சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.
“The Pursuit of Happyness” திரைப்படத்தை நேற்றிரவு வீடியோவில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான படம். தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டு விட்டது. புதிதாக வெளியான திரைப்படமொன்றைக் காண குடும்பத்துடன் சென்றிருந்த போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக காட்சி ரத்தானதும் டிக்கெட் தொகை ரொக்கமாக கையில் கிடைத்தது. வீடு திரும்புவதற்கு முன்னர் பக்கத்தில் இருந்த வீடியோ கடையில் தள்ளுபடி விலையில் கிடைத்தது என்று “The Pursuit of Happyness” திரைப்பட வீடியோவை வாங்கினேன்.
வில் ஸ்மித் தன் நடிப்பால் உச்சத்தை தொட்ட படம் ; க்ரிஸ் கார்ட்னர் என்ற புகழ் பெற்ற பங்குத் தரகரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். வில் ஸ்மித்தின் மகன் மாஸ்டர் ஜேடன் ஸ்மித் (Jaden Smith)-துக்கு முதல் படம். சமீபத்தில் After Earth திரைப்படத்தில் இதே தந்தை – மகன் ஜோடி நடித்திருந்தார்கள். நட்சத்திர தந்தை-தாய்க்கு பிறந்திருக்கும் ஜேடன் வியக்க வைக்கும் திறமை படைத்த நடிகர் மற்றும் ராப் பாடகர். நோபல் பரிசு விழாவொன்றில் ராப்-கச்சேரி செய்திருக்கிறார். மகனின் திறமையை வெளிக்கொண்டு வர வைத்து ஓர் எதிர்கால கதாநாயகனை உருவாக்கும் முயற்சியில் வில் ஸ்மித் ஈடுபட்டிருக்கிறார் என்று முதலில் தோன்றியது. ஆனால் “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்” பார்த்த பிறகு பையனுக்கு அப்பாவின் உதவியே தேவையில்லை ; இரு படங்களிலும் மனதில் பதிகிற மாதிரியான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் ஜேடன் ஓர் இயல்பான கலைஞர் ; அவருடைய வளர்ச்சிக்கு ஒருவரின் உதவியும் தேவைப்படாது என்பது கண்கூடு. “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்”ஸில் நடிக்கும் போது ஜேடனுக்கு எட்டு வயது. இப்போது ஹாலிவுட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் பதின்பருவ நடிகர் அவர்.
அதிகம் படிக்காத, மருத்துவக் கருவிகள் விற்பனையாளராக வேலை பார்க்கும் க்றிஸ் கார்ட்னர் ஃபெர்ராரி காரில் வந்திறங்கும் பங்குத் தரகரொருவரை பார்த்து ஊக்கமுற்று பங்குத் தரகு நிறுவனமொன்றில் ட்ரெய்னியாக சேருகிறார். முதல் ஆறு மாதங்களுக்கு சம்பளம் கிடையாது. ஆறு மாதத்துக்குப் பிறகு வேலை கிடைக்கும் என்ற நிச்சயமும் இல்லை. வருமானமின்மை காரணமாக க்றிஸ்ஸின் காதலி வீட்டை விட்டு சென்று விடுகிறார். ஐந்து வயதுப் பையனும், க்றிஸ்ஸும் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீடின்றி வீதிகளில் வாழ்ந்தனர். சர்ச்சொன்றின் தங்குமிடம் முதல் ரயில் நிலையமொன்றின் கழிப்பிடம் வரை இரவுகளில் தங்கினர். பகலில் மகன் பள்ளிக்கு செல்கையில் க்றிஸ் அலுவலகம் செல்கிறார். அயராத கடும் உழைப்பு. புன்னகை மாறாமல் வாழ்க்கை தரும் கஷ்டங்கள் சகிக்கிறார். வீடின்றி தவிக்கும் அவரின் கஷ்டத்தை அலுவலகத்தில் ஒருவரும் அறியவில்லை. க்றிஸ்ஸுக்கு பங்கு-தரகர் வேலை கிடைக்கிறது. 1987-இல் சொந்த தரகு நிறுவனத்தை சிகாகோவில் துவக்கினார். இன்று க்றிஸ் ஒரு கோடீஸ்வரர் ; ஊக்கமுட்டும் பேச்சாளர் ; கொடையாளர். தென்னாப்பிரிக்காவில் முதலீடு செய்யும் தனியார் பங்கு நிதியம் ஒன்றை க்றிஸ் துவக்கிய போது அந்நிதியத்தின் அமைதிக் கூட்டாளி யார் தெரியுமா? சமீபத்தில் மறைந்த தென்னாப்பிரிக்க முன்னால் அதிபர் – நெல்சன் மாண்டேலா.
