தினமும் படுக்கையிலிருந்து எழும்ப தாமதமாகிறது. பல நாள், படுக்கையிலிருந்து நேராக குளியலரைக்குத்தாவி முகம் கழுவி, உடையணிந்து அலுவலகம் கிளம்பும் கட்டாயத்துக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இதில் மனைவி தரும் "பெட் காபி" கூட குடிக்க முடியாமல் போய்விடுகிறது.
"குழந்தை அதிகாலை பள்ளிக்கு கிளம்பி செல்கிறது. அதற்கு என்றாவது "டாட்டா" சொல்லியிருக்கிறீர்களா? உங்களுக்கு உங்கள் ஆபிஸ் உங்கள் தூக்கம் – இவைதான் முக்கியம். குழந்தை பெற்றால் மட்டும் போதாது. அன்பு காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்." மனைவியிடமிருந்து பெறும் தினசரி அர்ச்சனை. அவள் "கிளம்பிசெல்கிறது" என்று அக்றினையில் சொன்னது என்னை இல்லை. என் மகள் நிவேதாவை. அன்பின் மிகுதியாக.
நிவேதா ஆறு மணிக்கு விழித்து, தயாராகி, அவளுடைய அம்மாவுடன் தெரு இறுதிக்கு சென்று, பஸ்சுக்காக காத்திருந்து நல்ல பிள்ளையாக பள்ளிக்கு சென்றுவிடுவாள். நான் எட்டு மணிக்கு குறைவாக விழித்ததாக ஞாபகமே இல்லை. சீக்கிரம் எழுந்துவிடலாம் தான், ஆனால் அதற்கு சீக்கிரம் தூங்கிவிடுவது அவசியம்.மாலை எட்டு மணியாகிறது வீடு திரும்புவதற்கு.இரவு உணவு உட்கொண்டு, மனைவியுடன் சிறிது நேரம் பேசி, அவள் தூங்கும்போது மணி பத்தாகிவிடுகிறது. பிறகுதான், எனது படிக்கும் நேரம் தொடங்குகிறது.
எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை, இரு பக்கம் படித்துவிட்டு, இரு மணிநேரம் யோசிப்பேன். சில வாக்கியங்கள் என்னுள் வெகு ஆழமாக ஊடுருவும். அதைப்பற்றியே நெடு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருப்பேன். பிடித்த வரிகளைக்கோடிட்டு அதனை ஒரு வெற்றுக்காகிதத்தில் எழுதிப்பார்ப்பேன். அப்படி எழுதிப்பார்கையில் வேறு ஏதாவது அர்த்தம் பிடிபடுகிறதா என்று பார்ப்பேன்.
தூங்குவதற்கு முன்னாள் ஒரு இலக்கியப்புத்தகத்தை படிப்பதில் உபயோகம் என்னவென்றால் படித்த வரிகளை மனதில் அமைதியுடன் அசை போடலாம்.
பகல் நேரம் முழுக்க அலுவல்களில் கழிந்துவிடுவதால், மனம் ஏதாவது ஒன்றில் உழன்றவண்ணம் இருக்கிறது. இரவின் அமைதியில், நிசப்தத்தின் சுகத்தில் சுந்தர ராமசாமியுடனோ புதுமைப்பித்தனுடனோ எண்ணவுலகத்தில் சஞ்சரிப்பது மனதை குளுமைப்படுத்துவது போல் இருக்கிறது. (இந்த இரு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பெயர்களை வெறுமனே இங்கு எழுதவில்லை. இவர்களில் ஒருவர் சற்று நேரத்தில் மேற்கோள் காட்டபடுவார்.) ஆனால் சிறு பிரச்னை. நான் படுக்கையறை விளக்கை உடனே அணைக்காமல், வெகுநேரம் விழித்திருப்பதால், ஒரு சுந்தரியுடனோ அல்லது புவனேஸ்வரியுடனோ குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக என் மனைவி எண்ணிவிடுகிறாள். அதிர்ஷ்டவசமாக, அவள் தூக்கத்தில் இருப்பதால், கோபம் கொள்வது பகல் வரும்வரை தள்ளிவைத்துவிடுகிறாள். இப்போதெல்லாம் கைத்தொலைபேசியை ஹாலிலேயே வைத்துவிட்டுத்தான் படுக்கையறைக்குப்போகிறேன். ஒரு சண்டைக்கான சந்தர்ப்பம் மிச்சம் பாருங்கள்.
