புனே டயரி

நேற்று நடந்தது

புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க மறந்துவிட்டேன். “ஃபால்ஸ் அலார்ம்” என்கிறார் வாட்ச்மேன். மற்ற பிளாட்டுகளிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. “இது இங்கே அடிக்கடி நடக்கிறது தான்” என்று வாட்ச்மேன் சொன்னதும் “எது? சாவி வீட்டுக்குள்ளேயே இருக்க கதவு வெளியிலிருந்து மூடிக் கொள்வதா?” என்று கடுப்புடன் கேட்கிறேன். “விசிட்டர் லௌன்ஜில் உட்கார்ந்துகிட்டே தூங்குங்க நாளைக்காலை பார்ப்போம்” என்கிறார். விசிட்டர் லௌன்ஜில் காற்றின் சத்தம் கேட்கவில்லை. மழை சத்தம் இல்லை. ரிசப்ஷனில் உறங்கும் வாட்ச்மேனின் பலமான குறட்டை சத்தம் மட்டும். எனக்கு கோபம். போர்வையை எடுத்து வந்திருக்க வேண்டும்! சட்டையையாவது அணிந்து வந்திருக்க வேண்டும். சாவியை மறக்காமல் எடுத்து வந்திருந்தால் செருப்பு அணியாததோ சட்டை அணியாததோ பெரிய தப்பாக தெரிந்திருக்காது. இரு கோடுகள் தத்துவம் என்று ஏதோ சொல்வார்களே!

புனே ஹார்ரர்

நகரத்துக்கு நான் வேண்டா விருந்தாளியோ! என் கேள்வியில் நியாயமிருக்கிறது என்றே நம்புகிறேன். திகிலிசை போன்று வீசும் காற்று, தானே மூடித் தாழ் போட்டுக்கொள்ளும் கதவு, ஆளரவமற்ற, காலியான ப்ளாட்டுகள், ம்….வார இறுதியில் இன்னொரு ஹார்ரர்…அறையில் தனித்திருந்து சலித்துப் போய் ஆறு மணியளவில் வாக்கிங் போகலாம் எனக்கிளம்பினேன். நேற்றிரவு இருந்த வாட்ச்மேனைக் காணோம். வரவேற்பு லாபியில் ஈ, காக்காய் இல்லை. நானூறு மீட்டர் தொலைவில் இருந்த கேட் வரை ஒருவரும் காணவில்லை. கேட்டைத் தாண்டி சாலையில் வந்தாலும் நிலைமையில் மாற்றமில்லை. ரோடில் கார்களோ, லாரிகளோ, ஆட்டோ ரிக்ஷாக்களோ- எவற்றையும் காணோம். ஒரு (மஹாராஷ்டிர) வடைக் கடை இருந்தது. ஷட்டர் போட்டிருந்தார்கள். ஷட்டரை லேசாகத் திறந்து வெளியில் நின்றிருந்த ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கடைக்காரர் மர்மமான முறையில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொட்டலத்தை வாங்கிக் கொண்டவர் அடுத்த கணம் காணாமல் போனார். அவர் போன ஸ்கூட்டர் சத்தமிட்டதா என்று இப்போது ஞாபகமில்லை. கடைக்குச் சென்று ஷட்டரைத் தட்டி “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். என் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என்பது போல் பார்த்தார். “டீ இல்லை, வடை பாவ் மட்டும் இருக்கிறது” என்று சொல்லி யோஜிம்போ திரைப்படத்தில் வரும் விடுதிக்காரர் பாத்திரத்தின் எக்ஸ்பிரஷனைத் தந்தார். நான் டோஷிரோ மிஃபுனே இல்லையே! வேகவேகமாக நடந்து அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டேன். வார இறுதி லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும்?

