பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம் இருவருமே அதை நாடவில்லை நிலவிய சூழல்தான் காரணம் பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை வெகுதூரம் துரத்தியிருந்தது – அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை சூழல்தான் காரணம்- ஒரு வேளை அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன் காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன்
ஊழானது கலைஞனாகத் தோன்றி இருவரையும் பிரித்திருக்கலாம் ஒருவருக்கு மற்றவர் என்றுமே இருபத்தி நான்கு வயது அழகான இளம் வாலிபராகவே நினைவில் நிற்கவேண்டுமென்பதற்காக
ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில் இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான வகையில் பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வாயிலாகவாவது நம்மால் வாசிக்க முடிகிறதேயென்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
Rumi & Hafez
ஹஃபிஸ் கிட்டத்தட்ட ரூமி போலத்தான். படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த சுஃபி இலக்கியத்தின் பிதாமகர்கள் இவ்விருவரும். செபெஹ்ரி ஒரு நவீன கவி. ஓவியக் கலையிலும் தேர்ந்தவர் என்பதால் அவருடைய சொற்களுக்கு வர்ண தூரிகையின் குணம் உண்டு. இருப்பினும் ரூமி, ஹபீஸ் போன்றோரின் படைப்புகளைப் போன்று செபெஹ்ரியின் அனைத்து கவிதைகளையும் எளிதாக உளவாங்கிக் கொள்ள முடிவதில்லை. வாசகரின் உழைப்பை அதிகம் கோருபவையாக உள்ளன செபெஹ்ரியின் கவிதைகள்.
Sohrab Sepehri
ரூமிக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஓமர் கய்யாம் வேறு ரகம். கணிதவியல், வானவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த கய்யாம் வாசகர்களை நன்கு ‘நக்கலடிக்கிறார்’. “எதைப் பற்றி எழுதியிருக்கிறேன் கண்டு பிடியுங்கள்” என்றுசவால் விடுகிறார். மது, போதை, என கிடடத்தட்ட அனைத்து “ருபைய்யத்”களிலும் வருவதைப் பார்த்து “இது நம்ம ஆளு” என்று “குடிமக்கள்” அவரை கொண்டாடுவதை பார்த்தால் தன் கல்லறையிலிருந்து ஓமர் கய்யாம் வயிறு குலுங்க சிரிக்கக்கூடும்.
எட்வர்ட் பிட்ஸ்ஜரால்ட்-டின் உலக புகழ் பெற்ற மொழியாக்கம் ஓமர் கய்யாமின் மீது உலக அரங்கில் வெளிச்சம் பாய்ச்சியது. ஈரடிகள் எனப்படும் ருபைய்யத்களை வெறித்தனமாக தன் வாழ்நாள் முழுதும் திரும்பத்திரும்ப மொழிபெயர்த்து வந்தார் எட்வர்ட். முதல்பதிப்புக்கு பிறகு தன் மொழிபெயர்ப்பில் பல திருத்தங்களை அவர் செய்தாலும் அவருடைய முதல் பதிப்பு கிட்டத்தட்ட ஒரு மறு-ஆக்கம் என்று பல பர்ஸிய மொழி வல்லுனர்களால் கருதப்படுகிறது.
கவிமணியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஒன்று ருபைய்யத்துக்கு உண்டு. அதிலிருந்து கீழ்வரும் வரிகள் மிகப்பிரபலம் :-
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு தெய்வகீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு வையந் தருமிவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
கவிமணியின் மொழிபெயர்ப்பு இனிமையானது. மரபுக்கவிதை வடிவத்தில் அவர் மறு ஆக்கமாக அதை மொழிபெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பில் வரும் “கம்பன் கவி” என்னும் motif ஓமர் கய்யாமின் உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல நம் மரபின் motif-களை பல இடங்களில் கவிமணி பயன்படுத்தியிருப்பார். மறு ஆக்கம் என்பதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எனினும், குறியீடுகளை, படிமங்களை திரும்ப திரும்ப சொல்லும் சுஃபி இலக்கியத்தின் ஒரு தன்மை கவிமணியின் மறு – ஆக்கத்தில் இல்லாமல் போய்விட்டதோ எனும் சம்சயம் எனக்குண்டு.
