இரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்

சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது.

சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை கொடுத்து கொண்டிருந்தது. சதா அது பற்றிய சிந்தனையோட்டத்தினால் என் மனத்தில் மிகுந்த உளைச்சல். உடனடியாக அந்த அனுபவத்தின் விளைவைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் செய்யமுடியாத சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலை. 

நேற்றிரவு தூக்கமே வரவில்லை. கவனத்தை திசை திருப்ப பலவிதங்களில் முயன்றேன். ரூமி ஞாபகம் வந்தார். The Essential Rumi புத்தகத்தைப் புரட்டினேன். எந்த  குறிப்பான நோக்கமுமில்லாமல் ஒரு பக்கத்தில் நின்றேன். 

எனக்கென்ன ஆசையா
அவளோடு காலங்கழிக்க
அவள் பூசிக் கொள்ளும் வாசனையோ
அல்லது அணிந்து கொள்ளும் பிரகாசமான உடைகளோ –
இவை காரணமல்ல
அவளுடைய வெறுப்பு படிந்த பார்வையை
சகித்துக் கொள்ளுதல்
என்னுள் வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடுக்கிறது
அவள் என் பயிற்சி
இன்னோரு துருவப்பாதி இல்லாவிடில்
எதுவும் தெளிவுறுவதில்லை
இரு பதாகைகள்
ஒன்று கருப்பு இன்னொன்று வெள்ளை
இரண்டுக்கும் நடுவில் அன்றோ தீர்வு பிறக்கிறது
பாரோவுக்கும் மோசஸுக்கும்
நடுவில் செங்கடல் போல

மெலிதான அதிர்வு என்னுள். என்னுடைய சங்கடத்தை ரூமி அறிந்து கொண்டாரோ? எந்த அனுபவக் கூண்டுக்குள் சிக்கியுள்ளாயோ அதனுள்ளேயே இரு. வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடு.

The Essential Rumi-யை மூடி வைத்தேன். One Robe One Bowl எனும் ரியோகனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கையிலெடுத்தேன். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தேன்.

அழகு இருந்தால்
அசிங்கம் இருந்தாக வேண்டும்
சரி என்ற ஒன்று இருந்தால்
தவறு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும்
அறிவும் பேதைமையும் ஓர் இணை
மயக்கமும் ஞானமும்
பிரிக்கப்பட முடியாதவை
இது பழைய உண்மை
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதென
நினைக்காதே
“இது வேண்டும் அது வேண்டும்”
என்பது முட்டாள்தனமின்றி வேறில்லை
நான் உனக்கொரு ரகசியத்தைச் சொல்வேன்
“அனைத்து பொருட்களும் நிரந்தரமில்லாதவை”

ரியோகனுக்கும் என்னுடைய கவலை பற்றித் தெரிந்துவிட்டிருக்கிறது !  “இது வேண்டும் அது வேண்டும்” என விழைவது முட்டாள்தனமின்றி வேறில்லை என்று வைகிறார் ரியோகன். “எதுவும் நிரந்தரமில்லை” என்றொரு “ரகசியத்தையும்” பகிர்ந்திருக்கிறார். 

நண்பர்கள் கொடுத்த பாடங்களை அளவிலா ஆச்சரிய உணர்வுடன் சிந்தித்தவாறே தூங்கிப்போனேன்.