ருபைய்யத்துக்கு இன்னொரு தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் ?

ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில்  இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான வகையில் பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வாயிலாகவாவது நம்மால் வாசிக்க முடிகிறதேயென்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

Rumi & Hafez

ஹஃபிஸ் கிட்டத்தட்ட ரூமி போலத்தான். படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த சுஃபி இலக்கியத்தின் பிதாமகர்கள் இவ்விருவரும். செபெஹ்ரி ஒரு நவீன கவி. ஓவியக் கலையிலும் தேர்ந்தவர் என்பதால் அவருடைய சொற்களுக்கு வர்ண தூரிகையின் குணம் உண்டு. இருப்பினும் ரூமி, ஹபீஸ் போன்றோரின் படைப்புகளைப் போன்று செபெஹ்ரியின் அனைத்து கவிதைகளையும் எளிதாக உளவாங்கிக் கொள்ள முடிவதில்லை. வாசகரின் உழைப்பை அதிகம் கோருபவையாக உள்ளன செபெஹ்ரியின் கவிதைகள். 

Sohrab Sepehri

ரூமிக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஓமர் கய்யாம் வேறு ரகம். கணிதவியல், வானவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த கய்யாம் வாசகர்களை நன்கு ‘நக்கலடிக்கிறார்’. “எதைப் பற்றி எழுதியிருக்கிறேன் கண்டு பிடியுங்கள்” என்றுசவால் விடுகிறார். மது, போதை, என கிடடத்தட்ட அனைத்து “ருபைய்யத்”களிலும்  வருவதைப் பார்த்து “இது நம்ம ஆளு” என்று “குடிமக்கள்” அவரை கொண்டாடுவதை பார்த்தால் தன் கல்லறையிலிருந்து ஓமர் கய்யாம் வயிறு குலுங்க சிரிக்கக்கூடும். 

எட்வர்ட் பிட்ஸ்ஜரால்ட்-டின் உலக புகழ் பெற்ற மொழியாக்கம் ஓமர் கய்யாமின் மீது உலக அரங்கில்  வெளிச்சம் பாய்ச்சியது. ஈரடிகள் எனப்படும் ருபைய்யத்களை வெறித்தனமாக தன் வாழ்நாள் முழுதும் திரும்பத்திரும்ப மொழிபெயர்த்து வந்தார் எட்வர்ட். முதல்பதிப்புக்கு பிறகு தன் மொழிபெயர்ப்பில் பல திருத்தங்களை அவர் செய்தாலும் அவருடைய முதல் பதிப்பு கிட்டத்தட்ட ஒரு மறு-ஆக்கம் என்று பல பர்ஸிய மொழி வல்லுனர்களால் கருதப்படுகிறது. 

கவிமணியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஒன்று ருபைய்யத்துக்கு உண்டு. அதிலிருந்து கீழ்வரும் வரிகள் மிகப்பிரபலம் :-

வெய்யிற்கேற்ற நிழலுண்டு  வீசும் தென்றல் காற்றுண்டு 
கையில் கம்பன் கவியுண்டு  கலசம் நிறைய மதுவுண்டு 
தெய்வகீதம் பலவுண்டு  தெரிந்து பாட நீயுண்டு
 வையந் தருமிவ் வனமன்றி  வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

கவிமணியின் மொழிபெயர்ப்பு இனிமையானது. மரபுக்கவிதை வடிவத்தில்  அவர் மறு ஆக்கமாக அதை மொழிபெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பில் வரும் “கம்பன் கவி” என்னும் motif ஓமர் கய்யாமின் உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல நம் மரபின் motif-களை பல இடங்களில் கவிமணி பயன்படுத்தியிருப்பார். மறு ஆக்கம் என்பதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எனினும், குறியீடுகளை, படிமங்களை திரும்ப திரும்ப சொல்லும் சுஃபி இலக்கியத்தின் ஒரு தன்மை கவிமணியின் மறு – ஆக்கத்தில் இல்லாமல் போய்விட்டதோ எனும் சம்சயம் எனக்குண்டு.

ஊழ் வலிமை, தர்க்கங்களின் பயனற்ற தன்மை, கடவுட்தன்மையின் துளி உலக விஷயங்களில் இருத்தல், கடந்த கால சோகங்கள் மற்றும் எதிர்கால கவலைகள் – இவற்றை ஒதுக்கி இன்றைய பொழுதில் மட்டும் கவனம்செலுத்துதல் – ஆகிய தரிசனங்களை வழங்கும் motif-கள் இந்தியமரபிலும் உண்டு. கவிமணியின் மொழிபெயர்ப்பில் அவை உரிமையுடன் பயன்படுத்தப்பட்டிருப்பது ருபைய்யத்தின் சுஃபி தன்மையை நீர்க்கச் செய்கிறதோ என்று நான் நினைக்கிறேன்.

