சரணடைதலின் கண்ணீர் – நிஷா மன்சூர்

நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதை. அவர் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது.

————————————————————

ஆதித்தந்தை உகுத்த கண்ணீர்
இன்னும் மழையாய்ப் பொழிந்து
மண்ணை நெகிழ வைத்து
இறைஞ்சுதலால் விண்ணை நிரப்புகிறது,
“எமது கரங்களாலேயே
எமக்குத் தீங்கிழைத்துக் கொண்டோம் ரட்சகனே”

யூப்ரடீஸ் நதியில் ஓடிக் கொண்டிருந்த
யாகூபின் கண்ணீர் நதி
கிணற்றில் வீசப்பட்ட முழுநிலவின்
வியர்வையை நுகர்ந்தபின் அருள்நதியானது.

யூசுஃபின் பின்சட்டைக் கிழிசலில் சம்மணமிட்டிருக்கும்
ஒழுக்கத்தின் முத்திரை
ஆழியூழி காலம்வரை
வல்லிருளை வெல்லுமொளியாக
நின்றிலங்கிக் கொண்டிருக்கும்.

ஹூத் ஹூதின் சொற்கள் மலர வைத்தன
சுலைமானின் புன்னகையை.

முகமறியா பெருமகனின் ஆன்ம வலிமை
கொணர்ந்தது,
கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீசின் சிம்மாசனத்தை.

சிற்றெரும்புகள் புற்றேகித் தஞ்சமடையும் தருணம்
பூமியதிர்ந்து பதிந்தன,
சுலைமானின் குதிரைப்படைக் குளம்புகளின் தடங்கள்.

கரையான்கள் அரித்து அஸா உதிர்ந்து சுலைமான் சரியும்வரை
ஜின்கள் உணரவில்லை,
சுவாசமின்மையின் தடயத்தை

எறும்புகளை உதாரணம் காட்டத் தயங்காத பரம்பொருள் கேட்டது,
“மனு ஜின் கூட்டத்தாரே உங்கள் இறைவனின் அருட்கொடைகளில்
நீங்கள் எதனைப் பொய்யாக்குவீர்கள் ?”

எம் இதயமும் உயிரும் சமர்ப்பணமாகும்
முகில் கமழும் நயினார் முஹம்மது ரசூல் பகர்ந்தார்,
“உங்களது வெற்றியின் மீது
நான் பேராவல் கொண்டுள்ளேன்”*

ஜகமெங்கும் ஒலிக்கிறது,
வெற்றியின் ஓங்கார முழக்கம்.

“மற்றவர்கள் எத்தகையினராயினும் என்கொடிய
வல்வினை அகற்ற வசமோ
மலை இலக்கென நம்பினேன் நம்பினேனென்று
வந்தெனுட் குடிகொள்குவையோ.”*

#

*திட்டமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்’. (9:128).

*குணங்குடி மஸ்தான் பாடல் வரிகள்.

தேளும் ஆமையும் அல்லது இயல்பும் பழக்கமும்

ஆற்றின் குறுக்கே ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று கொண்டிருந்தது ஓர் ஆமை. அதன் முதுகின் மேல் படர்ந்திருந்தது ஒரு தேள். தன் மேல் அமர்ந்திருக்கும் தேளின் மேல் ஆமைக்கு பரிதாபம். அடுத்த கரையை அடைந்தவுடன் தேளை இறக்கிவிட்டு விடலாம் எனும் எண்ணத்துடன் கற்கள் மேவிய நதியின் படுகையை மெல்ல கடந்து கொண்டிருந்தது ஆமை. அதிக ஆழமில்லாவிடினும் நீரின் விசை அதிகமாயிருந்தது. கவனத்துடன் பாதி ஆற்றை கடந்து வந்தாயிற்று. மீதிப் பாதியில் நதி சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. பாறைகள் ஏதும் கண்ணில் படவில்லை. அதிக சத்தமில்லாமல் சீரான நீரோட்டம். ஆழம் அதிகமாக இருக்கலாம்! ஆற்றை கடக்கும் வழியை ஆமை யோசித்துக் கொண்டிருக்கையில் அதன் முதுகில் படர்ந்திருந்த விருந்தினர் தன் கொடுக்கினால் ஒரு போடு போட்டார். தேளின் கொடுக்கினால் ஆமையின் ஓட்டை பிளக்க முடியவில்லையென்றாலும் ஆமையின் பரிதாபவுணர்வு சடக்கென இடம் மாறியது. “ஏய் தேளே! உன்னை பத்திரமாக மறு கரை சேர்க்க கஷ்டப்பட்டு இந்த காட்டாற்றை கடக்க முயல்கிறேன். நீயோ நன்றியுணர்வில்லாமல் என்னையே கொட்டுகிறாயே?” என்று கேட்டது ஆமை. “எனக்காக நீ படும் கஷ்டம் எனக்கு தெரியாமலில்லை. என்ன செய்ய! யாராயிருந்தாலும் கொட்டுவது என் இயல்பு. கொட்டாமல் என்னால் இருக்க முடியாது” – தேள் பதில் சொன்னது. இந்த தேளுக்கு உதவி செய்ய இந்த காட்டாற்றில் இறங்கினோம். இந்த நன்றி கெட்ட தேளோ நம்மைக் கொட்டுகிறதே! கழிவிரக்கம் அதன் கவனத்தை கலைத்த சமயத்தில் சற்று பெரிதான அலையொன்று ஆமையின் முதுகில் விசையுடன் பாய்ந்தடிக்க நதியின் ஆழங்களுக்குள் ஆமை தள்ளாடி மூழ்கியது. அதன் முதுகில் இருந்த தேள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அதிர்ஷ்டமிருந்தால் ஆமை தரை தட்டக்கூடும்!

