அசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்  

lemon-and-a-water-jug
@Maria Singh

இருட்டைத் துழாவித் 
தடுமாறிய போதினில்
விட்டு விட்டு ஒளிரும்
மின்மினிப் பூச்சி
வெளிச்சத்துள் தள்ளும் வாயில் 
சற்று தொலைவில் இருப்பதை
அறிவிக்கிறது

நீ புரட்டும் புத்தகத்தின் 
ஏதோ ஒரு பக்கத்தில் 
இடப்புற 
முதல் பத்தியில்
இருக்கக்கூடும்
நம்பிக்கைச் செய்தி

உன்னை பாதுகாப்பேன்
என்னும் உத்திரவாதத்துக்கு
எத்தனை வாக்குமூலம்
வேண்டும் உனக்கு?
உன் சன்னலைத் திற
புறத்தே நோக்கு
வானில் மிதக்கும் அந்த நிலவு
நீ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
வீட்டுக் கூரை
சில நொடிகளில்
உன் மேல் படரப்போகும்
உறக்கம்
உன் தாகம் தணிக்க
தயார் நிலையில் நிற்கும்
நீர் நிரம்பிய பிளாஸ்டிக் கூஜா

பலப்பலவாய்
உன் கண் முன்னே
நினைவூட்டற்குறிகள் 

எதிர்பாராதவை நிகழ்கையில்
நீ அடையும்
தடுமாற்றம்
என்னுடைய சிறு விளையாட்டு
முரண்பாடுகளை
சமன்பாடுகளாக்கும்
என் லீலை

என் விளையாட்டில்
பங்கு கொள்
Humour me

அடுத்த காட்சி
தொடங்குவதற்கு
திரைச்சீலையை
விலக்கச் செல்கிறேன்

Franz Kafka’s Couriers

அவர்களுக்கு ஒரு தெரிவு அளிக்கப்பட்டது – அரசர்கள் ஆகலாம் அல்லது அரசர்களுக்குச் செய்தி தெரிவிப்பவர்கள் ஆகலாம். குழந்தைகள் வழக்கமாகத் தேர்ந்தெடுப்பதைப் போல அவர்கள் அனைவரும் செய்திகள் சேகரித்து அவற்றைத் தெரிவிப்பவர்கள் ஆனார்கள். ஆகையால் இந்த உலகைச் சுற்றித் திரிந்தபடி – அரசர்கள் இல்லாது போனபின் – அர்த்தமிழந்து போன தகவல்களை மட்டும் ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக் கொள்ளும் செய்தி தெரிவிப்பாளர்கள் அவர்கள். இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று அவர்களுக்கு விருப்பந்தான் ; என்ன செய்ய? அவர்கள் வரித்துக்கொண்ட சேவைக்கான உறுதிமொழி தான் அவர்களைத் தடுக்கிறது.

ஏரி – கவிஞர் சல்மா

ஸல்மா

ஏரி
ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
ஏரி சலனமற்றிருக்கிறது
சில நாட்களுக்கு முன்
தயக்கமின்றி உன்னிடமிருந்து
காலியான மதுக்கோப்பைகளை
விட்டெறிந்திருந்தாய் அதில்
மறுக்காமல் பெற்றுக்கொண்டது
ஏரி
பிறகொரு நாள்
நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
நேற்றுகூடக்
கசந்துபோன நம் உறவினை
இகழ்ந்து எச்சில் துப்பினாய்
தண்ணீரில்
எந்தக் காலமொன்றில்லாமல்
எல்லாக் காலங்களிலும்
உன் கழிவுகளைக் கொட்டி
உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
இன்று இதில் எதையும்
நினைவுறுத்தாது
உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்
உன் அசுத்தங்களை
அடித்துக் கொண்டுபோக
இது நதியில்லை
ஏரி
சலனமற்றுத் தேங்கிய நீர்
பத்திரமாய்ப் பாதுகாக்கும்
ஏதொன்றும் தொலைந்துபோகாமல்
எனது வண்ணத்துப் பூச்சிகள்
அறைச் சுவரில்
நான் விட்டுச் சென்ற
எனது வண்ணத்துப் பூச்சிகள்
தமது பசை உதிர்ந்து
பறந்து சென்றிருக்கலாம்
நான் திரும்புவதற்குள்
 

பாதைகள்

 அலமாரியில்
அறைச் சுவரில்
சுழலும் மின்விசிறியில்
மோதித் தெறிக்கும் வெளவால்
பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து
கடலின் நீலத்தையும்
மலைகளின் கூட்டங்களையும்
கடந்து வரும் பறவைகள்
இதுவரை
தொலைத்ததில்லை
தம் வழியை
 
பிறழ்வு
நான் பார்த்தறியாத
உலகைக்
குற்றவுணர்வுகளின் சங்கடங்களின்றி
எனக்குத் திறந்துவிடும்
உன் ஆர்வத்தில் தொடங்கிற்று
நமது உறவின் முதலாவது பிசகு
வெகுவான பிரயாசைகளுக்கும்
மூச்சு முட்டல்களுக்கும் பிறகே
உருவாக்குவேன்
துளியளவு ஆட்சேபணையை
வாழ்வின் எழுதப்படாத ஒழுங்குகளைக்
காதோரத்தில் கிசுகிசுத்துக்கொண்டேயிருக்கும்
அசரீரிகள்
இன்றைய உணவை
இக்காலத்தின் எனது உடைகளை
அவற்றின் வேலைப்பாடுகளை
இன்னும் என் உடலில் மறைக்கப்பட
வேண்டிய அவயவங்களை
காலில் சுற்றி வீழ்த்தும்
கண்ணுக்குப் புலப்படாத வேலிகள்
அச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை
தன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு
இந்த இருப்பின் தடங்களை
நாளையும் சரிபார்க்கவென மட்டுமே
அஸ்தமிக்கும் இந்தப் பொழுது
யாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற
நேற்றைய உணவின்
விதியிலிருந்து விலகி
கூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு
இந்த வெற்றுப் படுக்கைகளை
தந்துவிட்டு
வெட்டவெளியொன்றில்
தூங்க ஓரிடம் தேடினால் என்ன?
இன்று
ஒரு நாளைக்கேனும்
இந்த சங்கடங்கள் தன்னால்தானென
நம்மில் ஒருவர்
பொறுப்பேற்றால் என்ன
அல்லது
நம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல
இன்னொருவர் உதவினால் என்ன
இதில் ஏதும் இல்லையெனில்
ஏதேனும் வழியொன்றைத்
தேட முயல்வோம்
இந்த இரவை விடியாமல் செய்ய
காலப் பதிவு

விபத்திலிருந்து மீண்ட நாளின் உடை

நாம் சந்தித்துக் கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரணச் செய்தி
வந்து சேர்க்கையில்
என் கண்களைக் கடந்த
சிவப்பு வண்ணக் கார்
நகர்வதில்லை காலம்
படிந்து உறைகிறது
ஒவ்வொன்றின் மீதும்
 (இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)