சரணடைதலின் கண்ணீர் – நிஷா மன்சூர்

நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதை. அவர் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது.

————————————————————

ஆதித்தந்தை உகுத்த கண்ணீர்
இன்னும் மழையாய்ப் பொழிந்து
மண்ணை நெகிழ வைத்து
இறைஞ்சுதலால் விண்ணை நிரப்புகிறது,
“எமது கரங்களாலேயே
எமக்குத் தீங்கிழைத்துக் கொண்டோம் ரட்சகனே”

யூப்ரடீஸ் நதியில் ஓடிக் கொண்டிருந்த
யாகூபின் கண்ணீர் நதி
கிணற்றில் வீசப்பட்ட முழுநிலவின்
வியர்வையை நுகர்ந்தபின் அருள்நதியானது.

யூசுஃபின் பின்சட்டைக் கிழிசலில் சம்மணமிட்டிருக்கும்
ஒழுக்கத்தின் முத்திரை
ஆழியூழி காலம்வரை
வல்லிருளை வெல்லுமொளியாக
நின்றிலங்கிக் கொண்டிருக்கும்.

ஹூத் ஹூதின் சொற்கள் மலர வைத்தன
சுலைமானின் புன்னகையை.

முகமறியா பெருமகனின் ஆன்ம வலிமை
கொணர்ந்தது,
கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீசின் சிம்மாசனத்தை.

சிற்றெரும்புகள் புற்றேகித் தஞ்சமடையும் தருணம்
பூமியதிர்ந்து பதிந்தன,
சுலைமானின் குதிரைப்படைக் குளம்புகளின் தடங்கள்.

கரையான்கள் அரித்து அஸா உதிர்ந்து சுலைமான் சரியும்வரை
ஜின்கள் உணரவில்லை,
சுவாசமின்மையின் தடயத்தை

எறும்புகளை உதாரணம் காட்டத் தயங்காத பரம்பொருள் கேட்டது,
“மனு ஜின் கூட்டத்தாரே உங்கள் இறைவனின் அருட்கொடைகளில்
நீங்கள் எதனைப் பொய்யாக்குவீர்கள் ?”

எம் இதயமும் உயிரும் சமர்ப்பணமாகும்
முகில் கமழும் நயினார் முஹம்மது ரசூல் பகர்ந்தார்,
“உங்களது வெற்றியின் மீது
நான் பேராவல் கொண்டுள்ளேன்”*

ஜகமெங்கும் ஒலிக்கிறது,
வெற்றியின் ஓங்கார முழக்கம்.

“மற்றவர்கள் எத்தகையினராயினும் என்கொடிய
வல்வினை அகற்ற வசமோ
மலை இலக்கென நம்பினேன் நம்பினேனென்று
வந்தெனுட் குடிகொள்குவையோ.”*

#

*திட்டமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்’. (9:128).

*குணங்குடி மஸ்தான் பாடல் வரிகள்.