ஒரு நாள்
நான் பிறந்துவிட்டேன்
என்று எனக்கு தெரிந்தது
என்னைச் சுற்றி இருந்தவர்களும்
இருந்தவைகளும்
பெயர்கள்
சொற்கள்
ஒலிகள்
நிறங்கள்
பட்சிகள்
எல்லாமும்
என்னுடன் தோன்றின
நிகழ்வுகளை
நினைவுக்குள்
தள்ளி
இறந்த காலத்தை
தோற்றுவித்தேன்
இன்னும் நிகழாதவற்றை
யூகிக்கையில்
எதிர் காலம் தோன்றியது
இட-கால இரட்டையின் சந்தியில்
அமருகையில்
நிகழ் காலத்தை உணர்ந்தேன்
பார்வையை மூடினாலும்
நான் பிறந்திருப்பது எனக்கு மறக்கவில்லை
நினைவுகள்
நகரும் உணர்வுகளாக
சிததிரங்களாக
ஓடியவாறிருந்தன
கண்ணை மூடியிருத்தல்
என்பதைத் தவிர
கனவுக்கும் நினைவுக்கும்
என்ன வித்தியாசம் !
வலியும்
சுகமும் என
உணர்வுகளைப் பகுக்கும்
பொதுவான அலகுகளை
தோற்றங்கள் வாயிலாக
நிர்ணயிக்க முடியவில்லை.
இலக்குகளை அடைதல் வெற்றி.
நொடி நேர மகிழ்ச்சிக்குப் பிறகு
இன்னோர் இலக்கு.
ஓடுதல் நிற்கவில்லை.
இலக்குகள் கானல் நீர்
என்று காணாமல்
ஓடிக்கொண்டிருத்தல்
பழக்கமெனும் சங்கிலியைப் பூட்டிக் கொள்ளுதல்
தவிர வேறென்ன?
அபிப்ராயங்கள்,
கருத்துகள் –
என் சிந்தனை
உருவாக்கிய
எண்ணத் தோற்றங்கள் !
பழக்கங்கள் ஏற்படுத்திய
தாக்கங்கள் !
என்னுடன் தோன்றிய
அழகிய மலரொன்று
என் முதுவயதில்
வாடி, சருகாகி
மண்ணொடு மண்ணான போது.
கண்ணீர் மல்கினேன்.
மலர் மடிந்தது
என்ற அபிப்ராயம்
என் எண்ணத் தோற்றம் எனில்
வருந்துவது எதற்கு?
ஒரு நாள்
நான் பிறந்திருக்கிறேன் என்று
எனக்கு தெரியாமல் போனது.