தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – ஈரானிய நாவல் குறித்து

தெஹ்ரானில் ஒரு உயரமான கட்டிடம். மிகவும் வேறுபட்ட சமூக நிலைமைகள், மத அல்லது மத சார்பற்ற நோக்குநிலைகள், தார்மீக அல்லது ஒழுக்கக்கேடான நடத்தைகளை பிரதிபலிக்கும் அண்டை வீட்டார். பழமைவாத குடும்பங்கள், மூர்க்கத்தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட இளைஞர்கள் (மது, போதைப்பொருள், தேவையற்ற டீனேஜ் கர்ப்பம்), தொழில்முறை குற்றவாளிகள், ஏன் ஒரு செக்ஸ் வொர்க்கர் கூட – எல்லாம் கலப்பு, எல்லாம் முரண், எல்லாம் புதிர்.

ரேடியோவில் மதச் சொற்பொழிவு ஒலிபரப்பை கேட்டுக்கொண்டே கொடூரமான கொலையைச் செய்கிறார்கள் குற்றவாளிகள். அந்தச் சொற்பொழிவில் வரும் மேற்கோள் – “தொழுநோயாளியின் கையில் பன்றி எலும்பு” – மனித இருப்பின் பரிதாபகரமான தன்மையின் வரையறை – ஷியா இஸ்லாமின் புனித இமாம்களில் ஒருவர் தந்தது. செக்ஸ் வொர்க்கர் நம்பிக்கையின்றி காதலிக்கிறாள். படித்த தாய் மூடநம்பிக்கை மற்றும் அதிசய சிகிச்சையின் மூலம் நோய்வாய்ப்பட்ட குழந்தை நலம்பெற ஆசைப்படுகிறாள். மிதமிஞ்சிய பணம் புரளும் குற்றவுலகம், அதில் ஊழலும் கலந்துள்ளது. பின்னணியில், சத்தமில்லாத, மிகவும் மாசுபட்ட பெருநகரத்தின் இடைவிடாத ஓசை. ஈரான் அதன் அனைத்து முரண்பாடுகளிலும் சிக்கலான தன்மையிலும், அங்கு வாழ்ந்த அனைவருக்கும் சாட்சியமளிக்கிறது. எனினும், இறுதி முடிவு விரக்தி தருவதல்ல. ஆனால் மனித பலவீனங்களை இரக்கத்துடன் நோக்குவது.

மையத்தன்மையற்ற கதை சொல்லல். ஒரு திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் போல எழுதப்பட்டுள்ள நாவல். ஒரு காட்சிப் பொருளாய் ஒரு புறநகர்ச் சமூகத்தின் சித்திரிப்பு. நூறு பக்கம் மட்டுமே. இரண்டாயிரங்களின் முக்கிய ஈரானிய எழுத்தாளராக மொஸ்தஃபா மஸ்தூரை நிலை நிறுத்திய படைப்பு.

நிச்சயமாக ஈரான் எனும் தேசம் சாடர்கள் (Chador) /அயத்துல்லாக்கள் நிரம்பிய தேசம் மட்டுமல்ல, அதே நேரம் இளம் ட்வீட்டர்கள் மற்றும் மேற்கத்திய சார்பு மதச்சார்பின்மைவாதிகள் மட்டுமே நிரம்பிய தேசமுமல்ல.

அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் அல்லது பத்திரிகையாளர்களை விட அதிகம் உண்மையைச் சொல்ல முனைபவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள். அவர்களைக் கேட்போம். மொஸ்தஃபா மஸ்தூர் ஈரானைப் பற்றிச் சொல்வதைக் கேட்போம்.

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – மொஸ்தஃபா மஸ்தூர்
தமிழில் – பீ எம் எம் இர்ஃபான்
சீர்மை பதிப்பக வெளியீடு

மூன்று நகரங்கள்

துணுக்கு (trivia) எனக்கு மிகவும் பிடித்த வாசிப்பு வகைமை. வெவ்வேறு வடிவங்களில் அதனை எழுதிப் பார்த்தல் – கட்டுரைகளில் அவற்றை அடுக்குதல், உரையாடல்களுக்கு நடுவே அவற்றை புகுத்துதல், நாவலின் நெடும்பத்திகளில் அவற்றை பதிவுசெய்தல், கவிதைகளில் குறிப்பாக்குதல் என – பல விதங்களில் விரியும். இந்தியாவில் எல்லைகளில் இருக்கும் மூன்று நாடுகளில் உள்ள மூன்று நகரங்களைப் பற்றிய துணுக்கு தோரணத்தை என்றோ எழுதினேன்.

