அறை முழுதும் அரவங்கள்

சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இப்போதெல்லாம் பாம்புகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது.

சிறுவயதிலும் இளம் வயதிலும் பாம்புகள் கனவில் பயமுறுத்தும். ஆனால் பொதுவாக ஒற்றை பாம்பு தான் வரும். திருமணமான பிறகு வந்த கனவுகளில் பாம்புகள் ஏராளமாக வரும். நானிருக்கும் ஓர் அறையின் எல்லா அறைகலனிலும் ஒவ்வொரு பாம்பும் படமெடுத்து நிற்பது போன்ற கனவுகள். சாதுவாக படமெடுத்து நிற்கும். சாந்த சொருபமாக த்யானத்தில் ஈடுபடுபவை போல தோற்றமளிக்கும். அல்லது என் தூக்கத்தில் வரும் கனவுக்குள் நுழைந்து அவைகள் படமேடுத்தபடியே உறங்குகின்றனவோ? நான் பயத்தில் வியர்த்திருப்பேன். சப்தநாடியும் ஒடுங்கியிருக்கும். கனவிலிருந்து விடுபட்டவுடன், அந்த பாம்புகளின் சாந்தசொருபத்தை இன்னும் கொஞ்சநேரம் பார்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும்.

இப்போதெல்லாம் பாம்புக்கனவுகள் அதிகமாக வருவதில்லை. கடைசியாக வந்த பாம்புக்கனவில், நான் பாம்புகளோடு பேசிக்கொண்டிருப்பது போல வந்தது.

உண்மையாக சொல்லப்போனால், பாம்பை அதன் இயற்கை சூழ்நிலையில் இதுவரை நான் பார்த்ததில்லை. பாம்புப்பண்ணைகளிலும், விலங்குகள் சரணாலயங்களிலும் தூர நின்று பார்த்திருக்கிறேன். இயற்கை சூழ்நிலையில் பார்த்தால் பயந்துபோவேன் என்றுதான் நினைக்கிறேன். இரவு நேரங்களில் கழிவறையில் சிறுநீரோ மலமோ கழிக்கும்போது "பாம்பு இந்த கழிவறையில் நுழைந்தால் என்ன செய்வது?" என்ற சிந்தனை தோன்றி என்னை சில்லிட வைக்கும். நேரிடையாக தோன்றாமல், நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் பயமுட்ட வல்ல ஒரே ஜந்து பாம்புதானே!

சில வாரங்களுக்கு முன் தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலமொன்றில் ஐந்து நட்சத்திர ஓட்டலோன்றில் காபி பருகிக்கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து மேசையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இளம் தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு வயதான மகனுடன் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தனர். மகன் மேசையைச்சுற்றி ஓடிக்கொண்டு விளையாட்டு காட்டிகொண்டிருந்தான். ஒரு சமயத்தில் கால் தடுக்கி விழப்போனபோது, அவனை தாங்கி நான் பிடித்தேன். பின்னர், நன்றியுணர்ச்சியுடன் என்னை அவர்களுடன் சேர்ந்தமர அழைத்தார்கள்.

ஜிம் வட ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரை சேர்ந்தவர். ஜிம்மின் மனைவி – எலிசபெத்தும் டார்வின் நகரை சார்ந்தவர். அவர்களிருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், அவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கிளையை இந்தியாவில் துவங்கும் நோக்கத்துடன் வந்தனர். இந்தியாவில் ஒரிரு வருடம் வசிக்கும் எண்ணமிருந்தது. சுற்றுலாத்தலத்தையொட்டிய சிறு நகரத்தில் சொகுசு பங்களாவொன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

பங்களாவின் உரிமையாளர் அந்த வீட்டின் ஒரறையை மட்டும் பூட்டி வைத்திருந்தார். பழைய தட்டுமுட்டு சாமான்களும், பரம்பரை அறைகலன்களும் உள்ளேயிருந்தன. அறைகலன்களோடு குடியிருந்த பாம்புகளைப்பற்றி யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. ஒரு நாள், சமையலறையில் தேநீர் தயாரிக்க வந்த ஜிம் கேஸ் அடுப்புக்கு கீழ் படுத்திருந்த பாம்பை பார்த்தார். தொலைக்காட்சியில் வரும் வனவிலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்க்கும் ஜிம் படுத்திருந்த பாம்பைக்கண்டு “த்ரில்” ஆனார். ஒரு குச்சியின் உதவியுடன், லாவகமாக பாம்பை எடுத்து, கொல்லைப்புறத்தில் உள்ள மதிலுக்கு வெளியே இருந்த வயல் பகுதிக்குள் எரிந்தார். கிட்டத்தட்ட இரு நாளைக்கு ஒருமுறை பாம்பை எடுத்து வெளியே எறியும் பயிற்சி நடந்தது. சில நாட்களுக்கு பிறகு, படுக்கையறையின் தரையில் ஒரு பாம்பு காணப்பட்டது. அப்பொது, ஜிம்மின் மகன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தான். எலிசபெத் தோட்டக்காரனை அழைத்து, அந்த பாம்பை அப்புறப்படுத்தினாள்.

