கவிஞர் – தத்துவவாதி

அல்லாமா இக்பால் போன்ற ஓர் ஆளுமை துணைக்கண்டம் அதற்கு முன்னர் கண்டதில்லை. கவி நயமும் தத்துவமும் அவருள்ளில் ஒருங்கே குடி கொண்டிருந்தன. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்ட அவர் தத்துவம் கற்பித்தார். சட்டம் பயிற்சி செய்தார். அரசியலில் ஈடுபட்டார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பாகிஸ்தானை உருவாக்கும் யோசனையை ஆதரித்ததால் அங்கு தேசியக் கவிஞராக போற்றப்பட்டபோதும், இந்தியாவின் மகத்துவத்தைக் கொண்டாடும் புகழ்பெற்ற தேசபக்தி பாடலை எழுதினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் சர் பட்டம் வழங்கப்பட்டு ‘சர்’ முகமது இக்பால் என்று அழைக்கப்பட்டார். “The Spirit of philosophy is one of free enquiry. It suspects all authority” என்று முழங்கிய இக்பால் 1920களில் மதராஸ் முஸ்லீம் அசோசியேஷன் எனும் அமைப்பின் அழைப்பில் சென்னை, ஹைதராபாத், அலிகர் ஆகிய நகரங்களில் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து 1930இல் “இஸ்லாத்தில் மத சிந்தனையின் மறுசீரமைப்பு” எனும் நூலை வெளியிட்டார். இஸ்லாமிய தத்துவ மரபுகளையும் மனித அறிவுச் செயல்முறையின் பல களங்களிலும் ஏற்பட்டிருந்த சமீபத்திய முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு முஸ்லீம் மத தத்துவத்தை மறுகட்டமைக்கும் முயற்சியாக இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

மனிதனின் உள் மற்றும் புற வாழ்வின் மாற்றமும் வழிகாட்டுதலும் மதத்தின் இன்றியமையாத நோக்கமாக இருப்பதால், அறிவியலின் கோட்பாடுகளைக் காட்டிலும் மதத்திற்கு அதன் இறுதிக் கொள்கைகளுக்கான பகுத்தறிவு அடித்தளம் மிக அத்தியாவசியமாக உள்ளது. ஆனால் நம்பிக்கையை நியாயப்படுத்துவது என்பது மதத்தை விட தத்துவத்தின் மேன்மையை ஒப்புக்கொள்வது ஆகாது. மதம் என்பது துறை சார்ந்த விவகாரம் அல்ல. அது வெறும் சிந்தனையோ, உணர்வோ அல்லது நடவடிக்கையோ அல்ல; அது முழு மனிதனின் வெளிப்பாடு.

சிந்தனையும் உள்ளுணர்வும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை. அவை ஒரே வேரிலிருந்து தோன்றி ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. ஒன்று யதார்த்தத்தை துண்டு துண்டாகப் புரிந்துகொள்கிறது, மற்றொன்று அதை அதன் முழுமையுடன் புரிந்துகொள்கிறது.

சிந்தனை அடிப்படையில் வரையறைக்குட்பட்டது; இந்த காரணத்திற்காக அதனால் எல்லையின்மையை அடைய முடியாது என்ற கருத்து, அறிவில் சிந்தனையின் இயக்கம் பற்றிய தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கான்ட்,அல்-கஸாலி – இருவருமே சிந்தனையை, அறிவின் செயல்பாட்டில், அதன் சொந்த எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதைக் காணத் தவறிவிட்டனர். எண்ணத்தை முடிவுறாததாகக் கருதுவது தவறு; அதன் போக்கில், வரையறைக்குட்பட்ட எண்ணம் எல்லையின்மையுடன் கைகுலுக்கும் தன்மையுடையது.

கடந்த ஐநூறு ஆண்டுகளாக இஸ்லாத்தில் மதச் சிந்தனை நிலையானதாக எந்தவித அசைவுமின்றி இருந்து வருகிறது. ​​​​​​நவீன வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆன்மீக ரீதியாக இஸ்லாமிய உலகத்தின் மேற்கு நோக்கிய வேகமான நகர்வு. இந்த இயக்கத்தில் எந்த தவறும் இல்லை, ஏனெனில் ஐரோப்பிய கலாச்சாரம், அதன் அறிவுசார் அணுகுமுறையில், இஸ்லாமிய கலாச்சாரத்தினுடைய முக்கியமான கட்டங்களின் மேலதிக வளர்ச்சி மட்டுமே. ஐரோப்பிய கலாச்சாரத்தின் திகைப்பூட்டும் வெளிப்புறமானது இஸ்லாமின் இயக்கத்தை தடுத்து நிறுத்தி, அந்தக் கலாச்சாரத்தின் உண்மையான உள்நிலையை உள்வாங்கிக் கொள்ளாமல் செய்துவிடுமோ என்பது மட்டுமே இஸ்லாமியர்களின் பயம். ​​​​​​​​ எனவே, இஸ்லாத்தின் மறுமலர்ச்சியுடன், ஐரோப்பாவின் சிந்தனைகள் மற்றும் அவை எட்டிய முடிவுகள், இஸ்லாத்தின் இறையியல் சிந்தனையின் மறுசீரமைப்பிலும், தேவைப்பட்டால். மறுகட்டமைப்பிலும், எவ்வளவு தூரம் உதவக்கூடும் என்பதை சுதந்திரமான உணர்வில் ஆராய்வது அவசியம்.