மீர்ப்பூர்

அறுபதுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மீர்ப்பூரில் ஜீலம் ஆற்றுக்கு மேல் மிகப் பெரிய அணை கட்டப்பட்டது. உலகின் ஏழாவது பெரிய அணையான மங்ளா டேம் கட்டப்பட்ட போது 1,10,000 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வேறு இடங்களுக்கு நகர வேண்டியிருந்தது. அவர்கள் வசித்துவந்த கிராமங்கள் நீருக்கடியில் மூழ்கின. பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக பாகிஸ்தானிய அரசு பிரிட்டிஷ் வேலை அனுமதியை (work permit) வழங்கியது. இன்று பிரிட்டனில் வசிக்கும் பாகிஸ்தானியர்களில் “மிர்ப்பூரிகள்” எழுபது விழுக்காடு. வடக்கு இங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷைரில் உள்ள ப்ராட்ஃபர்ட் நகரில் வசிக்கும் கிட்டத்தட்ட அனைத்து பாகிஸ்தானியரும் மிர்ப்பூரிகள். Smart Mirpuris. They knew how to negotiate.

சில்ஹேட்

மிர்ப்பூரிகள் போன்று பங்க்ளாதேஷின் சில்ஹேட் (Sylhet) நகர் பூர்வீக மக்களும் அதிகம் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். பங்க்ளாதேஷின் மூன்றாவது பெரிய நகரம் சில்ஹேட். ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்திலருந்தே கப்பல்களில் சிற்றேவலர்களாக ( lascars) பணியாற்ற சில்ஹேட்டியர்கள் மிகவும் விருப்பங்காட்டினார்கள். முதன் முதலாக லண்டனில் இந்திய உணவகத்தை 1810 இல் தொடங்கியவர் சில்ஹேட்டியிலிருந்து வந்த வங்க முஸ்லீம் ஷேக் தீன்மொஹமட். இன்றும் லண்டனின் புகழ் பெற்ற இந்திய உணவகங்களை சில்ஹேட்காரர்களே நடத்துகிறார்கள். இதற்காகவே உள்ளூர் சில்ஹேட்காரர்கள் வெளிநாட்டுக்கு குடியேறியவர்களை ‘லண்டனி’ என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சில்ஹேட்டிலுருந்து பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் குடியேற்றம் தொடர்ந்தது. வங்க சுதந்திரப் போரின் போதும் அதற்கு முன்னரான 1970இன் பல உயிர்களை பலி வாங்கிய போலா சூறாவளியின் போதும் குடியேற்றம் உச்சத்தை தொட்டது.

நீர்க்கொழும்பு

கதுநாயக விமான நிலையத்தில் இறங்கி E3 வழியில் கொழும்பு செல்கையில் வலப்புறத்தில் மிக அழகான Lagoon தென்படும். Negombo Lagoon என்பது அதன் பெயர். கடலோர விடுதிகள், அழகான பல சர்ச்சுகள் என்று பயணிகளுக்கான பல கவர்ச்சிகளை கொண்டுள்ள Negombo-வை தமிழில் நீர்க்கொழும்பு என்று அழைக்கிறார்கள். இருபத்தியைந்துக்கும் மேலான சர்ச்சுகள் இருப்பதால் நீர்க்கொழும்பை குட்டி ரோம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஊரின் பெயர்க்காரணமாக இரண்டு தொன்மங்கள் வழங்குகின்றன. சிங்களர்கள் நிகம்போ என்ற பெயர் மீகமூவ எனும் பழைய பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். தமிழர்கள் நிகும்பள என்னும் பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். நிகும்பளன் என்பவன் இராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம். இவன் இராவணனின் மைத்துனன்.

இந்த தோரணம் இன்னும் முழுமையடையவில்லை. மீர்ப்பூருக்கும் சில்ஹேட்டுக்கும் இடையே மேலை நாட்டுக்குக் குடிபெயர்தல் எனும் பொதுப்புள்ளி இருக்கிறது. நீர்க்கொழும்பிற்கு? இத்தாலியில் டைரேனியன் கடலின் கரையில் அமைந்துள்ள Negombo எனும் ஊருடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

தொடர்பு படுத்தல் கற்பனையின், எழுத்தின் இன்றியமையா அங்கம். தொடர்புபடுத்தலின் நீட்சி புனைவின் ஆரம்பம் என்ற சொந்த தியரி ஒன்று என்னிடத்தில் உண்டு.

சியால்கோட்டுக்கு கனவி்ல் பயணமாதல்

ஒரு நகரத்திற்குப் பயணமானபோது அங்கு பார்த்த ஒரு வீதி பலமுறை என் கனவில் வந்த ஒரு வீதிக் காட்சியைப் போலவே இருந்தது. ஒரு பக்கம்
வரிசையாக வீடுகள். இன்னொரு பக்கம் அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கிடையே ஓடும் சிறு நதி. நகருக்கு நடுவே இருக்கும் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரிக்கு நடுவே அழகான வண்ணவண்ணப் படகு வீடுகள் தெரிந்தன. ஏரியைச் சுற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்று புற நகரை அடைந்த போது நான் பார்த்த தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்து நிலையமும் என் கனவில் ஒரு கட்டில் போட்டு அதில் நான் படுத்திருந்த இடத்தைப் போலவே இருந்தது. கனவில் அந்த இடம் ரொம்ப கூட்டமாய் இருந்தது. நிஜத்தில் அந்த பேருந்து நிலையம் காலியாய் இருந்தது. என் கனவில் வந்தது போன்றே ஷட்டருடனான கடைகள் இருந்தன. ஆனால் மூடியிருந்தன.