வாஷிங் மெஷின் புதிர்

தங்கச்சங்கிலி இரவல் வாங்கினா- பாமா விஜயம் படப்பாடலை நான் வாழ்வேன் என்று நினைத்ததில்லை. புனேவுக்கு குடி புகுந்த பிறகு வாஷிங் மெஷினை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். வீட்டு புரோக்கர் குல்வீர் அறைகலன்களையும் வாடகைக்கு தருகிறேன் என்றான். ஐந்தாறு நாட்களாயின. வாஷிங் மெஷின் வந்த பாடில்லை. ஆடைக்குவியல் வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் சாவியை கேட்டில் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். சாயந்திரம் கேட்டிலிருந்து சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது “குல்வீர் வந்தாரா” எனக் கேட்பேன். யாரும் வரவில்லை என்று விடை கிடைக்கும். ஒரு நாள் பால்கனியில் நீல நிற வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. பழைய மெஷின். எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே கண்களையிழந்து பிதுங்கியிருந்தது. ஆடைக்குவியலில் அன்று அணிந்திருந்த ஆடையும் சேர்ந்தது. அடுத்த நாள் விழி பிதுங்கிய மெஷினின் இடத்தில் இன்னொரு மெஷின். அதற்கு பிளாஸ்டிக் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தேன். தண்ணீர் பிய்ச்சியடித்து தொப்பலாக நனைந்து போனேன். வாஷிங் மெஷின் உருவில் வந்த வாஷிங் “பேசின்” அது என்று புரிந்தது. அடுத்த நாள் வாஷிங் “பேசின்” அங்கேயே கிடந்தது. ஆனால் கூடவே இன்னொரு வாஷிங் மெஷின் சேர்ந்திருந்தது. புதிது போல் தோற்றம் அதற்கு. ஆடைக்குவியலின் உயரத்தை பார்த்து வெட்கம் தாளாமல் சில துணிகளை எடுத்து புதிதாகச் சேர்ந்திருந்த வாஷிங் மெஷினுள் போட்டேன். வரும் வார இறுதியில் தோய்த்துவிட வேண்டும். குல்வீர் சாவியில்லாமல் எப்படி வீட்டுக்குள் வருகிறான் என்ற கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது.

தொடரும் ஹார்ரர்

இது முற்றிலும் புதிது. இரண்டு வார இறுதிகளாக நிகழ்வுகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் ஒரு கதை சொல்லல் நிகழ்வு. முரகாமியின் the elephant vanishes கதையை யாரோ வாசிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கதை பற்றிய கருத்துகள் பகிரப் படுமாம். இந்த வாரம் toast masters federation-இன் ஒரு நிகழ்வு. Cyber security பற்றி சக அலுவலர் ஒருவர் உரையாற்றப் போகிறாராம்! இவையொன்றும் புதிதல்ல. எது புதிது எனில் வாராது வந்த இரண்டு அழைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருப்பதுதான் புதிது.

நுழைவாயில்

காடு வழியே செல்லும் அந்த மண் பாதை லாகூரையும் முல்தானையும் இணைக்கிறது. இரு பெரு வணிக நகரங்களுக்கிடையே சம தூரத்தில் இருந்தது துலம்பா எனும் பழம் பெரும் ஊர். அங்கு அதிக மக்கள் தொகை இல்லை. துலம்பாவைத் தாண்டியதுமே அடர்த்தியான காடு இரு மருங்கிலும். மிருகங்கள் மட்டுமல்லாது இரவுக் கொள்ளையர்களின் அபாயமும் நிலவியது. பயணம் செல்லும் பல வணிகர்கள் கத்தி குத்துப்பட்டு சாலையோரங்களில் இறந்து கிடப்பதை மறுநாள் பகலில் பயணம் செல்வோர் காண்பதுண்டு. இரவு நெருங்கும் முன்னரே துலம்பாவை அடுத்துள்ள காட்டுப் பிரதேசத்தை பயணிகள் கடந்து விட விழைவார்கள். இல்லையேல் துலம்பாவில் இரவைக் கழிப்பார்கள். துலம்பாவில் சத்திரங்கள் ஏதும் இல்லை. பயணிகள் துலம்பாவாசிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டி அவர்கள் வீட்டில் தங்கலாமா எனக் கேட்பார்கள். இது அசௌகரியந்தான். எத்தனை பேர் “உள்ளே வாருங்கள் ; எங்கள் அறைகள் ஏதாவதொன்றில் தங்கி கொள்ளுங்கள்” என்று சொல்லி அந்நியர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவை திறந்துவிடுவார்கள்?

