ஜான் லீகார்ரே (John Le Carre) யின் “The Constant Gardener” நாவல் திரைப்படமாக 2005இல் வெளியானது. நாவலின் தலைப்பே திரைப்படத்துக்கும். எட்டாண்டுகள் முன் வெளியான இத்திரைப்படத்தை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். தூங்கப் போகலாமா என்று யோசித்துக் கொண்டே சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த போது ஜீ தொலைக்காட்சியில் இப்படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். நடிகை ரேச்சல் வெய்ஸ் (Rachel Weisz) –க்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற படம் என்று என்று எனக்கு தெரியும். கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று துவங்கினேன். இரண்டு மணி வரை படம் முடியும் வரை இருக்கையிலிருந்து எழ முடியவில்லை.
ரால்ஃப் ஃபீன்ஸ் (Ralph Fienes) எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். The English Patient திரைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். கூச்சசுபாவமான ஆர்ப்பாட்டம் காட்டத் தேவையில்லாத பாத்திரங்களில் வெகுவாகப் பொருந்தக் கூடியவர். அதே சமயம் உடல்மொழி மற்றும் முக வெளிப்பாடுகள் வாயிலாக ஒரே பாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களை நுட்பமாக வெளிப்படுத்துபவர். முண்ணனி ஹாலிவுட் ஹீரோ நடிகர்களில் அவரைப் போல மிகச்சிலரே வில்லன் பாத்திரங்களில் சோபிக்க முடியும். நேர்மறை கதாநாயகனாக நடிக்கும் பொழுதும் இருண்ட முனைகளை உட்புகுத்தி அப்பாத்திரத்திற்கு நொறுங்கும் தன்மையையும் மனிதத் தன்மையையும் சேர்த்து விடுவார்.
தி கான்ஸ்டண்ட் கார்டனரிலும் அவருடைய பாத்திரம் மனைவிப் பாத்திரத்தின் மரணத்துக்குப் பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிற கண்ணியமான தூதரக அதிகாரியிலிருந்து காதலின், அதீத உணர்ச்சியின் சுய-சாத்தியப்பாட்டை நிலை நிறுத்தும் பாத்திரமாக மாறுகிறது.
மனைவி டெஸ்ஸா பாத்திரத்தில் வரும் ரேச்சல் வெய்ஸ் உந்தப்பட்ட, எழுச்சி மிக்க, தடுத்து நிறுத்தவியலா அறப்பணியாளராக பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். துள்ளல் மிகு கண்களுடன் அதிக வயது வித்தியாசமிக்க காதலனிடம் “என்னை உன் காதலியாக அல்லது மனைவியாக,,,இல்லாவிட்டால் வைப்பாட்டியாக…கென்யா கூட்டிச்செல்வாயா?” என்று கேட்கிறார்.
கென்யாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்காக களப்பணியாளராக வேலை செய்யும் டெஸ்ஸா, ஆப்பிரிக்க நண்பன் ஆர்னால்டோடு சேர்ந்து எய்ட்ஸ் மருந்தை இலவசமாக வினியோகிக்கும் பணியில் இருக்கிறாள். அவர்களிருவரும் சேர்ந்து ஐரோப்பிய மருந்து நிறுவனமொன்று ஒன்றுமறியா ஆப்பிரிக்க ஏழைகளின் மேல் காச நோய்க்கான மருந்தொன்றை பரிசோதனை செய்வதை கண்டு பிடிக்கிறார்கள். பக்க விளைவைத் தரும் அம்மருந்தின் காரணமாக பலரும் மரணமடைகிறார்கள். மரணங்கள் பதிவாவதுமில்லை. மருந்தி பரிசோதனையைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் முழுமூச்சுடன் டெஸ்ஸா இறங்குகிறாள். அவளுக்கு ஆர்னால்ட் பக்கபலமாக இருக்கிறான்.
வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் தோட்டத்தை திருத்தும் காரியத்தில் தன்னை அமிழ்த்திக் கொள்ளும் ஜஸ்டின் (ரால்ஃப் ஃபின்ஸ்), டெஸ்ஸாவின் வேலையைப் பற்றியோ நடவடிக்கைகள் பற்றியோ அறியாமல் ஒரு தொலைவை ஏற்படுத்திக் கொண்டுவிடுகிறான். டெஸ்ஸாவின் குழந்தை பிறக்கும் போதே இறந்து விடுகிறது. குழந்தையின் இறப்புக்குப் பிறகு டெஸ்ஸா – ஜஸ்டின் தொலைவு இன்னும் விரிவடைகிறது.
ஒரு நாள் டெஸ்ஸா கொலை செய்யப்படுகிறாள். ஆர்னால்ட் தான் அவளை கொலை செய்து விட்டான் என்று முதலில் சொல்லப்படுகிறது. ஆர்னால்ட் டெஸ்ஸாவின் காதலன் என்றும் அவதூறு கற்பிக்க முயற்சிகள் நடக்கின்றன. ஆர்னால்டும் டெஸ்ஸா இறந்த நாளன்றே கொல்லப்பட்டது பின்னர் கண்டு பிடிக்கப்படுகிறது.
