோக்கியவாறு, கூடியிருப்போரின் மன அதிர்வுகளை புரிந்தவாறு, பொதுநிலையால் தூண்டப்பட்ட விஞ்ஞானங்கள் உட்கலக்கும் ஆலய விஞ்ஞானம் பற்றி சிந்தித்தவாறு வெளியே வருகிறார்.” அங்கு நின்ற ராவணன் சொன்னான் “நான் சென்று ஆசீர்வதிக்கப்பட்டவரை இலங்கைக்குள் வருமாறு கேட்டுக் கொள்வேன் ; அது (அவரின் வருகை) இந்த நீண்ட இரவில் லாபம் ஈந்து, நனமையை அருளி, கடவுளரின் மற்றும் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்தும்”

தன் பணியாளர்களை அழைத்துக்கொண்டு ராவணன் புஷ்பக விமானமேறி ஆசிர்வதிக்கப்பட்டவர் வந்திருந்த இடத்துக்கு வந்தடைந்தான். அவனின் பிரஜைகள் ஆசீர்வதிக்கப்பட்டவரை இடமிருந்த வலமாக சுற்றி வந்தனர். நீலக்கல் பதிக்கப்பட்ட பிரம்பை வைத்து ஓர் இசைக்கருவியை மீட்டத் தொடங்கினர். சஹர்ஷயம், ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம், மத்யமம் மற்றும் கைசிகம் முதலிய இசைக்குறிப்புகளை வாசித்தனர். சரியான கணக்கில் பாடும் குரல் சேர்ந்திசைக்கும் குழலோடு இழைந்து ஒலித்தது.

”சுய இயல்பு கற்பிக்கப்பட்ட மனம் எனும் கொள்கையுள்ள உண்மைப் புதையல் சுயத்தன்மையற்றது ; தர்க்கத்தினின்று தள்ளி நிற்பது ; அசுத்தங்களில்லாதது ; அது ஒருவனின் உள்ளார்ந்த உணர்வில் அடைந்த ஞானத்தை குறிக்கிறது. ஓ பிரபுவே, நீர் இங்கு எனக்கு இங்கே உண்மையை அடையும் வழியைக் காட்டுவீராக”

“பல வடிவங்களுக்கு சொந்தக்காரர்களான புத்திரர்களோடு இறந்த கால புத்தர்கள் பலர் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர். ஓ பிரபு! உயரிய ஞானத்தை எனக்கு போதிப்பீராக ; பல்வேறு உருவம் படைத்த யக்‌ஷர்களும் அதைக் கேட்கட்டும்”

பாடலின் யாப்பு சிதறாது ராவணன் ராகத்தோடு பாடினான்.

ததாகதருக்கு உரிய காணிக்கைகளை சமர்ப்பித்து விட்டு, மரியாதையுடன் பேசலானான் ராவணன்

“இங்கு வந்திருக்கும் என் பெயர் ராவணன், ராட்சசர்களின், பத்து தலை கொண்ட தலைவன்.

மதிப்பு வாய்ந்த கற்கள் பதிக்கப்பட்ட இச்சிகரத்தின் உச்சியில் இறந்த காலத்தில் முழுமையான ஞானம் அடைந்தவர்களால் உள்ளார்ந்த பிரக்ஞை மிக்க முழுமையாக ஞானமானது உணர்த்தப்பட்டது.

சீடர்களால் சூழப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்டவர் இப்போது அதே ஞானத்தை இலங்கையில் இருக்கும் எங்களுக்கு போதித்தருள வேண்டும்.

இறந்த கால புத்தர்களால் புகழப்பட்ட லங்காவதார சூத்திரம் எந்தவொரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டு முறையைச் சாராமல் இருப்பதால், உள்ளார்ந்த பிரக்ஞை நிலையை தெளிவுற அறிவிக்கிறது.

இறந்த கால புத்தர்கள் வெற்றி பெற்றவரின் மக்கள் புடை சூழ இச்சூத்திரத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவரும் இப்போது அதைப் பேசுவார்.