லாகூரின் வணிகர் – தரம்பால் அடிக்கடி துலம்பாவைக் கடந்து முல்தான் செல்வார். காஷ்மீரக் கம்பளங்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தார். குதிரை பூட்டிய வண்டியில் கம்பளங்களை அடுக்கிக் கொண்டு ஓர் உதவியாள் சகிதம் மாதம் ஓரிரு முறை அவர் முல்தானுக்கு பயணம் செய்வதுண்டு. துலம்பாவில் இருந்த அவருடைய நண்பரின் குடும்பம் எமினாபாதுக்கு குடி பெயர்ந்துவிட்ட பிறகு துலம்பாவில் அவருக்கு தங்கும் பிரசினை. அதற்காகவே சில மாதங்கள் முல்தானுக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். முல்தானில் அவருடைய முகவராக இருப்பவர் லாகூர் வந்தபோது துலம்பாவுக்கு முன்னதான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பெரிய சத்திரத்தைக் கண்டதாகச் சொன்னார். அந்த சத்திரத்தை சஜ்ஜன் – கஜ்ஜன் எனும் மாமன் – மருமகன் ஜோடி நடத்தி வருவதாகவும் அந்த சத்திரத்துக்கு நல்ல கூட்டம் வருவதாகவும் என்று கூடுதல் தகவல்களையும் வேறு தந்தார். சில மாதங்களாக முல்தான் வாடிக்கையாளர்களை சந்திக்காததால் நிலுவைத் தொகை பெருத்திருந்தது.

அடுத்த பயணத்தின் போது சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்தை தேடிக் கண்டு பிடித்தார். முக்கிய சாலையிலிருந்து சற்று தள்ளி இருந்தது சத்திரம். ஆனாலும் சாலையில் செல்வோரின் கண்ணில் படும்படியாகவும் இருந்தது. தரம்பால் சத்திரத்துக்கு சென்ற அன்று ஏறத்தாழ பத்து பேர் சத்திரத்தில் தங்கியிருந்தனர். அவர்களில் இருவர் தரம்பாலின் நண்பர்கள் கூட. நண்பர்களில் ஒருவர் மனைகள் வாங்கி விற்பவர். இன்னொருவர் லாகூர் நகரின் மிகப்பிரசித்தமான பட்டு வியாபாரி. அவர்கள் இருவரையும் பார்த்ததும் கையை ஆட்டி “எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இருவருமே “லாகூர் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அவர்களும் முல்தான் செல்பவர்களாக இருந்தால் வழித்துணையாக இருக்கும் என்று எண்ணினார் தரம்பால்.

அப்போது தான் கிட்டத்தட்ட ஒரே உயரம், முகஜாடை கொண்ட இருவர் அவரை அணுகினர். அவர்களில் சற்று வயதானவர் தனது வலது கையை சிரம் வரை உயர்த்தி “சலாம்..என்னை சஜ்ஜன் என்பார்கள்” என்றார். “சலாம் சஜ்ஜன்…உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்” என்று சம்பிரதாயமாக தரம்பால் பதிலளித்தார். “இது என் மருமகன் கஜ்ஜன்” அதற்கு பதில் ஏதும் எதிர்பார்க்கவில்லை சஜ்ஜன். “மருமகனே, வாசலில் சென்று இவரின் உடைமைகளை எடுத்து வா” என்றார்.

“என் உதவியாள் என் சரக்குக்கு காவலாக வண்டியில் இருப்பான்” என்றார் தரம்பால்.

“எங்கள் வாடிக்கையாளர்களின் சரக்குகளுக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் ; உங்கள் வண்டியை நீங்கள் சத்திரத்துக்குள்ளேயே நிறுத்திக் கொள்ளலாம். எங்கள் சமையலைறையில் சமையல் வேலைகள் முடிந்ததும் உங்கள் உதவியாள் அங்கு இளைப்பாறிக் கொள்ளலாம்”

தரம்பாலுக்கு வசதியான ஒரு தனியறை வழங்கப்பட்டது. அங்கு சற்று நேரம் களைப்பாறிய பின்னர் அறை வாசலில் வைக்க்கப்பட்டிருந்த வாளியிலிருந்து நீரெடுத்து முகம் கழுவிக் கொண்டார். அவர் அறை கதவிலிருந்து புல்வெளியைத் தாண்டி சத்திரத்தின் நுழைவாயிலை நோக்கினார். நுழைவாயிலின் வளைந்த சிகரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன. அப்பியிருக்கும் இருட்டில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருப்பதாலேயே நுழைவாயில் புலப்பட்டது. முப்பது வருடங்களாக இவ்வழியில் பயணம் செய்து கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் சலிப்பே மிஞ்சுகிறது. இது சலிப்பு மட்டுமா? உயிர்ப் பயம் கூட. இந்த சாலையில் பயணம் செய்கையில் அவரின் நண்பர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் பிணங்கள் கூட கிடைக்கவில்லை. இந்த பிரயாணங்களை நிறுத்தும் வழி புரியவில்லை. வாடிக்கையாளர்களை கைவிட முடியவில்லை. அவர்கள் வாயிலாக ஈட்டும் லாபம் இன்றும் இனிக்கவே செய்கிறது. திடிரென்று வண்டி ஞாபகம் வந்தது. இருட்டில் அது எங்கு நிற்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. நுழை வாயில் நோக்கி நடந்தார். மற்ற அறைகள் எல்லாம் அடைத்துக் கிடந்தன. புல் தரையில் லேசான ஈரம். நடக்க சுகமாயிருந்தது. சத்திரக் காரர்கள் பரவாயில்லை. நாளைக் காலை இவர்களுக்கு நல்ல சன்மானம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