+++++
ஒரு நாளிரவு சுந்தர.ராமசாமியின் "அகம்" என்ற சிறுகதை படித்தேன். ஜானு என்ற சிறுமியை பற்றியது.
சிறுவயதில், எனக்கு "டீஸல்" நெடி அலர்ஜி. பேருந்தில் போகும்போதோ பெட்ரோல் விற்கும் இடங்களில் நிற்கும்போதோ ஒரு மாதிரியான அவஸ்தை உண்டாகும். பேருந்தில் என் பக்கத்தில் உட்கார்ந்தவர்கள் அசிரத்தையாய் இருந்தால் தொப்பலாக நனைந்துபோவார்கள்.
“அகம்” சிறுகதையை படிக்கும்போது அதே போன்றதோர் அவஸ்தையால் வயிறு பிசைவது போன்ற சங்கடமேற்பட்டது.
ஜானு பள்ளி போகும் சிறுமி. அம்மாவுடன் இருக்கிறாள். அப்பா வேலை சம்பந்தமாக வேறெங்கோ இருக்கிறார். ஜானுவுக்கு அப்பாமேல் அளவு கடந்த பாசம். ஆனால், அப்பா வருடத்திற்கு ஒரு முறைதான் வருவார். அவள் அம்மா மருத்துவர் ஒருவருடன் "நெருக்கமாக" இருக்கிறாள். முதலில் ஜானுவுக்கு அந்த மருத்துவர் "மாமா"வை பிடித்துதான் இருந்தது. நாள் போகப்போக ஒருவெறுப்பு. பிக்னிக் போனால், அம்மாவும் டாக்டரும் ஜானுவை கார்-இல் தனியே உட்காரவைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். மருத்துவர் முன்னால் அம்மா ஜானுவிடம் அகம்பாவமாக நடந்துகொள்ளுகிறாள். மருத்துவரை ஜானு புறக்கணித்தாலும் அம்மாவிற்கு பிடிப்பதில்லை. ஒரு முறை ஜானு-வுக்கு காய்ச்சல் வரும்போது மூர்க்கத்தனமாக டாக்டரிடம் நடந்து ஊசி போடவிடாமல் செய்கிறாள். அப்போதுதான், அம்மாவிற்கு கொஞ்சம் உரைக்கிறது. மருத்துவரை இனிமேல் வரவேண்டாம் என்று சொல்ல, மருத்துவர் கோபமாகி "நீ என்ன உத்தமியா?" என்று மிரட்டி, அம்மாவை அவளுடைய அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். இதைக்கண்ட ஜானு, உணர்ச்சிவேகத்தில், டாக்டரின் காருக்குள் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன்-ஐ திறந்து ஊற்றி காரை எரிக்கப்போக, தீ வீட்டுக்குள்ளும் பரவி. மூவரும் கரிந்து இறந்துபோகிறார்கள்.
கதையை இப்படி முடித்து விட்டாரே என்று எழுத்தாளரின் மேல் வந்த கோபத்தை விட, பொருளீட்ட வெகுதூரம் போய், மனைவி மற்றும் மகளின் மனநிலையையே புரிந்துகொள்ளாத அந்த முகம் தெரியாத பாத்திரத்தின் மேல் அதிககோபம் வந்தது.