வருங்காலத்தில் புத்தர்களும், புத்த-மக்களும் யக்‌ஷர்களிடம் கருணை கொள்வார்கள் ; ஈடிணையற்ற இக்கோட்பாட்டைப் பற்றி இரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இம்மலையின் உச்சியில் நின்று தலைவர்கள் போதிப்பார்கள்.

ஆசிர்வதிக்கப்பட்டவரே ! பேராசை எனும் குறையிலிருந்து விடுபட்டுவிட்ட இங்கிருக்கும் யக்‌ஷர்கள் உள்நிறை பிரக்ஞையைத் தெளிந்து விட்டார்கள் ; இறந்த புத்தர்களுக்கு காணிக்கையிடுகிறார்கள். ; அவர்கள் மகாயான போதனையில் நம்பிக்கையுடையவர்கள் ; ஒருவருக்கொருவரை ஒழுக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள்.

மகாயானம் பற்றி அறியும் ஆர்வமிக்க இளம் யக்‌ஷர்களும், ஆடவரும், பெண்களும் இங்கிருக்கிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்டவரே! வாரும்! நீங்கள் எம் ஆசான்! மலாய மலையின் மேலிருக்கும் இலங்கைக்கு வாருங்கள்.

கும்பகர்ணனின் தலைமையில் இந்நகரில் வசிக்கும் ராட்சசர்கள் மகாயானத்தின் மேலுள்ள அர்ப்பணிப்பால், உங்களிடமிருந்து உட்கருத்து உணர்தலைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளனர்.

ஓ முனிவரே! என் மாளிகையை ஏற்றுக் கொள்ளுங்கள், அப்சரஸ் நங்கைகளின் துணையையும், பல்வித அணிநகைகளையும் மற்றும் உல்லாச மிகு அசோக வனத்தயையும் கூட ஏற்றுக் கொள்ளுங்கள்.

“புத்தர்களுக்கு சேவை செய்ய நான் என்னையே அர்ப்பணித்துக் கொள்வேன்.. அவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயங்கும் எதுவும் என்னிடம் இல்லை. ஓ மாமுனியே! என்னிடம் இரங்குவீராக

அவன் இவ்வாறு பேசுவதைக் கேட்ட மூவுலகின் பிரபு சொன்னார் “யக்‌ஷர்களின் அரசே! இரத்தினக்கற்கள் பதித்த இம்மலைக்கு இறந்த காலத் தலைவர்கள் பலர் விஜயம் புரிந்திருக்கின்றனர்.

உன் மேல் கருணை மிகுத்து அவர்களின் உள்நிறை ஞானத்தைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். வருங்கால புத்தர்களும் அதே ஞானத்தை மீண்டும் பிரகடனப்படுத்துவார்கள்.

உண்மைக்கருகில் நிற்கும் பயிற்சியாளர்களுக்குள்ளே உறையும் உள்ளார்ந்த ஞானம். யக்‌ஷர்களின் ராஜனே! என்னிலும் சுகதாவிலும் இருக்கும் இரக்ககுணம் உன்னுள்ளிலும் இருக்கிறது”

ராவணனின் அழைப்பை ஏற்று, ஆசீர்வதிக்கப்பட்டவர் அமைதியாகவும் குழப்பமில்லாமலும் இருந்தார். ராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டார்.

இன்ப நகரத்தை அடைந்ததும் புத்தருக்கு மீண்டும் மரியாதைகள் செய்யப்பட்டன ; ராவணன் அடங்கிய யக்‌ஷர்களின் குழுவொன்றும், யக்‌ஷிகளின் குழுவொன்றும் அவருக்கு மரியாதை செய்தன.

—- (to be continued)

Source : (1) Studies in the Lankavatara Sutra – D T Suzuki (2) The Lankavatara Sutra – Volume one – Edited by Bunyiu Nanjio

DTSuzuki

 

பிரயத்தன நதி

pursuit_of_happyness

சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.

