நானுந்தான்

சமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால நிகழ்வு பற்றிய பதிவு எழுதுவதன் நோக்கம் மானசீக குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி வைப்பதே.

சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை மிக அருகில் இருந்து என் அலுவலக சூழலில் கவனித்திருக்கிறேன். அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நொய்டாவில் சில வருடங்களுக்கு முன்னால் வேலை பார்த்த சமயத்தில் என் உயர் அதிகாரியினுடைய காரியதரிசியின் அனுபவங்கள், அதே நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த ஒரு பெண் மேலாண்மை இயக்குனரின் கண்ணில் பட்டு அவரின் உதவியாளராக்கப்பட்டு அதிக சம்பளம் என்ற மகிழ்ச்சி ஒரு வாரம் மட்டுமே நிலைத்து நிற்க கிழிந்த உடைகளுடன் அவள் அழுது கொண்டே ஓடிப் போனதை அனைவரும் பார்த்த நிகழ்வு, மேலும் பல வருடம் முன்னர் புனாவில் வேலை பார்த்த ஒரு குட்டி நிறுவனத்தில் பத்தொன்பது வயது பெண் ஊழியரை தன் காதலி என்று வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டு அவளின் பெயருக்கு களங்கம் விளைவித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்….அகமதாபாதில் வேலை பார்த்த நாட்களில் நண்பன் ஒருவன் வேலை பார்த்த நிறுவனத்தில் ஓர் அழகான தமிழ்ப்பெண்ணை தன் சொந்த பண்டமாக உபயோகித்த அந்த நிறுவன முதலாளி…..இத்தகைய நிகழ்வுகள் என் நினைவில் திரும்ப வந்து என்னை இந்நாட்களில் குற்றவுணர்வில் மூழ்கடித்திருக்கின்றன. அமைதி. அதுதான் நான் செய்த குற்றம். தட்டிக் கேட்க முடியா கோழைத்தனம் நம்மை நாம் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நம்மிடமிருந்து பறித்து விட்டிருக்கிறது. அந்த மீ டு செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் மகளிர் பட்ட வலியை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் vicarious-ஆக உணர முயல்வார்களா? மேற்சொன்ன படியான நிகழ்வுகள் நடக்குமெனின் அதை கேள்வி கேட்கும் தைரியத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்வார்களா? வேலையிடத்தில் மகளிரை பாலியல் ரீதியாக நோக்குவதையோ பாலியல் இச்சைகளை பிரஸ்தாபிப்பதையோ அதற்கென அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்துவதையோ எண்ணிக் கூடப் பார்க்காதவனாக இருப்பேன் என்ற பிரதிக்கினையை ஒவ்வோரு ஆண்மகனும் ஏற்றுக் கொள்வானா? வெறும் வாய்வார்த்தையில் மட்டுமில்லாமல் தன் நடத்தை வாயிலாகவும் பெண்களுக்கு எப்போதும் மரியாதை செலுத்துபவனாக ஆண்கள் இயல்பு மாற்றம் கொள்வார்களா?

பாலியல் துன்புறுத்தலில் நான் பங்கேற்றிருக்கிறேனா? இந்த கேள்விக்கு பதில் இல்லையென்பதாக இருக்கலாம். ஆனால் அமைதி காத்திருக்கிறேன். இல்லையென்று சொல்ல முடியாது. அன்று காத்த அமைதி என்னையும் அந்த துன்புறுத்தல்களில் பகுதி-பங்கேற்பாளன் ஆக்கியிருக்கிறது. ஆம். குற்றவாளிதான். நானுந்தான்.

பெண்ணியவாதி தெய்வம் – தாரா

(இன்று சரஸ்வதி பூஜை. இவ்வலைப்பதிவின் இருநூறாவது இடுகை இது. பௌத்த சமயத்தின் சரஸ்வதியான தாராவைப் பற்றிய இக்கட்டுரை இருநூறாவது பதிவாக வருகிறது பிப்ரவரி 2010இல் வலையில் எழுதத் தொடங்கிய போது இருநூறாவது பதிவு வரை போகும் என்று சற்றும் நினைக்கவில்லை. தொடர்ச்சியாக யாரேனும் இடுகைகளை வாசித்து வருகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் விளையாட்டுத்தனம் கலக்காத சீரிய பதிவுகளையே இடுவது என்ற உறுதியிலிருந்து விலகாமல் இன்று வரை முயன்று வருகிறேன்.)