ஊழ் வலிமை, தர்க்கங்களின் பயனற்ற தன்மை, கடவுட்தன்மையின் துளி உலக விஷயங்களில் இருத்தல், கடந்த கால சோகங்கள் மற்றும் எதிர்கால கவலைகள் – இவற்றை ஒதுக்கி இன்றைய பொழுதில் மட்டும் கவனம்செலுத்துதல் – ஆகிய தரிசனங்களை வழங்கும் motif-கள் இந்தியமரபிலும் உண்டு. கவிமணியின் மொழிபெயர்ப்பில் அவை உரிமையுடன் பயன்படுத்தப்பட்டிருப்பது ருபைய்யத்தின் சுஃபி தன்மையை நீர்க்கச் செய்கிறதோ என்று நான் நினைக்கிறேன்.
ருபைய்யத்துக்கு ஒரு நவீன தமிழிலான மொழிபெயர்ப்புக்கு இடமிருக்கிறது. மரபு வடிவத்தின் வரம்புகளின்றி வசனநடையிலான மொழிபெயர்ப்பு சுஃபி தரிசனங்களை உள்ளவாறே தமிழில் நிகழ்த்திக்காட்ட உதவும். ஒரே irony – மொழிபெயர்க்க இன்னொரு மொழிபெயர்ப்பையே – எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்டையே நம்பவேண்டியிருக்கிறது! சுமார் ஏழெட்டு ருபைய்யத்களை சாம்பிளுக்காக மொழிபெயர்த்தேன். அனைத்து ருபைய்யத்துக்களையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டு.
—–
ஜாம்ஷிட் மன்னன் குடித்து கும்மாளமிட்ட சபைகளில் சிங்கமும் பல்லிகளும் குதித்து விளையாடுகின்றன கிறித்துவர்களை வேட்டையாடிய பஹ்ராம் மீளாத் துயிலில் கிடக்க அவன் தலையை காலால் உருட்டியது ஒரு வனக்கழுதை
__
வாதம், முயற்சி என முடிவிலி தேடலில் எத்தனை காலம்? பழமற்றோ கசந்த பழத்துடனோ கவலையில் மூழ்குவதை விட கனிந்த திராட்சையுடன் சந்தோஷத்தில் திளைப்பது சிறந்தது.
__
தோழர்களே வெகுகாலம் கழித்து வீட்டில் என் புது திருமணத்திற்கான கொண்டாட்டம் என் படுக்கையிலிருந்து மலட்டு தர்க்கத்தை துரத்தி விவாகரத்து செய்துவிட்டு திராட்சைக் கொடிமகளை மனைவியாய்க் கொண்டேன்
—
கோப்பையை நிரப்பு ; நம் காலுக்கு கீழ் காலம் நழுவிச் செல்லுதல் பற்றி பேசிப் பயன் என்ன? பிறக்காத நாளையும் இறந்த நேற்றும் – இவற்றுக்காக கவலைப்படுதல் வியர்த்தம், இன்று இனிதாயுள்ளபோது! (XXXVII)
__
சுழலும் சொர்க்கத்திடமே நான் கேட்டேன்- “இருட்டில் தடுமாறும் சிறு குழந்தைகளை வழிநடத்த என்ன விளக்கை வைத்துள்ளது ஊழ்?” சொர்க்கம் சொன்னது : “கண்மூடித்தனமான புரிதல்”
__
உள்ளே வெளியே மேலே, சுற்றியெங்கும், கீழே – வேறொன்றுமில்லை சின்ன பெட்டிக்குள் நடக்கும் மந்திர நிழல்கூத்து மெழுகுவர்த்தியே சூரியன் அதைச் சுற்றி வேதாள உருவங்கள் வருவதும் போவதுமாய்
__
ஆற்று விளிம்பில் ரோஜாக்களின் வீச்சு மூத்த கய்யாமிடம் செந்நிற, பழம்பானம் இருண்ட கோப்பையுடன் தேவன் உன்னை அணுகுகையில் அதை எடுத்துக்கொள் தயங்காதே (XLVIII)
__
யாரும் இதற்கு பதிலளித்ததில்லை ; துரதிர்ஷ்டகரமாக பண்ணப்பட்ட கிண்ணமொன்று மௌனம் காத்து பின்னர் பேசியது: “மோசமான அனைத்துடனும் சாய்வு கொண்டிருத்தலால் அவர்கள் என்னை நிந்திக்கிறார்கள்; குயவனின் கை அதிர்ந்ததா என்ன?” ( LXIII)