“The Pursuit of Happyness” திரைப்படத்தை நேற்றிரவு வீடியோவில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான படம். தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டு விட்டது. புதிதாக வெளியான திரைப்படமொன்றைக் காண குடும்பத்துடன் சென்றிருந்த போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக காட்சி ரத்தானதும் டிக்கெட் தொகை ரொக்கமாக கையில் கிடைத்தது. வீடு திரும்புவதற்கு முன்னர் பக்கத்தில் இருந்த வீடியோ கடையில் தள்ளுபடி விலையில் கிடைத்தது என்று “The Pursuit of Happyness” திரைப்பட வீடியோவை வாங்கினேன்.

வில் ஸ்மித் தன் நடிப்பால் உச்சத்தை தொட்ட படம் ; க்ரிஸ் கார்ட்னர் என்ற புகழ் பெற்ற பங்குத் தரகரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். வில் ஸ்மித்தின் மகன் மாஸ்டர் ஜேடன் ஸ்மித் (Jaden Smith)-துக்கு முதல் படம். சமீபத்தில் After Earth திரைப்படத்தில் இதே தந்தை – மகன் ஜோடி நடித்திருந்தார்கள். நட்சத்திர தந்தை-தாய்க்கு பிறந்திருக்கும் ஜேடன் வியக்க வைக்கும் திறமை படைத்த நடிகர் மற்றும் ராப் பாடகர். நோபல் பரிசு விழாவொன்றில் ராப்-கச்சேரி செய்திருக்கிறார். மகனின் திறமையை வெளிக்கொண்டு வர வைத்து ஓர் எதிர்கால கதாநாயகனை உருவாக்கும் முயற்சியில் வில் ஸ்மித் ஈடுபட்டிருக்கிறார் என்று முதலில் தோன்றியது. ஆனால் “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்” பார்த்த பிறகு பையனுக்கு அப்பாவின் உதவியே தேவையில்லை ; இரு படங்களிலும் மனதில் பதிகிற மாதிரியான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் ஜேடன் ஓர் இயல்பான கலைஞர் ; அவருடைய வளர்ச்சிக்கு ஒருவரின் உதவியும் தேவைப்படாது என்பது கண்கூடு. “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்”ஸில் நடிக்கும் போது ஜேடனுக்கு எட்டு வயது. இப்போது ஹாலிவுட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் பதின்பருவ நடிகர் அவர்.

அதிகம் படிக்காத, மருத்துவக் கருவிகள் விற்பனையாளராக வேலை பார்க்கும் க்றிஸ் கார்ட்னர் ஃபெர்ராரி காரில் வந்திறங்கும் பங்குத் தரகரொருவரை பார்த்து ஊக்கமுற்று பங்குத் தரகு நிறுவனமொன்றில் ட்ரெய்னியாக சேருகிறார். முதல் ஆறு மாதங்களுக்கு சம்பளம் கிடையாது. ஆறு மாதத்துக்குப் பிறகு வேலை கிடைக்கும் என்ற நிச்சயமும் இல்லை. வருமானமின்மை காரணமாக க்றிஸ்ஸின் காதலி வீட்டை விட்டு சென்று விடுகிறார். ஐந்து வயதுப் பையனும், க்றிஸ்ஸும் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீடின்றி வீதிகளில் வாழ்ந்தனர். சர்ச்சொன்றின் தங்குமிடம் முதல் ரயில் நிலையமொன்றின் கழிப்பிடம் வரை இரவுகளில் தங்கினர். பகலில் மகன் பள்ளிக்கு செல்கையில் க்றிஸ் அலுவலகம் செல்கிறார். அயராத கடும் உழைப்பு. புன்னகை மாறாமல் வாழ்க்கை தரும் கஷ்டங்கள் சகிக்கிறார். வீடின்றி தவிக்கும் அவரின் கஷ்டத்தை அலுவலகத்தில் ஒருவரும் அறியவில்லை. க்றிஸ்ஸுக்கு பங்கு-தரகர் வேலை கிடைக்கிறது. 1987-இல் சொந்த தரகு நிறுவனத்தை சிகாகோவில் துவக்கினார். இன்று க்றிஸ் ஒரு கோடீஸ்வரர் ; ஊக்கமுட்டும் பேச்சாளர் ; கொடையாளர். தென்னாப்பிரிக்காவில் முதலீடு செய்யும் தனியார் பங்கு நிதியம் ஒன்றை க்றிஸ் துவக்கிய போது அந்நிதியத்தின் அமைதிக் கூட்டாளி யார் தெரியுமா? சமீபத்தில் மறைந்த தென்னாப்பிரிக்க முன்னால் அதிபர் – நெல்சன் மாண்டேலா.

