இது ரியோகன் எழுதியதில்லை

கண்கள் மூடிப் படுத்திருக்கிறேன்

ஏதேதோ நினைவுகள்

அடுத்த நாள் பற்றிய எண்ணங்கள்

பகலில் நடந்தவை பற்றிய அசை போடல்கள்

விடியச் சில மணி நேரங்கள்

இத்தருணத்திற்கு மீண்டு இரவைப் பருகினேன்

மூடிய கண்களில் உறக்கம் படிந்தது

நீர் நகரும் சத்தம் கேட்டவாறிருந்தது

யாரோ எதுவோ கால் கழுவிக்கொண்டது

நீரளையும் ஓசை

கரை தட்டிய கால்கள்

தரையில் தள்ளிவிடும் நீர்

மனதில் வந்து தேங்குகிறது

மனம் சுத்தமாகட்டும்

புதுக்காலையில் புது மனம்

1.44 AM Fri 21 Jan

இரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்

சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது.

சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை கொடுத்து கொண்டிருந்தது. சதா அது பற்றிய சிந்தனையோட்டத்தினால் என் மனத்தில் மிகுந்த உளைச்சல். உடனடியாக அந்த அனுபவத்தின் விளைவைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் செய்யமுடியாத சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலை. 

நேற்றிரவு தூக்கமே வரவில்லை. கவனத்தை திசை திருப்ப பலவிதங்களில் முயன்றேன். ரூமி ஞாபகம் வந்தார். The Essential Rumi புத்தகத்தைப் புரட்டினேன். எந்த  குறிப்பான நோக்கமுமில்லாமல் ஒரு பக்கத்தில் நின்றேன். 

எனக்கென்ன ஆசையா
அவளோடு காலங்கழிக்க
அவள் பூசிக் கொள்ளும் வாசனையோ
அல்லது அணிந்து கொள்ளும் பிரகாசமான உடைகளோ –
இவை காரணமல்ல
அவளுடைய வெறுப்பு படிந்த பார்வையை
சகித்துக் கொள்ளுதல்
என்னுள் வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடுக்கிறது
அவள் என் பயிற்சி
இன்னோரு துருவப்பாதி இல்லாவிடில்
எதுவும் தெளிவுறுவதில்லை
இரு பதாகைகள்
ஒன்று கருப்பு இன்னொன்று வெள்ளை
இரண்டுக்கும் நடுவில் அன்றோ தீர்வு பிறக்கிறது
பாரோவுக்கும் மோசஸுக்கும்
நடுவில் செங்கடல் போல

மெலிதான அதிர்வு என்னுள். என்னுடைய சங்கடத்தை ரூமி அறிந்து கொண்டாரோ? எந்த அனுபவக் கூண்டுக்குள் சிக்கியுள்ளாயோ அதனுள்ளேயே இரு. வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடு.

The Essential Rumi-யை மூடி வைத்தேன். One Robe One Bowl எனும் ரியோகனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கையிலெடுத்தேன். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தேன்.

அழகு இருந்தால்
அசிங்கம் இருந்தாக வேண்டும்
சரி என்ற ஒன்று இருந்தால்
தவறு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும்
அறிவும் பேதைமையும் ஓர் இணை
மயக்கமும் ஞானமும்
பிரிக்கப்பட முடியாதவை
இது பழைய உண்மை
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதென
நினைக்காதே
“இது வேண்டும் அது வேண்டும்”
என்பது முட்டாள்தனமின்றி வேறில்லை
நான் உனக்கொரு ரகசியத்தைச் சொல்வேன்
“அனைத்து பொருட்களும் நிரந்தரமில்லாதவை”

ரியோகனுக்கும் என்னுடைய கவலை பற்றித் தெரிந்துவிட்டிருக்கிறது !  “இது வேண்டும் அது வேண்டும்” என விழைவது முட்டாள்தனமின்றி வேறில்லை என்று வைகிறார் ரியோகன். “எதுவும் நிரந்தரமில்லை” என்றொரு “ரகசியத்தையும்” பகிர்ந்திருக்கிறார். 

நண்பர்கள் கொடுத்த பாடங்களை அளவிலா ஆச்சரிய உணர்வுடன் சிந்தித்தவாறே தூங்கிப்போனேன்.

அசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்  

lemon-and-a-water-jug
@Maria Singh

இருட்டைத் துழாவித் 
தடுமாறிய போதினில்
விட்டு விட்டு ஒளிரும்
மின்மினிப் பூச்சி
வெளிச்சத்துள் தள்ளும் வாயில் 
சற்று தொலைவில் இருப்பதை
அறிவிக்கிறது

நீ புரட்டும் புத்தகத்தின் 
ஏதோ ஒரு பக்கத்தில் 
இடப்புற 
முதல் பத்தியில்
இருக்கக்கூடும்
நம்பிக்கைச் செய்தி

உன்னை பாதுகாப்பேன்
என்னும் உத்திரவாதத்துக்கு
எத்தனை வாக்குமூலம்
வேண்டும் உனக்கு?
உன் சன்னலைத் திற
புறத்தே நோக்கு
வானில் மிதக்கும் அந்த நிலவு
நீ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
வீட்டுக் கூரை
சில நொடிகளில்
உன் மேல் படரப்போகும்
உறக்கம்
உன் தாகம் தணிக்க
தயார் நிலையில் நிற்கும்
நீர் நிரம்பிய பிளாஸ்டிக் கூஜா

பலப்பலவாய்
உன் கண் முன்னே
நினைவூட்டற்குறிகள் 

எதிர்பாராதவை நிகழ்கையில்
நீ அடையும்
தடுமாற்றம்
என்னுடைய சிறு விளையாட்டு
முரண்பாடுகளை
சமன்பாடுகளாக்கும்
என் லீலை

என் விளையாட்டில்
பங்கு கொள்
Humour me

அடுத்த காட்சி
தொடங்குவதற்கு
திரைச்சீலையை
விலக்கச் செல்கிறேன்

நோயாளி

அமைதியை குலைத்து
அறைக்குள் நுழைந்த இசையை
விரட்டியடிக்க முடியாமல்
தட்டுத்தடுமாறி
காதை பொத்திக்கொண்டேன்
இசை இப்போது தென்படவில்லை.
இசை கண்ணுக்கு தெரியாமல்
எங்காவது ஒளிந்திருக்கக்கூடும் என்று
காதிலிருந்து கைகளை எடுக்கவில்லை
கை வலிக்கத் துவங்கியபோது
இரு கைகளை தொங்கப்போட்டு
வலியை துரத்தினேன்.
இசை
அவ்விடத்திலிருந்து
ஏற்கெனவே
விலகிச் சென்றிருக்கலாமென
எண்ணிக்கொண்டு
மீண்டும் உறக்கத்தை
தேடும் முயற்சியில் இறங்கினேன்