பாம்பின் வரவு பெருக ஆரம்பிக்கவே, ஜிம் வீட்டின் உரிமையாளரை அழைத்து பூட்டியிருந்த அறையை திறக்க வைத்தார். திறந்த அறைக்குள், அவர்கள் கண்ட காட்சி படு பயங்கரமாக இருந்ததாம்…..கிட்டத்தட்ட நாற்பது – ஐம்பது நாகங்கள் அந்த அறைக்குள் காணப்பட்டன. வீட்டுக்காரர் வாயடைத்துப்போனாராம்…..பல வருடங்களாக பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் ஃப்ளோரிங்கை மாற்றும் பேச்சு வந்த போதெல்லாம், கஞ்சத்தனப்பட்டு தட்டிக்கழித்து வந்தது மிகப்பெரும் தவறுதானென ஒப்புக்கொண்டார்.

ஜிம்மும் எலிசபெத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததன் பிண்ணனி இதுதான். வேறு ஒரு பங்களா கிடைக்கும் வரை தங்கியிருப்பார்கள். ”வீட்டு சாமான்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். ”சாமான்களை வேறு வீடு வாடகைக்கு கிடைத்த பிறகே போய் எடுத்து வர வேண்டும்?” என்றார் ஜிம். ”சாமான்களை எடுக்கப்போகும் போதும் பாம்புகள் அங்கு இருக்குமா?” என்று கேட்கலாமென்று பார்த்தேன் ; கேட்கவில்லை.

அன்று இரவு கனவில் மீண்டும் பாம்புகள் விஜயம் செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பாம்புக்கனவு வரவில்லை. நீண்டதொரு ரயிலில், பெயர் தெரியாத ஒர் இடத்திற்கு போவது போல் கனவு கண்டேன். கனவில் ரயில் பாம்புப்புற்றுகள் நிறைந்த ஒர் இடத்தை தாண்டி சென்றது. பாம்புகளெதுவும் புற்றிலிருந்து எட்டிப்பார்க்கவில்லை.

ஒன்று அறிய ஆசை. நிஜம்மாகவே, பாம்புப்புற்றுகளில் பாம்புகள் வாழ்கின்றனவா?

ஒரு குட்டிக்கதை

புறநகரின் ஆள் அரவமில்லாத மாளிகையொன்றில் அரவங்கள் புகுந்து மொய்த்தன. மாளிகைவாசிகள் குலை நடுங்கி வெளியெறினர். பாம்பு பிடிக்கும் மனிதர்களை கூட்டி வந்தனர். பாம்புகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் ஒவ்வொரு உயிரிழந்த பாம்புக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பாம்புகள் வந்து கொண்டேயிருந்தன. மனிதர்கள் சோர்வுற்று இறுதியில் அம்மாளிகையை பாம்புகளின் ஆலயமாக ஆக்கினர். ஆலயம் என்றாலும் பக்தர்களெல்லாரும் தூர நின்றே தரிசிப்பார்கள். பின்னர் புராணக்கதைகள் புனையப்பட்டு அவ்வாலயம் பெயரும் புகழும் பெற்றது.

மாளிகையையொட்டி பூ விற்கும் கடைகள், அர்ச்சனை தட்டு விற்பவர்கள், பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பவர்கள் என்று பலருக்கும் வயிறு நிறைந்தது. நெரிசல் அதிகமாகி, வெளிச்சம் அதிகமாகி… பாம்புகள் ஆலயத்தை விட்டு அகன்றன. ஆலயத்தின் வாசலில் சில பாம்புகள் உயிரை விட்டன. தூர நின்று வழிபடும் பக்தர்களோ பாம்புகள் இல்லாத ஆலயத்தில் பாம்புகள் இருப்பதாக எண்ணி பாம்புத்தெய்வங்களை வழிபடுகின்றனர்.

பாம்பில்லாததோர் இடத்தை ஆலயமாக தொழுவது பகுத்தறிவன்று என்று சொல்லி ஒரு சாரார் கொடிபிடித்தனர். அவர்கள் குரலோங்க பாம்பாலயத்தை தொழுவது நின்றது. மாளிகை வாசிகளின் வழித்தோன்றல்கள் திரும்பி வந்து புனருத்தாரணம் செய்து வசிக்கத்துவங்கினர். வீட்டின் பின்னே ஒளிந்திருந்த குட்டிப்பாம்பை வளர்த்தனர். அங்கு இப்போது பாம்புகளின் சரணாலயம் இருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அந்த மாளிகையில் பாம்புகள் – மனிதர்கள் இருவரும் வாழ்கின்றனர்.

+++++

என்னை மிகவும் கவர்ந்த பாம்பு பற்றிய கவிதையொன்றை கீழே தருகின்றேன்.

கவிதையின் தலைப்பு : பேட்டி***

எழுதியவர் : எம் டி முத்துகுமாரசாமி

கிடா விழுங்கும் மலைப்பாம்பல்ல
நான் என அறிய
வீசினால் தண்ணீர்
அடித்தால் செத்தது
தாண்டினால் பழுது
கக்கினால் ரத்தினம்
கடித்தால் விடம்
சுருட்டினால்
பைந்நாகப் பாய்
விரித்தால்
சிவலிங்கக் குடை
தரிசித்தால்
தன் வாலைத் தானே கவ்வுமிது.

*** “நீர் அளைதல்”கவிதை தொகுதியிலிருந்து.

கவிதை தொகுதியைதரவிறக்க : https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHCwqQ3UxT7ZDNmYjQ1YzctNTk1Ni00MjMyLThkODktNGNmOTYyYjMyMGNi&hl=en_US