பேய்கள்

பேய்கள் காற்றின் வடிவில் ஊடுருவிடுமாம்
அச்சமும் பதற்றமும் உள்ள திசை நோக்கி
பலமாய் வீசுவதே அவற்றின் வாடிக்கையாம்
உள் சுரக்கும் நம்பிக்கை காற்றை கன்னத்தில் சற்று பதுக்கி வைத்திருந்து
அவற்றை நோக்கி ஊதியதும்
நீர் பட்டுக் கரையும்
உலர் கரியமில வாயுவின்
புகை போலாகும் பேய்கள்

(Adapted from an idea shown in the movie Under the Shadow)

மரம் வெட்டும் திருவிழா

மரம் வெட்டும் திருவிழா

காலனியில் இன்று

இனிப்பு விநியோகம்

முன்வாசலில் நின்ற

வயதான மரங்கள்

வெட்டப்பட்டு

கட்டிட பால்கனிகளில்

வெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ;

கலைந்த கூடோன்றுள்

கிடந்த பறவை முட்டைகளை

வீசியெறிந்து விளையாடி

குழந்தைகள் குதூகலிப்பதை

மரங்களின் இடத்தடையின்றி

நகர்ந்த வாகனங்களின்

உறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு

சுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில்

பால்கனிக்காரர்கள்

கண்டு களித்தார்கள்

மரண தினத்தை

கொண்டாடும் மரபு

மரம் மரணித்த அன்றும்

மாறாமல் தொடர்ந்தது

​@ studiothirdeye.com

செயல்முறை

சிந்தனைப்பாத்திரத்தில்

நிரம்பி வழிந்த சொற்கள்

காகிதப் பக்கங்களில் ஒட்டிக் கொண்டு

பின்னர்

வாசிப்பின் உஷ்ணத்தில்

எண்ணங்களாக ஆவியாகி

இன்னொரு சிந்தனைப் பாத்திரத்துள்

புகுந்து கொண்டன