“உங்கள் வண்டி நுழைவாயிலுக்கு உட்புறம் நிற்கிறது. உங்கள் உதவியாள் உணவருந்திக் கொண்டிருக்கிறான்” – சஜ்ஜனின் குரல் – “வாருங்கள் உங்கள் வண்டி வரை செல்வோம்”

சஜ்ஜனின் கையில் சிறு தீப்பந்தம். சீராக எரிந்து கொண்டிருந்து.

நுழைவு வாயிலுக்கும் புல் தரைக்குமான இடைவெளியில் குதிரை வண்டி நின்று கொண்டிருந்தது. குதிரை அருகேயே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் உள்ள சரக்குகள் பற்றிக் கேட்டான் சஜ்ஜன்.

“காஷ்மீர்க் கம்பளம்” என்றார் தரம்பால்

“நிறைய சரக்கை முல்தான் கொண்டுப்போகிறீர்களே” எனக் கேட்டான் சஜ்ஜன்

“ஆம், முப்பது வருடங்களாக இவ்வியாபாரத்தில் இருக்கிறேன். முல்தானில் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள்”

“நானும் உங்களின் வாடிக்கையாளன் ஆகப் போகிறேன். எனது பத்து அறைகளிலும் கம்பளம் விரிக்கலாமென்றிருக்கிறேன். நீங்கள் எனக்கு நல்ல கழிவு தர வேண்டும்”

“நிச்சயமாக.”

“உங்கள் உணவு தயார். நானே அறைக்கு எடுத்து வந்து பரிமாறுகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நீங்கள் சாப்பிட்டு முடித்ததும் கம்பளங்களின் விலை பற்றிப் பேசி முடிவெடுத்துவிடுவோம்”

அறையை நோக்கிச் சென்றார்கள். அறையின் வாசலில் உணவுத் தட்டோடு கஜ்ஜன் காத்திருந்தான். மூவரும் அறைக்குள் சென்றார்கள்.

+++++

பதினைந்து நாட்கள் ஆன பின்னர் தான் தரம்பாலின் உறவினர்களுக்கு பிரக்ஞை வந்தது. தரம்பால் லாகூர் திரும்பவேயில்லை. முல்தானில் இருந்த முகவரை லாகூர் வரவழைத்து விசாரித்த போது தரம்பால் முல்தான் போய்ச் சேரவில்லை என்பது தெரிந்தது. தரம்பாலின் உறவினர்கள் சிலர் லாகூர்-முல்தான் பாதையெங்கும் விசாரித்தனர். முல்தானில் அவரின் பல நண்பர்களுடன் பேசினர். கஜ்ஜன்-சஜ்ஜன் சத்திரத்தையும் விடவில்லை. ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. "பல பிரயாணிகள் வந்து சத்திரத்தில் ஒரு ராத்திரி தங்குகிறார்கள் ; மறுநாள் காலை சென்றுவிடுகிறார்கள். இதில் எத்தனை பேரை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வோம்? நீங்கள் சொல்பவர் எங்களது சத்திரத்தில் வந்து தங்கவேயில்லை என்று சொல்ல முடியாது; இங்கிருந்து அவர் சென்ற பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்?" – கஜ்ஜனும் சஜ்ஜனும் ஒரே குரலில் சொன்னது. துலம்பாவாசிகளின் துணை கொண்டு தரம்பாலின் உறவினர்கள் காட்டுப் பகுதிகளில் பல வாரங்களாக தேடினார்கள். தரம்பாலின் அல்லது உதவியாளின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.