“சொந்தமாக பங்கு-தரகு நிறுவனம் துவக்குவதற்கு ஆறு வருடம் முன்னர் ஒரு குழந்தையை முதுகில் சுமந்தவாறே ஒரு சாக்கடையிலிருந்து வெளிவரும் முயற்சியில் ஊர்ந்தும், போராடியும், தத்தளித்துக் கொண்டும் இருந்த ஒருவன் இப்போது வந்தடைந்திருக்கும் இடம் அவ்வளவு மோசமானதில்லைதான்” என்று க்றிஸ் கார்ட்னர் சொல்கிறார்.
வில் ஸ்மித் க்றிஸ் கார்ட்னராக நடித்திருக்கிறார். உந்துதல் மிக்க ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். காதலி வீட்டை விட்டு நீங்கும் இடங்களில் ஏமாற்றவுணர்வை நுட்பமாக வெளிப்படுத்துவதும், நிறுவன அதிபர்கள் அவனை வேலையில் நியமிக்கும் போது பரவச உணர்ச்சியை குளமாகிய கண்களால் கொண்டு வருவதும், சிறையிலிருந்து நேராக நேர்முகத் தேர்வுக்கு சட்டை அணியாமல் செல்கையில் அதற்கான காரணத்தை நகைச்சுவையைப் போர்த்தி சொல்லும் சால்ஜாப்பும், மகனோடு இரவு வீடு திரும்புகையில் தங்கும் அறை பூட்டப்பட்டு சாமான்கள் வெளியே வைக்கப்பட்டிருப்பதை காண்கையில் அடையும் தவிப்பும்….சொல்லிக் கொண்டே போகலாம். வில் ஸ்மித் பிய்த்து உதறியிருக்கிறார். அவர் விற்கும் மருத்துவக் கருவியை திருடிக் கொண்டு போனவரை துரத்தும் இடங்கள், டாக்ஸிக்காரருக்கு செலுத்த பணமில்லாமல் பணம் கொடுக்காமலேயே ஓடி விடுவதும் என்று ஆங்காங்கே தன் ட்ரேட்-மார்க் நகைச்சுவை நடிப்பையும் வில் ஸ்மித் தூவியிருக்கிறார்.
யோக வசிஷ்டம் உரை நூலொன்றை படித்துக் கொண்டிருக்கிறேன். இளவரசன் ராமன் மனக்கலக்கமுற்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சமயத்தில் விஸ்வாமித்திரரின் வேண்டுகோளுக்கிணங்க வசிஷ்டர் சொல்லும் அறிவுரைகளின் தொகுப்பு தான் யோகவசிஷ்டம். நூற்றுக் கணக்கான அழகான சிறுகதைகள் வாயிலாக தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. பல்வேறு சமய தத்துவங்களின் ஒன்றிணைந்த படைப்பாகவும் யோகவசிஷ்டம் கருதப்படுகிறது. வேதாந்த,ஜைன, யோக, சாங்கிய, சைவ சித்தாந்த மற்றும் மகாயான பௌத்த தத்துவங்களின் கூறுபாடுகள் இந்நூலில் அடங்கியிருப்பதாக தத்துவ ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
நூலின் முதல் அங்கத்தில் வசிஷ்டர் ராமருக்கு வழங்கும் முதல் உபதேசத்தை வாசித்தால் நமக்கு சந்தேகம் வந்து விடும் – நாம் படிப்பது ஆன்மீக நூலா? அல்லது சுய-உதவிப்புத்தகமா?
