எதிர்பார்க்கின்ற நிகழ்வுக்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள இடைவெளி,
காலவோட்டத்துடன் எதிர்பார்ப்பு சேரும்போது உருவாகும் உள்ளுணர்ச்சி
காத்திருத்தல் !
காத்திருத்தல் அவஸ்தை
காத்திருத்தல் சுகம்
+++++
எதிர்பார்ப்பு மறைந்தால் காத்திருப்பும் இறந்துபோகும்.
காத்திருத்தல் இல்லாவிடில்
காலவோட்டத்தின் வெறுமை பூதாகரமாய் காட்சியளிக்கும்.
காலவோட்டத்தின் உணர்வு கலந்த அர்த்தப்படுத்தலே எதிர்பார்ப்பு
+++++
எதிர்பார்ப்பு சுயநல வண்ணம் கொண்டு
நாடகம் போல முன்னரே எழுதப்பட்ட
ஒவ்வொரு காட்சியும் நிகழ்வாகவேண்டுமென்று அடம்பிடிக்கும்.
எதிர்பார்ப்பு லட்சிய வண்ணம் பூண்டு
காட்சிகள் எப்படி நகர்ந்தாலும் கவலையுறாமல்
உச்சக்காட்சியின் சுபத்தையே கனவு காணும்.
+++++
எதிர்பார்ப்பே இல்லையென்றாலும் நிகழ்வுகள் இருக்கும்.
நிகழ்வுகள் நாடகக்காட்சிகளின் ஒழுங்குடன் நகரா.
உச்சக்காட்சி என்ற ஒன்றுமிராது.
முடிவிலா நாடகமாய் நிகழ்வுகள்.
காட்சியின் கதையின் அர்த்தங்களை
நடிகர்களே கற்பித்துக்கொள்வார்கள்.
அர்த்தம் கற்பித்தலில் எதிர்பார்ப்புகள் உருவாகின்றன.
எதிர்பார்ப்புகள் உச்சக்காட்சியை அடையாளம் காட்டும்.
+++++
களைத்துப்போன நடிகர்கள்
கிளைக்கதையின் முடிவையே
காவிய முடிவென்று அறிவித்துவிட்டு
இளைப்பாற போய்விடுவார்கள்.