ருபைய்யத்துக்கு ஒரு நவீன தமிழிலான மொழிபெயர்ப்புக்கு இடமிருக்கிறது. மரபு வடிவத்தின் வரம்புகளின்றி வசனநடையிலான மொழிபெயர்ப்பு சுஃபி தரிசனங்களை உள்ளவாறே தமிழில் நிகழ்த்திக்காட்ட உதவும். ஒரே irony – மொழிபெயர்க்க இன்னொரு மொழிபெயர்ப்பையே – எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்டையே நம்பவேண்டியிருக்கிறது! சுமார் ஏழெட்டு ருபைய்யத்களை சாம்பிளுக்காக மொழிபெயர்த்தேன்.  அனைத்து ருபைய்யத்துக்களையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டு.

—–

ஜாம்ஷிட் மன்னன்
குடித்து கும்மாளமிட்ட
சபைகளில்
சிங்கமும் பல்லிகளும்
குதித்து விளையாடுகின்றன
கிறித்துவர்களை
வேட்டையாடிய பஹ்ராம்
மீளாத் துயிலில் கிடக்க 
அவன் தலையை காலால் 
உருட்டியது ஒரு வனக்கழுதை

__

வாதம், முயற்சி
என முடிவிலி தேடலில்
எத்தனை காலம்?
பழமற்றோ
கசந்த பழத்துடனோ
கவலையில் மூழ்குவதை விட
கனிந்த திராட்சையுடன்
 சந்தோஷத்தில் திளைப்பது சிறந்தது.

__

தோழர்களே
வெகுகாலம் கழித்து
வீட்டில் 
என் புது திருமணத்திற்கான
கொண்டாட்டம்
என் படுக்கையிலிருந்து
மலட்டு தர்க்கத்தை துரத்தி 
விவாகரத்து செய்துவிட்டு
திராட்சைக் கொடிமகளை 
மனைவியாய்க் கொண்டேன்

— 

கோப்பையை நிரப்பு ;
நம் காலுக்கு கீழ்
காலம் நழுவிச் செல்லுதல் பற்றி 
பேசிப் பயன் என்ன?
பிறக்காத நாளையும்
இறந்த நேற்றும் –
இவற்றுக்காக கவலைப்படுதல் வியர்த்தம்,
இன்று இனிதாயுள்ளபோது!
(XXXVII)

__

 சுழலும் சொர்க்கத்திடமே
 நான் கேட்டேன்-
“இருட்டில் தடுமாறும்
சிறு குழந்தைகளை வழிநடத்த
என்ன விளக்கை வைத்துள்ளது ஊழ்?”
சொர்க்கம் சொன்னது : “கண்மூடித்தனமான புரிதல்”

__

உள்ளே வெளியே
மேலே, சுற்றியெங்கும், கீழே –
வேறொன்றுமில்லை
சின்ன பெட்டிக்குள் நடக்கும் 
மந்திர நிழல்கூத்து 
மெழுகுவர்த்தியே சூரியன் 
அதைச் சுற்றி
வேதாள உருவங்கள்
வருவதும் போவதுமாய்

 __ 

ஆற்று விளிம்பில்
ரோஜாக்களின் வீச்சு
மூத்த கய்யாமிடம் 
செந்நிற, பழம்பானம்
இருண்ட கோப்பையுடன்
தேவன் உன்னை அணுகுகையில் 
அதை எடுத்துக்கொள் 
தயங்காதே
        (XLVIII)

__

யாரும் இதற்கு பதிலளித்ததில்லை ;
துரதிர்ஷ்டகரமாக பண்ணப்பட்ட
கிண்ணமொன்று மௌனம் காத்து
பின்னர் பேசியது:
“மோசமான அனைத்துடனும் 
சாய்வு கொண்டிருத்தலால்
அவர்கள் என்னை நிந்திக்கிறார்கள்;
குயவனின் கை அதிர்ந்ததா என்ன?” 
       ( LXIII)

