உயிர் காக்கும் சீருடை உயிரெடுக்கும்

1971 எனும் ஹிந்தித் திரைப்படம். இரவுணவுக்குப் பிறகு காலை சாய்த்தவாறே தரையில் உட்கார்ந்துகொண்டு யூட்யூபை மேய்ந்தபோது கண்ணில் பட்டது. மனோஜ் பாஜ்பாய் நடித்திருக்கிறார் என்று அறிந்தபோது சில நிமிடங்கள் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். கச்சிதமான திரைக்கதை. மிகைத்தனமில்லாத நடிப்பு. நாடகீய வசனங்கள், மார்தட்டல்கள் – இவை சற்றும் கலக்காத படம்.

1971இன் இந்தியா – பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானிய தளபதி மேஜர் ஜெனரல் நியாசி தனது 93,000 துருப்புக்களுடன் இந்தியாவின் ஈஸ்டர்ன் கமாண்ட் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவிடம் சரணடைந்தார், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இராணுவ சரணடைதல்.. அவர்கள் அனைவரையும் கௌரவமாக தாயகம் அனுப்பி வைத்தது இந்தியா.

யுத்தத்தில் அடைந்த தோல்வியோ அல்லது உலக அரங்கில் சங்கடத்தை ஏற்படுத்திய சரணடைதலோ – எதுவெனத் தெரியவில்லை…போரின் கிழக்கு முன்னணியில் பாகிஸ்தான் சிறைப்பிடித்த இந்திய வீரர்களை பாகிஸ்தான் ஜெனீவா மரபின் படி நடத்தவில்லை. “எங்களிடம் இந்திய ராணுவ வீரர்கள் சிறைப்பட்டிருக்கவில்லை” என்று உலகிற்கு சொல்லிக் கொண்டிருந்தது பாகிஸ்தான். செஞ்சிலுவை போன்ற நிறுவனங்கள் நாட்டுக்கு விஜயம் செய்தும் அவர்களால் பாகிஸ்தானிய சிறைகளில் இந்திய நாட்டு போர்க்கைதிகளையும் கண்ணில் காட்டவில்லை. காணாமல் போன 54 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களைத் தந்து பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் இந்தியா பல தடவை முறையிட்ட போதும் ஒரு வீரரும் எங்களிடம் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து வந்தது. ஆனால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய வீரர்கள் கடைசியாக 1988 வரை பாகிஸ்தானில் காணப்பட்டனர். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றனர் என்று ஒரு தகவலும் இல்லை.

1971 திரைப்படம் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்களின் அவல நிலையைச் சித்திரிக்கிறது. மிக இயல்பான காட்சியமைப்பு. படத்தின் சில காட்சிகள் The Great Escape ஆங்கிலப் படத்தை நினைவு படுத்தினாலும் – நிலப்பரப்பைக் கையாண்டவிதம், கதைச் சம்பவங்கள் நடக்கும் காலக் குறிப்புகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் விதம், வீராப்பு வசனங்கள் இல்லாத உரையாடல்கள், தாய்நாட்டுப் பெருமிதத்தை சுட்டாத சமன் குலையாத திரைக்கதை – ஆகியவை ஒர் உயர் ரக போர் படத்தை பார்த்த திருப்தியைத் தந்தன.