Green_Tara,_Kumbm,_Gyantse,_Tibet,_1993

தாரை வழிபாடு முதலில் எந்த மரபில் தோன்றியது என்பதில் ஆய்வாளர்களுக்கு நடுவில் ஒருமித்த கருத்து இல்லை. சக்தி வழிபாட்டு மரபுகளிலிருந்து ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இந்து மதத்துள்ளும், பௌத்த சமயத்துள்ளும் நுழைந்திருக்கலாம் என்பது பெரும்பாலோரின் கருத்து. இந்து புராணங்களில் வரும் துர்கையின் ஒரு வடிவமாக தாரை தேவி வழிபாடு தோன்றியிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.

மூல பௌத்தத்தில் பெண் தெய்வங்கள் இருந்ததில்லை. மகாயான பௌத்தம் பிரபலமாகத் தொடங்கிய முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் பெண் தெய்வங்கள் பௌத்த சமயத்துள் நுழைந்திருக்கலாம் என்றும் கருத இடமுள்ளது. மிகவும் பழைமையான நூலான பிரஜ்னபாரமித சூத்திரத்தில் தான் முதன்முதலில் பிரஜ்னபாரமிதா என்கிற பெண் தெய்வத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நூல் சமஸ்கிருத மூலத்தில் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன. பௌத்தத்தில் பெண்மைக் கொள்கை “பிரஜ்னபாரமிதா” என்கிற பெண் தெய்வத்தின் வடிவத்தில் முதன்முதலாகத் தோன்றியது. தெளிவான ஞானமெனும் கருணையின் வெளிப்பாடாக தாரா  பௌத்தத்தில் வருவது பிற்காலத்தில் தான். (கி.பி 5-8ம் நூற்றாண்டு). மிகப்பழைமையானதும், மிகத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதுமான தாராவின் உருவம் (கி.பி 7ம் நூற்றாண்டு) நமக்கு எல்லோரா மலைக்குகை எண் 6 இல் காணக் கிடைக்கிறது. இந்தியாவின் வட-கிழக்குப் பிராந்தியங்களை ஆண்ட பால் வம்சத்தின் ஆட்சியின் போது தாரை வழிபாடு மிகவும் பரவலாகத் தொடங்கியது. தாந்த்ரீக பௌத்தம் பிரபலமடைந்த பால் வம்ச ஆட்சியின் போது தான் தாரா வழிபாடு வஜ்ராயன பௌத்தத்திலும் கலந்தது. பத்மசம்பவர் தாரா தேவியையொட்டிய வழிபாட்டு நடைமுறைகளை திபெத்துக்கு கொண்டு சென்றார். காலப்போக்கில் “அனைத்து புத்தர்களின் தாய்” என்று தாரா  வணங்கப்பட்டாள் ; “தெய்வத்தாய்” என்னும் வேத மற்றும் வரலாற்றுக்காலத்துக்கும் பண்டைய கருத்தியலின் எதிரொலியாக இதை எண்ணலாம்.

தெய்வம், புத்தர் மற்றும் போதிசத்துவர் – எவ்வாறாக கருதப்பட்டாலும் , திபெத், நேபால், மங்கோலியா, பூட்டான் ஆகிய நாடுகளில் தாரை வழிபாடு மிகப் பிரபலம் ; உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகங்களில் தாரை தொடர்ந்து வழிபடப்படுகிறாள்.  தாரை வழிபாட்டில் பச்சைத் தாராவும் வெள்ளைத் தாராவும் மிகப் பிரபலமான வடிவங்கள். அச்சம் போக்கும் தெய்வமாக பச்சைத் தாரா விளங்குகிறாள் ; நீண்ட ஆயுள் தரும் தெய்வமாக வெள்ளைத் தாரா இருக்கிறாள்.