“சொந்தமாக பங்கு-தரகு நிறுவனம் துவக்குவதற்கு ஆறு வருடம் முன்னர் ஒரு குழந்தையை முதுகில் சுமந்தவாறே ஒரு சாக்கடையிலிருந்து வெளிவரும் முயற்சியில் ஊர்ந்தும், போராடியும், தத்தளித்துக் கொண்டும் இருந்த ஒருவன் இப்போது வந்தடைந்திருக்கும் இடம் அவ்வளவு மோசமானதில்லைதான்” என்று க்றிஸ் கார்ட்னர் சொல்கிறார்.

வில் ஸ்மித் க்றிஸ் கார்ட்னராக நடித்திருக்கிறார். உந்துதல் மிக்க ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். காதலி வீட்டை விட்டு நீங்கும் இடங்களில் ஏமாற்றவுணர்வை நுட்பமாக வெளிப்படுத்துவதும், நிறுவன அதிபர்கள் அவனை வேலையில் நியமிக்கும் போது பரவச உணர்ச்சியை குளமாகிய கண்களால் கொண்டு வருவதும், சிறையிலிருந்து நேராக நேர்முகத் தேர்வுக்கு சட்டை அணியாமல் செல்கையில் அதற்கான காரணத்தை நகைச்சுவையைப் போர்த்தி சொல்லும் சால்ஜாப்பும், மகனோடு இரவு வீடு திரும்புகையில் தங்கும் அறை பூட்டப்பட்டு சாமான்கள் வெளியே வைக்கப்பட்டிருப்பதை காண்கையில் அடையும் தவிப்பும்….சொல்லிக் கொண்டே போகலாம். வில் ஸ்மித் பிய்த்து உதறியிருக்கிறார். அவர் விற்கும் மருத்துவக் கருவியை திருடிக் கொண்டு போனவரை துரத்தும் இடங்கள், டாக்ஸிக்காரருக்கு செலுத்த பணமில்லாமல் பணம் கொடுக்காமலேயே ஓடி விடுவதும் என்று ஆங்காங்கே தன் ட்ரேட்-மார்க் நகைச்சுவை நடிப்பையும் வில் ஸ்மித் தூவியிருக்கிறார்.

யோக வசிஷ்டம் உரை நூலொன்றை படித்துக் கொண்டிருக்கிறேன். இளவரசன் ராமன் மனக்கலக்கமுற்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சமயத்தில் விஸ்வாமித்திரரின் வேண்டுகோளுக்கிணங்க வசிஷ்டர் சொல்லும் அறிவுரைகளின் தொகுப்பு தான் யோகவசிஷ்டம். நூற்றுக் கணக்கான அழகான சிறுகதைகள் வாயிலாக தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. பல்வேறு சமய தத்துவங்களின் ஒன்றிணைந்த படைப்பாகவும் யோகவசிஷ்டம் கருதப்படுகிறது. வேதாந்த,ஜைன, யோக, சாங்கிய, சைவ சித்தாந்த மற்றும் மகாயான பௌத்த தத்துவங்களின் கூறுபாடுகள் இந்நூலில் அடங்கியிருப்பதாக தத்துவ ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

நூலின் முதல் அங்கத்தில் வசிஷ்டர் ராமருக்கு வழங்கும் முதல் உபதேசத்தை வாசித்தால் நமக்கு சந்தேகம் வந்து விடும் – நாம் படிப்பது ஆன்மீக நூலா? அல்லது சுய-உதவிப்புத்தகமா?

