ரயில் பெருச்சாளிகள்

சென்னை செல்லும் மனைவி குழந்தைகளை ரயிலேற்றி விடுவதற்காக நிஜாமுத்தின் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஆன் – லைன் வழி முன் பதிவு செய்த ஈ-டிக்கெட் சகிதம் வண்டிக்காக காத்திருந்தோம்.

தண்டவாளத்தில் தடிதத பெருச்சாளிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தண்டவாளத்துக்கடியில் சிறு சிறு பொந்துகளுக்குள் நுழைந்தவாறும் வெளிவந்தவாறும் இயங்கிக் கொண்டிருந்தன. ரயில் நிலையங்களில் ஒரு சுண்டெலி கூட ஏன் தென்படுவதில்லை? வெறும் பெருச்சாளிகளைத் தான் காண முடிகிறது. இவ்விதமாக என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

என் மொபைல் போனில் கீழ்க்கண்ட வரிகளை டைப் செய்தேன் :-

இரயில் நிலையங்களில்

சுண்டெலிகள் காணப்படுவதில்லை

வெறும் பெருச்சாளிகள் தாம்

சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

பெருச்சாளிகளைக் கண்டதும் உயிர் பெற்ற என் கற்பனையிலிருந்து உதித்த வரிகள் இவை. இவ்வரிகள் கவிதையாகுமா? பல முறை கவிதை போல ஏதோவொன்றை எழுதி விட்டு இது கவிதையா இல்லையா என்று யோசித்து மண்டையைப் பிய்த்துக்கொள்வது என் வழக்கமாகிவிட்டது. வெறும் நான்கு வரிகளை எழுதிய பிறகு என் கற்பனை தடை பட்டு விட்டது.

குடும்பத்தை ரயிலேற்றி விட்டு வீடு திரும்பியதும், மேற்கண்ட ’பெருச்சாளிக் கவிதையை’ தொடரும் முயற்சியில் ஈடுபட்டு முழுத் தோல்வி கண்டேன்.

பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒன்று என் ஞாபகத்துக்கு வந்தது. நான் தில்லி வந்த புதிதில் ஒரு சிறு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன். ஒரு வட இந்திய நகருக்கு அலுவலக வேலை தொடர்பாக பயணம் சென்றிருந்தேன். மூன்று நாள் அங்கே தங்கியிருந்து நிறுவனத்தின் சில சப்ளையர்களையும் வாடிக்கையாளர்களையும் சந்திக்கும் வேலை எனக்களிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது நாளே என் அதிகாரி எனக்கு போன் செய்து என்னை அன்று இரவே தில்லி திரும்பச் சொன்னார். அடுத்த நாள் ஏதோ அவசர வேலையாம். அதனால், மாலையில் கிளம்பும் ரயிலில் டிக்கட் எடுக்க காலை பத்து மணிக்கு ரயில் நிலையம் வந்தேன்.

இரண்டே இரண்டு கவுன்டர்கள். க்யூ ரயில் நிலையத்தின் பிரதான வாசல் வரை நீண்டிருந்தது. கவுன்டர் வரை வந்தடைய பல மணி நேரம் பிடிக்கும் போலிருந்தது.

ஒரு ஆள் என்னை அணுகினான். அவன் வேகமாக பேசின ஹிந்தியை என்னால் ஆரம்பத்தில் தெளிவாகப் பின்பற்ற முடியவில்லை. ஊரிலிருந்து புக் செய்து கொண்டு வந்திருந்த டிக்கட் என் கையில் இருந்ததை பார்த்திருப்பான் போலிருந்தது. “என்னிக்கான டிக்கட் உங்க கிட்ட இருக்கு” என்று கேட்டான். முதலில் நான் பதில் சொல்லவில்லை. “டிக்கட்டை கேன்சல் செய்யாதீங்க சார்….நான் வாங்கிக்கறேன்” என்றான்.