ஒரு போதிசத்துவராக தாராவின் தோற்றத்தைப் பற்றி பல பௌத்த தொன்மங்கள் பேசுகின்றன. பெண்ணியத்தின் முதல் பிரதிநிதி தாரா என்று சொல்லும் ஒரு தொன்மக்கதை இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெண்ணியவாதிகளுள் அதிர்வை ஏற்படுத்தலாம்.

+++++

Tara Ellora Cave 6

பல லட்சம் ஆண்டுகட்கு முன் இன்னோர் உலகத்தில் ஓர் இளவரசி வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் யேஷே தாவா. பல யுகங்களாக அவ்வுலகத்தில் வாழ்ந்த ஒரு புத்தருக்கு அவள் காணிக்கைகள் வழங்கி வந்தாள். அந்த புத்தரின் பெயர் தோன்யோ த்ரூபா. அவளுக்கு போதிசித்தம் (போதிசத்துவரின் மனோ-ஹ்ருதயம்) பற்றிய முக்கிய போதனை ஒன்றை த்ரூபா அளிக்கிறார், போதனை பெற்ற இளவரசியை சில துறவிகள் அணுகி அவள் அடைந்த சாதனையின் பலனாக அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கும் பிரார்த்தனை செய்யும் படி ஆலோசனை சொல்கிறார்கள். அப்போது தான் ஆன்மீகத்தின் அடுத்த நிலைகளை அவள் அடைய இயலும் என்றும் சொல்கிறார்கள். “பலவீனமான சிந்தனை கொண்ட உலகத்தோரே ஞானத்தை எட்ட பாலியல் வேற்றுமையை ஒரு தடையாகக் கருதுவர்” என்று சொல்லி அத்துறவிகளின் பேச்சை மறுதளித்தாள். பெண் ரூபத்தில் உயிர்களின் தொண்டாற்ற விழைவோர் குறைவாகவே இருப்பதை எண்ணி வருத்தமடைகிறாள். பிறவிகளை முடிவதற்கு முன்னர் எல்லாப் பிறவிகளிலும் பெண்ணாகவே பிறக்க உறுதி பூணுகிறாள். பின்னர் பத்தாயிரம் ஆண்டுகள் அவள் தியானத்தில் ஈடுபடுகிறாள். அவளின் தியானம் பல்லாயிரக் கணக்கான உயிர்களை சம்சாரத்திலிருந்து விடுவிக்கிறது. இதை உணர்ந்து த்ரூபா புத்தர் “இனி வரப் போகிற பல்வேறு உலக அமைப்புகளில் உயர்ந்த போதியின் அடையாளமாக நீ பெண் கடவுள் தாராவாக வெளிப்படுவாய்” என்று அவளுக்குச் சொல்கிறார்.

+++++

கருணை இயக்கம் என்னும் தலைப்பில் 1989-இல் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த மாநாட்டில் வணக்கத்துக்குரிய தலாய் லாமா தாரா பற்றிப் பேசினார்.

“தாராவின் தொடர்பு கொண்ட உண்மையான பெண்ணிய இயக்கமொன்று பௌத்தத்தில் இருக்கிறது. போதிசித்தத்தின் அடிப்படையும் போதிசத்வனின் உறுதியும் கொண்டு முழு விழிப்பு நிலை எனும் இலக்கை அவள் நோக்கினாள். மிகக் குறைவான பெண்களே புத்த நிலையை அடைந்த தகவல் அவளை பாதித்தது. “ஒரு பெண்ணாக நான் போதிசித்தத்தைக் கைக் கொண்டேன். என் எல்லாப் பிறப்புகளிலுல் ஒரு பெண்ணாகவே பிறக்க உறுதி கொள்கிறேன். என் இறுதிப் பிறப்பில் நான் ஒரு புத்த நிலையை ஒரு பெண்ணாகவே எய்துவேன்” என்று அவள் சபதம் பூண்டாள்”

+++++

பௌத்த கொள்கைகளின் உருவகமாக இருக்கும் தாரா பெண் பௌத்த-நடைமுறையாளர்களை ஈர்க்கும் தன்மை உடையவளாக இருக்கிறாள். போதிசத்துவனாக தாராவின் வெளிப்பாடு பெண்களையும் தன் குடைக்குள் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமயமாக விரிவடைய மகாயான பௌத்தத்தின் முயற்சியாகக் கொள்ளலாம்.