சக்லாலா கேம்பிலிருந்து ஆறு இந்திய வீரர்களை தப்பிக்க உதவுவது பாகிஸ்தானிய ராணுவ சீருடை. இந்திய எல்லையை நோக்கி ஓடும் மேஜர் சூரஜ் சிங்கை (மனோஜ் பாஜ்பாய்) பாகிஸ்தானிய ராணுவம் துரத்தி வர, எல்லையைத் தாண்டும் பாகிஸ்தானிய ராணுவ வீரன் என்றெண்ணி இந்தியத் தரப்பு சுட இரு நாடுகளுக்கும் இடையிலிருக்கும் No Man’s Landஇல் விழுந்து இறக்கிறான். எந்தப் பக்கத்தில் நாமிருக்கிறோம் என்பதன் குறியீடு சீருடை. தப்பிப்பதற்கு உதவும் சீருடை எல்லை தாண்ட உதவவில்லை. சீருடை அணியாமல் இருந்தால் எல்லையை அடைந்திருக்க முடியாது. சீருடையைக் களைந்து அம்மணமாக ஓடியிருந்தால் என்ன நடந்திருக்கும்? ஏதோ ஒரு பைத்தியக்காரன் செய்வதறியாமல் உள்ளே நுழைகிறான் என்று இந்தியத் தரப்பு அவனை நோக்கி அனுதாபத்துடன் அணுகியிருக்குமா? தப்பிக்காமல் நெடுநாட்களாக பாகிஸ்தானில் சிக்கியிருக்கும் 1965 போர்க்கைதிகள் பாராக் 6 என்னும் இடத்திற்கும் அடைக்கப்பட்டு சித்தம் பிறழ்ந்து போகிறார்கள் என்று படத்தில் வரும் குறிப்பு எதை உணர்த்துகிறது? சித்தம் பிறழ்ந்து போனவர்கள் அணியும் சீருடை பற்றிக் கவலைப்படுவார்களா? நாடு, குடும்பம் என்பனவும் ஒரு வித பக்க சார்பு தானே? பாராக் 6 அல்லது எல்லையில் இறத்தல் – இரண்டில் எது சிறப்பு?

Masaki Kobayashi இயக்கிய ஆங்கிலத் திரைப்படம் எழுப்பிய அதே வினாக்களை திரும்ப இந்திய மொழியில் எழுப்புகிறது 1971. ஒரு கஜல் பாடகி தப்பிச் செல்லும் இந்திய வீரர்களைக் காட்டிக் கொடுக்காமல் பாகிஸ்தானிய மனித உரிமை கமிஷனுக்குத் தகவல் தரும் காட்சி குறிப்பிடத் தகுந்தது. இரு புற மக்களை இணைக்கும் பாலமாக கலைஞர்கள் இருக்க முடியும் எனில் Fawad Khan-கள் மும்பை வந்து ந்டிப்பது ஏன் தடை செய்யப்பட்டிருக்கிறது? கலைஞர்கள் சீருடை அணிந்திருக்கவில்லை என்பது ஒரு காரணமாய் இருக்குமோ?

படத்தில் ஒரு காட்சி – இந்திய ராணுவ வீரர்கள் சக்லாலா கேம்புக்கு ஒரு லாரியில் அழைத்துச் செல்லப்படுகையில் ராம் குர்ட்டுவிடம் கேட்பான்

“பாகிஸ்தானில் பஞ்சாபிக்கள் இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள்”
“பாகிஸ்தானில் சிந்திக்கள் இருக்கிறார்களா?”
“இது என்ன கேள்வி…இருக்கிறார்கள்”
“பாகிஸ்தானில் முஸ்லீம்கள் இருக்கிறார்களா?”
“அடேய்…..இருக்காங்கடா”
“இவங்கல்லாம் இந்தியாவிலயும் இருக்காங்க…அப்புறம் எதுக்கு பாகிஸ்தான்?”
“ அடேய்…..தெரியாம தப்பு நடந்துருச்சு”