“என் டிக்கட்டை வாங்கி நீ என்ன செய்யப் போகிறாய்? இது நாளை மாலை கிளம்பும் ட்ரெயினின் டிக்கட் இது”

”இந்த டிக்கட்டை கேன்சல் செஞ்சீங்கன்னா…30% சார்ஜைக் கழிச்சிருவாங்க. நான் 10% மட்டும் கழிச்சிட்டு உங்களுக்கு பணம் தந்துடுவேன். இல்லைன்னா உங்களுக்கு வேற டிக்கட் வேணும்னா அதை அரேஞ்ச் பண்ணித் தருவேன்”

அவனிடம் கூடுதல் விசாரித்ததில் விஷயம் இதுதான். என்னுடைய டிக்கட்டை வேறு யாருக்கோ “ப்ரிமியத்தில்” விற்று விடுவான். வேறு யாரோ கேன்சல் செய்ய வந்த டிக்கட்டை எனக்கு கொடுத்து விடுவான். அதற்காக ஒரு “சர்வீஸ் சார்ஜ்” மட்டும் பெற்றுக்கொள்வான். ”ஆண் பயணி” என்று குறிப்பிடப்பட்டுள்ள டிக்கட்டை சில சமயம் பெண் பயணிகளுக்கு கூட விற்றிருக்கிறானாம். ”அது எப்படி சாத்தியம்? டிக்கட் பரிசோதகர் கண்டிபிடித்தால் பயணிக்கு பிரச்னையாகுமே?” யெனக் கேட்டதில் “எல்லாம் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம்..ஆண் பால் – பெண் பால் வேற்றுமைகள் பாராட்ட மாட்டார்கள்” என்று நக்கலடித்தான். அவனுடைய பெயர் சந்து என்று தெரிவித்தான்.

அன்று மாலை ரயிலுக்கான டிக்கட்டை ரயில் கிளம்புவதற்கு அரை மணி நேரம் முன்னதாக தருகிறேனென்றான். அடுத்த நாள் பயணத்திற்கான என் டிக்கட்டையும் நான் அப்போது தான் தருவேன் என்று சொல்லி விட்டேன்.

நான்கு மணிக்கு ரயில் நிலையம் வந்து விட்டேன். ஒரு சிறு தோல் பை மட்டும் தான். பால் இனிப்புகள் விற்கும் ஒரு கடை முன், இரண்டாம் பிளாட்ஃபார்மில் நிற்குமாறு சந்து சொல்லியிருந்தான். ஏற வேண்டிய ரயில் இரண்டாம் பிளாட்ஃபார்மிற்கு வந்து விட்டது. நகத்தை கடித்தவாறு நின்றிருந்தேன். சந்து ஒரு வழியாக வந்து சேர்ந்தான்.

“இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்க டிக்கட் என் கைக்கு வந்துடும்…உங்களோட நாளைய டிக்கட்டை குடுங்க” என்றான்.

“குடுக்கறேன்…அதுக்கு முன்னாடி இங்க நிக்கற ரயிலுக்கான கன்ஃபர்ம் டிக்கட் என் கைக்கு வந்தா மட்டும் தான் குடுப்பேன்”

“அப்ப டிக்கட்டை நீங்களே வச்சுக்குங்க….எனக்கு ஒண்ணும் வேணாம்….”

“என்னப்பா சொல்ற..நீ தானே எனக்கு டிக்கட் தரேன்னு சொன்னே”

“நான் இல்லேன்னா சொன்னேன்…..இருங்க ஒரு நிமிஷத்துல வரேன்” என்று சொல்லி நகர்ந்தான் சந்து.

எனக்கு ஒரே டென்ஷன். பேசாமல் இன்று இரவு இந்த ஊரிலேயே தங்கி விட்டு கன்ஃபர்ம் டிக்கெட்டில் அடுத்த நாள் பயணப்படலாமா என்று யோசித்தேன். ஆஃபீசில் டிஏ தர மாட்டார்களே? அதிகாரி ”ஒன்ன யாரு எக்ஸ்ட்ராவா ஒரு நாள் அந்த ஊரில் இருக்க சொன்னாங்க…நீ ஊரு சுத்திப் பார்க்கறதுக்கெல்லாம் கம்பெனி பணம் குடுக்காது” என்று திட்டவட்டமாகப் பேசுவாரே? ஹோட்டல் அறை நானூறு ரூபாய் ஆகிறது. அத்தனை செலவு செய்யும் நிதி நிலைமை இச்சம்பவம் நடந்த காலத்தில் என்னிடம் இருந்திருக்கவில்லை.

