சிறப்புப்பதிவு – நட்பாஸ்
சுள்ளிகளை ஆங்கிலத்தில் சில சமயம் கிண்ட்லிங் என்று சொல்கிறார்கள்- கிண்டில் என்ற ஆங்கிலச் சொல்லின் நேர்பொருள் கொளுத்துதல் என்று கொள்ளலாம் (“செம செம செம #எரிதழலில் பொன்னியின் செல்வன்”, தனித்தமிழார்வல டிவீட்).
அமேசான் நிறுவனம் தான் தயாரித்த மின்னூல் வாசிப்புக் கருவிக்கு கிண்டில் என்ற பெயரைப் பரிசீலித்தபோது, இந்த அர்த்தம் வரும் என்று தெரிந்தேதான் இதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்- அண்மையில் வெளிவந்த அமேசான் சிங்கிள் ஒன்றின் பெயர், I Murdered My Library http://www.amazon.com/gp/product/B00K6JO15A/ (28 பக்கங்கள், இந்திய விலையில் ரூ. 180). விலையையும் தலைப்பையும்விட இந்த ஒற்றைக்கட்டுரையின் முகப்பு அட்டைதான் நம்மை மிரட்டுவதாக இருக்கிறது – http://media.boingboing.net/wp-content/uploads/2014/08/81qANfgNiuL._SL1500_.jpg .
நான் படித்த வினோதமான விமரிசனங்களில் ஒன்று The Inglorious Basterds என்ற படத்துக்கு எழுதப்பட்டிருந்தது. படத்தின் இறுதியில் திரையரங்கு உரிமையாள நாயகி தன் உதவியாளோடு தியேட்டர் கிடங்கிலுள்ள திரைப்படங்களின் பிலிம் ரோல்களைக் கொளுத்தி நாஜி தலைவர்கள் அத்தனை போரையும் பூண்டோடு அழிப்பதாக வரும். இது தொடர்பாக அந்தக் கட்டுரையாளர், தியேட்டர் ஓனரும் காமிரா ஆபரேட்டருமாகச் சேர்ந்து அத்தனை திரைப்படங்களையும் கொளுத்துவதாகக் கதை எழுத சினிமாவின் அழகியலை அறிந்த எவருக்கும் மனம் வராது என்று சொல்லி, இந்தப் படம் குறித்து டாரண்டினோவை என்னதான் புகழ்ந்தாலும் அடிப்படையில் அவரது அழகியல் மூர்க்கத்தனமானது என்று எழுதியிருப்பார். என்னடா இதெல்லாம் மிகையான விமரிசனமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே அதைப் படித்தேன். ஆனால் இப்படி ஒரு கருவி, அதைத் தயாரித்த நிறுவனம் இப்படி ஒரு அட்டைப்படம் போட்டு, ‘என் நூலகத்தைக் கொன்றேன்’ என்ற தலைப்பு வைத்த மின்னூலை விற்பதைப் பார்க்கும்போது, இதிலெல்லாம் விஷயம் இருக்குமோ என்று தோன்றுகிறது.
அருங்காட்சியகத்தில் உள்ள எகிப்திய பாப்பிரஸ் ரோல்களை எரிப்பதாகவோ, குழந்தைகளை எரிப்பதாகவோ படம் எடுத்தால், என்ன ஒரு மோசமான கற்பனை என்று சொல்வோம் அல்லவா? எதற்கு எதை விலை கொடுப்பது என்று ஒரு அளவுமுறை இருக்கிறது, நாம் எதை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதுதான் அந்தப் பரிமாற்றத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது.