__ 

Omar Khayyam

மண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை

bitter-fruit-the-very-best-of-saadat-hasan-manto-400x400-imad9tgszgavcbjz

முதலில் எனக்கு அறிமுகமானவர் மண்ட்டோ. காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான் மண்ட்டோவின் உலகு எனக்கு அறிமுகமானது. டோபா டெக் சிங் – சிறுகதைதான் நான் படித்த முதல் மண்ட்டோ படைப்பு. அந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன், இந்தி மொழி நாடகமாக டோபா டேக் சிங்-கை காணும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது. மனநல மருத்துவமனையை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் வக்கிரங்களின் படிமமாக மாற்றிய கச்சிதமான சிறுகதை அது. நகைச்சுவை, யதார்த்தம், நகைமுரண், வரலாற்றுச் சோகம் மற்றும் துன்பியல் – மானுட வலியின் பல அடுக்குகளையும் அழகாய்ச் சொன்ன அற்புதச் சிறுகதை. டோபா டேக் சிங் பானையின் ஒரு சோறு. பிரிவினைக்கால வன்முறை நிகழ்வுகளின் அடிப்படையில் மண்ட்டோ எழுதிய “திற”, “சில்லிட்டுப் போன சதைப் பண்டம்” “டிட்வாலின் நாய்” “மோஸல்” முதலான சிறுகதைகள் பெரிதும் பேசப்படுபவை.

ஜி.நாகராஜன் மண்ட்டோவுக்குப் பிறகுதான் எனக்கு அறிமுகமானார். 2012- தில்லி புத்தக விழாவில் ஜி நாகராஜனின் முழு ஆக்கங்கள் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நூலை வாங்கினேன். அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எழுதிய இரண்டு நாவல்களையும் – ”நாளை மற்றுமொரு நாளே” மற்றும் “குறத்தி முடுக்கு” – உடனே வாசித்து முடித்தேன். இக்கால பெரிய எழுத்தாளர்கள் யானைக்கால் சைஸில் எழுதும் நாவல்களின் பக்க எண்ணிக்கையைப் பார்த்தால் நாகராஜன் எழுதியவற்றை குறுநாவல்கள் என்றே குறிப்பிட வேண்டும்

பம்பாய் நகரில் (இன்றைய மும்பை – உயிரோடு இருந்திருந்தால் இப்பெயர் மாற்றத்தை மண்ட்டோ நிச்சயம் எதிர்த்திருப்பார்), பல வருடங்கள் கதை-வசனகர்த்தாவாக “பாலிவுட்டில்” பணியாற்றிய மண்ட்டோ 1948 இல் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். 1948-ல் பாகிஸ்தான் சென்ற பிறகு அவர் எழுதிய பெரும்பாலான கதைகள் பிரிவினை கால வன்முறைகள், இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட இணைக்கவொண்ணா இடைவெளிகள், எது தன் சொந்த நாடு என்ற ஆறாக் குழப்பம் – இவற்றையே பேசின.

ஜலியான்வாலாபாக் படுகொலைகளின் மற்றும் பகத்சிங்கின் உயிர்த்தியாகத்தின் விளைவாக பஞ்சாப் மாகாணமெங்கும் தேசியவாதத் தீ பரவிய காலத்தில் இளைஞனாக இருந்த மண்ட்டோ, அப்போது எழுதத் தொடங்கியபோது லட்சியவாதக் கனவுகளில் தோய்ந்த கதைகள் எழுதினார் (”இது 1919இல் நடந்தது”, “தமாஷா”).

பின்னர் பம்பாய்க்கு வேலை தேடி வந்த நாட்களில் அவர் எழுத்து யதார்த்தத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அவருடைய கதைகள் முப்பதுகளின், நாற்பதுகளின் பம்பாய் நகர வாழ்க்கையைப் பதிவு செய்தன. தெருவோரத்தில் வசிப்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள், குதிரைவண்டி ஓட்டுபவர்கள், காசு வாங்கும் போலீஸ்காரர்கள், பாலியல் தரகர்கள் என்று சமூகத்தின் விளிம்பு நிலை மக்களே அவர் கதைகளில் அதிகம் உலவினர்.

“கருப்பு சல்வார்’ சிறுகதையில் வரும் பாலியல் தொழிலாளி சுல்தானாவின் தொழில் நன்றாகச் செல்வதில்லை. மொகரம் விழாவுக்காக கருப்பு சல்வார் வாங்க முடியுமா என்பது அவள் கவலை. “ஒரு பெண்ணின் வாழ்க்கை” என்ற சிறுகதையில் சௌகந்தி என்ற பாலியல் தொழிலாளியிடமிருந்து அவள் காதலன் பணம் திருடுகிறான். அவளிடம் வரும் ஒரு புது வாடிக்கையாளர் தன் முகம் கூட காட்டாமல் அவளைப் பார்த்து விட்டு திடுதிப்பென நிராகரித்துச் சென்றவுடன் சௌகந்தி மிகவும் கடுப்படைகிறாள். பணம் திருடும் காதலன் அந்த சமயம் பார்த்து வரவும் அவனுக்கு நல்ல “டோஸ்” கிடைக்கிறது. காதலனைத் துரத்தியடிக்கிறாள். பிறகு காவலுக்கிருக்கும் ஆண் நாயின் மேல் கையைப் போட்டுக் கொண்டு தூங்கப் போகிறாள். “சாம்ராஜ்யத்தின் முடிவு” கதையில் வரும் ப்ளாட்ஃபார்மில் தூங்கி வளர்ந்த இளைஞன் மன்மோகன்; “வெளிச்சமான ஓர் அறை” கதையிலும் “சிராஜ்” கதையிலும் வரும் விலைமாது நாயகிகள், என மண்ட்டோவின் கதையுலகம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வனுபவத்தைக் கரிசனத்துடன் உற்று நோக்குகிறது. மேட்டிமையின் சிறு அடையாளம்கூட அவரின் எந்தவோர் கதையிலும் தென்படுவதில்லை.