ரயில் கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கோச்சுகள் நிரம்பத் துவங்கின. ரயில் பிளாட்ஃபார்முக்குள் நுழையும் போது ஜெனரல் டப்பாவுக்குள் நிறைய பேர் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்திருந்தேன். அவர்களெல்லாரும் யார்டில் ஒளிந்திருந்து பின்னர் ஜெனரல் டப்பாவில் ஏறியிருப்பார்களோ? ஒரு முறை மும்பை சென்ட்ரல் (அப்போது பம்பாய் சென்ட்ரல்) ஸ்டேஷனில் பொது டப்பாவில் இடம் இருக்கிறதே என்று அமரப்போனால் ஒரு முரட்டு ஆள் “ஹ்ம் எடுங்க பதினைந்து ரூபாய்” என்றான். நான் எடுத்திருந்த அன்ரிசர்வ்டு டிக்கட்டை அவனிடம் காண்பித்தான். ஏளனமாய் சிரித்து விட்டு, ”இந்த இடத்தில் உட்கார வேண்டுமென்றால் எனக்கு பைசா கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நின்று கொண்டே வா” என்றான். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பயணி பதினைந்து ரூபாய் கொடுத்து காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். “எழுந்திரு” என்றான் முரடன். நான் கோச்சில் இருந்து இறங்கி பொது கோச்சிற்கு அருகே நின்றிருந்த சீருடையிட்ட ரயில் அதிகாரியிடம் போய் முறையிட்டேன். “அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீ கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டிரு…ட்ரெய்ன் கிளம்பினவுடன் அவர்கள் இறங்கிவிடுவார்கள்..அப்புறம் நீ காலியா இருக்கிற சீட்டில் உட்கார்ந்துக்கலாம்” என்று ஆறுதல் சொன்னார். அப்போது முரடன் அவரை நெருங்கி “சலாம் யாதவ் சாப்” என்றான். எனக்கு முதுகு காண்பித்துக்கொண்டு முரடன் தோளில் கை போட்டு கலகலப்பாக பேச ஆரம்பித்த யாதவ் என்கிற ரயில் அதிகாரிக்கு பின்னால் நான் ஒருவன் நின்று கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஞையே இல்லை.

சந்து ஒரு வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொண்டு வந்து என்னிடம் நீட்டினான். பால், வயது எல்லாம் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தன.

“இது கன்ஃபர்ம் ஆயிருச்சா” என்று கேட்டேன்

“சார்ட்டில் பேரு இருக்காது..ஆனா S-9 கோச்சில் ஏறி நில்லுங்க. யோகேஷ் என்று ஒரு டிடி டிக்கட் செக் பண்ண வருவார். அவர் கிட்ட பேசியாச்சு. உங்களுக்கு சீட் அலாட் பண்ணுவார். அவருக்கு டீ காபிக்கு காசு குடுங்க போதும்.”

தயக்கத்துடன் அந்த டிக்கட்டை பெற்றுக் கொண்டேன். அடுத்த நாளுக்கான என் டிக்கட்டை அவனிடம் கொடுத்தேன்.

“டிக்கட் மட்டும் போதாது சார்…என் சர்வீஸ் சார்ஜ் யாரு தருவாங்க….ஏற்கெனவே சொன்னேனே…..இருநூறு ரூபாய் குடுங்க”

டிக்கட் விலையே நூற்றி இருபது ரூபாய் தான். என் பர்ஸை எடுக்கும் போது தான் அவரைப் பார்த்தேன். “யோகேஷ்” என்ற பேட்ஜ் அணிந்திருந்தார்.

“சலாம் யோகேஷ் சாப்” என்றான் சந்து.

யோகேஷ் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு “என்னடா உங்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் அறிவு வராதா? சந்து இந்த தடவை கண்டிப்பா ஜெயில் தான் உனக்கு” என்று என் கையிலும் அவன் கையிலும் இருந்த டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டார்.

