நானுந்தான்

சமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால நிகழ்வு பற்றிய பதிவு எழுதுவதன் நோக்கம் மானசீக குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி வைப்பதே.

சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை மிக அருகில் இருந்து என் அலுவலக சூழலில் கவனித்திருக்கிறேன். அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நொய்டாவில் சில வருடங்களுக்கு முன்னால் வேலை பார்த்த சமயத்தில் என் உயர் அதிகாரியினுடைய காரியதரிசியின் அனுபவங்கள், அதே நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த ஒரு பெண் மேலாண்மை இயக்குனரின் கண்ணில் பட்டு அவரின் உதவியாளராக்கப்பட்டு அதிக சம்பளம் என்ற மகிழ்ச்சி ஒரு வாரம் மட்டுமே நிலைத்து நிற்க கிழிந்த உடைகளுடன் அவள் அழுது கொண்டே ஓடிப் போனதை அனைவரும் பார்த்த நிகழ்வு, மேலும் பல வருடம் முன்னர் புனாவில் வேலை பார்த்த ஒரு குட்டி நிறுவனத்தில் பத்தொன்பது வயது பெண் ஊழியரை தன் காதலி என்று வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டு அவளின் பெயருக்கு களங்கம் விளைவித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்….அகமதாபாதில் வேலை பார்த்த நாட்களில் நண்பன் ஒருவன் வேலை பார்த்த நிறுவனத்தில் ஓர் அழகான தமிழ்ப்பெண்ணை தன் சொந்த பண்டமாக உபயோகித்த அந்த நிறுவன முதலாளி…..இத்தகைய நிகழ்வுகள் என் நினைவில் திரும்ப வந்து என்னை இந்நாட்களில் குற்றவுணர்வில் மூழ்கடித்திருக்கின்றன. அமைதி. அதுதான் நான் செய்த குற்றம். தட்டிக் கேட்க முடியா கோழைத்தனம் நம்மை நாம் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நம்மிடமிருந்து பறித்து விட்டிருக்கிறது. அந்த மீ டு செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் மகளிர் பட்ட வலியை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் vicarious-ஆக உணர முயல்வார்களா? மேற்சொன்ன படியான நிகழ்வுகள் நடக்குமெனின் அதை கேள்வி கேட்கும் தைரியத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்வார்களா? வேலையிடத்தில் மகளிரை பாலியல் ரீதியாக நோக்குவதையோ பாலியல் இச்சைகளை பிரஸ்தாபிப்பதையோ அதற்கென அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்துவதையோ எண்ணிக் கூடப் பார்க்காதவனாக இருப்பேன் என்ற பிரதிக்கினையை ஒவ்வோரு ஆண்மகனும் ஏற்றுக் கொள்வானா? வெறும் வாய்வார்த்தையில் மட்டுமில்லாமல் தன் நடத்தை வாயிலாகவும் பெண்களுக்கு எப்போதும் மரியாதை செலுத்துபவனாக ஆண்கள் இயல்பு மாற்றம் கொள்வார்களா?

பாலியல் துன்புறுத்தலில் நான் பங்கேற்றிருக்கிறேனா? இந்த கேள்விக்கு பதில் இல்லையென்பதாக இருக்கலாம். ஆனால் அமைதி காத்திருக்கிறேன். இல்லையென்று சொல்ல முடியாது. அன்று காத்த அமைதி என்னையும் அந்த துன்புறுத்தல்களில் பகுதி-பங்கேற்பாளன் ஆக்கியிருக்கிறது. ஆம். குற்றவாளிதான். நானுந்தான்.

பிரதிபலிப்பு


மிருகக் காட்சி சாலையின்

முகப்பில்

கம்பீரமாக

தசைகள் புடைக்க

மிடுக்குடன்

வீரமாக உறுமுவது போல

நிற்கும் சிங்கத்தின் சிலை.

கூண்டுக்குள்

பிடறி எலும்பு தெரிய

ரோமம் உதிர்ந்து

பாவப் பட்ட பார்வையுடன்

தரையில் போடப்பட்ட காய்ந்த புற்களை

நக்கிக் கொண்டிருக்கும்

நிஜச் சிங்கம்.