ஜி நாகராஜன் எழுத்தில் வரும் கதைமாந்தர்களும் மண்ட்டோவின் பம்பாய் காலக் கதை மாந்தரைப் போலவே இருக்கின்றனர்- விலை மாதர்கள், ரௌடிகள், பிச்சைக்காரர்கள் என்று. அவர்கள் வாழ்க்கை சின்னத்தனங்கள் நிரம்பியது; துணிச்சல் நிறைந்தது; நோய்களுக்கு வசமாகக் கூடியது; சமூகத்தின் பார்வையில் அவமானவுணர்வை தோற்றுவிக்கத்தக்கது. எனினும் ஜி நாகராஜன் ”நாளை மற்றுமொரு நாளே” நாவலின் முகப்பில் சொல்வது போல, “அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலரைப் போலவே – நாளை மற்றுமொரு நாளே”

பாத்திரப் படைப்புகளும் கதைச் சூழல்களும் மட்டுமல்லாது இருவரின் எழுத்துகளும் பயபக்தியற்ற, ஒளிவுமறைவிலாத நேர்மையான சமுக நோக்கைக் கொண்டிருந்தன. மண்ட்டோ தனக்கேயுரிய வறண்ட நகைச்சுவையுடன், கடவுள் பிரார்த்தனை என்ற குறிப்பில் இப்படி எழுதுகிறார்.

“அன்புள்ள இறைவனே……………………. சாதத் ஹசன் மண்ட்டோவை உன்னிடம் அழைத்துக் கொள்ளுமாறு மன்றாடி வேண்டிக் கொள்கிறோம். அவனை உன்னோடு அழைத்துக்கொள். நறுமணங்களில் இருந்து விலகி, தூய்மையற்றதைத் தேடி ஓடுகிறான். பிரகாசமான சூரிய ஒளியை வெறுத்து குழப்பமான இருண்ட பாதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். நிர்வாணத்தையும் அவமானமற்ற உணர்வுகளையும் கண்டு பிரமித்துப் போகும் அவன் நாணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து அலட்சியப்படுத்துகிறான். இனிமையானதை வெறுத்து கசப்பான பழத்தை ருசி பார்க்க தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். குடும்பப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத அவன், வேசிகளோடு இருக்கும்போது ஏழாவது சொர்க்கத்தில் இருக்கிறான். தெளிந்த நீரோட்டத்தின் பக்கம் போகாதவன், சகதியில் நடக்க விரும்புகிறான்…… பாவங்களால் கருமையாக்கப்பட்டிருக்கும் முகங்களை அக்கறை கொண்டு கழுவியபின் உண்மையான முகங்களைப் பார்க்க விரும்புகிறான்.”

குறத்தி முடுக்கு நாவலின் ஆரம்பத்தில் ஜி நாகராஜன் என் வருத்தம் என்ற சிறு தலைப்பில் எழுதுவதாவது :

“நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; ”இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?” என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்”

மேற்கண்ட வரிகளில் மண்ட்டோவின் தொனி தென்படுகிறது அல்லவா?

பரத்தையர் பற்றி ஜி நாகராஜன் எழுதிய குறிப்பிலும் சமூகம் கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வைத் தாண்டி அவர்களுள் ஒரு தெய்வீக உணர்வைத் தரிசிக்க முடிகிறது என்று சொல்கிறார்.

“அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ள முடியும்”

தோற்றங்களுக்கு அப்பாற்பட்ட மனித அக்கறையுணர்வு இருவரின் படைப்புகளுக்கும் நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி எனலாம்.

வடிவ சிக்கனத்துடன் சிற்சில பத்திகளில் மண்ட்டோ தீட்டியிருக்கும் சொற்சித்திரங்கள் (sketches) தேசப்பிரிவினை கட்டவிழ்த்து விட்ட சோகம் ததும்பிய பெருங்கொடுமைகளை நம் மனக்கண்ணுள் கொண்டுவருவன. ஆழமான நகைமுரணும் உருக்கமும் மிக்க மண்ட்டோவின் சொற்சித்திரங்களைப் போன்று ஜி நாகராஜனும் நிமிஷக் கதைகள் என்ற வடிவ சோதனை முயற்சி செய்திருக்கிறார். நாகராஜனின் நிமிஷக் கதைகள் மண்ட்டோவின் சொற்சித்திரங்களைப் போல் உருக்கமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மண்ட்டோவின் நகைமுரண் கொஞ்சமும் குறையாமல் ஜி நாகராஜனின் நிமிஷக் கதைகளிலும் இருக்கிறது.