சியால்கோட்டுக்கு கனவி்ல் பயணமாதல்

ஒரு நகரத்திற்குப் பயணமானபோது அங்கு பார்த்த ஒரு வீதி பலமுறை என் கனவில் வந்த ஒரு வீதிக் காட்சியைப் போலவே இருந்தது. ஒரு பக்கம்
வரிசையாக வீடுகள். இன்னொரு பக்கம் அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கிடையே ஓடும் சிறு நதி. நகருக்கு நடுவே இருக்கும் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரிக்கு நடுவே அழகான வண்ணவண்ணப் படகு வீடுகள் தெரிந்தன. ஏரியைச் சுற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்று புற நகரை அடைந்த போது நான் பார்த்த தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்து நிலையமும் என் கனவில் ஒரு கட்டில் போட்டு அதில் நான் படுத்திருந்த இடத்தைப் போலவே இருந்தது. கனவில் அந்த இடம் ரொம்ப கூட்டமாய் இருந்தது. நிஜத்தில் அந்த பேருந்து நிலையம் காலியாய் இருந்தது. என் கனவில் வந்தது போன்றே ஷட்டருடனான கடைகள் இருந்தன. ஆனால் மூடியிருந்தன.

கனவில் நான் இருக்கும் இடம் பாகிஸ்தானின் நகரம் ஒன்று என்பதாக நினைத்துக் கொண்டிருப்பேன். சியால் கோட்டாக இருக்கலாம் என்று கனவுக்குள் எண்ணம் ஓடும். நிஜத்தில் பார்த்த நகரத்துக்கும் ஊக நகருக்கும் இடையே உள்ள தொலைவு இருநூறு கிலோமீட்டர் தான். இருநூறு கிலோமீட்டர் என்று சொல்லிக் கொள்வது எத்தனை presumptuous! நடுவே எல்லை இருக்கிறது. எல்லையில் பிரச்னை. எல்லையின் தொலைவு பற்றியச் சிக்கல். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை இருநூறு கிலோமீட்டராக எப்படி சுருக்கிவிட முடியும்? கனவில் நான் எல்லை தாண்டியதாக எண்ணியது பிழை. எல்லைக்குள்ளாகத்தான் இருந்திருக்கிறேன். கனவின் எல்லைக்குள்.

கண்ட கனவில் வந்த மனிதர்களை கவனிக்கவில்லை. அறிவிப்பு பலகைகள், பேருந்து எழுத்துகள் எதுவும் கனவில் தோன்றவில்லை. அவை தந்திருக்கக்கூடிய தகவல் கொண்டு இடத்தை சரியாக அனுமானித்திருக்கலாம். கனவு என்பதே நமக்கு நாம் சொல்லிக் கொள்வதும் உணர்ந்து கொள்வதும் தான். பலகைகளில் பேருந்துகளில் எழுத்துகள் தெரிந்திருந்தாலும் அவை நமக்குத் தெரிந்த மொழியில் எழுதப்படாவிட்டாலும் நாம் நினைத்துக் கொண்ட ஊரின் மொழியாகவே அது நமக்குத் தெரியும். போர்டில் ஃபார்ஸி எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவனுக்கு கனவில் வரும் ஃபார்ஸியை வாசித்துவிட முடியும் பிரக்ஞையில் அவனறிந்த மொழியாகிய தமிழ் கொண்டு. கனவுகளின் மொழி பிரக்ஞையின் மொழி.

நிஜப்பேருந்து நிலையம் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு பல வருடங்களாகிவிட்டனவாம். சியால்கோட்டுக்கு ஐம்பதுகளின் முடிவு வரை பேருந்துகள் சென்று கொண்டிருந்தனவாம்! இந்தத் தகவலின் துணை கொண்டு அடுத்த முறை கனவில் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்தால் சியால்கோட்டுக்கு பேருந்து பிடித்துச் சென்றுவிடலாம். சியால்கோட்டில் அதே வீதிக்காட்சியையும் பார்த்துவிடுவோம். ஏனெனில் வீதிக்காட்சியை பிரக்ஞைக்குள் ஏற்றிக்கொண்டால் கனவில் அதனை இருநூறு கிலோமீட்டர் நகர்த்துவது அத்தனை சிரமமில்லை. ”நிஜமாகவே” சியால்கோட்டிற்குள்ளும் அதே பேருந்து நிலையத்தை வந்தடைந்து விடுவோம்.