அமைதியின் சத்தம் அல்லது பலரின் ஒற்றைக் குரல்

Thanks The Hindu

பெருமிதமா? நெகிழ்வா? எழும் உணர்வை துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. கைலாஷ் சத்யார்த்தி – யூசஃப்சாய் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் காண்கையில் ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது?

ராஹத் ஃபதே அலி கான் தன் தந்தையின் அமர கவாலி “அல்லாஹூ அல்லாஹூ” வை மண்மணம் கமழ பாடுகையில் மனவெழுச்சி தணிந்து சமநிலையடைந்தது போலிருந்தது. நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பரிசு பெறும் இரட்டையரைப் பற்றிய அறிமுகவுரையைத் துவக்கினார். மஹாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றோடு முடித்தார்.  “நான் ஏற்கும் ஒரே கொடுங்கோலன் என்னுள் கேட்கும் அசைவிலாத உட்குரல் தான்” (“The only tyrant I accept is the still, small voice within me.”) “தத்தம் உட்குரலைக் கேட்ட” இருவருக்கும் மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சான்றிதழை அருகில் நின்றிருந்தவரிடம் சற்று நேரத்துக்கென கொடுத்துவிட்டு மெடலை உயர்த்திப் பிடித்தார் மலாலா. சத்யார்த்தியையும் உயர்த்திப் பிடிக்கச் சொன்னார். கை தட்டல் சில நிமிடங்களுக்கு நீடித்தது.

பரிசளிப்புக்குப் பிறகு ஓர் இசை இடைவேளை. சரோத் கலைஞன் அம்ஜத் அலி கான் தன் புதல்வர்கள் இருவருடன் சேர்ந்து “அமைதிக்கான ராகம்” என்ற இசை மீட்டினார்.

கைலாஷ் சத்யார்த்தி தன் உரையை முதலில் இந்தியில் தொடங்கினார். பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென ஒரு பக்கம் ‘மிஸ்’ ஆவதைக் கவனித்தார். சில வினாடிகளுக்கு அவருள் ஒரு பதற்றம். சில வினாடிகள் தாம். “மாநாடுகளில் உரையாற்றுவதன் வாயிலாகவோ, தூர நின்று கொடுக்கும் பரிந்துரைகளினாலோ பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை…..நண்பர்களே, இப்போது என் பிரச்னை என் உரையின் ஒரு பக்கம் எனக்கு கிடைக்காமல் இருப்பது தான்” என்று சொல்லவும் ஆங்காங்கு மெலிதான நகைப்பொலிகள் எழுந்தன. நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சிறிது நேரத்தில் ஒரு தாளை அவரிடம் கொடுத்ததும் “இதற்கு முன்னர் வேறொரு நோபல் இது மாதிரி நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை…நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி இன்று என்னென்னவோ நடக்கிறது….தைரியமிக்க ஓர் இளம் பாகிஸ்தானிய பெண் ஒர் இந்தியத் தந்தையையும், ஒர் இந்தியத் தந்தை ஒரு பாகிஸ்தானிய மகளையும் சந்தித்த நாளல்லவா இது!” என்று சத்யார்த்தி பேசினார். கருணையை உலகமயமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உரையை முடிக்கும் தறுவாயில் பார்வையாளர்களை கண்களை மூடிக் கொண்டு இருதயப் பகுதியைத் தொட்டுக் கொள்ளச் சொன்னார். “உங்களுள் இருக்கும் குழந்தையை உணருங்கள்…அது சொல்வதைக் கேட்க முயலுங்கள்….அக்குழந்தை சொல்வதைக் கேளுங்கள்….” பிரகதாரண்யக உபநிஷத்தில் வரும் இறவா வரிகளுடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.

“அசதோமா சத் கமய

தமசோமா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய”

பாகிஸ்தானியப் பெண் பேசத் தொடங்கும் முன்னர் எல்லை காந்தி பாச்சா கானின் புத்திரர் கனி கானின் கவிதைகளை சர்தார்அலி டக்கர் பாடினார். பஷ்தோ பெண்ணான மலாலா கவிதைகளை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

பின்னர், மலாலா பேசத் தொடங்கினார்.  ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானீர் ரஹீம்’ என்று புனித குரானின் சொற்களோடு துவங்கினார். தன் சிறகுகளைக் கட்டிப் போடாத தாய்-தந்தையருக்கு நன்றி செலுத்தினார், கல்வி மறுக்கப்படும் ஆறு கோடி சிறுமிகளின் பிரதிநிதியாக இப்பரிசை ஏற்பதாகக் கூறினார். பாகிஸ்தானின் ஸ்வாத் பிரதேசத்தில் பள்ளி சென்ற போது அவருடன் படித்த அவடைய நண்பர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். தீவிரவாதிகளால் மலாலாவுடன் சேர்த்து சுடப்பட்ட அவருடைய தோழிகள் – ஷாசியாவும் கைநாத்தும் – பார்வையாளர்களில் இருந்தனர். போகோ அராம் என்னும் தீவிரவாத கும்பலின் பயங்கரவாதத்துக்கு தினம் தினம் பலியாகிக் கொண்டிருக்கும் வடக்கு நைஜீரியப் பெண்களில் ஒருவரான ஆமினாவும், பெண் கல்விக்காக சிரியாவில் போராடி இன்று ஜோர்டானில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மேசோன் என்பவரும் நோபல் பரிசு நிகழ்வுக்கு வந்திருந்தனர். அந்நால்வரும் மலாலா உரையின் போது ஆர்வத்துடன் கை தட்டியவாறும் கைத் தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்தவாறும் இருந்தனர்.

“நான் என் கதையை சொல்வது அது வித்தியாசமானது என்பதால் இல்லை ; அது வித்தியாசமானதாக இல்லை என்பதால்.

இது பல பெண் குழந்தைகளின் கதை.

நான் அவர்களின் கதைகளையும் சொல்கிறேன்.

அணிந்திருக்கும் காலணியின் உயரத்தையும் சேர்த்து ஐந்தடி இரண்டங்குல உயரமான ஒற்றைப் பெண்ணாக நான் தோற்றமளித்தாலும். என் குரல் தனிக்குரலன்று. பலரின் குரல்கள் என்னுள் ஒலிக்கின்றன.

நான் மலாலா. நான் ஷாசியாவும்.

நான் ஆமினா

நான் மேசோன்”

மலாலா உரையை முடித்து தன் இருக்கைக்குச் செல்லும் வரை அவையோர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தன் இருக்கையை அடைந்ததும் மார்பில் தன் வலது கரத்தை வைத்து அவையோரின் கரவொலியை பணிவுடன் ஏற்றுக் கொண்டு உட்காரலாம் என்று மலாலா இருக்கையில் அமர எத்தனிக்கையிலும் கரவொலி நிற்கவில்லை. மலாலாவின் கை அவர் மார்பில் பதிந்தவாறே இருந்தது.

இரு நாடுகள் ; ஒர் இந்து ; ஒரு முஸ்லீம் ; அறுபது வயது ஆண் ; பதினேழு வயது சிறுமி ; வித்தியாசங்கள் அர்த்தமிழந்து மனிதம் என்னும் ஓருணர்வில் கலப்பதற்கான சாத்தியத்தின் சிறு மங்கலான மினுக்கொளியை இந்நிகழ்வில் காண முடிந்தது.

கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு ஏற்புரை

மலாலாவின் நோபல் பரிசு ஏற்புரை