மண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை

bitter-fruit-the-very-best-of-saadat-hasan-manto-400x400-imad9tgszgavcbjz

முதலில் எனக்கு அறிமுகமானவர் மண்ட்டோ. காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான் மண்ட்டோவின் உலகு எனக்கு அறிமுகமானது. டோபா டெக் சிங் – சிறுகதைதான் நான் படித்த முதல் மண்ட்டோ படைப்பு. அந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன், இந்தி மொழி நாடகமாக டோபா டேக் சிங்-கை காணும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது. மனநல மருத்துவமனையை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் வக்கிரங்களின் படிமமாக மாற்றிய கச்சிதமான சிறுகதை அது. நகைச்சுவை, யதார்த்தம், நகைமுரண், வரலாற்றுச் சோகம் மற்றும் துன்பியல் – மானுட வலியின் பல அடுக்குகளையும் அழகாய்ச் சொன்ன அற்புதச் சிறுகதை. டோபா டேக் சிங் பானையின் ஒரு சோறு. பிரிவினைக்கால வன்முறை நிகழ்வுகளின் அடிப்படையில் மண்ட்டோ எழுதிய “திற”, “சில்லிட்டுப் போன சதைப் பண்டம்” “டிட்வாலின் நாய்” “மோஸல்” முதலான சிறுகதைகள் பெரிதும் பேசப்படுபவை.

ஜி.நாகராஜன் மண்ட்டோவுக்குப் பிறகுதான் எனக்கு அறிமுகமானார். 2012- தில்லி புத்தக விழாவில் ஜி நாகராஜனின் முழு ஆக்கங்கள் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நூலை வாங்கினேன். அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எழுதிய இரண்டு நாவல்களையும் – ”நாளை மற்றுமொரு நாளே” மற்றும் “குறத்தி முடுக்கு” – உடனே வாசித்து முடித்தேன். இக்கால பெரிய எழுத்தாளர்கள் யானைக்கால் சைஸில் எழுதும் நாவல்களின் பக்க எண்ணிக்கையைப் பார்த்தால் நாகராஜன் எழுதியவற்றை குறுநாவல்கள் என்றே குறிப்பிட வேண்டும்

பம்பாய் நகரில் (இன்றைய மும்பை – உயிரோடு இருந்திருந்தால் இப்பெயர் மாற்றத்தை மண்ட்டோ நிச்சயம் எதிர்த்திருப்பார்), பல வருடங்கள் கதை-வசனகர்த்தாவாக “பாலிவுட்டில்” பணியாற்றிய மண்ட்டோ 1948 இல் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். 1948-ல் பாகிஸ்தான் சென்ற பிறகு அவர் எழுதிய பெரும்பாலான கதைகள் பிரிவினை கால வன்முறைகள், இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட இணைக்கவொண்ணா இடைவெளிகள், எது தன் சொந்த நாடு என்ற ஆறாக் குழப்பம் – இவற்றையே பேசின.

ஜலியான்வாலாபாக் படுகொலைகளின் மற்றும் பகத்சிங்கின் உயிர்த்தியாகத்தின் விளைவாக பஞ்சாப் மாகாணமெங்கும் தேசியவாதத் தீ பரவிய காலத்தில் இளைஞனாக இருந்த மண்ட்டோ, அப்போது எழுதத் தொடங்கியபோது லட்சியவாதக் கனவுகளில் தோய்ந்த கதைகள் எழுதினார் (”இது 1919இல் நடந்தது”, “தமாஷா”).

பின்னர் பம்பாய்க்கு வேலை தேடி வந்த நாட்களில் அவர் எழுத்து யதார்த்தத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அவருடைய கதைகள் முப்பதுகளின், நாற்பதுகளின் பம்பாய் நகர வாழ்க்கையைப் பதிவு செய்தன. தெருவோரத்தில் வசிப்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள், குதிரைவண்டி ஓட்டுபவர்கள், காசு வாங்கும் போலீஸ்காரர்கள், பாலியல் தரகர்கள் என்று சமூகத்தின் விளிம்பு நிலை மக்களே அவர் கதைகளில் அதிகம் உலவினர்.

