அசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்  

lemon-and-a-water-jug
@Maria Singh

இருட்டைத் துழாவித் 
தடுமாறிய போதினில்
விட்டு விட்டு ஒளிரும்
மின்மினிப் பூச்சி
வெளிச்சத்துள் தள்ளும் வாயில் 
சற்று தொலைவில் இருப்பதை
அறிவிக்கிறது

நீ புரட்டும் புத்தகத்தின் 
ஏதோ ஒரு பக்கத்தில் 
இடப்புற 
முதல் பத்தியில்
இருக்கக்கூடும்
நம்பிக்கைச் செய்தி

உன்னை பாதுகாப்பேன்
என்னும் உத்திரவாதத்துக்கு
எத்தனை வாக்குமூலம்
வேண்டும் உனக்கு?
உன் சன்னலைத் திற
புறத்தே நோக்கு
வானில் மிதக்கும் அந்த நிலவு
நீ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
வீட்டுக் கூரை
சில நொடிகளில்
உன் மேல் படரப்போகும்
உறக்கம்
உன் தாகம் தணிக்க
தயார் நிலையில் நிற்கும்
நீர் நிரம்பிய பிளாஸ்டிக் கூஜா

பலப்பலவாய்
உன் கண் முன்னே
நினைவூட்டற்குறிகள் 

எதிர்பாராதவை நிகழ்கையில்
நீ அடையும்
தடுமாற்றம்
என்னுடைய சிறு விளையாட்டு
முரண்பாடுகளை
சமன்பாடுகளாக்கும்
என் லீலை

என் விளையாட்டில்
பங்கு கொள்
Humour me

அடுத்த காட்சி
தொடங்குவதற்கு
திரைச்சீலையை
விலக்கச் செல்கிறேன்

சுட்டுணர்வு

சில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை”  கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திருந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை.

நேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது மணிமேகலையின் 29-ம் அத்தியாயத்தில் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. எதையோ தேடும் போது முன்னர் தேடிக் கிடைக்காது போன பொருள் கண்ணுக்குத் தட்டுப்படுமே அது மாதிரி கீழ்க்கண்ட வரிகள் என் பார்வையில் பட்டன.

ஆதி சினேந்திர னளவை யிரண்டே

ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்

சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி

விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்

மற்றவை யனுமா னத்துமடை யும்மென    (29 : 47-51)

“ஒரு பொருளின் பொருண்மை மட்டும் கண்டுணரும் உணர்வை காட்சியளவை என்று மேற்கொண்டு பிறராற் கொள்ளப்படும் பெயர், சாதி, குணம், தொழில் என்பவை கருத்தளவையிலும் அடங்கும் என அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர்”

– ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை

Pure sensation என்ற சொற்றொடரை சுட்டுணர்வு என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும் ; மணிமேகலை ஆசிரியர் வேறோர் இடத்திலும் சுட்டுணர்வை வரையறுத்திருக்கிறார்.

“சுட்டுணர் வெனப்படுவது ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்” (26 : 61-62)

சுட்டுணர்வு நிர்விகற்ப காட்சி ; நாம சாதிக் குணக்கிரியையின் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி. இவற்றை முறையே இந்திரிய ஞானம் என்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுவர். திக்நாகர் நாம சாதி முதலியவற்றை “பஞ்சவித கற்பனை” என்று குறிப்பிடுகிறார். சுட்டுணர்வென்பது சவிகற்ப காட்டிக்கு அடிப்படை ; சுட்டுணர்வு சவிகற்ப காட்சிக்கு வித்திடாவிடின் அது குறையுடையதாகும். இக்குறையை தருக்கவியல் நூலார் “பிரமாணாபாசங்கள்” எட்டனுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.

மாயை – ராம் சின்னப்பயல்

நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.

மாயை

எந்த மனநிலையிலிருப்பினும்
ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
மனம் போன போக்கில்
எங்கு சென்றாலும் எதோ ஒன்று
என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.

இப்படியாகவே இருக்கும்
என்னைத்தொடர்ந்தும்
உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு காட்சியாகவே
எப்போதும் நான்
இருந்துகொண்டுதானிருக்கிறேன்.

நன்றி : வல்லினம்