மனைவியின் மரணம் ஜஸ்டினுள்ளில் ஆழ்ந்த மாற்றத்தை உண்டு பண்ணுகிறது ; டெஸ்ஸாவின் கொலைப் பிண்ணனி பற்றியும் காரணங்கள் பற்றியும் அறிவதற்கான ஆபத்து நிறைந்ததொரு தேடலில் புகுகிறான்,
அறப்பணியில் ஈடுபடுவது உள்ளார்ந்த கருணை குணத்தின் காரணமாக இருக்கலாம் ; குற்றவுணர்வாக இருக்கலாம் ; இலாபம் கருதி இருக்கலாம் ; பொது வாழ்வில நற்பெயர் சம்பாதிப்பதற்காக இருக்கலாம். எதுவானாலும் இருக்கட்டும். நன்மையில் முடிந்தால் சரி. ஆனால் பிரச்னை என்னவென்றால் முழுமையான பார்வை கொண்டு பார்த்தாலொழிய அறப்பணி முயற்சிகள் நனமையில் முடிந்ததா என்பதை அறிதல் கடினம். தனிப்பட்ட நபர்களின் அறம் சார்ந்த தொண்டுகள் அதை ஏற்கும் நபரின் மனநிலை, அறப்பணி புரியப்படும் சூழல், அதை ஒழுங்கு படுத்தும் அரசுகளின் போக்குகள், மனப்பான்மைகள் என்று வெவ்வேறு இடைமுகங்கள்! இவ்விடைமுகங்கள் தோற்றுவிக்கும் பல்வேறு விளைவுகள்! இரட்டை வேடம் போடும் உதவி வழங்கும் அரசாங்கங்கள்! சட்டபூர்வ மற்றும் சட்டமீறல் செய்கைகளுக்கிடையேயான எல்லைகளை எளிதில் தாண்டும் இலாப நோக்கு நிறுவனங்கள் ! உதவி பெறும் மக்களின் ஊழல் மிகு உள்ளூர் அரசுகள் மற்றும் நிறுவனங்கள்!
ஜஸ்டினின் தேடல் சிக்கல் மிகுந்த வலைக்குள் அவனைத் தள்ளி விடுகிறது. சொந்த நாட்டின் பொருளாதார குறிக்கோள்களுக்காக பன்னாட்டு நிறுவன புரியும் அநீதியைத் சுட்டிக்காட்டத் தைரியமில்லாமல் ஊமை நாடகமாடும் தூதரக ஊழியர்கள்! முதலாளிகளுக்கு துணை போகும் அரசு உயர் அதிகாரிகள்! லாபம் ஒன்றை மட்டும் விழைந்து சமூக நலனையும் சர்வ தேச சட்டங்களையும் உடைப்பில் போடும் முதலாளிகள்! வளர்ந்த நாடுகளின் குடிகளின் ’மதிப்பு வாய்ந்த’ உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஆப்பிரிக்க ஏழைகளின் உயிரைக் காவு வாங்கும் சுயநல மருந்து நிறுவனங்கள்! பக்க விளைவைத் தரும் மருந்தை பரிசோதனைக்குட்படுத்தும் நிறுவனத்தின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தாத குற்றவுணர்வில் அறப்பணியில் தன்னைத் தோய்த்து பாவம் கழுவும் விஞ்ஞானிகள்! லஞ்சம் வாங்கி சொந்தக் குடிகளை பலியாக்கும் ஊழல் மருந்துக் கட்டுப்பாடு ஆணையங்கள்! ஜஸ்டின் பல முகங்களை சந்திக்கிறான் ; சில முகமூடிகளையும் அவிழ்த்து அம்பலப்படுத்துகிறான்.
திரில்லர் பாணியில் கதை வேகமாக நகர்கிறது ; தேடலுக்கு நடுவில் இறந்த மனைவியின் உணர்வுகளின் புரிதல் ஜஸ்டினுக்கு கிட்டுகிறது. டெஸ்ஸா இறந்த ஏரிக்கரையில் டெஸ்ஸாவின் நினைவுகளில் அவன் இருக்கும் போது அவன் கொல்லப்படுகிறான். அவன் கொல்லப்படப்போவது அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தும், தான் கொல்லப்படுவதற்கு ஏதுவாக அவன் கொலையாளிகளுக்காக காத்திருப்பது அக்கொலையை தற்கொலையாக நகர்த்துகிறது. கதையின் முடிவு இந்த த்ரில்லர் படத்தை ஒரு முழுமையான காதற்படமாகவும் ஆக்கிவிடுகிறது.
ஆப்ரிக்காவை மையப்படுத்தி வெளி வந்த படங்களில் ‘ப்ளட் டயமண்ட்ஸுக்குப்’ பிறகு எனக்கு ’தி கான்ஸ்டண்ட் கார்டனர்’ மிகவும் பிடித்தது. (”ஹோட்டல் ர்வாண்டா” இன்னும் பார்க்கவில்லை!)