+++++

துறவிகளை அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து, தறித்திருக்கும் சின்னங்களை வைத்து அவர் ஹிந்துவா அல்லது முஸ்லீமா என்று எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஹிந்து துறவிகள் காவி அணிவார்கள். முஸ்லீம்கள் பச்சை அணிவார்கள். முஸ்லீம்கள் மண்டை தொப்பி அணிவார்கள். ஹிந்து துறவிகள் தம் தலைமுடியை திறந்தவாறு விட்டுவிடுவார்கள். துலம்பாவுக்கடுத்த காட்டுப் பிரதேச சாலையில் தன் நண்பருடன் நடந்து கொண்டிருக்கும் இந்த பெரியவரின் சமய அடையாளத்தை அவர் அணிந்திருப்பவற்றை வைத்து கண்டுபிடிக்க இயலாது. இந்த மனிதர் முஸ்லீம் சூபிக்களைப் போல நீள சொக்காய் அணிந்திருந்தார். ஆனால் அது பச்சை நிறமில்லை. அது காவி. ஃபகீர்கள் போட்டுக் கொள்வது போல அவரின் இடுப்பில் ஒரு வெள்ளை பட்டையை போட்டுக் கொண்டிருந்தார். தலையில் ஒரு தொப்பி இருந்தது. ஆனால் அது டர்பனால் மறைக்கப்பட்டிருந்தது. மரச் செருப்புகளை தறித்திருந்தார். தன் சமய அடையாளத்தை நீர்க்கச் செய்யும் முயற்சி போன்று தோன்றியது அவர் உடை அணியும் விதம்.

சத்திரங்களின் வசதி அவருக்கு தேவையற்றதாயிருந்தது. இல்லற வாழ்க்கையை விட்டு நீங்கிய பின் அவர் மேற்கொண்ட பிரயாணங்களில் சாலையோர மரத்தினடியில் உறங்கவே அவர் விரும்பினார். அவருடன் நடந்த அவரின் நண்பனுக்கு அத்தனை மனவுறுதி இருக்கவில்லை. வெறும் அன்பின் நிமித்தம் கூட நடந்த நண்பன் அவருடன் உரிமையுடன் விவாதம் செய்தான். அன்றிரவு மரத்தடியில் உறங்க அவனுக்கு விருப்பமில்லை. மதியத்திலிருந்தே அவருடன் வார்த்தை யுத்தம். இருட்டத் தொடங்கிவிட்டது.

"வா மர்தானா..அந்த ஆலமரத்தினடியில் அமர்ந்து இன்றைய இரவைக் கழிப்போம்" என்றார் பாபா (பெரியவர்). பாபா அதை சொல்லும் நேரத்தில் அவர்கள் இருவரும் கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்துக்கு முன்னால் வந்தடைந்திருந்தனர்.

ஆலமரத்தினடியில் அன்றிரவை கழிப்பதில் விருப்பமில்லை என்பதை மர்தானா மீண்டுமொரு முறை பாபாவிடம் வலியுறுத்தினான். "நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையென்றால் உங்களுடன் இந்த பயணத்தில் இனி வர மறுப்பேன்". மர்தானா உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததை பாபா காதில் விழவில்லை. கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்தின் நுழை வாயில் அவர் பார்வையில் பட்டது. சில கணங்கள் அந்த சத்திரத்தின் வாயிற்சிகரத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு பெயரை அவர் வாய் முணுமுணுத்தது. பிறகு, மர்தானாவை நோக்கித் திரும்பி "உன் இஷ்டப்படியே ஆகட்டும்…இன்றிரவை எதிரில் இருக்கும் சத்திரத்தில் கழிப்போம்" என்றார்.

பொதுவாக யோகிகளும் சாதுக்களும் இந்த சத்திரத்தை அண்டுவது கிடையாது. பணக்கார வணிகர்களை, அரச அதிகாரிகளை விரும்பி வரவேற்பதை பழக்கமாகக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கு யோகிகளையும் சாதுக்களையும் வரவேற்பதில் ருசி கிடையாது. சத்திரத்துக்கு வந்த அன்றைய விருந்தினர்களைக் கண்டவுடன் கஜ்ஜனும் சஜ்ஜனும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் தம் அதிருப்தியை முகத்தில் காட்டவில்லை. பாபாவையும் மர்தானாவையும் வரவேற்று உணவளித்து உபசரித்த பிறகு அவர்களின் அறையை காண்பித்துக் கொடுத்தனர். விருந்தினர்களிடமிருந்து கொள்ளையடிப்பது தினமும் நிகழ்த்துவது தான். தொடர்ந்து பணக்கார விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த பாபாவிடம் உண்மையான விருந்தோம்பலை காட்டிவிட்டுப் போவோமே என்று சஜ்ஜன் நினைத்திருக்கலாம்!

விடுதியில் அன்று அதிகம் விருந்தினர்கள் இல்லை. மூன்று அறைகளில் மட்டுமே விருந்தினர் இருந்தனர். மூன்று அறைகளும் மூடிய பிறகு முன்னிரவில் மாமனும் மருமகனும் சமையலறையில் சந்தித்தனர்.