இந்த நூலில் மொத்தம் ஏழு கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையைத் தான் இதுவரை வாசித்திருக்கிறேன். ​​​​​​​​”காஷ்மீரி பிராமணர்களின் வாரிசு ஆனால் ரூமி மற்றும் தப்ரிஸின் ஞானத்தை அறிந்தவன்” என்று தம் நண்பர்களிடையே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்ட அல்லாமா இக்பால் ஞானம் மற்றும் சமய அனுபவங்குறித்து விரித்துரைக்கும் முதல் கட்டுரை சுவையாக இருந்தது. மற்ற கட்டுரைகளை வாசிக்க காத்திருக்க முடியவில்லை. பெருநாளுக்குப் பிறகு இந்த நூலின் வாசிப்பைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.

மடாலயம் எனுந்தலைப்பில் இக்பால் எழுதிய சிறுகவிதை ஒன்று –

அடையாளங்கள் மற்றும் சின்னங்களில் பேசுவது இந்த காலத்துக்கானதில்லை,
கலைநயத்தோடு இளிப்பவர்களின் கலை எனக்கு தெரியாது;
‘எழுந்திரு, கடவுளின் பெயரால்!’ என்று சொன்னவர்கள் இப்போது இல்லை.
உயிருடன் இருப்பவர்கள் எல்லோரும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கல்லறை தோண்டுபவர்கள்

ஹதீஸ் பயில்விக்கும் சேல்ஸ் டெக்னிக்

“டஸாமுஹ்” என்றொரு அரபிச்சொல் பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் மத, கலாச்சார வேறுபாடுகளை பரஸ்பரம் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இஸ்லாம் குறித்து முஸ்லீம்கள் அல்லாதோரின் பொதுப்புத்தியில் நிலவும் எண்ணப்போக்கை இந்தக் கருத்தியல் உடைக்கிறது. நபிகள் தமது நம்பிக்கையை எப்படி மக்களிடையே பரப்பினார் என்பதை சில தினங்கள் முன்னர் எழுதிய குறிப்பில் சொல்லியிருக்கிறேன்.

இஸ்லாம் சகிப்புத்தன்மை மற்றும் எளிமையின் மதம்; கருத்துச் சுதந்திரத்திற்கு போதுமான இடத்தை அது அளிக்கிறது. அல்லாஹ்வின் செய்தியை கண்ணியமான முறையில் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவும், உண்மையின் பாதையை நோக்கி மக்களை அழைக்கவும் இயன்றதைச் செய்ய இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது. அதற்குப் பிறகு அவ்வழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்களிடமே உள்ளது. ஆனால் தமது எண்ணங்களை மக்கள் மீது திணிக்க முஸ்லீம்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

“(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்கவேண்டாம்; இன்னும், நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக. “நீங்கள் எவ்விஷயத்தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்” (22:67-69)

இன்னோர் இடத்தில் அல்லாஹ் சொல்கிறான் :-

“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (16:125)

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையிலிருந்தே சகிப்புத்தன்மையின் பல பாடங்களைப் பெறலாம். அவரது முழு ஆளுமையும் வாழ்க்கை முறையும் ஒரு சீரான வாழ்க்கையை நடத்துவதற்கு ஒருவர் கைக்கொள்ள வேண்டியவைகளென பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை நிரூபிக்கிறது. ஒருமுறை, ஒரே ஒரு உண்மையான மதத்தை நிரூபிப்பதற்காக அல்லாஹ் ஏன் கஷ்டங்களை உண்டுபண்ணி பொய்யான கடவுள்களை வலுக்கட்டாயமாக இடிப்பதில்லை என்று சிலர் நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்ட தருணத்தில் எல்லாம் வல்ல இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அவருள் இறக்கினான் :

“அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும் நாங்களோ எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவையென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னம் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்பு உண்டா? (இல்லை) – 16:35

சகிப்புத்தன்மையும் பொறுமையும் இறைவனின் இயல்பு எனும்போது நம் முடிவுகளை மற்றவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க நாம் யார் ?