கனவில் நான் இருக்கும் இடம் பாகிஸ்தானின் நகரம் ஒன்று என்பதாக நினைத்துக் கொண்டிருப்பேன். சியால் கோட்டாக இருக்கலாம் என்று கனவுக்குள் எண்ணம் ஓடும். நிஜத்தில் பார்த்த நகரத்துக்கும் ஊக நகருக்கும் இடையே உள்ள தொலைவு இருநூறு கிலோமீட்டர் தான். இருநூறு கிலோமீட்டர் என்று சொல்லிக் கொள்வது எத்தனை presumptuous! நடுவே எல்லை இருக்கிறது. எல்லையில் பிரச்னை. எல்லையின் தொலைவு பற்றியச் சிக்கல். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை இருநூறு கிலோமீட்டராக எப்படி சுருக்கிவிட முடியும்? கனவில் நான் எல்லை தாண்டியதாக எண்ணியது பிழை. எல்லைக்குள்ளாகத்தான் இருந்திருக்கிறேன். கனவின் எல்லைக்குள்.

கண்ட கனவில் வந்த மனிதர்களை கவனிக்கவில்லை. அறிவிப்பு பலகைகள், பேருந்து எழுத்துகள் எதுவும் கனவில் தோன்றவில்லை. அவை தந்திருக்கக்கூடிய தகவல் கொண்டு இடத்தை சரியாக அனுமானித்திருக்கலாம். கனவு என்பதே நமக்கு நாம் சொல்லிக் கொள்வதும் உணர்ந்து கொள்வதும் தான். பலகைகளில் பேருந்துகளில் எழுத்துகள் தெரிந்திருந்தாலும் அவை நமக்குத் தெரிந்த மொழியில் எழுதப்படாவிட்டாலும் நாம் நினைத்துக் கொண்ட ஊரின் மொழியாகவே அது நமக்குத் தெரியும். போர்டில் ஃபார்ஸி எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவனுக்கு கனவில் வரும் ஃபார்ஸியை வாசித்துவிட முடியும் பிரக்ஞையில் அவனறிந்த மொழியாகிய தமிழ் கொண்டு. கனவுகளின் மொழி பிரக்ஞையின் மொழி.

நிஜப்பேருந்து நிலையம் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு பல வருடங்களாகிவிட்டனவாம். சியால்கோட்டுக்கு ஐம்பதுகளின் முடிவு வரை பேருந்துகள் சென்று கொண்டிருந்தனவாம்! இந்தத் தகவலின் துணை கொண்டு அடுத்த முறை கனவில் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்தால் சியால்கோட்டுக்கு பேருந்து பிடித்துச் சென்றுவிடலாம். சியால்கோட்டில் அதே வீதிக்காட்சியையும் பார்த்துவிடுவோம். ஏனெனில் வீதிக்காட்சியை பிரக்ஞைக்குள் ஏற்றிக்கொண்டால் கனவில் அதனை இருநூறு கிலோமீட்டர் நகர்த்துவது அத்தனை சிரமமில்லை. ”நிஜமாகவே” சியால்கோட்டிற்குள்ளும் அதே பேருந்து நிலையத்தை வந்தடைந்து விடுவோம்.

நகரத்துப் பசுக்கள்

cows-animale_400

தீனீ போட்டு கட்டுப்படியாகாமல்
விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள்
தெருக்களில் திரிந்தன
வெள்ளைப் பசு
முள்மரங்களை
சுவாசம் பிடித்த படி நின்றது
மஞ்சள் பசு
சாலையோரங்களில் போடப்பட்ட
கற்குவியற்களை நாவினால் தொடுகிறது.
வெள்ளைப்பசுவின்
இளங்கன்று
பிளாஸ்டிக் குப்பைகளை
ஆர்வத்துடன் நோக்குகிறது
மாலை வீடு திரும்பாத
பசுக்களைத்
தேடி வந்த உரிமையாளன்
மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை
லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான்.

இப்போதெலாம்
பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை
நவநாகரீக கோசாலையில்
சுகமாய்க் காலங் கழிக்கின்றன
காசு கொடுத்து
பசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்
இன்னுமொரு கிளை திறப்பதற்காக
உரிமையாளன்
கிராமத்திலிருந்து
மேலும் பசுக்களை
நகருக்கு அழைத்து வருகிறான்.