படைத்தோனின் அறிகுறிகள்

ஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.



படைத்தோனின் அறிகுறிகள்

உறுதியாய்
பதிக்கப்பட்ட மலைகள்
என் போலன்றி,
சற்றும் அசையாதவை
தூண்களில்லா சுவர்க்கங்கள்
தனிமையை போக்கக்
கூடவே பயணிக்கும் நதிகள்
பகலில் வழிகாட்டிகள்
இரவில் நட்சத்திரங்கள்
வானில் வரிசையாக
பறக்கும் பறவைகள்
கொட்டும் மழை
கொழிக்கும் பயிர்கள்
திறந்து விடப்பட்ட
ஒன்றில் ஒன்று
கலவாத சமுத்திரங்கள்
வணிகக் கப்பல்கள்
மிதந்து செல்ல கடல்கள்
உண்ணச் சுவையான மீன்கள்
வலிமையான காற்று
ஊதிக் கலைந்த மேகங்கள்
படைத்தவனைத் தேடிக் களைத்து
படைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்
தன் கையில் வைத்து
பூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே
உன்னை பார்க்க வைப்பாயா
உன்னை கேட்க வைப்பாயா
முறையிடுகிறேன் அவனிடம்
இரண்டு நாட்களில்
ஏழு சுவர்க்கங்களை சமைத்தவன்
கிப்லாவை நோக்கி
என்னை மண்டியிட வைத்தான்
நண்பர்கள்
கால்நடைகள்
அனைத்தையும்
என்னையும்
சிறந்த அச்சினால்
கருவறைக்குள் உருவாக்கியவன்
அனைத்தும் பார்ப்பவன்
அனைத்தும் கேட்பவன்
என்னையும் பார்க்கிறான்
என்னையும் கேட்கிறான்
நம்பிக்கை கொள்ளச் செய்பவன்
பயங் கொள்ளச் செய்பவன்
இரண்டும் அவனே
படைத்தோனின் படைப்புகள்
நம்பிக்கையூட்டுகின்றன
படைத்தோனை நினையாதபோது
பயந்தோன்றுகிறது
பூமியெனும் ஓய்விடத்தின் மீது
வானமெனுந்திரை போட்டிருக்கிறான்
புசிக்க ஓராயிரம் கனி வகைகள்
காடுகளில் விலங்குகளை நிறைத்திருக்கிறான்
அவனடையாளங்களில்லா
இடமேது இப்பிரபஞ்சத்தில்
அவன் என்னை பார்க்கிறான்
அவன் என்னை கேட்கிறான்
சந்தேகங்கள் தவறன்று
நிரூபணம் கேட்ட ஆபிரகாமும்
இறைத்தூதனன்றோ
மூலிகைகள்
ஆலிவ்கள்
திராட்சைகள்
இன்னும் பலவற்றில் உள்ளன
அவனிருப்பின் அறிகுறிகள்
அவனே சிறந்தவன்
கருணை மயமானவன்

பயம் – கலீல் கிப்ரான்

 

கடலுள் நுழையுமுன்
நதிக்கு நடுக்கமேற்படுமென
கூறப்படுகிறது

மலைகளின் உச்சிகளிலிருந்து
காடுகளினூடே
கிராமங்களினூடே
வளைந்து செல்லும் பாதையில்
தான் வந்தவழியை
பின்திரும்பி நோக்குகிறாள்
தன் முன்னம்
பரந்து விரியும் கடலை நோக்குகிறாள்
இதற்குள் நுழைவது என்பது
நிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிர
வேறேதுமில்லை
ஆனால் வேறு வழியில்லை!

