சியால்கோட்டுக்கு கனவி்ல் பயணமாதல்

ஒரு நகரத்திற்குப் பயணமானபோது அங்கு பார்த்த ஒரு வீதி பலமுறை என் கனவில் வந்த ஒரு வீதிக் காட்சியைப் போலவே இருந்தது. ஒரு பக்கம்
வரிசையாக வீடுகள். இன்னொரு பக்கம் அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கிடையே ஓடும் சிறு நதி. நகருக்கு நடுவே இருக்கும் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரிக்கு நடுவே அழகான வண்ணவண்ணப் படகு வீடுகள் தெரிந்தன. ஏரியைச் சுற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்று புற நகரை அடைந்த போது நான் பார்த்த தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்து நிலையமும் என் கனவில் ஒரு கட்டில் போட்டு அதில் நான் படுத்திருந்த இடத்தைப் போலவே இருந்தது. கனவில் அந்த இடம் ரொம்ப கூட்டமாய் இருந்தது. நிஜத்தில் அந்த பேருந்து நிலையம் காலியாய் இருந்தது. என் கனவில் வந்தது போன்றே ஷட்டருடனான கடைகள் இருந்தன. ஆனால் மூடியிருந்தன.

கனவில் நான் இருக்கும் இடம் பாகிஸ்தானின் நகரம் ஒன்று என்பதாக நினைத்துக் கொண்டிருப்பேன். சியால் கோட்டாக இருக்கலாம் என்று கனவுக்குள் எண்ணம் ஓடும். நிஜத்தில் பார்த்த நகரத்துக்கும் ஊக நகருக்கும் இடையே உள்ள தொலைவு இருநூறு கிலோமீட்டர் தான். இருநூறு கிலோமீட்டர் என்று சொல்லிக் கொள்வது எத்தனை presumptuous! நடுவே எல்லை இருக்கிறது. எல்லையில் பிரச்னை. எல்லையின் தொலைவு பற்றியச் சிக்கல். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை இருநூறு கிலோமீட்டராக எப்படி சுருக்கிவிட முடியும்? கனவில் நான் எல்லை தாண்டியதாக எண்ணியது பிழை. எல்லைக்குள்ளாகத்தான் இருந்திருக்கிறேன். கனவின் எல்லைக்குள்.

கண்ட கனவில் வந்த மனிதர்களை கவனிக்கவில்லை. அறிவிப்பு பலகைகள், பேருந்து எழுத்துகள் எதுவும் கனவில் தோன்றவில்லை. அவை தந்திருக்கக்கூடிய தகவல் கொண்டு இடத்தை சரியாக அனுமானித்திருக்கலாம். கனவு என்பதே நமக்கு நாம் சொல்லிக் கொள்வதும் உணர்ந்து கொள்வதும் தான். பலகைகளில் பேருந்துகளில் எழுத்துகள் தெரிந்திருந்தாலும் அவை நமக்குத் தெரிந்த மொழியில் எழுதப்படாவிட்டாலும் நாம் நினைத்துக் கொண்ட ஊரின் மொழியாகவே அது நமக்குத் தெரியும். போர்டில் ஃபார்ஸி எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவனுக்கு கனவில் வரும் ஃபார்ஸியை வாசித்துவிட முடியும் பிரக்ஞையில் அவனறிந்த மொழியாகிய தமிழ் கொண்டு. கனவுகளின் மொழி பிரக்ஞையின் மொழி.

நிஜப்பேருந்து நிலையம் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு பல வருடங்களாகிவிட்டனவாம். சியால்கோட்டுக்கு ஐம்பதுகளின் முடிவு வரை பேருந்துகள் சென்று கொண்டிருந்தனவாம்! இந்தத் தகவலின் துணை கொண்டு அடுத்த முறை கனவில் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்தால் சியால்கோட்டுக்கு பேருந்து பிடித்துச் சென்றுவிடலாம். சியால்கோட்டில் அதே வீதிக்காட்சியையும் பார்த்துவிடுவோம். ஏனெனில் வீதிக்காட்சியை பிரக்ஞைக்குள் ஏற்றிக்கொண்டால் கனவில் அதனை இருநூறு கிலோமீட்டர் நகர்த்துவது அத்தனை சிரமமில்லை. ”நிஜமாகவே” சியால்கோட்டிற்குள்ளும் அதே பேருந்து நிலையத்தை வந்தடைந்து விடுவோம்.

சார்பியல் : ஒரு வரைபட கையேடு

(RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்)

இடம் காலம் என்ற

இரட்டை தொடர்ச்சிகள்

பிரக்ஞை என்றொரு

மறைபொருளின்

நூல் பொம்மைகள்

நரைத்த மீசை

இரைந்த முடி கொண்ட

இயற்பியல் மேதை

உணர்ந்து சொன்னான்.

+++++

சுவரில் சாய்ந்து

அமர்ந்த படி உறங்கியபோது

அண்ட வெளியில்

பறந்தேன்.

சட்டைப்பையிலிருந்து

விடுபட்ட

என் எழுதுகோலும்

நிலையான சித்திரம் போல்

என்னுடன் சேர்ந்து பறந்தது.

வெகு நேரமாகியது தரையைத்தொட.

குப்புறவிழுந்த நான்

எழச்சிரமப்பட்டேன்.

அறை உருள ஆரம்பித்தபோது

ஒரு மூலையிலிருந்து

எதிர் மூலையில் போய் விழுந்தேனாம்

சில வினாடிகளில் நடந்தேறியதாம்.

உருண்ட அறையிலிருந்து

என்னை மீட்டவர்கள் சொன்னார்கள்.

வெகு நேரமாக பறந்து கொண்டிருந்தேனே!

சில வினாடிகள் மட்டும் கழிந்தன

என்பது எங்ஙனம் சாத்தியம்?

இடங்களின் தூரமும்

கால அளவைகளும்

வெவ்வேறு யதார்த்த தளங்களில்

வேறுபடும் எனில்

யதார்த்தம் என்பதே பிரக்ஞை தானோ?

+++++

அறை உருளுதல்

எப்படி சாத்தியம் என்று

விழித்தவுடன் வினவப்போகும்

உனக்கு ஒரு சமிக்ஞை !

RELATIVITY : A GRAPHIC GUIDE

கட்டிலுக்கு பக்கத்தில்

தரையில் விழுந்து கிடக்கும்.