1955 இல் மண்ட்டோ இறந்து போய் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் ஜி நாகராஜன் எழுதத் தொடங்கியிருக்கிறார். மண்ட்டோவின் எழுத்தை அவர் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் படித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. மண்ட்டோவின் படைப்புகள் 1987இல் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக 1981 இலேயே ஜி நாகராஜன் காலமாகிவிட்டார்.

கதாநாயகர்கள் ”பஞ்ச் டயலாக்” சொல்வது போல தன் எழுத்தில் “பொன்மொழிகள்” இல்லை என்று கவலைப்பட்ட நண்பருக்காக பிரத்யேகமாக பகடி கலந்த “பொன்மொழிகள்” என்ற கட்டுரையொன்றை எழுதினார் ஜி நாகராஜன். அவர் எழுதிய பொன்மொழிகளில் ஒன்று – “தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்”. மண்ட்டோ, நாகராஜன் – இருவர் எழுத்தும் தனி மனிதர்களை மதித்த எழுத்து என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

நூல்கள்
(1) Bitter Fruit – The very Best of Saadat Hasan Manto – Edited & Translated by Khalid Hassan – Penguin Books – 2008 Edition

(2) மண்ட்டோ படைப்புகள் – தொகுப்பு & தமிழாக்கம் : ராமாநுஜம் – நிழல் வெளியீடு – பதிப்பு : 2008

(3) ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – தொகுப்பாசிரியர் : ராஜமார்த்தாண்டன் – காலச்சுவடு பதிப்பகம் : 2011

g-nagaraajan-aakkangal-215x315

நன்றி : பதாகை

நசீருத்தின் ஷா-வின் குரலில் “டோபா டேக் சிங்” சிறுகதையை கேட்கலாம்.

நம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி

தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது.

இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து மலேசியாவிலோ அமெரிக்காவிலோ செட்டில் ஆகிவிடுவார்; குடும்பத்தின் வறுமையை வெளிநாட்டு பணம் அனுப்பி போக்குவார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிப்பார். அவருக்கு அங்கு விவாகரத்து நிகழும் அல்லது அவள் காதலித்த வெள்ளைக்காரப் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் ஏற்காமல் போவார்கள். அயல்நாட்டில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் கதைகளில் ஒரு பலமான இந்திய இணைப்பு இருக்கும்.

அறுபதுகளில் எழுதப்பட்ட “புயலில் ஒரு தோணி”யை நான் சமீபத்தில்தான் வாசித்தேன் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

அயல்நாட்டுப் பின்புலத்தில் முழுக்க முழுக்க அயல் நாட்டுப் பாத்திரங்கள் ஏன் தமிழ்க்கதைகளில் உலவக் கூடாது?

amuttulingam_newa

இனப்பிரச்னையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அத்தகைய கதைகள் தொண்ணூறுகளில் எழுதப்பட காரணமாயினர். அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.
அ.முத்துலிங்கத்தின் – மகாராஜாவின் ரயில் வண்டி– அருமையான சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட அழகு கொண்டவை.. சில முக்கியமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மகாராஜாவின் ரயில் வண்டி, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, கடன், பூர்வீகம், ஐந்தாவது கதிரை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இத்தொகுதியில் உள்ள “நாளை” என்ற சிறுகதை பெயர் சொல்லப்படாத தேசமொன்றில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் பற்றிய சிறுகதை. பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படவில்லை.
பெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகைகளிலும் யுத்தங்கள் சிறுவர்களையும் பாதிக்கின்றன என்றாலும் சிறுவர்கள் வேறுபட்ட வழிகளில் யுத்தங்களினால் அவதியுறுகின்றனர். பராமரிப்பு, புரிதல் மற்றும் அன்பு இவைகளுக்காக சிறுவர்கள் பெரியவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். பெற்றோரின் மரணம் காரணமாகவோ, குடும்பத்தின் ஜீவனத் தேடுதலில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் காரணமாகவோ, மன அழுத்தத்துக்காளான பெற்றோரின் உணர்வு ரீதியான கவனமிழப்பின் காரணமாகவோ பெற்றோர்-சிறுவர்களுக்கிடையான இணைப்பு போர்க்காலங்களில் அறுபடுகிறது.