நதி பின்திரும்பிச் செல்ல முடியாது
யாரும் பின்திரும்பிச் செல்ல முடியாது
இந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லை
கடலுள் நுழையும்
இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்!
ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும்
ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும்
– இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று,
கடலாக மாறுவதைப் பற்றியது

ஏரி – கவிஞர் சல்மா

ஸல்மா

ஏரி
ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
ஏரி சலனமற்றிருக்கிறது
சில நாட்களுக்கு முன்
தயக்கமின்றி உன்னிடமிருந்து
காலியான மதுக்கோப்பைகளை
விட்டெறிந்திருந்தாய் அதில்
மறுக்காமல் பெற்றுக்கொண்டது
ஏரி
பிறகொரு நாள்
நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
நேற்றுகூடக்
கசந்துபோன நம் உறவினை
இகழ்ந்து எச்சில் துப்பினாய்
தண்ணீரில்
எந்தக் காலமொன்றில்லாமல்
எல்லாக் காலங்களிலும்
உன் கழிவுகளைக் கொட்டி
உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
இன்று இதில் எதையும்
நினைவுறுத்தாது
உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்
உன் அசுத்தங்களை
அடித்துக் கொண்டுபோக
இது நதியில்லை
ஏரி
சலனமற்றுத் தேங்கிய நீர்
பத்திரமாய்ப் பாதுகாக்கும்
ஏதொன்றும் தொலைந்துபோகாமல்
எனது வண்ணத்துப் பூச்சிகள்
அறைச் சுவரில்
நான் விட்டுச் சென்ற
எனது வண்ணத்துப் பூச்சிகள்
தமது பசை உதிர்ந்து
பறந்து சென்றிருக்கலாம்
நான் திரும்புவதற்குள்
 

பாதைகள்

 அலமாரியில்
அறைச் சுவரில்
சுழலும் மின்விசிறியில்
மோதித் தெறிக்கும் வெளவால்
பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து
கடலின் நீலத்தையும்
மலைகளின் கூட்டங்களையும்
கடந்து வரும் பறவைகள்
இதுவரை
தொலைத்ததில்லை
தம் வழியை
 
பிறழ்வு
நான் பார்த்தறியாத
உலகைக்
குற்றவுணர்வுகளின் சங்கடங்களின்றி
எனக்குத் திறந்துவிடும்
உன் ஆர்வத்தில் தொடங்கிற்று
நமது உறவின் முதலாவது பிசகு
வெகுவான பிரயாசைகளுக்கும்
மூச்சு முட்டல்களுக்கும் பிறகே
உருவாக்குவேன்
துளியளவு ஆட்சேபணையை
வாழ்வின் எழுதப்படாத ஒழுங்குகளைக்
காதோரத்தில் கிசுகிசுத்துக்கொண்டேயிருக்கும்
அசரீரிகள்
இன்றைய உணவை
இக்காலத்தின் எனது உடைகளை
அவற்றின் வேலைப்பாடுகளை
இன்னும் என் உடலில் மறைக்கப்பட
வேண்டிய அவயவங்களை
காலில் சுற்றி வீழ்த்தும்
கண்ணுக்குப் புலப்படாத வேலிகள்
அச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை
தன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு
இந்த இருப்பின் தடங்களை
நாளையும் சரிபார்க்கவென மட்டுமே
அஸ்தமிக்கும் இந்தப் பொழுது
யாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற
நேற்றைய உணவின்
விதியிலிருந்து விலகி
கூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு
இந்த வெற்றுப் படுக்கைகளை
தந்துவிட்டு
வெட்டவெளியொன்றில்
தூங்க ஓரிடம் தேடினால் என்ன?
இன்று
ஒரு நாளைக்கேனும்
இந்த சங்கடங்கள் தன்னால்தானென
நம்மில் ஒருவர்
பொறுப்பேற்றால் என்ன
அல்லது
நம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல
இன்னொருவர் உதவினால் என்ன
இதில் ஏதும் இல்லையெனில்
ஏதேனும் வழியொன்றைத்
தேட முயல்வோம்
இந்த இரவை விடியாமல் செய்ய
காலப் பதிவு

விபத்திலிருந்து மீண்ட நாளின் உடை

நாம் சந்தித்துக் கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரணச் செய்தி
வந்து சேர்க்கையில்
என் கண்களைக் கடந்த
சிவப்பு வண்ணக் கார்
நகர்வதில்லை காலம்
படிந்து உறைகிறது
ஒவ்வொன்றின் மீதும்
 (இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)

