அன்றைய நானும் இன்றைய அவனும்

கல்லூரி கால உயிர் நண்பர்கள்
பழைய பெண் சினேகிதிகள்
அதிகம் சந்திக்காத நெருங்கிய உறவினர்கள்
அனைவரும்
இப்போதும்
என்னை நேசிப்பதாகவே சொல்லுகிறார்கள்
கல்லூரி கால என் நெற்றித் திருநீறையும்
குடும்ப விழாக்களில் பாடிக்காட்டிய சாஜன் திரைப்படப்பாடலையும்
நன்னூல் யாப்பிலக்கண விதிகளை நான் விளக்கிய நாட்களையும்
அடிக்கடி நினைவு கூர்ந்தவாறே!
அவர்கள் அறிந்த நான்
இன்னும் இருக்கிறானா?
அவர்கள் அறியாத அவன்
இங்கிருக்கிறேன்

நான்

பசியாறுதல்
தாகம் தணிதல்
வசதியான படுக்கை
ஆழ்ந்த உறக்கம்
காதற்களியாட்டம்
நண்பர்களின் கூடுகை
செல்வச்செழிப்பு
பாராட்டு –
எல்லாம் கிடைத்தது
கலை ரசிப்பு
இறை வழிபாடு
அறிவுச் சேர்க்கை –
இவற்றையும் செய்து பார்த்தாயிற்று
என்னை மறத்தல் மட்டும்
இன்னும் சித்திக்கவில்லை
அடிக்கடி நடுவே
நான் என்ற உணர்வு
பாரமாய் அழுத்துதல்
நிற்கவே இல்லை.