தைரியத்துடன் செயல் படுங்கள். அரச குடும்பத்தின் செல்வம் இங்கிருந்து மீளாமல் இருக்கட்டும். சாதாரண பெண்கள் தத்தம் வர்க்கத்தில் பிறந்த காதலர்களையே ஈர்ப்பார்கள்; ஆனால் உயர்ந்தோர் தாழ்ந்தோர், எல்லா வர்க்கத்தோரையும் உணர்வால் வளைப்பவரே சிறந்த பெண்கள்”
உதயனின் பேச்சைக் கேட்ட பெண்கள் உடன் இளவரசனைக் கவரும் வேலையில் இறங்கினர்.
ஏதோ பயம் கொண்டவர்கள் போல ஆனந்தம் தரும் சில சைகைகளை புருவங்களினால், பார்வைகளால், கொஞ்சும் வார்த்தைகளினால், புன்னகைகளால், அங்க அசைவுகளால் செய்தார்கள்.
அரச ஆணையின் விளைவால், இளவரசனின் மென்மைத் தன்மையால், போதையூட்டும் காதல் உணர்வின் சக்தியால், அவர்கள் சங்கோஜத்தை களைந்தனர். பெண் யானைக் கூட்டங்களோடு இமய மலைக் காடுகளில் வலம் வரும் ஆண் யானையைப் போல மகளிர் சூழ தோட்டத்தில் இளவரசன் வலம் வந்தான். தேவ மங்கையரால் விப்ராஜனின் இன்ப வனத்தில் சூழப்பட்ட விவாஸ்வத் போல மகளிரின் கவனம் அவன் மேலிருக்க அத்தோட்டத்தில் இளவரசன் பிரகாசித்தான். பின்னர் சில பெண்கள் போதையின் தாக்கத்தில் சிக்குண்டவர்கள் போல் நடித்தவாறே, தம்முடைய உறுதியான, வட்டமான, நெருக்கமான குலை போன்ற அழகான மார்பகங்களால் அவனைத் தொட்டனர். பொய்யாக ஒருத்தி தடுக்கி விழுந்து, தோள்களிலிருந்து தொங்கும் கொடி போன்ற தன்னிளங்கைகளால் அவனுடைய தோளை மடக்கினாள்.
மது வாசனை வீசும் தாமிர நிறமான கீழ் உதடுகளை அசைத்து ஒருத்தி “ஒரு இரகசியத்தைக் கேள்” என்று அவன் காதில் முணுமுணுத்தாள். அவனுடைய கரத்தின் தொடுதலைப் பெற்றுவிடும் நம்பிக்கையில் களிம்பு தடவி ஈரம் படிந்த ஒருத்தி அவனிடம் ஆணையிடுபவள் போல் “இங்கு ஒரு கோடு வரை” என்று சொன்னாள்.
இன்னொருத்தி போதையை சாக்காய்க் கொண்டு இடையின் மேகலை காணும் வண்ணம், திரும்பத் திரும்ப நீல நிற மேலாடையை வீழ வைத்துக் கொண்டிருந்தாள். அது இருட்டான வானத்தில் தோன்றி மறையும் மின்னலைப் போன்றதாய் இருந்தது. தங்களுடைய தங்க ஆபரணங்கள் சத்தமிடும் வண்ணம் சிலர் மேலும் கீழுமாக நடந்தனர்; அப்போது ஒளி ஊடுருவக் கூடிய ஆடையால் மறைக்கப்பட்ட அவர்களின் இடைப்பாகங்கள் தெரிந்தன. ஏராளமான மாம்பூக்கள் மலர்ந்திருந்த மாங்கிளைகளில் சாய்ந்தவாறு, தங்கஜாடிகளைப் போன்ற தம் மார்பகங்களைக் காட்டியவாறு மற்ற பெண்கள் நின்றிருந்தனர். தாமரை-விழி கொண்ட இன்னொரு பெண் தாமரைப் படுக்கையிலிருந்து எடுத்த ஒரு தாமரையுடன் தாமரை முகங் கொண்ட இளவரசனின் பக்கத்தில் பத்மஶ்ரீ போல் நின்று கொண்டாள்.