“என்ன சார்..உங்களைப் பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது…இந்த மாதிரி ஆளுங்க கிட்டேர்ந்து ப்ளாக் டிக்கட் வாங்கறீங்களே?”

நான் பதற்றமும் வெட்கமும் கலந்த தொனியில் “இல்லை சார்..அவசரமாக ஊருக்கு போக வேண்டியிருந்தது.” என்றேன்.

“ஹ்ம்ம்..போங்க…இந்த வெய்ட் லிஸ்ட் டிக்கட்டை வச்சுகிட்டு நீங்க ஜெனரல் டப்பாவில் தான் ஏற முடியும்…போங்க” என்றார்.

நான் அவரைப் பார்த்து “சார்…சார்..உதவி பண்ணுங்க சார்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அந்நேரத்தில் சடக்கென சந்து ஓடி விட்டான். யோகேஷ் “புடிங்க அவனை” என்றார். அவர் சொன்னதை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. “திருட்டு பசங்க” என்று என் காது பட சொன்னார். பிறகு என்னைப் பார்த்து “போங்க சார்…சிக்னல் போட்டுட்டாங்க…அன்ரிசர்வ்டு பொட்டில ஏறிக்கங்க” என்று சொன்னார்.

ரயிலின் ஹார்ன் ஒலித்தது. நான் வேகமாக எஞ்சின் பக்கத்தில் இருக்கும் ஜெனரல் டப்பாவை நோக்கி ஓடினேன். ஜெனரல் டப்பாவை அடையவும் ரயில் நகரத் துவங்கியது. டப்பாவுக்குள் ஏற முடியவில்லை. மக்கள் வெள்ளம். படிக்கட்டிலும் பயணிகள். அவர்கள் உள்ளே என்னை நுழைய விடவில்லை. ரயிலின் வேகம் அதிகரிக்கவும், என் வேகம் குறைந்தது. ஏமாற்றவுணர்வு விரக்தியாக மாறி “ரயிலே…போய்க்கொள்” என்று மனதுக்குள் சொல்லியவாறே பிளாட்ஃபார்மில் நின்றேன். ஒரு பென்ச்சில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன்,

தில்லிக்கு திரும்ப பேருந்து கிடைக்குமா என்று பார்க்க ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது சந்துவும் யோகேஷும் ஒரு டீக்கடை வாசலில் ஒன்றாக நின்று சிகரெட் புகைப்பதை பார்த்தேன். அவர்களை அணுகி நீங்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட டிக்கட்டை திருப்பித் தாருங்கள் என்று கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். நான் சாலையை க்ராஸ் செய்யக் காத்திருக்கும் போது தில்லி செல்லும் பேருந்து ஒன்று பச்சை விளக்குக்காக காத்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். அதில் ஏறிக் கொண்டேன்.

+++++

திரு எழுத்தாளர் அவர்களே

நீங்கள் அனுப்பிய படைப்பை படித்த பிறகு அதை எதில் பகுப்பது என்பது புரிபடவில்லை? என்ன Genre இது? கவித்துவமான பாவனையோடு துவங்கினீர்கள். பின்னர் அனுபவ பகிரல் தொனியோடு புனைவு மாதிரி எழுதியிருக்கிறீர்கள். அனுபவம் ஒரு ஃப்ளேஷ் பேக் மாதிரி வருகிறது. அந்த ஃப்ளேஷ் பேக்கிற்குள் ஒரு ஃப்ளேஷ் பேக் என்று இன்னொரு கதை (அல்லது அனுபவப் பகிரல்). தமிழ்த் திரைக்கதை ஆசிரியர்களின் பாதிப்பு உங்கள் கற்பனையில் தெரிகிறது.