இங்கு, நம்பி கிருஷ்ணன் சொல்வனத்தில் எழுதிய ஒரு கட்டுரையைச் சுட்டுகிறேன் – வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள் http://solvanam.com/?p=34377 . “ஆல்பர்டோ மங்க்வெல் போலந்து நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் பற்றி எழுதுகிறார். யூதப் புத்தகங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் அந்த நூலகர் தினமும் சில புத்தகங்களாக ஒரு வண்டியில் மறைத்துச் சென்று காப்பாற்றினாராம். அந்தப் புத்தகங்களைப் படிக்க எவரும் பிழைத்திருக்கப் போவதில்லை என்று தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்தார் என்றால் இதை நினைவைக் காக்கும் ஒரு செயல் என்றுதான் சொல்ல வேண்டும். பண்டைய கப்பாலியர்கள் சொற்படி, இந்த உலகம் நாம் வாசிப்பதால் இருப்பதில்லை, நம்மால் வாசிக்கப்படும் சாத்தியத்தில்தான் உருக்கொள்கிறது”.
காகித நூல்களுக்கு மின்னூல்கள் மாற்றாக முடியுமா? அச்சுக்கு இருக்கும் பருண்மை டிஜிடல் பிம்பங்களுக்கு உண்டா? புத்தகங்களுக்கு எதிராக கிண்டிலை உருவாக்கி (“எரிதழல்”) இன்று எழுத்தாளர்களுக்கு எதிராக வாசகர்களை ஏவத் துவங்கியுள்ள அமேசானை இன்னும் கொடிய சாத்தானாக்க வேண்டுமென்றால், மின்னூல்களின் உலகம் ஆவிகளின் உலகம் என்று சொல்லலாம்: காகித நூல்களுக்கு எதிரான நெருப்பின் சுள்ளிகள் என்று சொல்வதைவிட சிதைகள் என்றுதான் கிண்டிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சாத்தான் ஒவ்வொரு கணத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். உங்களுக்கு உரியவையாக இருந்தாலும் இந்த மின்னூல்கள் எப்போது வேண்டுமானலும் அமேசான் ஆணையின் பேரில் ஒட்டுமொத்தமாக மறையலாம். என்னிடமுள்ள காகித நூல்களைக் கொளுத்தினால் அதன் சாம்பல்களில் உள்ள எழுத்துகள் என்னைக் குற்றம் சொல்லும். அமேசானுக்கு அந்தக் கவலையில்லை.
ஒரு நூலகத்தின் கொள்ளளவு இருந்தாலும் மின்னூல் வாசிப்புக் கருவிகள் நினைவற்றவை, நினைவுக்கு எதிரானவை. கிண்டில் வாசிப்புக்கு மூர்ச்சைக்குரிய கூறுகள் உண்டு. மயக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் உள்ள வேறுபாடு நினைவின்மை அல்ல, காலமின்மை. விழிப்பு நிலையில் முக்காலமும் உணர்ந்தவர்களாய் இருக்கும் நாம், மயக்க நிலையில் ஏககாலத்தில் இருக்கிறோம்- நிகழ்வோடே பயணிக்கிறோம், அதன் எல்லைகள் நம்மை சுவீகரித்துக் கொள்கின்றன. மின்னூல் வாசிப்பதைப் பட்டியலிட்டு சீராகச் செய்பவர்களுக்கு ஒழிவு கிடைக்கும் பொழுதுகளைக் கிண்டில் கைப்பற்றிக் கொள்கிறது.
காகித நூல்களை வாசிப்பதைவிட மின்னூல்களை வாசிப்பது எளிதாக இருக்கிறது, வசீகரமாகவும் இருக்கிறது. நம் கிண்டிலில் நமக்கான ஒரு நூலகத்தை உருவாக்கி, ஒரு புத்தகம் மாற்றி இன்னொன்று என்று படித்துக் கொண்டே போக முடிகிறது. ஆபிசுக்கு டிபன் பாக்சுடன் புத்தகத்தை எடுத்து வைக்கும் பழக்கம் கொண்ட நான் இப்போது, கிண்டிலை பாண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான புத்தகங்கள் வரிசையாய் வெவ்வேறு போல்டர்களில் காத்திருக்கையில், இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தால்தான் அடுத்ததைப் படிக்க முடியுமா என்று அங்கலாய்ப்பாக இருக்கிறது, அந்த அடுத்த புத்தகமும்கூட பதிலுக்கு, “இவன் எப்போடா நம் பக்கம் வருவான்,” என்று என்னை வாசித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தப்பில்லை. கிண்டிலைத் தொட்டுப் பார்க்கும்போது எனக்கான ஒன்று அதனுள் காத்துக் கொண்டிருப்பதுபோல்தான் இருக்கிறது.