இன்னொருத்தி அபிநயங்கள் பிடித்து பாடலொன்று பாடினாள் ; அவனுடைய அலட்சியத்தை பொருட்படுத்தாது அவள் பார்த்த பார்வை “நீர் உம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்” என்று சொல்வது போலிருந்தது. இன்னொருத்தி செந்நிறமான முகத்தில் தன் புருவங்களால் விற்களை வரைந்து அவனைப் போன்று பாவனை காட்டினாள் ; அவனுடைய பவித்திரமான நடத்தையை கேலி செய்வது போல சைகைகளைக் காட்டினாள். எழிலான வட்ட முலைகளும் காதணிகளும் சேர்ந்து குலுங்கும் படி சிரித்துக் கொண்டே ஒருத்தி “ஐயா, முடித்துவிடுங்கள்” என்று கூறி அவனைக் கிண்டல் செய்தாள்.
இவர்களிடமிருந்து அவன் பின் வாங்கத் துவங்கிய போது, சிலர் பூமாலைகளைக் கயிறாக வீசி அவனைத் தடுத்தனர்; சிலர் மறைமுகக் கிண்டல் தொனிக்கும் மெலிதான வார்த்தைகளை அங்குசத்தைப் போல பயன் படுத்தி அவனைத் தடுத்தனர். கைகளில் பழுத்த மாம்பழத்தைப் பிசைந்து கொண்டு , அவனுடன் விவாதிக்க விரும்புபவள் போல், காமத்தால் தடுமாறிய குரலில் ”யாருடையது இம்மலர்?” என்றாள்.
ஆணின் நடை-தோற்றப் பாவனையில் ஒருத்தி ”பெண்கள் உங்களை வெற்றி கொண்டார்கள்; நீங்கள் சென்று இப்பூமியை வென்று வாருங்கள்” என்றாள். நீலத் தாமரை மணம் கமழும் இன்னொருத்தி தன் கண்களைச் சுழற்றி, மிகையான உற்சாகம் காரணமாக தெளிவற்ற வார்த்தைகளில் இளவரசனை நோக்கி இவ்வாறு பேசலானாள்:
“பிரபு! தங்ககூண்டில் அடைபட்டதைப் போன்று குயில் பாட்டு ஒலிக்க, தேன் மணக்கும் மலர்களால் சூழப்பட்ட இம்மாமரத்தைப் பாருங்கள் தீயால் எரிக்கப்படுவன போல் தேனீக்கள் ஒலியெழுப்பும் இவ்விடத்தில் காதலர்களின் துயரைப் பெருக்கும் அசோக மரங்களைப் பாருங்கள் மஞ்சற் களிம்பு பூசிய ஒரு பெண் வெண்ணிற ஆடை அணிந்த ஓர் ஆணைத் தழுவி நிற்பது போல் சிறு மாங்கிளையொன்று திலக மரங்களை தழுவியிருப்பதைப் பாருங்கள் பெண்களுடைய நகங்களின் அழகில் மயங்கி தலை சுற்றியது போல் வளைந்து அரக்கு போல ஒளிரும் குருவக மலர்களைக் காணுங்கள்.
வெண்ணிற ஆடை பூண்டு சயனித்திருக்கும் சிவந்த பெண்ணைப் போல சிந்துவார புதர்கள் கரைகளில் வளர்ந்து நிற்கும் ஏரியைப் பாருங்கள். பெண்களின் அளப்பரிய வலிமையைக் கவனத்தில் கொள்க; மீன் கொத்தும் வாத்தொன்று ஒரு வேலைக்காரனைப் போல தன் துணையைப் பின் தொடர்வதைப் பாருங்கள். உணர்ச்சியூட்டும் குயிலொன்றின் அழைப்பைக் கேளுங்கள் ; எதிரொலி போன்று பதில் தரும் இன்னொரு குயிலின் சத்ததையும் கேளுங்கள். பறவைகளுக்குள் அதீத உணர்ச்சியை ஏற்படுத்தும் இளவேனிற்காலம், எதைப் பற்றி சிந்திப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த அறிவாளிக்குள் எதையும் ஏற்படுத்தாதோ?”