பெற்றோரைத் தொலைத்த சிறுவர்கள் தெரிந்த ஒருவரின் அரவணைப்பில் இருக்கலாம் ; அல்லது உறவினர் யாருடனோ இருக்கலாம் ; அல்லது அனாதை விடுதிகளில் இருக்கலாம். குறிப்பிடத்தக்க விகிதத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் பாதுகாப்பை இழந்துவிடுகின்றனர். புகலிடச் சூழலில் இவர்கள் “துணையற்ற குழந்தைகள்” (unaccompanied children) என்று அழைக்கப்படுகின்றனர்.

பெரியவனும் சின்னவனும் துணையற்ற குழந்தைகள். ஆனால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்கவில்லை. இம்முகாம்களிலிருந்து பல மைல்கள் தாண்டி ஒரு கராஜில் வசிக்கின்றனர். பெரியவனுக்கு பதினோரு வயது ; சின்னவனுக்கு ஆறு வயது. தினமும் பல மைல்கள் நடந்து வேறு வேறு முகாம்களுக்கு சென்று உணவு சேகரிக்கிறார்கள்.

ஒரு முகாமில் உணவு வண்டியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். சனங்கள் ஒழுங்கின்றி நின்று வரிசையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரியவனின் தலையில் சின்னவனின் பொறுப்பு. ஒழுங்கற்ற வரிசையில் சின்னவனை நிற்க விடவில்லை. சின்னவன் எங்கே தொலைந்து போய் விடுவானோ என்ற பயம் பெரியவனுக்கு.

“அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்”

உணவு சேகரிப்பதற்காக ஒழுங்கற்று திரண்டு நின்றிருந்த சனத்திரளை அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகத்துடன் தடித்த உருவங்கொண்ட பெல்ட், தொப்பி, ஓவர்கோட் அணிந்த ஒரு மனிதன் தன் குரலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சிறிது நேரம்தான். திரும்பவும் சனவெள்ளம் பெரியவனைத் தள்ள, சின்னவனின் கைப்பிடி தளர, அவன் தள்ளிக் கொண்டு போகப்படுகிறான். சின்னவனை ஓர் அதிகாரி அழைத்து ஒரு கூடாரம் முன்னர் நிறுத்தி வைக்கிறார். அரை மணி நேரம் சின்னவன் அங்கு காத்திருக்கிறான். அந்த அதிகாரி அண்ணனை தம்பியிடம் சேர்த்து வைக்கிறார்.

இதற்குள் பல புது வரிசைகள் தோன்றியிருக்கின்றன. எல்லோரும் பெரியவர்களாக நின்றிருக்கிறார்கள். சின்னவனை வரிசையில் நிறுத்தாமல் வேலி ஓரத்தில் நிற்க வைத்து. பெரியவன் தன் பார்வையால் சின்னவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பெரியவனின் கையில் ஒரு நெளிந்த டின் மட்டுமே. அவனிடம் பாத்திரங்கள் இருந்திருந்தால் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக சூப் கிடைத்திருக்கும். ஒரு மீசைக்காரன் பெரியவன் கையில் இருந்த அடையாள அட்டையைப் பரிசோதித்து, “இது இங்கே செல்லாதே!” என்று சொல்கிறான்.“இனிமேல் வராதே” என்று அறிவுறுத்தப்படுகிறான். இருந்தாலும் அவனுக்கு ரொட்டியும் சூப்பும் வழங்கப்படுகின்றன.

சூப் ஊற்றுபவரிடம் “ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று” என்று கேட்டுக் கொள்கிறான். சின்னவனுக்கு இன்று சூப்பில் இறைச்சித் துண்டு கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தான் பெரியவன். ரொட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது; ஒரு பங்கை பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். மீதி இரு பகுதிகளை இருவரும் உண்கிறார்கள். சூப்பில் அன்றும் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லை.
முகாமில் இருந்து திரும்புகையில் நெடுஞ்சாலையெங்கும் ராணுவ வீரர்கள் காணப்படுகிறார்கள். சிகரெட் புகைத்தபடி நின்றிருந்த ஒரு வீரனை பெரியவன் அணுகுகிறான். ராணுவ வீரன் ஒரு சிகரெட்டை எடுத்து வீசுகிறான். பெரியவன் சிகரெட்டை பற்ற வைத்து புகைக்கிறான். சின்னவனுக்கும் புகைக்க ஆசை. பதினோரு வயதுப் பெரியவன் “நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்” என்று அறிவுரை சொல்லுமிடம் நம் மனதை இலேசாக்குகிறது. சிறு புன்னகையை நம்முள் தோற்றுவிக்கிறது.
அவர்கள் கராஜை எட்டும்போது ஒரு நாய் வந்து அவர்கள் அருகில் நிற்கிறது. அக்காட்சி போர், பசி, துயர், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு நடுவே மனித கருணையின் சாத்தியப்பாட்டின் படிமமாக விரிகிறது.
”சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது.

‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா?” என்றான் சின்னவன்.‘வேண்டாம், பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியை தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது’
கராஜ் பாதுகாப்பாக இருக்கிறது. உள்ளே வாடையும் இருட்டுமாக இருக்கிறது. பழைய கம்பளிகளை விரித்து படுத்துக் கொள்கிறார்கள். காலையில் சின்னவன் அழும்போது அவனுக்குக் கொடுப்பதற்காக, மீதமான ரொட்டியைப் பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். சின்னவன் தூங்கி விட்டானென பெரியவன் எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென ஊர்ந்து வந்து சின்னவன் கட்டிக் கொள்கிறான். சின்னவன் அழுகிறான். “உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன்” என்று பெரியவன் அவனை அணைத்துக் கொள்கிறான். ’துணையற்ற குழந்தைகளான’ இருவரும் வயதில் மிகச் சிறியவர்கள், எனினும் பெரியவனின் முதிர்ச்சி மற்றும் பரிவு இருட்டான கராஜை நம்பிக்கையொளியால் நிறைக்கும் கணம் அது.
நாளை என்பது இன்னொரு நாளாக இருக்கலாம்.. ஆனால் நம்பிக்கை நாளை இன்றைய நாளைகளைத் தாள உதவும் நன்னாட்களை நிறைக்கலாம். பெரியவன் அடுத்த நாள் பத்து மைல் தொலைவிலிருந்த இன்னொரு முகாமுக்கு செல்லத் திட்டமிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.

“அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்”

”மகாராஜாவின் ரயில் வண்டி” மனித உணர்வுகளின் பல நிறங்களை வார்த்தைகளால் படம் பிடிக்கும் அரிய சிறுகதைகளின் சிறப்பான தொகுப்பு.

மொழி, இனம் தாண்டிய பொதுவான மனிதப் பிரச்சினைகளை, அழகியலைப் பேசவருகையில் பெயரிலா பாத்திரங்கள் பேசுபொருளின் எல்லையற்ற தன்மையை விவரிக்க மிகவும் உகந்தவை என்று இச்சிறுகதைகளை வாசிக்கையில் எனக்கு தோன்றியது.

“நாளை” சிறுகதை போலவே “தொடக்கம்” சிறுகதையிலும் கதை நிகழும் நாடோ, கதைசொல்லியின் இன அடையாளங்களோ சுட்டப்படுவதில்லை. உலகமயமாகிய வியாபாரச்சூழலில் மும்மாத நிதியறிக்கைகளும், பங்குகளின் விலை வரைபடங்களும் மட்டுமே முக்கியமானவையாகப் போன காலத்தில், காலக்கெடுக்களை சந்திப்பதற்கான ஓட்டங்கள் மட்டுமே சாசுவதம் என்றாகி விட்டபிறகு, உலக மையமே அலுவலகமும் அதில் இருப்பவர்களும் என்று ஆகிவிடுகிறது. உலகத்தை நோக்குவது அலுவலக அறையின் ஜன்னலின் பரப்பளவைச் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது, வெறுமை மிஞ்சி தீரா வேலைப்பளு தரும் அழுத்தத்தில் சலித்துப்போய் கதைசொல்லி திறந்திருந்த அலுவலக ஜன்னலின் வழி நுழைந்து இறந்துபோன பறவையின் சொந்த ஊர், அது எந்தெந்த தேசங்களின் மேல் பறந்தது என்பன போன்ற விவரங்களை இணையத்தில் (”வையவிரிவலை” – ஆசிரியரின் மிக அழகான சொற்பிரயோகம்!) சேகரிக்கிறான். போர்டு ரூமில் முதலாளிகள் அவனுடைய பிரெசெண்டேஷனுக்காக பொறுமையின்றி காத்திருக்கின்றனர். ஆறஅமர பறவை பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் போர்ட் மீட்டிங்கில் பறவை பற்றிய சிறு சொற்பொழிவாற்றுகிறான்.

“ஆயுள்” கதையின் தொடக்கத்தில் “இது காதல் கதையல்ல” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. கதையின் கடைசி பத்தி வரை ஒரு காதல் கதை போல நகரும் கதை. இலக்கிலாமல் சதா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடோடி வரலாற்றுக்கு முந்திய காலம் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் குடுவை எல்லாருடைய கவனத்தையும் கவர்கிறது – ஹொன்ஸா கூல் என்கிற ஆதிவாசிப் பெண்ணைத் தவிர.
நாடோடிக்கு அவள்மேல் ஈர்ப்பு. வழக்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். இயற்கை சார்ந்த கிராமவாசிகளின் வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. “என்னை மண்ந்து கொள்வாயா?” என்று அவன் கேட்கும்போது ஹொன்ஸாகூல் அவனை விரட்டிவிடுகிறாள் .நாடோடி அசரவில்லை. ஹோன்சாகூலை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தெரிவிக்கிறான். அவருக்கு ,சம்மதம்தான். ஆனால் கிராம மரபுப்படி ஹோன்சாகூலின் சம்மதத்தைப் பெற்றால்தான் திருமணம் சாத்தியம்.