+++++
நிவேதா தானே தனக்குள் பேசிக்கொண்டு ஓரங்கநாடகம் போன்று எதையோ அவளுடைய படிக்கும் அறையில் அரங்கேற்றிகொண்டிருந்தாள். அதை கதவுமறைவில் ஒளிந்துகொண்டு இன்னும் கொஞ்ச நேரம் ரசித்திருக்க வேண்டும். என்னை பார்த்த மாத்திரத்தில் ஓரங்கநாடகம் நின்றுபோனது. அரைகுறையாக உடைந்த முன்பல்லைகாட்டி புன்னகை செய்தாள்.
"என்னம்மா செல்லம்…பண்ணிட்டிருக்கே?"
"சும்மா" – கன்னம் குழி விழுகிறதோ லேசாக? நான் ஏன் இதை முன்னரே கண்டிருக்கவில்லை?
"இந்த தடவை செல்லத்துக்கு பொறந்த நாளுக்கு என்ன வேணும்? "
இதற்குள் மனைவி எங்கள் உரையாடலில் புகுந்தாள். "அடேங்கப்பா…என்ன ஆச்சர்யம்…அப்பாவுக்கு நிவேதா செல்லத்தோட பர்த்டே ஞாபகம் இருக்கே? – என் கையில் கைதொலைபேசியோ அல்லது புத்தகமோ இல்லையே!
அப்புறம் எங்கள் உரையாடல் வேறு திசையில் சென்று விட்டது. லௌகீகமாக. நிவேதாவின் கன்னக்குழியை பற்றி மனைவியிடம் பேச மறந்தேபோனேன்.
நிவேதாவின் பிறந்த நாளன்று வைகறை துயிலெழுந்து வாழ்த்து சொல்லவேண்டுமென்ற என் திட்டம் தவிடுபொடியானது. எட்டு மணிக்கு தான் எழுந்தேன். கொத்தவரங்காயை கத்தியால் நறுக்கிகொண்டிருந்த மனைவி சுப்ரபாதம் பாடாரம்பித்தாள். வெங்கடேச பெருமாளுக்கு ஏற்கனவே பாடிவிட்டபடியால், இரண்டாவது தடவை எனக்கு, அதுவும் தமிழில்.
"குழந்தையோட பிறந்தநாள்னு பேரு…உங்களுக்கே கார்த்தாலே எழுந்து விஷ் பண்ணனும்னு கூட தோணலை.. ஹும் என்ன சொல்றது"
+++++
அலுவலகம் செல்லாமல் நேராக ஒரு அன்பளிப்புகள் வாங்கும் கடைக்கு சென்றேன். பொம்மைகள், விளையாட்டு பொருள்கள், எழுது பொருட்கள், கார்ட்டூன் குறுந்தட்டுகள், என்று எல்லாவற்றையும் பார்த்தேன். எதை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், கடைக்குள்ளின் ஓர் ஓரத்தில், ஒரு மேசை போட்டு அதற்கு பின்னால் நின்றிருந்த பெண்ணை பார்த்தேன். இல்லை அவள் புன்னகைக்கும்போது கன்னகுழி தோன்றவில்லை. சர்வேதேச கருணை இல்லங்களுக்கு நிதியளிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரிட்ட பலகை மேசையில் இருந்தது. அணுகி விவரங்களை விசாரித்ததில், விசித்திரமான ஒரு திட்டத்தை பற்றி சொன்னாள். ஏதாவது அன்பளிப்பு வாங்க வருபவர்கள், இந்த நிதி நிறுவனத்துக்கு நன்கொடையளித்தால் அவர்கள் வாங்கும் அன்பளிப்பில் 50 % கழிவு அளிக்கப்படும். அந்த கடைக்காரர்களுக்கு இது எந்த விதத்தில் லாபமென்று எனக்கு புரியவில்லை. நான் நன்கொடை எதுவும் அளிக்கவில்லை. நிவேதாவுக்கு ஒரு பார்பி பொம்மையை வாங்கினேன்.