ஆனால் ஒரு மிகப்பெரிய சிக்கல், மின்னூலைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை. இது ஒரு சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் நியாயமாக யோசித்துப் பார்த்தால், முதல் பக்கத்தில் துவங்கி கடைசி பக்கத்தில் முடியும் ரயில் பயணமல்ல வாசிப்பு. ஒரு புத்தகத்தை அட்டை முதல் அட்டை வரை படித்து முடித்தபின், முன்னும் பின்னும் சென்று பக்கங்களுக்கு இடையிலுள்ள இணைப்புகளையும் விலகல்களையும் அலையும்போதுதான் உண்மையான வாசிப்பு துவங்குகிறது. இதனால்தான் சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். புரட்டிப் பார்க்கும்போதுதான் விருப்பப் பகுதிகள் நம் மனதில் மேலும் உறுதியான வடிவம் பெறுகின்றன, கவனிக்காமல் விடப்பட்ட விஷயங்களின் முக்கியத்துவம் புலன்படத் துவங்குகிறது. ஒவ்வொரு வாசிப்பிலும், காசுவலான ஐந்து நிமிட அரையார்வ புரட்டலிலும்கூட, அந்த நூல் மேலும் துலக்கம் பெற்று முழுமையை நோக்கி ஒரு சிறு அளவு பயணிக்கிறது.
நாவல்களையும் சிறுகதைகளையும் யாரும் இப்போதெல்லாம் அதிக அளவில் படிப்பதில்லையே என்ற கேள்விக்கு அசோகமித்திரன் ஒரு பேட்டியில், ஒவ்வொரு காலமும் தனக்குத் தேவையான கலை வடிவத்துக்குதான் ஆதரவு கொடுக்கும் என்றார். நீங்க நல்லா எழுதறீங்க என்ற காரணத்துக்காக உங்களை ஒருத்தர் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் எல்லாருக்கும் இதான் கதி.
சமகாலம் என்பது என்னவோ வெயில் மழை மாதிரி ஆகாயத்திலிருந்து கவிந்து விழுவதல்ல. நாம் உருவாக்கும் கருவிகள்தான் நம் காலமாகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி பரபரப்பாக அடிப்பட்டது. 2002ஆம் ஆண்டுக்குப்பின் ஜெராக்ஸ் கம்பெனி தயாரித்த ஒவ்வொரு கருவியிலும் நாம் நகலெடுக்கும் ஆவணங்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் ஹார்ட் டிரைவ் ஒன்று இருக்கிறது என்பதுதான் அது. இது எதுக்கு என்று நாம் கேட்கலாம். ஹார்ட் டிரைவ் அவசியப்படும்போது கூடவே இந்த வசதியும் இருந்துவிட்டுப் போகட்டும், காசா பணமா என்பதால் இந்த வசதி.
இணையத்தில் தகவல்கள் சும்மா போய் வந்து கொண்டிருக்கின்றன, எடுத்துப் பார்ப்பது சாத்தியம் என்னும்போது செய்தால் என்ன என்று செய்து பார்ப்பதால்தான் நாம் இன்று ஒவ்வொரு நிமிடமும் உளவு பார்க்கப்பட ஒப்புக் கொண்டிருக்கிறோம்- அரசாங்கம் சும்மா இருந்தாலும் உங்கள் போன் கம்பெனி, அதன் சர்வீஸ் புரோவைடர், ஆன்டிராய்ட் எனில் கூகுள் நிறுவனம், நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை எழுதிய கம்பெனிகள் உங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
எவ்வளவு சுலபமாக நம் கருவிகளின் திறன்கள் நம் காலத்தைத் தீர்மானிக்கின்றன என்பது ஆச்சரியம்தான். யாரும் ஏதோ திட்டம் போட்டு இன்றைய உளவுச் சமூகத்தை உருவாக்கவில்லை. எப்போதும்போல் கருவிகள் கரணங்களாகின்றன. சைபர் ஸ்பேஸில் செலுத்தப்படும்போது நாம் கண்காணிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.