மழைக்காலம் துவங்கும் அறிகுறி தோன்றவும், அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கிறான், போகுமுன்னர் ஹோன்ஸாகூலை மீண்டுமொரு முறை சந்தித்து அவளிடம் பிளாஸ்டிக் குடுவையை நீட்டுகிறான். ஹொன்சாகூல் அவன் தந்த குடுவையின் நேர்த்தியில் மனதைப் பறிகொடுக்கிறாள். “குடுவையை என் ஞாபகமாக வைத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று நாடோடி சொல்கிறான்.
இரு வருடங்கள் காத்திருந்தும் நாடோடி திரும்பி வரவில்லை. அவள் கிராமவாசியொருவனை மணக்கிறாள். சீக்கிரமே மணத்தை முறித்துக் கொண்டு விடுகிறாள். அவள் மணமுடித்த கணவன், அவளுடைய தந்தை – ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள். குடுவை அவளுடைய குடிசையிலேயே கிடக்கிறது. ஒரு நாள் அவளும் இறந்து போனாள். பல வருடங்கள் கடக்கின்றன. குடிசையும் சிதிலமாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சடலங்களும் மண்ணோடு மண்ணாகின. அந்த குடுவையும் மண்ணில் புதைந்து விடுகிறது. ஆனால் சாகவில்லை. அதன் ஆயுள் நானூறு ஆண்டுகள். நூறு வருடம்தான் கழிந்திருக்கிறது. அது அழிந்துபோக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. “ஆயுள்” நிச்சயமாக காதல் கதை இல்லை!

மார்பகப் புற்றுநோயின் காரணமாக மார்பகம் நீக்கப்பட்ட பெண்களின் மனவலியை நுணுக்கமாகச் சொல்லும் அழகிய சிறுகதை – பூர்வீகம். யுக்ரேய்ன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் அனா என்கிற அன்னலட்சுமி சேரகோவ் ”பூர்வீகம் தேடுவதை இனி விட்டுவிட வேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்” என்று சொல்லிக்கொண்டே வைன் குடிப்பாள். அவள் அதிகம் குடித்து நிதானமிழக்கவும், கதைசொல்லியும் மற்றவர்களும் அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஓட்டல் அறையில் விடுவார்கள். அப்போது கண்ணகி போன்று தன்னிரு மார்பையும் கழட்டி அவர்கள் மீது அனா வீசுவாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்களின் ரகசியம் கதைசொல்லிக்கு ஆறு மாதம் கழித்து அனாவின் மரணச்செய்தியைப் படிக்கும்போதுதான் தெரிய வருகிறது.

தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சுவையான பாலியல் அரசியலை அழகுறச் சொல்லும் ”ஐந்தாவது கதிரை”

வெளிப்பூச்சில் அதி நவீனமாக வளைய வரும் குடும்ப அங்கத்தினர்களின் உண்மையான வண்டவாளம் இரவில் தெரிய வரும் “மகாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையின் கதைசொல்லி எல்லாவற்றையும் பார்த்து துல்லியமாகப் பகிர்ந்து கொண்டாலும் அந்நிகழ்வுகளை அவன் எவ்வளவு புரிந்து கொண்டான் என்பதை நாம் அறிய மாட்டோம். ரோஸலின் என்கிற பதின்பருவ அழகி வாயைத் திறந்தால் பொய்! தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு ! கதை சொல்லிக்கோ அவளின் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவாள் என்று கேட்கவில்லையே என்ற ஏக்கம். கதை சொல்லிக்கு பல வருடங்களுக்குப் பிறகு யூகமாகப் புரிந்தாலும், நீள் சதுர பிஸ்கட்டை சாப்பிடும் போதெல்லாம் (ரோஸலின் வாசித்த) கிட்டாரின் மணம் வருவதை இன்னும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுதியை வாங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. புதுப்புத்தகங்களை முகர்ந்தால் ஒரு மணம் வரும் ;புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய இப்புத்தகத்தில் இருந்து இன்னும் வாசனை வந்து கொண்டேயிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்களும் வாங்கி முகர்ந்து பார்க்கலாம்!

புத்தகம் : மகாராஜாவின் ரயில் வண்டி
ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=29293)