பெருச்சாளிகள் என்ற ஒரு உருவகம் எதை குறிக்கிறது என்று புரிந்து கொள்ள பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இரயில் நிலையத்தை கதைக் களமாக வைத்து எழுத வேண்டும் என்ற உத்வேகத்தில் காட்டாற்று வெள்ளமாக உங்கள் எழுத்து ஆழமின்றி அலைகிறது. உள்ளடக்கத்தில் செறிவு இல்லை. இறுக்கமான வடிவமின்றி பஞ்சு மாதிரி சொல்ல வந்த விஷயம் நாலா திசைகளிலும் பறக்கிறது.

இரயில் நிலையத்தை களமாக வைத்து பல முக்கியமான இலக்கிய படைப்புகளை படைப்பாளிகள் படைத்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ரபீந்திரநாத் டாகோர் எழுதிய “Hungry Stones” சிறுகதை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் அதுவும் ஒன்று.

ரஸ்கின் பாண்ட் எழுதிய “Do you believe in Ghosts?” என்ற கவிதை ரயில் நிலையத்தில் நிகழும் ஒரு உரையாடலை சொல்கிறது.

“பேய்கள் இருக்கின்றன என்று நீ நம்புகிறாயா?”

மூன்றாம் பிளாட்ஃபார்மில்

நின்றிருந்த ஒருவன் என்னைக் கேட்டான்.

“நான் பகுத்தறிவுவாதி” – நான் சொன்னேன்

“நான் கண்ணால் காணக்கூடியவற்றையே நம்புபவன் ;

உதாரணமாக உன் கைகள், உன் கால்கள், உன் தாடி”

“ஓ! அப்படியானால் என்னைத் திரும்பவும் பார்”

என்றவன்

உடன் காணாமல் மறைந்து போனான்.

நீங்கள் அனுப்பியதை பிரசுரிக்கப் போவதில்லை என்ற எங்கள் முடிவை புரிந்து கொண்டிருப்பீர்கள். உருப்படியாக எதுவும் எழுதினீர்களேயானால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அன்புடன்

எடிட்டர்

+++++

சென்னையிலிருந்து திரும்பி வரும் மனைவியையும் குழந்தைகளும் ரிசீவ் பண்ண நிஜாமுத்தின் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது பெருச்சாளி ”கவிதையை” மேலும் தொடர உத்வேகம் பிறந்தது.

இரயில் நிலையங்களில்

சுண்டெலிகள் காணப்படுவதில்லை

வெறும் பெருச்சாளிகள் தாம்

சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

மொத்தமாக முன் பதிவு செய்து

அதீத விலையில் விற்கும்

தரகர்களை சொல்லவில்லை

பயணச் சீட்டின்றி

கூட்டமான ரயிலில்

பயணம் செய்பவர்களை சொல்லவில்லை

ஓசியில் தருகிறார்கள் என்று

மாதத்துக்கொரு முறை

நீள் பிரயாணம் செய்யும்

ரயில் ஊழியர்களை சொல்லவில்லை

முன் பதிவு செய்யும்

ரயில்வே இணை தளம் சரியாக இயங்காமல்

காளானாய் முளைத்திருக்கும்

தனியார் ட்ராவெல் ஏஜன்சிகளை சொல்லவில்லை

நிஜப் பெருச்சாளிகளைத்தான் சொல்லுகிறேன்

தண்டவாளங்களை

காற்றில் தொங்குவது மாதிரி

தொங்கவிட்டு

அடியில் வாழும்

பெருச்சாளிகளைத் தான் சொல்லுகிறேன்.

சென்னை ரயில் வந்து சேர்ந்தது. குடும்பத்தைக் காணும் ஆவலில் “கவிதை” எழுதிய டிஷ்யூ பேப்பரை உட்கார்ந்திருந்த பென்ச்சிலேயே போட்டுவிட்டு எழுந்தேன்.

டாக்ஸியில் ஏறி வீடு செல்லும் வழியில் ரயில் நிஜாமுத்தின் வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த என் கேள்விக்கு என் மனைவி அளித்த பதில் என்னை அதிர்ச்சியடைய செய்தது.

”நாக்பூர் ஸ்டேஷனில் இரண்டு மணி நேரம் போட்டு விட்டார்கள். யாரோ சிறு பையன் ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு பெருச்சாளி கடித்து இறந்து விட்டானாம்”