“கருப்பு சல்வார்’ சிறுகதையில் வரும் பாலியல் தொழிலாளி சுல்தானாவின் தொழில் நன்றாகச் செல்வதில்லை. மொகரம் விழாவுக்காக கருப்பு சல்வார் வாங்க முடியுமா என்பது அவள் கவலை. “ஒரு பெண்ணின் வாழ்க்கை” என்ற சிறுகதையில் சௌகந்தி என்ற பாலியல் தொழிலாளியிடமிருந்து அவள் காதலன் பணம் திருடுகிறான். அவளிடம் வரும் ஒரு புது வாடிக்கையாளர் தன் முகம் கூட காட்டாமல் அவளைப் பார்த்து விட்டு திடுதிப்பென நிராகரித்துச் சென்றவுடன் சௌகந்தி மிகவும் கடுப்படைகிறாள். பணம் திருடும் காதலன் அந்த சமயம் பார்த்து வரவும் அவனுக்கு நல்ல “டோஸ்” கிடைக்கிறது. காதலனைத் துரத்தியடிக்கிறாள். பிறகு காவலுக்கிருக்கும் ஆண் நாயின் மேல் கையைப் போட்டுக் கொண்டு தூங்கப் போகிறாள். “சாம்ராஜ்யத்தின் முடிவு” கதையில் வரும் ப்ளாட்ஃபார்மில் தூங்கி வளர்ந்த இளைஞன் மன்மோகன்; “வெளிச்சமான ஓர் அறை” கதையிலும் “சிராஜ்” கதையிலும் வரும் விலைமாது நாயகிகள், என மண்ட்டோவின் கதையுலகம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வனுபவத்தைக் கரிசனத்துடன் உற்று நோக்குகிறது. மேட்டிமையின் சிறு அடையாளம்கூட அவரின் எந்தவோர் கதையிலும் தென்படுவதில்லை.

ஜி நாகராஜன் எழுத்தில் வரும் கதைமாந்தர்களும் மண்ட்டோவின் பம்பாய் காலக் கதை மாந்தரைப் போலவே இருக்கின்றனர்- விலை மாதர்கள், ரௌடிகள், பிச்சைக்காரர்கள் என்று. அவர்கள் வாழ்க்கை சின்னத்தனங்கள் நிரம்பியது; துணிச்சல் நிறைந்தது; நோய்களுக்கு வசமாகக் கூடியது; சமூகத்தின் பார்வையில் அவமானவுணர்வை தோற்றுவிக்கத்தக்கது. எனினும் ஜி நாகராஜன் ”நாளை மற்றுமொரு நாளே” நாவலின் முகப்பில் சொல்வது போல, “அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலரைப் போலவே – நாளை மற்றுமொரு நாளே”

பாத்திரப் படைப்புகளும் கதைச் சூழல்களும் மட்டுமல்லாது இருவரின் எழுத்துகளும் பயபக்தியற்ற, ஒளிவுமறைவிலாத நேர்மையான சமுக நோக்கைக் கொண்டிருந்தன. மண்ட்டோ தனக்கேயுரிய வறண்ட நகைச்சுவையுடன், கடவுள் பிரார்த்தனை என்ற குறிப்பில் இப்படி எழுதுகிறார்.

“அன்புள்ள இறைவனே……………………. சாதத் ஹசன் மண்ட்டோவை உன்னிடம் அழைத்துக் கொள்ளுமாறு மன்றாடி வேண்டிக் கொள்கிறோம். அவனை உன்னோடு அழைத்துக்கொள். நறுமணங்களில் இருந்து விலகி, தூய்மையற்றதைத் தேடி ஓடுகிறான். பிரகாசமான சூரிய ஒளியை வெறுத்து குழப்பமான இருண்ட பாதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். நிர்வாணத்தையும் அவமானமற்ற உணர்வுகளையும் கண்டு பிரமித்துப் போகும் அவன் நாணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து அலட்சியப்படுத்துகிறான். இனிமையானதை வெறுத்து கசப்பான பழத்தை ருசி பார்க்க தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். குடும்பப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத அவன், வேசிகளோடு இருக்கும்போது ஏழாவது சொர்க்கத்தில் இருக்கிறான். தெளிந்த நீரோட்டத்தின் பக்கம் போகாதவன், சகதியில் நடக்க விரும்புகிறான்…… பாவங்களால் கருமையாக்கப்பட்டிருக்கும் முகங்களை அக்கறை கொண்டு கழுவியபின் உண்மையான முகங்களைப் பார்க்க விரும்புகிறான்.”

