அல்-கித்ர்

புனித குர்ஆனில் இவர் பெயர் குறிப்பிடப்படுவதில்லை, ஆனால் நீதியும் நன்னெறியுமிக்க மறை-ஞான குருவாகவும் அல்லாஹ்வின் வேலைக்காரனாகவும் குர்ஆனில் வர்ணிக்கப்படுகிறார் அல்-கித்ர். துயரப்படும் மானிடர்க்கு உதவிக்கரம் நீட்டுபவராகவும் கடல்களின், நீர்நிலைகளின் காப்பாளராகவும் இஸ்லாமிய மரபில் போற்றப்படுகிறார் அல்-கித்ர். மூஸா நபியை அவர் சந்தித்ததை குர்ஆன் நமக்கு தெரிவிக்கிறது. 

மூஸா நபி ஒருமுறை பேருரையாற்றிக் கொண்டிருந்தார். உரை முடிந்ததும், கூட்டத்திலிருந்து யாரோ கேட்டார்கள் – “மூஸா நபியே, உம்மை விட அதிக ஞானமிக்கவன் விஷய அறிவுள்ளவன் இப்பூமியில் யாரேனும் இருக்கிறாரா?”அதற்கு, மூஸா “இல்லை” என்று கூறினார். தமக்கு மட்டுமே தோராத்-தின் அறிவை, பல்வேறு அற்புத சக்திகளை இறைவன் வழங்கியுள்ளதாக அவர் நினைத்தார். அறிந்துகொள்ளத்தக்க அனைத்தையும் அறிந்தவர் யாருமிலர்; இறை தூதர்களுமே கூட அனைத்து அறிவையும் பெற்றவர்களாக இருக்க முடியாது எனும் அறிதலை உடனுக்குடன் மூஸா நபிக்கு இறைவன் வழங்கினான். மற்றவர்களுக்குத் தெரியாததை அறிந்த ஒருவர் எப்போதும் இருக்கிறார். யாருக்கு, எவ்வளவு அறிவு என்பதைத் தீர்மானிப்பது அல்லாஹ் ஒருவனே. “மேலும், எம்மீது பக்திமிக்க ஊழியக்காரனும் உன்னை விட அதிக அறிவாளியுமான ஒரு நீதிமான் இருக்கிறான்.”

“அல்லாஹ்வே, இவரை நான் எங்கே காணலாம்? நான் அவரைச் சந்தித்து அவரிடமிருந்து ஞானம் பெற விரும்புகிறேன். இந்த நபரின் அடையாளத்தை அறியத்தாருங்கள்” என்று இறைவனிடம் மூஸா கேட்டார்.

அப்போது அல்லாஹ் மூஸாவிடம் நீர் நிறைந்த பாத்திரத்தில் உயிருள்ள மீனை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி, அந்த மீன் மறைந்து போகும் இடத்தில் தேடிச் செல்லும் மனிதன் இருப்பான் என்ற அடையாளத்தைச் சொன்னார். இறைவன் சொன்ன மாதிரி ஒரு பாத்திரத்தில் மீனை எடுத்தும் கொண்டு ஒரு வேலைக்காரனைத் துணைக்கழைத்துக் கொண்டு மூஸா இறைவன் சொன்ன நபரைத் தேடிக்கிளம்பினார். சில நாட்கள் பயணம் செய்த பின்னர் ஓரிடத்தில் தங்கி அங்கே ஓய்வெடுக்க முடிவு செய்தார். பயணக் களைப்பில் மூஸா ஆழ்ந்து தூங்கிவிட்டார். நெடுநேரத் தூக்கத்திலிருந்து விழித்த போது பாத்திரத்தில் இருந்த மீன் கடலில் விழுந்து மறைந்தொளிந்துவிட்டதாக வேலைக்காரன் மூஸாவிடம் தெரிவித்தான். 

பதினேழாம் நூற்றாண்டு முகலாயர் ஓவியம் – அல் கித்ர்

இனி நடந்ததை குர்ஆன் விவரிக்கிறது.