“பிரபஞ்ச வாழ்க்கையிலே நாம் முக்கியமாக அனுசரிக்க வேண்டியது ‘பௌருஷம்’ அல்லது தன் ஆண்மையை அடிப்படையாகக் கொண்ட தீவிர முயற்சி. தகுந்த முயற்சியால் உலகத்தில் அடையமுடியாதது ஒன்றுமே இல்லை. பிரம்ம பதவியுங் கூடத் தீவிரமும் ஒழுக்கமும் சேர்ந்த முயற்சியால் அடையத்தக்கதே.

ஆனால் செய்யும் முயறிசிகளைச் சரியான மார்க்கத்தை அனுசரித்தும் இடைவிடாமலும் செய்துவர வேண்டும், பலன் சித்திக்காவிடின் இதற்குக் காரணம், செய்த முயற்சியின் கோளாறே தவிர வேறு காரணமல்ல. தகுந்தபடி முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் எக்காலத்திலும் மிகவும் சொற்பம். பெரும்பாலும் ஜனங்கள் காரியம் எடுத்த பிறகு, அதில் ஊக்கம் குறைந்து முயற்சியில் தளர்ச்சி அடைவதாலேயே அதில் அபஜெயம் அடைகிறார்கள். சோம்பலே எல்ல ஜனங்களுடைய கஷ்ட-நிஷ்டூரங்களுக்கும் முதல் காரணம்”

“தவிர அநேகர் தங்களுக்கு விளையும் வினைப்பயன்களைப் பூர்வ ஜன்மத்தின் பலனாகக் கருதி சோர்வடைகிறார்கள். இதுவும் அஞ்ஞானமே, பூர்வ ஜென்மத்தில் செய்த பிரயத்தனங்களின் பலன்களை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிப்பது வாஸ்தவமே. ஆனால் இனி நடக்க வேண்டிய யத்தனங்களில் அதன் வேகம் தற்சமயம் செய்யக் கூடிய முயற்சிகளுக்குக் குறைந்ததே. இவ்வித வாசனை வினைப்பயன்களைத் தற்சமயம் செய்யக்கூடிய பிரயத்தங்களால் ஜெயிக்கலாம். இது நம் வசத்தில் இருக்கிறது. இவ்வாறு எண்ணுவதை விட்டு நடப்பதெல்லாம் வினைப்பயன் என்று கருதி வாழ்க்கையில் சோகமடைந்து, செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யாமல் நிற்கும் மானிடர்கள் பரம மூடர்களே”

“நமக்கு வேண்டியவைகளைத் தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமே தவிர வேறொன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்குப் புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்குப் பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அஞ்ஞானம் வேறில்லை”

மலையிலிருந்து கொட்டும் அருவி சமவெளியை அடைந்து ஆறாக ஓடி இரு கரைகளை ஏற்படுத்தி குறுகியும் அகண்டும் ஓடி அணைகளால் தடுக்கப்பட்டாலும் தன் இலக்கை அடைந்து விடுகிறது. கவலை எனும் உணர்வின்றி தன் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடுதல் ஒன்றே அதன் பணி. நம் கடனும் பணி செய்து கிடப்பதே. தெய்வத்தால் ஆகாதென்றாலும் முயற்சியானது நமக்கு கூலியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை, க்றிஸ் கார்ட்னரின் வெற்றியை திரையில் சித்தரித்து, நம்முள் ஏற்படுத்துகிறார் நடிகர் வில் ஸ்மித்.

