மக்காவின் எல்லா முஸ்லீம்களும் மதினாவிற்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தனர். நபிகள் நாயகமும் அபு-பக்கரும் மட்டும் எஞ்சியிருந்தனர், மக்காவை விட்டு வெளியேறுவதற்கு அல்லாஹ்-வின் அனுமதிக்காக நபிகள் நாயகம் காத்திருந்தார். இறுதியில் ஒரு நாள் ஜிப்ரீல் அவரிடம் வந்து சொன்னது : ”இன்றிரவு உன்னுடைய படுக்கையில் படுக்காதே” இரவு நெருங்கிய போது, அலியும் நபிகள் நாயகமும் மட்டும் வீட்டில் தனியே இருந்தனர். திடீரென்று, அவர்கள் வீட்டுக்கு வெளியே சில சத்தங்களைக் கேட்டனர்.
வெளியில் பார்த்தபோது, நபிகளின் எதிரிகள் வீட்டைச் சுற்றி நின்றிருந்ததைக் கண்டனர். நபிகள் அச்சப்படவில்லை. அல்லாஹ் அவருடன் இருப்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அலியிடம் சொன்னார் : ”நீ என்னுடைய உடையால் உன்னை மறைத்துக் கொண்டு என் படுக்கையில் படுத்துக் கொள். நான் அபு-பக்கருடன் வெளியேறப் போகிறேன். பிறகு நீ எங்களைப் பின் தொடர்ந்து வா”
நபிகள் வீட்டை விட்டு அந்த இரவே நீங்கினார். இருட்டின் போர்வையில், அவர் அபு-பக்கரின் வீட்டை அடைந்தார் ; அங்கு இரண்டு ஒட்டகங்கள் தயார் நிலையில் இருந்தன. ஓட்டகங்களில் ஏறி, இருவரும் நகரை விட்டு வெளியேறினர். தாவ்ர்-மலையை அடைந்து அங்கு ஒரு குகையில் ஒளிந்திருந்தனர். அக்குகையில் அவர்கள் மூன்று நாட்கள் இருந்தனர். ஒவ்வொரு இரவிலும் அபு-பக்கரின் மகன் அப்துல்லா அவர்களை குகையில் சந்திப்பான். நகரில் நிகழ்வனவற்றை அவன் அவர்களுக்கு தெரிவித்தான். அப்துல்லா சொன்னான் : “மக்காவின் குரைய்ஷ் மிகவும் கோபமாகிவிட்டான். அவர்கள் உங்களை எல்லா திசைகளிலும் தேடி வருகிறார்கள். உங்களைச் சிறைப்பிடிக்க உதவுபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்”
ஒரு நாள், குகைக்கு வெளியே அவர்கள் சில குரல்களை கேட்டனர். அவர்களைத் தேடிக் கொண்டு குகை வரை எட்டியிருந்த குரைய்ஷின் ஆட்கள். அபு-பக்கர் பயந்தான். “நாம் எந்த சமயத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம்” என்று எண்ணினான். ஆனால் நபிகள் நாயகம் “நம்பிக்கை இழக்காதே, அல்லாஹ் நம்முடன் இருக்கிறார்” என்றார். நபிகளைத் தேட வந்தவர்கள் அங்கும் இங்கும் தேடினார்கள் ; பிறகு சென்று விட்டார்கள். ஆச்சர்யமுற்ற அபு-பக்கர் குகைக்கு வெளியே நோக்கிய போது நுழைவாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னியிருப்பதைக் கண்டு அதிசயித்தான். கூடவே அதன் பக்கத்தில் ஒரு புறா ஒரு கூட்டை அமைத்திருந்தது. குகைக்குள் ஒருவரும் நுழைந்து தேடாமல் விட்ட காரணம் புரிந்தது. இருவரும் பத்திரமாக குகையை விட்டு அகன்றனர். ஒரு வழிகட்டியை துணைக்கழைத்துக் கொண்டு பாலைவனத்தைக் கடந்து மதினாவை அடைந்தனர். மதினாவை சென்றடைய அவர்களுக்கு ஏழு நாட்கள் பிடித்தன.