காதல் வயப்பட்டிருந்த மனத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த இளம்பெண்கள் இவ்வாறு பல விதங்களில் இளவரசனைக் கவர முனைந்தார்கள். இத்தகைய மருட்சிகளால் கொஞ்சமும் அசைவுறாத மனதினனாக இளவரசன் புலன்களின் மேலான கட்டுப்பாட்டை இழக்காமல் இருந்தான். தவிர்க்க இயலா மரணத்தின் இயல்பு பற்றிய சிந்தனையின் பாற்பட்ட அவன் வேதனைப்படவும் இல்லை; உவகை கொள்ளவும் இல்லை. அவர்களின் கால்கள் வாய்மையில் நிலைப்பட்டதாக இல்லாமல் இருப்பதை அந்த உயர்ந்த மனிதன் கண்டு கொண்டான்; ஒரே சமயத்தில் உறுதியாகவும் குழப்பத்திலும் இருந்த மனதில் இவ்வாறு எண்ணலானான்.
”முதுமையால் அழிக்கப்படக் கூடிய மேனி எழிலின் போதையில் சிக்குண்டிருக்கும் இப்பெண்கள் இளமையின் நிரந்தரமின்மையை அறிய மாட்டார்களா? நோய்களே இயற்கையின் விதி என்றிருக்கும் இவ்வுலகு பற்றிய பயம் சிறிதுமின்றி உல்லாசமாயிருக்கும் இவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களை இதுவரை கண்டதில்லை போலிருக்கிறது! குழப்பம் கொஞ்சமும் இல்லாமல், விளையாட்டும் சிரிப்புமாக வளைய வரும் இவர்களைக் காணும் போது எல்லாவற்றையும் கபளிகரம் செய்து விடும் மரணம் பற்றியதான அறியாமை மிக்கவர்கள் என்றே தோன்றுகிறது.
மூப்பு, பிணி மரணம் பற்றி அறிந்த மனிதன், சிரிப்பதை விடுங்கள், உட்காரவோ, நிற்கவோ அல்லது படுக்கவோ கூட மாட்டானே! ஒரு மரம் மலர்களை, கனிகளை இழந்து வீழும் போதோ அல்லது வெட்டப்டும் போது, இன்னொரு மரம் அழாமலும் வருத்தப்படாமலும் இருப்பது போல, வயதானவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும், செத்தவர்களையும் பார்த்தும் கூட பொருட்படுத்தாமல், கலங்காமல் இருப்பவர்கள் பகுத்தறிவற்றவர்களாகவே இருப்பார்கள்.”
சிந்தனையில் மூழ்கி, புலனுணர்ச்சியில் ஆர்வமில்லாதவனாய் நின்றிருந்த இளவரசனை நோக்கி உலகியல் நடத்தையில், சாத்திரங்களில் வல்லுனனான உதயன் நட்பு மேலிட உரைக்கலானான் :
”தகுதி வாய்ந்தவன் என்ற காரணத்தினால் அரசர் என்னை உன் தோழனாக நியமித்தார்; அவர் என்னிடம் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக உன்னிடம் பேச விழைகிறேன். நட்பின் பண்பு மூவகைப்பட்டது. நண்பனை இலாபமற்ற செயல்களில் ஈடுபடவிடாமல் தடுப்பது, இலாபம் தரும் செயல்களில் அவன் ஈடுபட தூண்டுகோலாக இருப்பது மற்றும் கஷ்டங்களின் போது கூடவே இருப்பது. நண்பனாக ஏற்றுக் கொண்ட பிறகு, என் கடமைகளில் இருந்து விலகி, உன் நலன்களைப் பேணாதவனாக இருப்பேனாயின், நட்பு விதிகளை வழுவினவனாக ஆவேன்.
உன் நண்பனாக இருக்கும் காரணத்தால் நான் இதை சொல்வது அவசியமாகிறது; இப்பெண்களுக்கு உரிய கவனத்தை நீ தராமல் இருப்பது, இளைஞனாகவும் சுந்தரனாகவும் இருக்கும் உனக்கு பெருமை தரக் கூடியது அல்ல. போலியாகவேனும் சரி, பெண்களை நிறைவு செய்வது சாலச் சிறந்தது, அவர்களுடைய நாணத்திற்கு எதிர்வினையாகவோ அல்லது நம்முடைய சுகத்திற்காகவோ! நல்ல பண்புகள் அன்பின் பிறப்பிடமாக இருப்பன. பெண்கள் மரியாதையை விரும்புபவர்கள். பணிவும் இணக்கமும் பெண்களின் இதயங்களை பிணைப்பன.