அர்ஜுனன் காதல்கள் – உலூபி

@ Dolls of India
@ Dolls of India

வளைந்தோடும் நதியின் கரையில்
நீராடும் பார்த்தனின்
இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.
வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய்
அது பாதத்தை தீண்டிடவும்
நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான்.
ஒளி ஊடுருவும் மாளிகையின்
அறையில் விழித்தான்
வெளியே நாற்புறமும்
மீன்களும்
நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன
பார்த்தனின் முன் எரிகுண்டம் ;
நெய்யிட்டு
தீ வளர்த்தான்.
அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது
அருகிருந்த பாம்பின் கண்களில்
படர்ந்திருந்த இச்சைத்தீ.
கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம்
பாம்பு
பெண்
பாம்புப்பெண்
தீச்சடங்கு முடியவும்
“இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்
பார்த்தனை நோக்கினாள்
திரௌபதியும் யுதிஷ்டிரனும்
இணைந்திருந்த அறையினுள்
விபத்தெனவே நுழைந்ததனால்
விதித்துக் கொண்ட வனவாசம் ;
கவர்ந்திழுக்கும்
சர்ப்பப்பெண்ணுடன்
கூடுதல் முறையாகுமா?
பாம்புப்பெண்
அவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்
“சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை
உமக்கு நீரே வழங்கிக்கொண்ட
வனவாசத்தில்
உம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்
கூடுதலில் பாவமில்லை”
மாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்
மானிடப் பெண்ணாக எழுந்து
இதழ் குவித்து நெருங்கினாள்
அர்ஜுனன்
காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்.
நதியின் உயிரினங்கள்
அறையின் திரையாகின

oOo

பின்னொருநாளில்
நதிக்கரை மேடொன்றில்
வலியுடன் கண் விழித்தான்
விஷ பாணம் தாக்கி
புண்ணான அவனுடலை
பாம்புப்பெண்
நாவால் வருடினாள்
சற்றருகே ஒரு வாலிபன்
வில்லும் அம்புமாய்
பின்னே ஒரு வெள்ளைக் குதிரை
யாரிவன் என்னைப் போல்?
எங்கிருக்கிறோம்?
கனவிலா? நனவிலா?
உடலெங்கும் பாம்பு
ஊர்ந்து வைத்தியம் பார்த்தது
சலசலக்கும் நதியில்
முதலைகள் மூன்று நீந்திச் சென்றன.
இவைகளை முன்னர் சந்தித்திருக்கிறோமோ?
இறந்தகால நிகழ்வுகளும்
நிகழ்கால பிரக்ஞையும்
ஒன்றிணைந்து குழம்பாகி
வேறுபாடு காணவியலா கலவையாயின

oOo

“விஷமற்ற பாம்பினங்களில்
நான் அனந்தன் ;
ஆயிரம் பிரபஞ்சங்கள்
கடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”
கண்ணன் சிரிக்கிறான்

 

நன்றி : பதாகை

ராஞ்சா ராஞ்சா

மணி ரத்னம் இயக்கிய “ராவண்” இந்தித் திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் குல்சார் ; அதில் வரும் ஓர் அருமையான பாடலை கேளுங்கள்

பாடலின் முதல் வரி குல்சார் அவர்களுடையதில்லை. சூஃபிக் கவிஞர் புல்ஹே ஷா-வின் பிரசித்தமான கவிதையின் முதல் வரியை குல்சார் இந்தப் பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சுரிந்தர் சிங் கோஹ்லி அவர்கள் புல்ஹே ஷா பற்றி எழுதிய கட்டுரைப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். புல்ஹே ஷா ஒரு பஞ்சாபி சூஃபி. (காண்க : ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்! ). புல்ஹே ஷாவின் வாழ்க்கை, காலம், அவருடைய படைப்புகள், சமய சிந்தனைகள் மற்றும் கவிதைப்பாணி – இவை பற்றி விரிவாகப் பேசுகிறார் கோஹ்லி.