Will_Smith_053

Source : யோகவாசிஷ்டம் : தமிழாக்கியவர் – எஸ்.கணபதி : அல்லயன்ஸ் கம்பெனி : 1948

தேவபூமி *

Rishikesh

சுரங்கங்களைத் தோண்டு
நதிகள் இடையில் வந்தால்
அவற்றின் பாதையை மாற்றி விடு
மரங்களை வெட்டு
அணைகளைக் கட்டு
பள்ளம் தோண்ட
குண்டுவெடிப்பு நிகழ்த்து
பிளவு பட்ட பாறைத் துகற்களை
நதிக்குள் தள்ளு
நிலச்சரிவினால் இழந்த
மோட்டார் சாலைகளை மீட்க
மலையின் பக்கங்களை மேலும் செதுக்கியெடு
நதியில் இன்னும் பாறைகள் வந்து விழ வை
பச்சைப் போர்வையை
எடுத்து மலைகளைக் குன்றுகளாக்கு
காடுகளைக் களைந்து
வரிசை மேல் வரிசைகளாக
ஓய்வு விடுதிகளை நிறுவு
வியாபாரம் செய்
முன்னேற்றமொன்றே உனது குறிக்கோள்
ஊர்கள் அழிந்துவிட்டால்
புராணக் கதைகளைக் காரணம் காட்டிக் கொள்ளலாம்

* – சார்தாம் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் புனிதத்தலங்களாகிய – பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி – உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளன. ரிஷிகேஷ், அரித்வார் போன்ற மேலும் பல புராதனமான திருத்தலங்களும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தை தேவபூமி என்றும் அழைக்கின்றனர்.

மலை பிரசங்கம்

பலன் வினையைச் சார்ந்தது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மிக சட்டங்களுக்கு உட்பட்டது. இவ்விரண்டு கூற்றுக்களும் உண்மையெனில், தனி மனிதன் நிஜமாகவே சுதந்திரமானவனா? சுதந்திரமும் இவ்விரண்டு கூற்றுக்களும் வெவேறானவை அல்ல.

வினையை தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அதே சமயம், நமது தெரிவுக்கு நாமே பொறுபேற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.

மலையிலிருந்து குதிக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அப்படி குதித்தால் எலும்பு நொறுங்கி இறக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவியல் உண்மை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

“அது எனக்கு தெரியும். தெரிந்தே குதித்து பார்க்கும் ஆசை எனக்கு இருக்கிறது” என்று எவனாவது ஒருவன் சொல்வானே ஆனால், தற்கொலையை அனுமதிக்காத, சமூகவியல் சட்டத்தை மதிக்காதவனாக ஆகிவிடுகிறான். அவன் குதிக்கப் போகிறான் என்று காவல் துறையினருக்கு தெரிய வருகிறது என்றால், அவன் கைது செய்யப்படுவான்.

காவல் துறையினருக்கு தெரியாத பட்சத்தில், அவன் மலை உச்சிக்கு செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் மலையுச்சியை அடைகின்றபோது, ஓர் ஆங்கிலேயரை சந்திக்கிறான். உடம்பில் கயிறைக் கட்டிக்கொண்டு, ஓர் இழுவை மூலம் குதிப்பவரைக் கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு, குதித்து, பறந்து, அந்தரத்தில் தொங்கும் சாகச ஆனந்தத்தை அளிக்கும் “Bungee Jumping” என்று சொல்லப்படும் விளையாட்டை அவர் சில இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கும் காட்சியை காண நேர்கிறது. அப்போது அவன் அடைய நினைத்த இலக்கு அல்லது பலன் என்ன என்று சரிவர புரிய வருகிறது. அவன் சாகவோ, காவலரால் கைது செய்யப்படவோ ஆசை படவில்லை. அவனது தேவை “சுதந்திரம்” என்ற இயற்க்கை உணர்வை சாகச விளையாட்டின் மூலம் அனுபவிப்பது. தன்னை பற்றியும் தன்னுடைய அவாவை பற்றியும் ஓர் ஆழமான தெளிவை அந்த மலைக்காட்சி அவனுக்கு அளிக்கிறது. அந்த ஆங்கிலேயரிடமே அவ்விளையாட்டை கற்றுத்தேர்ந்து நம்பிக்கை மிகுந்த bungee jumper ஆக மாறுகிறான். சில வருடங்களில் அதே இடத்தில அவன் ஒரு சாகச விளையாட்டு கேந்திரத்தை நிறுவினானேயானால், அறிவியல் மற்றும் சமூகவியல் சட்டங்களுக்குட்படாத அவனது விசித்திர ஆசை வழியாகவே (மனிதருக்கு எளிதில் புரிபடாத) ஆன்மீக சட்டம் இலக்குக்கு அவனை வழி நடத்தி இருக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும்?