“இன்னும் மூஸா தன் பணியாளிடம், “ இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக்கணக்கில் நடந்து கொண்டே இருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக. அவர்கள் இருவரும் அவ்விரண்டு கடல்களுக்கும் இடையே, ஒன்று சேரும் இடத்தை அடைந்தபோது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்துவிட்டனர். அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக் கொண்டு (நீந்திப் போய்) விட்டது. அவ்விருவரும் அப்புறம் அந்த இடத்தைக் கடந்தபோது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நாம் களைப்பைச் சந்திக்கிறோம் என்று (மூஸா) கூறினார். அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும் அதை (உங்களிடம்) சொல்வதை சைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை. மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினான். (அப்போது) மூஸா, “நாம் தேடி வந்த (இடம்) அதுதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள். (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து ஞானத்தையும் கற்றுத் தந்திருந்தோம்” (18-60,61,62,63,64,65)

“உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்கு கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின்தொடரட்டுமா” என்று அவரிடம் மூஸா கேட்டார். 

(அதற்கவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாமாட்டீர்” என்று கூறினார். “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்?” (என்று கேட்டார்.) 

(அதற்கு) மூஸா,”இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று சொன்னார். 

(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் – நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும்வரை – நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.

பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர். (மரக்கலம் கடலில் செல்லலானதும்) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஒட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) காரியத்தை செய்துவிட்டீர்கள்” என்று மூஸா கூறினார்.

(அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைபிடிக்க முடியாது என்று நான் உமக்கு சொல்லவில்லையா?” என்றார்.

“நான் மறந்துவிட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) சொல்ல வேண்டாம்; இன்னும் என் காரியத்தை சிரமமுள்ளதாக ஆக்கிவிடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.

பின்னர் இருவரும் (மரக்கலத்திலிருந்து இறங்கி) வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்தபோது, அவர் அவனைக் கொன்றுவிடுகிறார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக ஒரு பெருங்கேடான காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்.

(அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.

“இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் என்னை உங்களருகில் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று மூஸா கூறினார்.

பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் உணவளிக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; அதை அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.

“இதுதான் எனக்கும் உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்கு அறிவித்துவிடுகிறேன்” என்று அவர் கூறினார்.

“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டுப்) பழுதாக்க  விரும்பினேன்; (ஏனெனில்) (கொடுங்கோலனான) அரசன் ஒருவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்”

“(அடுத்து) அந்தச் சிறுவனுடைய தாய், தந்தையர்கள் உண்மையான விசுவாசிகள்; அந்தச் சிறுவன் பெரியவனாகி அவ்விருவரையும் வழிமாறச் செய்து குபிரிலும் சேர்த்துவிடுவான் என்று நாம் பயந்தோம்.

“மேலும் அவ்விருவருக்கும் பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்து இருக்கக்கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்

“இனி, (நான் நிமிர்த்தி வைத்த) அந்தச் சுவர் அந்த ஊரிலுள்ள அனாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது. அவ்விருவருடைய தந்தை நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த பின் புதையலை வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நிற்பவை; என் விருப்பு. வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அவற்றின் விளக்கம் இதுதான்” என்று கூறினார். 

(18:66-80)

எண்ணற்ற ஆன்மீக செய்திகளைக் கொண்டுள்ள இவ்வற்புதக் கதை அல்லாஹ் தம் சேவகர்களுக்குத் தரும் ஞானம் இருவகையானது என்கிறது. மனித முயற்சியின் காரணமாக பெறப்படுவது ஒரு வகை. அல்லாஹ்வே நேரடியாக கற்றுத் தரும் ஞானம் இன்னொரு வகை. வாழ்வின் முரண்படும் தன்மையையும் இக்கதை நிகழ்த்திக் காட்டுகிறது. வெளிப்படையான இழப்பு உண்மையில் ஆதாயமாக இருக்கக்கூடும். கொடுஞ்செயலாக நோக்கப்படுவது கருணையின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். தீமைக்கு நன்மை செய்தல் உண்மையில் நீதியேயன்றி பெருந்தன்மையல்ல.

அல்-கித்ர்-ரும் மூஸாவும் சந்தித்துக் கொண்ட இடம் என நம்பப்படும் ஜிப்ரால்டர் ஜலசந்திக்கருகே கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல்.