அல்லாமா இக்பால் போன்ற ஓர் ஆளுமை துணைக்கண்டம் அதற்கு முன்னர் கண்டதில்லை. கவி நயமும் தத்துவமும் அவருள்ளில் ஒருங்கே குடி கொண்டிருந்தன. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்ட அவர் தத்துவம் கற்பித்தார். சட்டம் பயிற்சி செய்தார். அரசியலில் ஈடுபட்டார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பாகிஸ்தானை உருவாக்கும் யோசனையை ஆதரித்ததால் அங்கு தேசியக் கவிஞராக போற்றப்பட்டபோதும், இந்தியாவின் மகத்துவத்தைக் கொண்டாடும் புகழ்பெற்ற தேசபக்தி பாடலை எழுதினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் சர் பட்டம் வழங்கப்பட்டு ‘சர்’ முகமது இக்பால் என்று அழைக்கப்பட்டார். “The Spirit of philosophy is one of free enquiry. It suspects all authority” என்று முழங்கிய இக்பால் 1920களில் மதராஸ் முஸ்லீம் அசோசியேஷன் எனும் அமைப்பின் அழைப்பில் சென்னை, ஹைதராபாத், அலிகர் ஆகிய நகரங்களில் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து 1930இல் “இஸ்லாத்தில் மத சிந்தனையின் மறுசீரமைப்பு” எனும் நூலை வெளியிட்டார். இஸ்லாமிய தத்துவ மரபுகளையும் மனித அறிவுச் செயல்முறையின் பல களங்களிலும் ஏற்பட்டிருந்த சமீபத்திய முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு முஸ்லீம் மத தத்துவத்தை மறுகட்டமைக்கும் முயற்சியாக இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
மனிதனின் உள் மற்றும் புற வாழ்வின் மாற்றமும் வழிகாட்டுதலும் மதத்தின் இன்றியமையாத நோக்கமாக இருப்பதால், அறிவியலின் கோட்பாடுகளைக் காட்டிலும் மதத்திற்கு அதன் இறுதிக் கொள்கைகளுக்கான பகுத்தறிவு அடித்தளம் மிக அத்தியாவசியமாக உள்ளது. ஆனால் நம்பிக்கையை நியாயப்படுத்துவது என்பது மதத்தை விட தத்துவத்தின் மேன்மையை ஒப்புக்கொள்வது ஆகாது. மதம் என்பது துறை சார்ந்த விவகாரம் அல்ல. அது வெறும் சிந்தனையோ, உணர்வோ அல்லது நடவடிக்கையோ அல்ல; அது முழு மனிதனின் வெளிப்பாடு.
சிந்தனையும் உள்ளுணர்வும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை. அவை ஒரே வேரிலிருந்து தோன்றி ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. ஒன்று யதார்த்தத்தை துண்டு துண்டாகப் புரிந்துகொள்கிறது, மற்றொன்று அதை அதன் முழுமையுடன் புரிந்துகொள்கிறது.
சிந்தனை அடிப்படையில் வரையறைக்குட்பட்டது; இந்த காரணத்திற்காக அதனால் எல்லையின்மையை அடைய முடியாது என்ற கருத்து, அறிவில் சிந்தனையின் இயக்கம் பற்றிய தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கான்ட்,அல்-கஸாலி – இருவருமே சிந்தனையை, அறிவின் செயல்பாட்டில், அதன் சொந்த எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதைக் காணத் தவறிவிட்டனர். எண்ணத்தை முடிவுறாததாகக் கருதுவது தவறு; அதன் போக்கில், வரையறைக்குட்பட்ட எண்ணம் எல்லையின்மையுடன் கைகுலுக்கும் தன்மையுடையது.
கடந்த ஐநூறு ஆண்டுகளாக இஸ்லாத்தில் மதச் சிந்தனை நிலையானதாக எந்தவித அசைவுமின்றி இருந்து வருகிறது. நவீன வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆன்மீக ரீதியாக இஸ்லாமிய உலகத்தின் மேற்கு நோக்கிய வேகமான நகர்வு. இந்த இயக்கத்தில் எந்த தவறும் இல்லை, ஏனெனில் ஐரோப்பிய கலாச்சாரம், அதன் அறிவுசார் அணுகுமுறையில், இஸ்லாமிய கலாச்சாரத்தினுடைய முக்கியமான கட்டங்களின் மேலதிக வளர்ச்சி மட்டுமே. ஐரோப்பிய கலாச்சாரத்தின் திகைப்பூட்டும் வெளிப்புறமானது இஸ்லாமின் இயக்கத்தை தடுத்து நிறுத்தி, அந்தக் கலாச்சாரத்தின் உண்மையான உள்நிலையை உள்வாங்கிக் கொள்ளாமல் செய்துவிடுமோ என்பது மட்டுமே இஸ்லாமியர்களின் பயம். எனவே, இஸ்லாத்தின் மறுமலர்ச்சியுடன், ஐரோப்பாவின் சிந்தனைகள் மற்றும் அவை எட்டிய முடிவுகள், இஸ்லாத்தின் இறையியல் சிந்தனையின் மறுசீரமைப்பிலும், தேவைப்பட்டால். மறுகட்டமைப்பிலும், எவ்வளவு தூரம் உதவக்கூடும் என்பதை சுதந்திரமான உணர்வில் ஆராய்வது அவசியம்.
இந்த நூலில் மொத்தம் ஏழு கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையைத் தான் இதுவரை வாசித்திருக்கிறேன். ”காஷ்மீரி பிராமணர்களின் வாரிசு ஆனால் ரூமி மற்றும் தப்ரிஸின் ஞானத்தை அறிந்தவன்” என்று தம் நண்பர்களிடையே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்ட அல்லாமா இக்பால் ஞானம் மற்றும் சமய அனுபவங்குறித்து விரித்துரைக்கும் முதல் கட்டுரை சுவையாக இருந்தது. மற்ற கட்டுரைகளை வாசிக்க காத்திருக்க முடியவில்லை. பெருநாளுக்குப் பிறகு இந்த நூலின் வாசிப்பைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.
மடாலயம் எனுந்தலைப்பில் இக்பால் எழுதிய சிறுகவிதை ஒன்று –
அடையாளங்கள் மற்றும் சின்னங்களில் பேசுவது இந்த காலத்துக்கானதில்லை,
கலைநயத்தோடு இளிப்பவர்களின் கலை எனக்கு தெரியாது;
‘எழுந்திரு, கடவுளின் பெயரால்!’ என்று சொன்னவர்கள் இப்போது இல்லை.
உயிருடன் இருப்பவர்கள் எல்லோரும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கல்லறை தோண்டுபவர்கள்