பஞ்சாபி சூஃபி கவிதைகளில் வரும் படிமங்களும் குறியீடுகளும் செறிவானவை. பாரசீக சூஃபி கவிதைகளில் யூப்ரடீஸ் – டைக்ரீஸ் இணை நதிகள் ஒரு குறியீடாக வரும் ; அது போல, பஞ்சாபிக் கவிதைகளில் வரும் பிரபலமான படிமங்கள் : கைராட்டினங்கள் சுழற்றும் சகோதரிகள் (trinjhan) மற்றும் செனாப் நதி. பஞ்சாபிகளின் நாட்டார்-காவியக் காதல் கதைகளில் – ஹீர்-ராஞ்சா மற்றும் சோஹ்னி-மாஹிவால் –செனாப் நதி ஒரு முக்கியமான பங்கேற்கிறது. ஹீர்-ராஞ்சா கதை இரு குறியீடுகளை சூஃபிக் கவிதைகளுக்கு ஈந்திருக்கிறது. ஹீர் (ஆஷிக் – காதல் புரிபவன்) மற்றும் ராஞ்சா (மாஷுக் – காதலிக்கப்படுவது). பக்தன் ஹீராக உருவகப்படுத்தப்படுகிறான்/ள் ; அவன்/ள் ராஞ்சாவைத் தேடி அலைகிறான்/ள்.

மேற்சொன்ன இந்தித் திரைப்படப்பாடலின் முதல் வரி இது தான் :

“ராஞ்சா ராஞ்சா கர்தி நி மேய்ன் ஆபே ராஞ்சா ஹோய்”

“தலைவன் ராஞ்சாவின் பெயரை உச்சரித்து உச்சரித்து நானே ராஞ்சாவாகிவிட்டேன்”

இவ்வுலகம் பிறந்த வீடு ; கடவுளிருக்கும் இடம் புகுந்த வீடு என்று படிமமாக்கப்படுகிறது. பிறந்த வீட்டில் இருக்கும் பெண் மற்ற நண்பிகளின் துணை கொண்டு கைராட்டினங்களை (trinjhan) வைத்து இறைவன் எனும் காதலனுக்காக உரிய பரிசுப்பொருட்களை தயார் செய்ய வேண்டும். தன் உடலெனும் கைராட்டினத்தில் வேலை செய்து, நற்பண்புகள் எனும் நூலிழைகளை திரிக்க வேண்டும்.

சூஃபிக்கவிதைகளில் உலகத்தில் வாழ்பவன் பயணி (முசாஃபிர்) என்றும் வணிகன் (சௌதாகர்) என்றும் கூட உருவகப்படுத்தப்படுகிறான். உலகம் பயண வழியில் தென்படும் சத்திரம் (சராய்) ; வணிகர்களும் பயணிகளும் சத்திரத்தில் தங்கும் நேரம் மிகக் குறைவே. புல்ஹே ஷா தம் கவிதையில் ராமர், கிருஷ்ணர் என்கிற குறியீடுகளையும் கடவுளுக்கு பயன் படுத்தியிருக்கிறார்.

ஒரு கவிதையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் :-

“பிருந்தாவனத்தில் பசு மேய்த்தாய்

லங்காவில் சங்கொலி செய்தாய்

மெக்காவில் ஹாஜியாக ஆனாய்

உன் நிறத்தையும் (வடிவத்தையும்) அற்புதமாக

அடிக்கடி மாற்றிக் கொள்கிறாய்

இப்போது உன்னை யாரிடமிருந்து மறைத்துக்கொண்டிருக்கிறாய்?”

துணைக்கண்டத்தின் சூஃபிக் குயில் அபிதா பர்வீனின் காந்தக் குரலில் புல்ஹே ஷாவின் பாடல் “ஜே ரப் மில்தா” என்கிற பாடலைக் கேட்டு இன்புறுங்கள்.

 

 

Source : Bulhe Shah – Surindar Singh Kohli – Sahitya Akademi – 1987 Edition

 

பிரயத்தன நதி

pursuit_of_happyness

சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.

“The Pursuit of Happyness” திரைப்படத்தை நேற்றிரவு வீடியோவில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான படம். தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டு விட்டது. புதிதாக வெளியான திரைப்படமொன்றைக் காண குடும்பத்துடன் சென்றிருந்த போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக காட்சி ரத்தானதும் டிக்கெட் தொகை ரொக்கமாக கையில் கிடைத்தது. வீடு திரும்புவதற்கு முன்னர் பக்கத்தில் இருந்த வீடியோ கடையில் தள்ளுபடி விலையில் கிடைத்தது என்று “The Pursuit of Happyness” திரைப்பட வீடியோவை வாங்கினேன்.