குறத்தி முடுக்கு நாவலின் ஆரம்பத்தில் ஜி நாகராஜன் என் வருத்தம் என்ற சிறு தலைப்பில் எழுதுவதாவது :

“நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; ”இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?” என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்”

மேற்கண்ட வரிகளில் மண்ட்டோவின் தொனி தென்படுகிறது அல்லவா?

பரத்தையர் பற்றி ஜி நாகராஜன் எழுதிய குறிப்பிலும் சமூகம் கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வைத் தாண்டி அவர்களுள் ஒரு தெய்வீக உணர்வைத் தரிசிக்க முடிகிறது என்று சொல்கிறார்.

“அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ள முடியும்”

தோற்றங்களுக்கு அப்பாற்பட்ட மனித அக்கறையுணர்வு இருவரின் படைப்புகளுக்கும் நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி எனலாம்.

வடிவ சிக்கனத்துடன் சிற்சில பத்திகளில் மண்ட்டோ தீட்டியிருக்கும் சொற்சித்திரங்கள் (sketches) தேசப்பிரிவினை கட்டவிழ்த்து விட்ட சோகம் ததும்பிய பெருங்கொடுமைகளை நம் மனக்கண்ணுள் கொண்டுவருவன. ஆழமான நகைமுரணும் உருக்கமும் மிக்க மண்ட்டோவின் சொற்சித்திரங்களைப் போன்று ஜி நாகராஜனும் நிமிஷக் கதைகள் என்ற வடிவ சோதனை முயற்சி செய்திருக்கிறார். நாகராஜனின் நிமிஷக் கதைகள் மண்ட்டோவின் சொற்சித்திரங்களைப் போல் உருக்கமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மண்ட்டோவின் நகைமுரண் கொஞ்சமும் குறையாமல் ஜி நாகராஜனின் நிமிஷக் கதைகளிலும் இருக்கிறது.

1955 இல் மண்ட்டோ இறந்து போய் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் ஜி நாகராஜன் எழுதத் தொடங்கியிருக்கிறார். மண்ட்டோவின் எழுத்தை அவர் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் படித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. மண்ட்டோவின் படைப்புகள் 1987இல் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக 1981 இலேயே ஜி நாகராஜன் காலமாகிவிட்டார்.

கதாநாயகர்கள் ”பஞ்ச் டயலாக்” சொல்வது போல தன் எழுத்தில் “பொன்மொழிகள்” இல்லை என்று கவலைப்பட்ட நண்பருக்காக பிரத்யேகமாக பகடி கலந்த “பொன்மொழிகள்” என்ற கட்டுரையொன்றை எழுதினார் ஜி நாகராஜன். அவர் எழுதிய பொன்மொழிகளில் ஒன்று – “தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்”. மண்ட்டோ, நாகராஜன் – இருவர் எழுத்தும் தனி மனிதர்களை மதித்த எழுத்து என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

நூல்கள்
(1) Bitter Fruit – The very Best of Saadat Hasan Manto – Edited & Translated by Khalid Hassan – Penguin Books – 2008 Edition

(2) மண்ட்டோ படைப்புகள் – தொகுப்பு & தமிழாக்கம் : ராமாநுஜம் – நிழல் வெளியீடு – பதிப்பு : 2008

(3) ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – தொகுப்பாசிரியர் : ராஜமார்த்தாண்டன் – காலச்சுவடு பதிப்பகம் : 2011

g-nagaraajan-aakkangal-215x315

நன்றி : பதாகை

நசீருத்தின் ஷா-வின் குரலில் “டோபா டேக் சிங்” சிறுகதையை கேட்கலாம்.