உன் இதயம் இஷ்டப்படாவிடினும், நீ மரியாதையுடன் அவர்களை சந்தோஷப்படுத்துவது உன் அழகின் தன்மைக்கு பொருத்தமானதாக இருக்கும். பணிவன்பு மகளிரின் மருந்து; பணிவன்பு ஒர் அழகான ஆபரணம்; பணிவன்பிலாத அழகு மலர்களில்லா புதர் போன்றது. உண்மையான உணர்வுடன் அவர்களை ஏற்றுக்கொள்; அரிய புலனின்பங்களை பெறுகையில் நீ கழித்தொதுக்கக்கூடாது. காதல் உயர்ந்தபட்ச நன்மையைத் தரும் என்றே, புரம்தரா எனும் தேவன் (குறிப்பு : புத்தசரிதத்தில் இந்த பெயரே வருகிறது. இப்பாத்திரத்தை இந்திரன் என்ற பெயரில் நாம் அறிவோம்) கௌதமரின் மனைவி அகல்யாவின் மீது காதலில் விழுந்தான். சோமனின் மனைவி ரோகிணியை மணமுடிக்க அகஸ்தியர் கேட்டாரென்று மரபு சொல்கிறது. ரோகிணி போலவே இருக்கும் லோபமுத்திரையை அவர் மனைவியாகப் பெற்றார்.
கடும் தபசிற்குப் பெயர் போன பிரகஸ்பதி உதாத்யரின் மனைவி மமதாவுடன் உறவு கொண்டு பாரத்வாஜரைப் பெற்றார். பிரகஸ்பதியின் மனைவியிடமிருந்து சந்திரன் புதனைப் பெற்றான். ஆசையை அடக்கிய பழம்பெரும் முனிவர் பராசரர் காளி எனும் மீனுக்குப் பிறந்தவளை யமுனா நதிக்கரையில் அணுகினார். அக்சமாலா எனும் கீழ் ஜாதிப் பெண்ணுடன் கூடி முனிவர் வசிஷ்டர் கபிஞ்சலாடன் எனும் மகனைப் பெற்றார். ஆயுட்காலம் முடிகின்ற தருணத்திலும் விஸ்வாசி என்கிற தேவமங்கையுடன் களியாட்டமிட்டான் யயாதி.
பெண்ணுடனான புணர்ச்சி மரணத்தில் முடியும் என்ற சாபம் இருந்தும் கௌரவ வம்ச மன்னன் பாண்டு, மாத்ரியின் சௌந்தர்யத்தில் மயங்கி காதலின் இன்பங்களுக்கு தன்னை பலி கொடுத்தான். இது போனற உயர் நிலை மாந்தர் பலர் உடல் சுகம் பொருட்டு இழிவானதெனினும் புலனின்பங்களை துய்த்திருக்கின்றனர். வீரியம், இளமை, அழகு – எல்லாமிருந்தும் உனக்கு உரிமையாக வரும் இன்பங்களை நீ வெறுக்கிறாய்.”
மறைகள் சொல்லும் மரபைச் சுட்டிக்காட்டி பேசப்பட்ட புறப்பகட்டான சொற்களைக் கேட்ட இளவரசன் இடி-மேகத்தின் குரலில் பதிலளித்தான் :-
“என் மீதான உன் நட்பினை உன் சொற்கள் எனக்கு நன்கு புரிய வைத்தன. என்னைப் பற்றிய உன் தவறான மதிப்பீடுகளுக்கான என் பதில்களைக் கேள். புலன் வழிப் பொருட்களை நான் வெறுக்கிறேன் என்றில்லை ; இவ்வுலகம் முழுமையும் அவற்றில் லயித்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் என் மனம் அவற்றில் மகிழ்வதில்லை. ஏனெனில் அவற்றை நான் நிலையற்றவையாகக் கருதுகிறேன்.
முப்பிணிகள் இல்லாமல் இருந்திருந்தால் நானும் புலன் வழிப் பொருட்களின் இன்பத்தை அனுபவித்திருக்கக்கூடும். பெண்களின் அழகும் சௌந்தர்யமும் என்றும் அழியாதனவாக இருந்திருந்தால், எவ்வளவு கெட்டவையாக இருந்தாலும் என் மனம் காதலின்பத்தை துய்த்திருக்கும். அவர்களின் சௌந்தர்யத்தை மூப்பு பருகிவிட்ட பிறகு, அவர்களுக்கே அது அருவெருப்பாக இருக்கும் ; அதனுடைய இன்பம் மனமயக்கத்தின் காரணமாகவே எழத்தக்கது.