வில் ஸ்மித் தன் நடிப்பால் உச்சத்தை தொட்ட படம் ; க்ரிஸ் கார்ட்னர் என்ற புகழ் பெற்ற பங்குத் தரகரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். வில் ஸ்மித்தின் மகன் மாஸ்டர் ஜேடன் ஸ்மித் (Jaden Smith)-துக்கு முதல் படம். சமீபத்தில் After Earth திரைப்படத்தில் இதே தந்தை – மகன் ஜோடி நடித்திருந்தார்கள். நட்சத்திர தந்தை-தாய்க்கு பிறந்திருக்கும் ஜேடன் வியக்க வைக்கும் திறமை படைத்த நடிகர் மற்றும் ராப் பாடகர். நோபல் பரிசு விழாவொன்றில் ராப்-கச்சேரி செய்திருக்கிறார். மகனின் திறமையை வெளிக்கொண்டு வர வைத்து ஓர் எதிர்கால கதாநாயகனை உருவாக்கும் முயற்சியில் வில் ஸ்மித் ஈடுபட்டிருக்கிறார் என்று முதலில் தோன்றியது. ஆனால் “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்” பார்த்த பிறகு பையனுக்கு அப்பாவின் உதவியே தேவையில்லை ; இரு படங்களிலும் மனதில் பதிகிற மாதிரியான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் ஜேடன் ஓர் இயல்பான கலைஞர் ; அவருடைய வளர்ச்சிக்கு ஒருவரின் உதவியும் தேவைப்படாது என்பது கண்கூடு. “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்”ஸில் நடிக்கும் போது ஜேடனுக்கு எட்டு வயது. இப்போது ஹாலிவுட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் பதின்பருவ நடிகர் அவர்.

அதிகம் படிக்காத, மருத்துவக் கருவிகள் விற்பனையாளராக வேலை பார்க்கும் க்றிஸ் கார்ட்னர் ஃபெர்ராரி காரில் வந்திறங்கும் பங்குத் தரகரொருவரை பார்த்து ஊக்கமுற்று பங்குத் தரகு நிறுவனமொன்றில் ட்ரெய்னியாக சேருகிறார். முதல் ஆறு மாதங்களுக்கு சம்பளம் கிடையாது. ஆறு மாதத்துக்குப் பிறகு வேலை கிடைக்கும் என்ற நிச்சயமும் இல்லை. வருமானமின்மை காரணமாக க்றிஸ்ஸின் காதலி வீட்டை விட்டு சென்று விடுகிறார். ஐந்து வயதுப் பையனும், க்றிஸ்ஸும் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீடின்றி வீதிகளில் வாழ்ந்தனர். சர்ச்சொன்றின் தங்குமிடம் முதல் ரயில் நிலையமொன்றின் கழிப்பிடம் வரை இரவுகளில் தங்கினர். பகலில் மகன் பள்ளிக்கு செல்கையில் க்றிஸ் அலுவலகம் செல்கிறார். அயராத கடும் உழைப்பு. புன்னகை மாறாமல் வாழ்க்கை தரும் கஷ்டங்கள் சகிக்கிறார். வீடின்றி தவிக்கும் அவரின் கஷ்டத்தை அலுவலகத்தில் ஒருவரும் அறியவில்லை. க்றிஸ்ஸுக்கு பங்கு-தரகர் வேலை கிடைக்கிறது. 1987-இல் சொந்த தரகு நிறுவனத்தை சிகாகோவில் துவக்கினார். இன்று க்றிஸ் ஒரு கோடீஸ்வரர் ; ஊக்கமுட்டும் பேச்சாளர் ; கொடையாளர். தென்னாப்பிரிக்காவில் முதலீடு செய்யும் தனியார் பங்கு நிதியம் ஒன்றை க்றிஸ் துவக்கிய போது அந்நிதியத்தின் அமைதிக் கூட்டாளி யார் தெரியுமா? சமீபத்தில் மறைந்த தென்னாப்பிரிக்க முன்னால் அதிபர் – நெல்சன் மாண்டேலா.

“சொந்தமாக பங்கு-தரகு நிறுவனம் துவக்குவதற்கு ஆறு வருடம் முன்னர் ஒரு குழந்தையை முதுகில் சுமந்தவாறே ஒரு சாக்கடையிலிருந்து வெளிவரும் முயற்சியில் ஊர்ந்தும், போராடியும், தத்தளித்துக் கொண்டும் இருந்த ஒருவன் இப்போது வந்தடைந்திருக்கும் இடம் அவ்வளவு மோசமானதில்லைதான்” என்று க்றிஸ் கார்ட்னர் சொல்கிறார்.

