சுவரில் ஒரு கடிதம்

பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

מנא מנא תקל ופרסין
Mede Mede Tekel Upharsin

“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் டரியஸ் கைப்பற்றுகிறார். டரியஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

That very night Belshazzar the Chaldean (Babylonian) king was killed, and Darius the Mede received the kingdom.

— Daniel 5:30–31[1]

கி மு 15-3-44

பிரம்மாண்டம் ஜாக்கிரதை ஓ மனமே
உன் இலட்சியங்களை விஞ்ச முடியாவிடில்
தயக்கங்கலந்த முன்னெச்சரிக்கையுடன்
அவற்றைப் பின்தொடர்
முன்னகர்ந்து செல்லச்செல்ல
மேலதிக விசாரணையும் கவனமும்
உள்ளவனாய் நீ இருக்கவேண்டும்
இறுதியில் ஜூலியஸ் சீஸரைப் போன்று
உச்சியை அடையும்போதோ
அத்தகைய புகழ்மிக்க மனிதனொருவனின்
இடத்தை நீ பெறும்போதோ
தமது பரிவாரங்கள் புடை சூழும் தலைவனைப் போன்று –
தெருவில் செல்லும் சமயங்களில்
அதிவிழிப்புடனிருத்தல் மிக அவசியம்
சந்தர்ப்பவசமாக கும்பலிலிருந்து வெளிப்பட்டு
கையில் கடிதத்துடன் அர்டெமிடோரஸ் உன்னை அணுகி
"இக்கடிதத்தை உடனே படியுங்கள்
உங்களை பாதிக்கும்
தீவிர விஷயங்கள் இதில் உள்ளன" என்கையில்
நிற்காமலிராதே
காரியங்களையோ உரைகளையோ
ஒத்திவைக்கத் தவறாதே
உன்னை கும்பிட்டு தலைவணங்குபவர்களிடமிருந்து
தலை திருப்பாமல் இருந்துவிடாதே
– அவர்களை பின்னர் சந்தித்துக் கொள்ளலாம் !
அமைச்சரவை கூட காத்திருக்கட்டும்
உடனுக்குடன்
அர்டெமிடோரஸின் எழுத்தை
நீ வாசித்தேயாக வேண்டும்

( The ides of March – by Constantin Cawafy)

பழைய வருடத்தை எரித்தல்

முகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார். 

burning-bush

பழைய வருடத்தை எரித்தல்

வினாடிகளில்

கடிதங்கள் தம்மைத்தாமே

விழுங்கிக் கொண்டன

ஒளிபுகும் காகிதங்களில் எழுதி

தாழ்ப்பாளில்

நண்பர்கள் தொங்கவிட்ட

குறிப்புகள்

விட்டிற்பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும்

சத்தத்துடன் வதங்கி

காற்றுடன் மணம் புரிந்து கொண்டன

வருடத்தின் பெரும் பகுதிகள்

எளிதில் எரியக் கூடியவை –

காய்கறிகளின் பட்டியல்,

பாதிக் கவிதைகள்,

ஆரஞ்சு நிறத்தில் சுழலும் தினங்களின் சுடர்கள் –

வெகு சிலவே கற்கள்

ஏற்கெனவே இருந்த ஒன்று

திடீரென இல்லாமல் ஆகும் போது

இன்மை கூவலிடுகிறது ;

கொண்டாடுகிறது ;

காலியிடம் விடுகின்றது ;

சின்னஞ்சிறு எண்களுடன்

நான் மீண்டும் துவங்குகிறேன்.

விரைவு நடனம்,

இலைகளின் நஷ்டங்களின் கலைப்பு ;

நான் செய்யாத விஷயங்கள் மட்டும்

சுவாலை அணைந்த பின்

சடசடவென வெடிக்கும்

–    நவோமி ஷிஹாப் நை (Naomi Shihab Nye)

Naomi