மரணம், மூப்பு, பிணி இவற்றுக்கு இரையாகப் போகிற ஒரு மனிதன் அவனைப் போன்று முப்பிணிக்கு இரையாகப் போகிற இன்னொருவரோடு குழப்பமில்லாமல் உறவாடுதல் பறவைகள் மற்றும் விலங்குகளின் நிலைக்கு சமானமானதன்றி வேறில்லை. வலிமையான மனிதர்களெல்லாம் உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள் என்கிற உன் வாதம் அவர்களெல்லாம் அழிந்து போனார்கள் என்பதைப் பார்க்கும் போது, மனதுக்குள் பதட்டத்தைத் தான் உண்டு பண்ண வேண்டும்.
அழியும் தன்மையுடைத்தும், புலன் வழிப்பொருட்களில் பற்றை ஏற்படுத்தக்கூடியதும், சுயக்கட்டுப்பாட்டை அடையச் செய்யாத எதையும் நான் உண்மையான சிறப்புடையதென்று எப்போதும் கருத மாட்டேன். போலித்தனத்தை பயன்படுத்தியாவது ஒருவன் பெண்களுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்று நீ சொல்வதைப் பொறுத்த வரை, போலித்தனமான மரியாதையுடன் நான் என்றும் ஒத்துப்போக முடியாது.
நேர்மையற்ற இணக்கத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முழுமனதுடன் சேராத ஒன்றுதலை நாம் அறவே ஒதுக்க வேண்டும். இது போன்று இருக்கும் போது, பழிப்புக்கிடமான உணர்வுகளுக்குள் என்னை அழைத்து தவறான பாதைக்குள் அனுப்ப வேண்டாம். விரைந்தோடும் உணர்வுகளில் நீ அர்த்தத்தை காண்பாயானால், உன் மனம் உறுதி மிக்கதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். மரணப்பாதையில் படைப்பை அவதானிக்கும் போது, மிகக் கடுமையான அபாயத்துக்கு நடுவே, நீ புலன் வழிப் பொருட்களின் மீது பற்றுடன் இருக்கிறாய்.
பிணி, மூப்பு, நோய்கள் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பதால், எனக்கோ பயமாகவும் கடும் மன உளைச்சலாகவும் இருக்கிறது. உலகமே தீயில் எரிவதை நான் உணர்வதால், மன சமாதானம் கிட்டுவதில்லை. திருப்தியும் அடைவதில்லை. மரணம் இன்றியமையாதது என்று அறிந்தவனின் நெஞ்சில் ஆசை எழுந்ததென்றால், அழுவதற்கு பதிலாக பெரிய ஆபத்தில் உவகை கொள்ளும் அவன் இதயம் இரும்பாலானது என்று நான் கருதுவேன்.”
முழுமையான தீர்மானத்துடன் உணர்ச்சிகளுக்கு எதிராக இளவரசன் சொற்பொழிவை ஆற்றி முடித்தவுடன் கதிரவன் மேற்கு மலையின் பின்னர் மறைந்து கொண்டான்.
அணிந்த மாலைகளும் ஆபரணங்களும் பயனற்றுப் போயின ; அவர்களின் அற்புதமான கலைகளும் கொஞ்சல்களும் வீணாயின ; நம்பிக்கைகள் விரக்தியாக மாறிய பிறகு, காதற்கடவுளை தம் இதயங்களுக்கு அடியில் அமிழ்த்தி வைத்துக் கொண்டு பெண்களெல்லாம் நகருக்கு திரும்பினர். மாலையில் நகரத்துப் பெண்கள் எல்லாம் பூங்காவில் இருந்து நீங்கியவுடன் பூமியாளும் மன்னனின் மகன் அனைத்தின் நிலையாமை பற்றியும் சிந்தித்தவாறே தன் குடிலுக்குள் நுழைந்தான்.
Source : Ashvagosha’s Buddhacarita ; the Act of Buddha – English Translation from Sanskrit by E.H.Johnston
நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=28557)