வில் ஸ்மித் க்றிஸ் கார்ட்னராக நடித்திருக்கிறார். உந்துதல் மிக்க ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். காதலி வீட்டை விட்டு நீங்கும் இடங்களில் ஏமாற்றவுணர்வை நுட்பமாக வெளிப்படுத்துவதும், நிறுவன அதிபர்கள் அவனை வேலையில் நியமிக்கும் போது பரவச உணர்ச்சியை குளமாகிய கண்களால் கொண்டு வருவதும், சிறையிலிருந்து நேராக நேர்முகத் தேர்வுக்கு சட்டை அணியாமல் செல்கையில் அதற்கான காரணத்தை நகைச்சுவையைப் போர்த்தி சொல்லும் சால்ஜாப்பும், மகனோடு இரவு வீடு திரும்புகையில் தங்கும் அறை பூட்டப்பட்டு சாமான்கள் வெளியே வைக்கப்பட்டிருப்பதை காண்கையில் அடையும் தவிப்பும்….சொல்லிக் கொண்டே போகலாம். வில் ஸ்மித் பிய்த்து உதறியிருக்கிறார். அவர் விற்கும் மருத்துவக் கருவியை திருடிக் கொண்டு போனவரை துரத்தும் இடங்கள், டாக்ஸிக்காரருக்கு செலுத்த பணமில்லாமல் பணம் கொடுக்காமலேயே ஓடி விடுவதும் என்று ஆங்காங்கே தன் ட்ரேட்-மார்க் நகைச்சுவை நடிப்பையும் வில் ஸ்மித் தூவியிருக்கிறார்.

யோக வசிஷ்டம் உரை நூலொன்றை படித்துக் கொண்டிருக்கிறேன். இளவரசன் ராமன் மனக்கலக்கமுற்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சமயத்தில் விஸ்வாமித்திரரின் வேண்டுகோளுக்கிணங்க வசிஷ்டர் சொல்லும் அறிவுரைகளின் தொகுப்பு தான் யோகவசிஷ்டம். நூற்றுக் கணக்கான அழகான சிறுகதைகள் வாயிலாக தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. பல்வேறு சமய தத்துவங்களின் ஒன்றிணைந்த படைப்பாகவும் யோகவசிஷ்டம் கருதப்படுகிறது. வேதாந்த,ஜைன, யோக, சாங்கிய, சைவ சித்தாந்த மற்றும் மகாயான பௌத்த தத்துவங்களின் கூறுபாடுகள் இந்நூலில் அடங்கியிருப்பதாக தத்துவ ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

நூலின் முதல் அங்கத்தில் வசிஷ்டர் ராமருக்கு வழங்கும் முதல் உபதேசத்தை வாசித்தால் நமக்கு சந்தேகம் வந்து விடும் – நாம் படிப்பது ஆன்மீக நூலா? அல்லது சுய-உதவிப்புத்தகமா?

“பிரபஞ்ச வாழ்க்கையிலே நாம் முக்கியமாக அனுசரிக்க வேண்டியது ‘பௌருஷம்’ அல்லது தன் ஆண்மையை அடிப்படையாகக் கொண்ட தீவிர முயற்சி. தகுந்த முயற்சியால் உலகத்தில் அடையமுடியாதது ஒன்றுமே இல்லை. பிரம்ம பதவியுங் கூடத் தீவிரமும் ஒழுக்கமும் சேர்ந்த முயற்சியால் அடையத்தக்கதே.

ஆனால் செய்யும் முயறிசிகளைச் சரியான மார்க்கத்தை அனுசரித்தும் இடைவிடாமலும் செய்துவர வேண்டும், பலன் சித்திக்காவிடின் இதற்குக் காரணம், செய்த முயற்சியின் கோளாறே தவிர வேறு காரணமல்ல. தகுந்தபடி முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் எக்காலத்திலும் மிகவும் சொற்பம். பெரும்பாலும் ஜனங்கள் காரியம் எடுத்த பிறகு, அதில் ஊக்கம் குறைந்து முயற்சியில் தளர்ச்சி அடைவதாலேயே அதில் அபஜெயம் அடைகிறார்கள். சோம்பலே எல்ல ஜனங்களுடைய கஷ்ட-நிஷ்டூரங்களுக்கும் முதல் காரணம்”

“தவிர அநேகர் தங்களுக்கு விளையும் வினைப்பயன்களைப் பூர்வ ஜன்மத்தின் பலனாகக் கருதி சோர்வடைகிறார்கள். இதுவும் அஞ்ஞானமே, பூர்வ ஜென்மத்தில் செய்த பிரயத்தனங்களின் பலன்களை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிப்பது வாஸ்தவமே. ஆனால் இனி நடக்க வேண்டிய யத்தனங்களில் அதன் வேகம் தற்சமயம் செய்யக் கூடிய முயற்சிகளுக்குக் குறைந்ததே. இவ்வித வாசனை வினைப்பயன்களைத் தற்சமயம் செய்யக்கூடிய பிரயத்தங்களால் ஜெயிக்கலாம். இது நம் வசத்தில் இருக்கிறது. இவ்வாறு எண்ணுவதை விட்டு நடப்பதெல்லாம் வினைப்பயன் என்று கருதி வாழ்க்கையில் சோகமடைந்து, செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யாமல் நிற்கும் மானிடர்கள் பரம மூடர்களே”