“பிரபஞ்ச வாழ்க்கையிலே நாம் முக்கியமாக அனுசரிக்க வேண்டியது ‘பௌருஷம்’ அல்லது தன் ஆண்மையை அடிப்படையாகக் கொண்ட தீவிர முயற்சி. தகுந்த முயற்சியால் உலகத்தில் அடையமுடியாதது ஒன்றுமே இல்லை. பிரம்ம பதவியுங் கூடத் தீவிரமும் ஒழுக்கமும் சேர்ந்த முயற்சியால் அடையத்தக்கதே.
ஆனால் செய்யும் முயறிசிகளைச் சரியான மார்க்கத்தை அனுசரித்தும் இடைவிடாமலும் செய்துவர வேண்டும், பலன் சித்திக்காவிடின் இதற்குக் காரணம், செய்த முயற்சியின் கோளாறே தவிர வேறு காரணமல்ல. தகுந்தபடி முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் எக்காலத்திலும் மிகவும் சொற்பம். பெரும்பாலும் ஜனங்கள் காரியம் எடுத்த பிறகு, அதில் ஊக்கம் குறைந்து முயற்சியில் தளர்ச்சி அடைவதாலேயே அதில் அபஜெயம் அடைகிறார்கள். சோம்பலே எல்ல ஜனங்களுடைய கஷ்ட-நிஷ்டூரங்களுக்கும் முதல் காரணம்”
“தவிர அநேகர் தங்களுக்கு விளையும் வினைப்பயன்களைப் பூர்வ ஜன்மத்தின் பலனாகக் கருதி சோர்வடைகிறார்கள். இதுவும் அஞ்ஞானமே, பூர்வ ஜென்மத்தில் செய்த பிரயத்தனங்களின் பலன்களை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிப்பது வாஸ்தவமே. ஆனால் இனி நடக்க வேண்டிய யத்தனங்களில் அதன் வேகம் தற்சமயம் செய்யக் கூடிய முயற்சிகளுக்குக் குறைந்ததே. இவ்வித வாசனை வினைப்பயன்களைத் தற்சமயம் செய்யக்கூடிய பிரயத்தங்களால் ஜெயிக்கலாம். இது நம் வசத்தில் இருக்கிறது. இவ்வாறு எண்ணுவதை விட்டு நடப்பதெல்லாம் வினைப்பயன் என்று கருதி வாழ்க்கையில் சோகமடைந்து, செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யாமல் நிற்கும் மானிடர்கள் பரம மூடர்களே”
“நமக்கு வேண்டியவைகளைத் தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமே தவிர வேறொன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்குப் புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்குப் பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அஞ்ஞானம் வேறில்லை”
மலையிலிருந்து கொட்டும் அருவி சமவெளியை அடைந்து ஆறாக ஓடி இரு கரைகளை ஏற்படுத்தி குறுகியும் அகண்டும் ஓடி அணைகளால் தடுக்கப்பட்டாலும் தன் இலக்கை அடைந்து விடுகிறது. கவலை எனும் உணர்வின்றி தன் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடுதல் ஒன்றே அதன் பணி. நம் கடனும் பணி செய்து கிடப்பதே. தெய்வத்தால் ஆகாதென்றாலும் முயற்சியானது நமக்கு கூலியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை, க்றிஸ் கார்ட்னரின் வெற்றியை திரையில் சித்தரித்து, நம்முள் ஏற்படுத்துகிறார் நடிகர் வில் ஸ்மித்.
Source : யோகவாசிஷ்டம் : தமிழாக்கியவர் – எஸ்.கணபதி : அல்லயன்ஸ் கம்பெனி : 1948