"அவ்விருவரையும் உயிருடன் விடுவதா அல்லது கொல்வதா?" – மாமனாகிய சஜ்ஜன் கேட்டான்.

"இந்த இரண்டு ஃபகீர்களைக் கொன்று என்ன பயன்? நமக்கு உபயோகமான எதுவும் அவர்களிடம் இருக்குமெனத் தோன்றவில்லை. அவர்கள் இருவரும் அதிக நாள் இங்கே இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாளோ இரண்டு நாளோ தங்கிக் கொள்ளட்டுமே" – கஜ்ஜனின் பதில்.

"கஜ்ஜன், நீ சின்னப் பையன். இந்த புனித ஆசாமிகளைப் பற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பயண வழியில் கொள்ளையடிக்கப்படப் போகும் பயம் காரணமாக செல்வந்தர்கள் பலர் இந்த மாதிரி சாது வேஷம் போட்டுக்கொள்வதுண்டு. அவர்களிருவரும் லாகூர் நகரின் பெரிய வணிகர்கள் என்பது என் யூகம். பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மிச்சம் பிடிக்க இது ஓரு வழி”

“அவர்கள் வணிகர்கள் என்றால் எங்கே அவர்களின் உடைமைகள்? இருவரும் வெறும் கையை வீசிக் கொண்டல்லவா வந்தார்கள்?”

“தம் உடைமைகளை காட்டுக்குள், மயானத்துக்கருகே, எங்கேனும் மறைத்து வைத்து விட்டு இங்கே நுழைந்திருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

“இல்லை மாமா, எனக்கென்னவோ நீங்கள் அவர்களைப் பற்றி தவறாகக் கணிக்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை நீங்கள் கொல்லத்தான் வேண்டுமென்று சொன்னால் அந்த காரியத்தில் ஒத்தாசையாய் இருப்பேன். ஆனால், துறவிகளின் கோபத்துக்கு ஆளாவதை எண்ணி அஞ்சுகிறேன். அவர்கள் பல மந்திர சக்திகளை பெற்றவர்களாக இருந்தால்..அவர்கள் நிஜமாகவே கடவுளின் மனிதர்களாக இருந்தால்..”

“முட்டாள்தனமாகப் பேசாதே…இது கலியுகம்…இவ்வுலகத்தில் புனிதர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அனைவரும் ஏமாற்றுக்காரர்கள். ஆன்மீகத்தை வியாபாரமாக ஆக்கிவிட்டவர்கள்”

+++++

மர்தானா மகிழ்ச்சியாயிருந்தான். அவனுடைய வேண்டுகோளுக்கு பாபா செவி மடுத்தது அவனுக்கு உற்சாகத்தை தந்தது. பாபாவுடன் பேச முயன்றான். பாபா பதிலேதும் அளிக்காமல் எதை பற்றியோ யோசனையில் இருந்தார். மர்தானாவுக்கு குற்றஉணர்வு ஏற்பட்டது. அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை சத்திரத்துக்குள் அழைத்து வந்துவிட்டது தான் பாபாவின் மௌனத்துக்கு காரணமாக இருக்கும் என்று நினைத்தபோது அளவிலா வருத்தம் மேலிட்டது. அறையின் ஓர் ஓரத்தில் பதான்கள் மீட்டும் ரூபாப் இசைக்கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து மீட்டத் தொடங்கினான் மர்தானா. உருக்கமான இசை பிறந்ததும் பாபா கண்ணை மூடியவாறே தியானம் செய்பவர் போல இருந்தார். சில நிமிடங்களில் மர்தானாவின் இசையோடு அவரின் குரலும் சேர்ந்து கொண்டது. அவர் உதட்டிலிருந்து புனித குர்பானி வெளிப்பட்டது.