அலுவலகத்துக்கு அதை எடுத்துப்போனேன். சக ஊழியர்கள், "என்னப்பா யாருக்கு பரிசு வாங்கிகிட்டு போறீங்க? கேர்ள்பிரெண்ட்-க்கா?" என்று கேலி பண்ணினார்கள். வண்ணக்காகிதம் கொண்டு பாக் செய்யப்பட்ட அந்த பார்பி டாலை, பேருந்தில் கொண்டுபோனால் வசதியாக இருக்காது. சக ஊழியர்கள் வாயினால் சொன்னதை, சக பயணிகள் மனதிலேயே நினத்துக்கொள்ளக்கூடும். எனவே, ஆட்டோ-வில் வீட்டுக்கு போகலாமென்று முடிவெடுத்தேன்.
+++++
பரிசுப்பொருள் வீட்டை அடையும் முன்னரே தொலைந்துபோனது. எவ்வளவு யோசித்தும், பார்பி பொம்மையை எப்படி இழந்தோமென்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. காலையில் வாங்கினேன் அதை அலுவலகம் எடுத்துவந்தேன். நண்பர்கள் அதைப்பற்றி சிலாகித்தபோது கூட, என் மேசையின் பக்கவாட்டிலேயே கிடந்தது. சாப்பாட்டு இடைவேளை முடிந்து திரும்பியபோதும் பொம்மை பத்திரமாகவே இருந்தது. ஆட்டோவில் ஏறும்போது…..? அதை எடுத்துக்கொண்டோமா?…ஆட்டோ பழுதுபட்டு பாதியிலேயே நின்றதே…அப்போது அந்த பொம்மை கையில் இருந்ததா? மழை தூற்ற ஆரம்பித்தபோது, அதில் நனைந்து கொண்டிருந்தபோது….ஹும் இல்லை…அப்போது பொம்மை என் கையில் இல்லை…வந்த பேருந்தில் முட்டியடித்து ஏறியபோது…இல்லை…எனவே, ஆட்டோ-வில் இருந்திருக்கவேண்டும்…அல்லது…நாளை அலுவலகம் போய் தான் பார்க்கவேண்டும்… பஸ் ஸ்டாப்-இலிருந்து ஆமை நடை போட்டு வீடு வந்தேன்.
"என்னங்க இவ்வளவு லேட்டு…இத்தனை நேரம் நிவேதா உங்களுக்காகத்தான் முழிச்சிண்டிருந்தாள்..அப்பா வாங்கி குடுத்த கிப்டு அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது…அதுவும் சர்ப்ரைஸ்-ஆ உங்க ஆபிஸ்பையன் மூலமா சாயந்திரம் வீட்டுக்கு அனுப்பிவச்சது . அது எனக்கு ரொம்ப பிடிசிருந்தது"
+++++
படுக்கைக்கு வந்தேன்…இன்று புத்தகம் படிக்கலாமா நேற்று படித்துக்கொண்டிருந்த சிறுகதை தொகுதியில் இன்னும் ஒரு கதை மிச்சமிருந்தது.
தலையணைக்கு கீழே ஒரு உறை இருந்தது…அதை எடுத்தேன்…
"நிவேதா இன்னிக்கி ஸ்கூலுக்கு தன்னோட பிரெண்ட்ஸ்-க்கு குடுக்க டாபி எடுத்துக்கிட்டுப்போனா..அப்போ அவ கிளாஸ் டீச்சர் நிவேதா கிட்ட இந்த டாபி பாக்கெட்டை ஒரு கருணையில்லத்துக்கு கொடுத்தா…உனக்கு பரிசு கூப்பன் கிடைக்கும். அத வச்சி உனக்கு புடிச்சது ஏதாவது வாங்கிக்கலாம்னு சொல்லியிருக்காங்க …இவ உடனே டாபிஸ் எல்லாத்தையும் டொனேட் பண்ணிட்டா…அப்பாக்கு இத சர்ப்பரைஸ்-ஆ குடுக்கணும்னு கிப்ட் கூப்பன்-அ உங்க தலகாணிக்கு கீழே வச்சிட்டு தூங்கிட்டா" – பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கிய குரலில் மனைவி பேசினாள்…
அன்று இரவு படுக்கையறையின் லைட் சீக்கிரமே அணைந்துவிட்டது.