மலையிலிருந்து குதிக்கும் உதாரணம் என்னவோ மிகையானதுதான். ஆனாலும் ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஆழ்மன ஆசையை உதாசீனபடுத்த்தினால், உண்மையான, நிம்மதி கலந்த மகிழ்ச்சியை வாழ்வில் அடைய முடிவதில்லை. பெரும்பாலான தொழிற்சம்பநதப்பட்ட அதிருப்திகள் ஆழ்மன ஆசையை அங்கீகரிக்காததால் நிகழ்வன.

ஒவ்வொரு மனிதனின் தொழில் சம்பந்தப்பட்ட விருப்புக்கள் அவனுடை ஆழ்மன ஆசையை தொட்டனவாகவே இருக்கின்றன. சிலர் கேட்கலாம் -“அப்படியானால் ஒரு கொலைகாரன் அவன் ஆழ்மன ஆசையை அடையும்போது ஏன் குற்றவாளி என்று கருதப்படுகிறான்?”. வக்கில்தனமான வாதம்.

இதற்கு இரண்டு விடைகள். ஒன்று, பலன் அறிவியல் சட்டங்களுக்கும் சமூகவியல் சட்டங்களுக்கும் உட்பட்டன. சமுகம் கொலை செய்யும் அதிகாரத்தை யாருக்கும் கொடுக்கவில்லை. இரண்டு, அந்த மனிதன் ஆழ்மன ஆசையை சரியாக உணர்ந்து அறிந்தானா? குற்றவியல் நிகழ்வுகள் பெரும்பாலும் சிலகணங்களின் நிதானமிழப்பினால் ஏற்படுபவை. கோபம் மற்றும் அளவுக்கு மீறிய வெறி அம்மனிதனை சில நிமிடங்களுக்கு மிருகமாக்கி இருக்கலாம். கொலை செய்த பிறகு நிதானம் திரும்பிய பிறகு, தன்செயலின் தீவிரம் அவனை உலுக்கியிருக்கும். சமுகத்தில் தனது நிலை தாழ்ந்துவிடும் என்ற உண்மை அவனை அக்கொலையை மறைக்கும் முயற்சிகளிலும், ஓடி ஒளியும் தற்காப்பு சம்பந்தப்பட்ட வினைகளிலும் தூண்டி இருக்கும்.

ஆழ்மன ஆசையை ஒருவன் சரியாக உணர்ந்து அறிவது எங்ஙனம்? இதற்கேதும் சுருக்கு வழி உண்டா என்றால் இல்லை. கிரேக்க தத்துவஞானிகள் சொன்ன மாதிரி, தன்னை அறிவதை தவிர வேறு வழியில்லை.