“பித்தளை ஒளிரும், பளபளக்கும், ஆனால் தேய்த்தால், அதன் கருந்தன்மை தோன்றுகிறது. கழுவினால், அதன் அசுத்தம் அகல்வதில்லை, ஆயிரம் முறை கழுவினாலும் ; என்னுடன் பயணப்படுபவர்கள் மட்டுமே என் நண்பர்கள் ; எங்கு கணக்குகள் கேட்கப்படுகின்றதோ, அங்கு அவர்கள் என்னுடைய வரிசையில் நிற்பார்கள்"

பாபா பாடலை நிறுத்திய பின்னும் மர்தானாவின் ரூபாப் இசை தொடர்ந்தது. பாபாவின் களைப்பு நீங்கிவிட்டது போலிருந்தது. அவர் வெளிப்படுத்திய சொற்கள் அவரின் களைப்பை முற்றிலும் உறிஞ்சிவிட்டதோ என்னமோ! மர்தானாவுக்கு தெளிவாகத் தெரிந்தது. பாபாவின் வரிகள் தன்னை நோக்கியது. அவரின் செய்தி தனக்காகத்தான் என்று அவன் உணர்ந்தான். அவன் கண்ணிலிருந்து அமைதியாக கண்ணீர் உருண்டோடியது. இசையின் சத்தத்தில் தன் உணர்ச்சிகளை கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அறைக்கு வெளியே கையில் கத்தியுடன் காத்துக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கும் கஜ்ஜனுக்கும் கூட பாபாவின் குர்பானி காதில் விழுந்தது. அறைக்குள்ளிருக்கும் இருவரை மிரட்டி அவர்கள் தம் உடைமைகளை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை கேட்டுக் தெரிந்து கொண்டு பின்னர் தீர்த்துக் கட்டிவிடும் நோக்கத்துடன் அறைக்கு வெளியே வந்து நின்றவர்களை கட்டிப் போட்டது பாபா பாடிய குர்பானி. மர்தானா அளவுக்கு நெகிழவில்லையெனினும் சஜ்ஜனுக்கு பாபா பாடுவது தம்மைப் பற்றியோ எனும் சந்தேகம் துளிர் விட்டது. இசை நிற்கட்டும் எனக் காத்திருக்கலானான்.

பாபா மீண்டும் பாடத் துவங்கினார்

“ எல்லா பக்கங்களிலும் வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மாளிகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் உள்ளன; ஆனால் அவை உள்ளே காலி, பயனற்ற இடிபாடுகள் போல நொறுங்குவன அவை. வெள்ளை இறகுகள் கொண்ட ஹெரோன்கள் புனித ஆலயங்களில் வாழ்பவை, அவை உயிரினங்களைக் கிழித்து சாப்பிடுகின்றன, எனவே அவை வெள்ளை என்று குறிக்கப்படுவதில்லை. என் உடல் செமல் மரம் போன்றது; என்னைப் பார்த்து, மற்றோர் முட்டாளாகிறார்கள். அதன் பழங்கள் பயனற்றவை-என் உடலின் குணங்களைப் போலவே. குருடன் ஓருவன் பாரமான சுமையைச் சுமக்கிறான், மலைகள் வழியாக அவன் பயணம் மிக நீளமானது. என் கண்களால் பார்க்க முடியும், ஆனால் என்னால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எப்படி மேலே ஏறி மலையை கடக்க முடியும்? சேவை செய்வதிலும், நல்லவராக இருப்பதிலும், புத்திசாலித்தனமாக இருப்பதிலும் என்ன நன்மை இருக்கிறது? ஓ நானக், கடவுளின் நாமத்தை ஜெபித்தவாறிருங்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.”

அறைக்கு வெளியே கத்தியுடன் நின்றிருந்த சஜ்ஜனின் உடலில் ஓர் அதிர்வு. "மாமா என்னாச்சு" என்று கேட்டான். சஜ்ஜன் அதற்கு பதில் சொல்லாமலேயே கதவை லேசாகத் தொட்டான். திறந்து கொண்டது. பாபா இருந்த அறை தாழிடப்பட்டிருக்கவில்லை. அறைக்குள் நுழைந்தான் சஜ்ஜன். அவன் கையில் இருந்த கத்தியைப் பார்த்து மர்தானாவுக்கு உதறல். ஆனால் அடுத்த கணம் வேறு அதிசயம் நடந்தது. தரையில் அமர்ந்திருந்த பாபாவின் பாதத்துக்கருகே கத்தியை வைத்துவிட்டு அவர் காலில் வந்து விழுந்தான். பாபா அமைதியாய் இருந்தார். அவரில் ஒரு சலனமும் இல்லை.

மாமாவின் செய்கைகள் கஜ்ஜனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. மாமாவின் வழியில் மாறாமல் செல்லும் மருமகனுக்கு வேறென்ன தெரியும்!. மாமாவைப் போல அவனும் பாபா முன்னர் மண்டியிட்டான்.

பாபா அன்று மாலை உதிர்த்த பெயரை அறையில் இருந்த அனைவர் காதில் விழும்படி மீண்டும் உதிர்த்தார்.