எனவே இது இருபத்து நான்கு மணி நேர உளவின் காலம், மின்னூல்களின் காலம், எந்திரங்களின் காலம், அந்தரங்க வாசிப்பும், அச்சுநூல்களும் புத்தக அலமாரிகளும் காலாவதியாகிவிட்டன- இந்தப் புலம்பல்களால் பயனில்லை என்று சொல்லலாம். இதுதான் நம் எதிர்காலமாகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக நம் இழப்புகளுக்காக வருந்தாமல் இருக்க முடியுமா? நாம் இழப்பது அறிதலின் பருண்மக் கூறுகளில் ஒன்று மட்டுமல்ல, நம் அக விகாசத்தின் அவசியத் தன்மையையும் அல்லவா இழக்கிறோம்.
ஆம், நாம் வாசித்ததைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை என்றால் நமக்குச் சிந்திக்க வழியில்லை என்றுதான் பொருள். அச்சுப்பிரதிக்கு மின்பிம்பங்கள் மாற்று என்றால் அங்கு மெய்ம்மையில் ஓர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காகிதநூல்கள் இருக்கும் இடத்தில் கிண்டிலை வைத்துப் பார்ப்பது, அமேசானே சொல்வதுபோல், நூலகத்தில் நெருப்பு வைப்பது போன்றது. மின்னூல்தான் எதிர்காலம் என்பவர்களுக்கு இதில் இழப்பு எதுவும் தெரியாது. சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுப்பவர்கள்தான் உளவு பார்க்கப்படுவதை அநாகரிக அத்துமீறலாக நினைப்பார்கள், நல்ல எழுத்தை மதிக்கத் தெரியாதவர்கள்தான் எழுத்தாளனைவிட வாசகன் முக்கியம் என்பார்கள், யோசிக்க வேண்டிய தேவை இல்லாதவர்கள்தான் பல பத்தாண்டுகளாக புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டிருப்பதில் உள்ள தேடல் பற்றி ஒரு உள்ளுணர்வும் இல்லாமல், வாரம் ஒரு புத்தகம் டவுண்லோட் செய்து அதை அட்டை முதல் அட்டை வரை வாசித்து ஒரு போல்டரில் புதைத்துப் போட்டுவிட்டு அடுத்த புத்தகத்தைப் படித்துக் கொண்டு ரயில், பஸ், கவுண்டர் வரிசை என்று அடுத்தடுத்து போய்க் கொண்டே இருப்பார்கள்.
உன்னை ப்பற்றி தெரியாமல் எவனோ உனக்கு ஓசியில் கிண்டில் கொடுத்தால், அதில் புரட்டிப் பார்த்து படிக்க முடியவில்லை என்பதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியாயனமா என்று நீங்கள் கேட்கக்கூடும். நியாயமான கேள்விதான், ஆனால் கிண்டிலில் ஒரு புத்தகம் படித்துவிட்டு ஆம்னிபஸ் பதிவு எழுத முயற்சித்துப் பாருங்கள், அப்போதுதான் நான் சொல்லும் கஷ்டம் புரியும். எண்ணற்ற புத்தகங்கள் காத்திருக்கின்றன, ஆனால் எதுவும் ஒரு பதிவு தேற்றப் பயன்படாது என்பதை உணரும்போது நானே தேவலை, நீங்கள் இதைவிட மோசமாகப் பேசுவீர்கள்.