“நமக்கு வேண்டியவைகளைத் தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமே தவிர வேறொன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்குப் புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்குப் பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அஞ்ஞானம் வேறில்லை”

மலையிலிருந்து கொட்டும் அருவி சமவெளியை அடைந்து ஆறாக ஓடி இரு கரைகளை ஏற்படுத்தி குறுகியும் அகண்டும் ஓடி அணைகளால் தடுக்கப்பட்டாலும் தன் இலக்கை அடைந்து விடுகிறது. கவலை எனும் உணர்வின்றி தன் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடுதல் ஒன்றே அதன் பணி. நம் கடனும் பணி செய்து கிடப்பதே. தெய்வத்தால் ஆகாதென்றாலும் முயற்சியானது நமக்கு கூலியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை, க்றிஸ் கார்ட்னரின் வெற்றியை திரையில் சித்தரித்து, நம்முள் ஏற்படுத்துகிறார் நடிகர் வில் ஸ்மித்.

Will_Smith_053

Source : யோகவாசிஷ்டம் : தமிழாக்கியவர் – எஸ்.கணபதி : அல்லயன்ஸ் கம்பெனி : 1948

தேவபூமி *

Rishikesh

சுரங்கங்களைத் தோண்டு
நதிகள் இடையில் வந்தால்
அவற்றின் பாதையை மாற்றி விடு
மரங்களை வெட்டு
அணைகளைக் கட்டு
பள்ளம் தோண்ட
குண்டுவெடிப்பு நிகழ்த்து
பிளவு பட்ட பாறைத் துகற்களை
நதிக்குள் தள்ளு
நிலச்சரிவினால் இழந்த
மோட்டார் சாலைகளை மீட்க
மலையின் பக்கங்களை மேலும் செதுக்கியெடு
நதியில் இன்னும் பாறைகள் வந்து விழ வை
பச்சைப் போர்வையை
எடுத்து மலைகளைக் குன்றுகளாக்கு
காடுகளைக் களைந்து
வரிசை மேல் வரிசைகளாக
ஓய்வு விடுதிகளை நிறுவு
வியாபாரம் செய்
முன்னேற்றமொன்றே உனது குறிக்கோள்
ஊர்கள் அழிந்துவிட்டால்
புராணக் கதைகளைக் காரணம் காட்டிக் கொள்ளலாம்

* – சார்தாம் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் புனிதத்தலங்களாகிய – பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி – உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளன. ரிஷிகேஷ், அரித்வார் போன்ற மேலும் பல புராதனமான திருத்தலங்களும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தை தேவபூமி என்றும் அழைக்கின்றனர்.

நீலக்குடை

@ Ben Kelley
@ Ben Kelley

வித விதமான

கவலைகள்

படைப்பூக்கமிழக்காமல்

ஒன்றன் பின் ஒன்றாக

தோன்றிய வண்ணம்

சங்கிலியை

அறுத்தெறிந்து

ஓரிரு மகிழ்ச்சியை

உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு

உவகை தலை தூக்குகையில்

அதீத மகிழ்ச்சி

அபாயம் தரும்

என்று உள்ளுணர்வு சொல்ல

மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன்

இனி அபாயமில்லை

என்ற நிம்மதியுணர்வை

அடையாளம் காணாமல்

முழுநேரக் கவலையில்

என்னை புதைத்துக் கொண்டேன்

 +++++

 என் கண்ணீர்த்துளிகளை

மழைத் துளிகள்

மறைத்து விடுதல்

சவுகர்யம்.

நதி உற்பத்தியாகும்

இடத்தை மலைகளும்

குகைகளும்

மறைத்திருக்குமாம்

என் கண்ணீர் நதிக்கு இந்த நீலக்குடை

சாலையோரக் குட்டைகளில்

சேரும் என் கண்ணிரின் வெள்ளத்தை

யாரும் அருந்தப் போவதில்லை

என்ற ஆறுதல் எனக்கு

குடை, ஆகாயம்,

மழை, மழை நீர்க்குட்டை, நீல நிறம் –

இவைகள்

எனக்கு உற்ற தோழர்கள்

எனக்கென்ன கவலை

மழை நிற்கும் வரை !

கவலையின்றி

அழுது கொண்டிருக்கலாம்.

 +++++