"தரம்பால்….தரம்பால்"

சுல்தான்பூரில் பாபா இல்லறவாசியாக இருந்தபோது திவானின் அலுவலகத்தில் கொள்முதல் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் கம்பளம் விற்க வந்த தரம்பாலுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு பற்றி மர்தானா ஏற்கனவே அறிந்திருந்தான். பாபாவைச் சந்திக்க சுல்தான்பூர் வரும் சமயங்களில் அவனும் தரம்பாலை ஓரிரு முறை சந்தித்திருக்கிறான்.

சஜ்ஜனுக்கு ஒருவாறு புரிந்தது.

"எத்தனை பேரைக் கொன்றிருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கு கிடையாது" – அவனாகவே ஒப்புக்கொண்டான்.

"ஹ்ம்ம்..இந்த கம்பளம்" என்று பாபா சொன்னபோது அவனுக்கு இன்னும் நன்கு புரிந்தது.

"பாபா..நீங்கள் யார்"

"என் பெயர் நானக்"

+++++

அடுத்த நாளிலிருந்து சத்திரம் கடவுள் இல்லமாக மாறியது. சமய வேற்றுமை பாராமல் அனைவர்க்கும் அங்கே இடமளிக்கப்பட்டது. உணவு இலவசமாக வழங்கப்பட்டது. செல்வந்தன் – வறியவன் என்னும் வேற்றுமைகள் அங்கே பாராட்டப்படவில்லை. சாதி வேறுபாடுகள் கடவுள் இல்லத்தில் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் புதிய பெயர் பொறிக்கப்பட்டது. குருத்வாரா. சீக்கிய மரபின் முதல் குருத்வாரா அது. பாகுபாடின்றி உணவளிக்கும் பழக்கம் முதல் குருத்வாராவாகிய சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்திலிருந்து தொடங்கியது. இதுவே லங்கர் மரபாக இன்றைய குருத்வாராக்களிலும் தொடர்கிறது.

+++++

நன்றி : சொல்வனம்

கதவுடன் ஒரு மனிதன் – சச்சிதானந்தன்

சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

1996 முதல் தில்லியில் வசிக்கிறாராம். தில்லியில் வசிப்பது பற்றி அவரிடம் கேட்ட போது “எனக்கும் தில்லிக்குமான உறவு அன்பு – வெறுப்பு இரண்டுங் கலந்தது” என்று பதிலளித்தார்.

இச்சந்திப்புக்கு முன்னர் அவருடைய கவிதைகளைப் படித்ததில்லை. எம்டிஎம் சச்சிதானந்தனின் எழுத்தை சிலாகித்துப் பேசினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளை இணையத்தில் வாசித்தேன். அவருடைய கவிதை நூல்களை வாங்கி ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. அவருடைய மூன்று கவிதைத் தொகுதிகளின் தமிழாக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன என்று அவருடைய இணைய தளம் (http://www.satchidanandan.com/index.html) சொல்கிறது. வாங்க வேண்டும்.

கவிஞர் சச்சிதானந்தனின் அனுமதியுடன் “A man with a door” என்ற அவருடைய கவிதையின் தமிழாக்கம் கீழே.

கதவுடன் ஒரு மனிதன்
ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
அவன் அதனுடைய வீட்டை தேடுகிறான்.

அவனின் மனைவியும்
குழந்தைகளும் நண்பர்களும்
அக்கதவின் வழி உள்ளே வருவதை
அவன் கனவு கண்டிருக்கிறான்.
இப்போதோ முழுவுலகமும்
அவனால் கட்டப்படாத வீட்டின்
கதவினூடே நுழைந்து செல்வதை
அவன் பார்க்கிறான்.

கதவின் கனவு
உலகை விட்டு மேலெழுந்து
சுவர்க்கத்தின் பொன் கதவாவது.
மேகங்கள்;வானவிற்கள்
பூதங்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
அதன் வழி நுழைவதை
கற்பனை செய்கிறது,

ஆனால் கதவுக்காக காத்திருப்பதோ
நரகத்தின் உரிமையாளர்.
இப்போது கதவு வேண்டுவது
மரமாக மாறி
இலைச்செறிவுடன்
தென்றலில் அசைந்தவாறே
தன்னைச் சுமந்திருக்கும்
வீடற்றவனுக்கு
சிறு நிழலைத் தருவதே.

ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
ஒரு நட்சத்திரம் அவனுடன் நடக்கிறது.

MDM&KSatchidananthan

(எம்டிஎம், நான், கவிஞர் சச்சிதானந்தன்)