தன்னை அறியும் முயற்சிகள் பல வகைபட்டன. ஹிந்து மதமும் மற்ற மதங்களும் தன்னை இப்பிரபஞ்சத்தை அறியும் பல்வேறு வழி முறைகளை ஆன்மீக ரீதியாக போதிக்கின்றன. தன்னை அறியும் முயற்சியில்தான் சாமியார்களும், ஆன்மீகவாதிகளும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் விழைவை பற்றி நாம் பேசப்போவது இல்லை. இச்சமுகத்தில் வாழ்ந்து பொருளிட்டும் பொறுப்பு வாய்ந்த ஒவ்வொரு குடிமகனும் கூட தன்னை நன்கு ஆழமான அளவில் அறிவது இன்றியமையாதது.

தன்னை அறியும் முயற்சியில் முதற் கட்டமாக இருப்பது சிந்தனை உலகம் என்று சொல்லப்படும், நம் உள்ளுலகில் உறைந்திருக்கும் அல்லது அவ்வப்போது எழும் உணர்வுகளை முழுக்க உணர்வது அல்லது மனக்கண்ணால்   உற்று நோக்குவது.

ஓர் உணர்வை தன்னில் தானே உற்று நோக்கும் தருணத்தில் அவ்வுணர்வின் வலிமையைப பொறுத்து அவ்வுணர்வு தொடர்ந்து வளருமா அல்லது சீக்கிரமே மடிந்து போகுமா என்பது தெளிவுற  தெரிகிறது. வலிமையற்ற உணர்வுகள் கணநேர ஆயுள் மட்டுமே பெற்றவை. நம்முடைய  உணர்வுகளை சரியாக  புரிந்து கொள்ளாத வரை, இத்தகைய உணர்வுகள் நம்முள் இருக்கின்றன என்ற பிரக்ஞ்சை இல்லாதவரை நாம் முழு தெளிவில்லாத வினைகளிலேயே ஈடுபடுகிறோம். இத்தகைய வினைகளின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பது அறிவியலின், சமுகத்தின் விதிமுறைகளை ஒட்டியே அமைகிறது.

மலையிலிருந்து குதிக்க ஓடியவனுக்கு தான் செய்ய நினைத்திருக்கும் காரியத்தின் அறிவியல் விளைவும் தெரியும். காவலர்கள் கைது செய்வார்கள் என்றும் தெரியும். இருந்தாலும் அவன் உள்ளுலகின் உந்துதலால் மலை உச்சிக்கு போனான். ஓர் எதிர்பார்ப்பு. அங்கு எதுவோ  நிகழப் போகிறது என்ற உள்ளுணர்வு. – இவ்விரண்டின் காரணத்தால் மலையில் கண்ட கட்சி அவனுக்கு முழு தெளிவை அளித்தது. இந்த தெளிவை அடைவதில், அவனுடைய திறந்த, விரிந்த எண்ணப்பாங்கும் ஒரு காரணம். மூடிய எண்ணவோட்டம் உள்ளவர்கள், பெரும்பாலும் முக்கிய தருணங்களில் தெளிவை இழந்து விடுகிறார்கள்.  

அவன் இன்னொரு குணத்தையும் மலைகாட்சியை காணும் நேரத்தில் வெளிபடுத்தினான். அதுதான் நிகழ்காலத்திலேயே சஞ்சரிக்கும் குணம். சஞ்சரிப்பது என்பது வெறும் நடப்பது மட்டும் அல்ல. எண்ணவோட்டம், பிரக்ஞ்சை மற்றும் தன்னை சுற்றி நடப்பவற்றில் முழு ஈடுபாடு. நம்மில் பலர் பல சமயங்களில் நிகழ்காலததிலேயே  இருப்பதில்லை. நடந்து முடிந்த சம்பவங்களை பற்றிய குற்ற உணர்வும் வரப்போகும் சம்பவங்களை பற்றிய கவலையிலும் பொழுதைக் கழிக்கிறோம்.

நிகழ் காலத்தின் முழு விழிப்புணர்வும் உள்ளோடும் உணர்ச்சிகளின் தெளிவுமே, ஆன்மீக சட்டத்தின் மௌனமான நடைமுறைகளை அறிய உதவுகிறது. வாழ்வில் வெல்ல உதவுகிறது.