உழைப்பு வாழ்க்கையை விற்பனைத்துறையில் கழித்துக் கொண்டிருப்பவன் நான். விற்பனைப் பணியாளர்களுக்கு வேதாகமங்கள் என்ன அறிவுறுத்துகின்றன என்னும் பொருளில் திரட்டப்பட்ட மேற்கோள் தொகுப்பில் ஓர் ஹதீஸ் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆம்! என்னைப் போன்ற விற்பனைப் பணியாளர்களும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார் நபிகள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லா அறிவித்தார்: “விற்கும்போதும், வாங்கும்போதும், பணத்தைக் கேட்கும்போதும் சகிப்புத்தன்மையுள்ள ஒரு மனிதனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக.” (ஸஹீஹ் புகாரி).

இந்த மாதம் விற்பனை இலக்கை எட்ட அருளாளன் எனக்கு வகை செய்யட்டும்!

தெய்வீக அன்பே இஸ்லாத்தின் மையம்

இஸ்லாத்தின் மையமும் முஸ்லிம்களின் முதன்மையான அக்கறையும் கடவுள் நம்பிக்கை. கடவுள் ஒருமை (“தவ்ஹித்”) எனும் அடிப்படையில் நிறுவப்பட்டது இஸ்லாமிய நம்பிக்கை. கடவுளின் முழுமையான ஒருமை மற்றும் ஆழ்நிலை பற்றிய இந்த நம்பிக்கை இஸ்லாமிய பிரகடனத்தில் வெளிப்படுத்தப்படுகிறது – “அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்”

நம்பிக்கைப் பிரகடனத்திற்கு மேலதிகமாக, இஸ்லாமிய நம்பிக்கை குர்ஆனின் தெய்வீக வெளிப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. முஹம்மது நபிக்கு கேப்ரியல் தேவதை மூலம் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தை இது.

பிரார்த்தனை, தொண்டு, உண்ணாவிரதம் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியவை இஸ்லாமிய நம்பிக்கையின் மைய நடைமுறைகள். இவையும் கடவுளை வணங்குவதையும் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, கடவுள் நம்பிக்கை மற்றும் அவரது விருப்பத்திற்கு அடிபணிதல் இஸ்லாமிய நம்பிக்கையின் அடித்தளம் மற்றும் முஸ்லீம் அடையாளம்.

நண்பர் Kollu Nadeem கீழ்க்கண்ட வசனத்தை இன்று மதியம் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார்.

“(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள்.
(9:24)

கடவுள் மைய நம்பிக்கை வழி விளைந்த கடவுள் மீதான அன்பு – இதை மட்டுமே செயல்முறையாக வைத்து ஆசாரங்களை சமூக இறுக்கங்களை கலாசாரங்களை மீறும் தத்துவ முறையே சூஃபித்துவம்.

13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற பாரசீக கவிஞர், ஆன்மீகவாதி, சூஃபி ரூமி. இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரிய ஆன்மீக குருக்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். அவருடைய கவிதைகள் – இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் போதனைகள், குறிப்பாக சூஃபித்துவம் – ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டவை.

ரூமியின் கவிதையின் மையக் கருப்பொருள்களில் ஒன்று தெய்வீக அன்பின் கருத்து. இது கடவுளின் அன்பு மற்றும் கருணை மீதான இஸ்லாமிய நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. அவரது பல கவிதைகளில், ரூமி கடவுளை அன்பான மற்றும் இரக்கமுள்ள சக்தியாக சித்தரிக்கிறார், அது படைப்பின் அனைத்து அம்சங்களிலும் உள்ளது என்றும் கூறுகிறார். பிரார்த்தனை, தியானம் மற்றும் சேவைச் செயல்கள் மூலம் கடவுளுடன் தனிப்பட்ட உறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

ரூமியின் கவிதையில் உள்ள மற்றொரு முக்கியமான கொள்கை கடவுள் ஒருமை பற்றிய இஸ்லாமிய நம்பிக்கையின் மையமாகும். ரூமி எல்லாமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் கடவுளில் உள்ள அனைத்து படைப்புகளின் இறுதி ஒற்றுமையையும் பற்றி அடிக்கடி பேசுகிறார். இந்த ஒற்றுமையின் ஆழமான விழிப்புணர்வை அடைவதற்காக, பொருள் உலகின் பற்றை மற்றும் மாயைகளை கடந்து செல்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

ரூமியின் கவிதைகள் இஸ்லாமியக் கொள்கையான பணிவு மற்றும் கடவுளின் எல்லையற்ற சக்தி மற்றும் ஞானத்தின் முகத்தில் ஒருவரின் சொந்த வரம்புகளை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. ஒருவருடைய சொந்த விருப்பங்களையும் வெறுப்புகளையும் கடவுளின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர் அடிக்கடி பேசுகிறார்,

ஒட்டுமொத்தமாக, ரூமியின் கவிதைகள் இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் போதனைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இஸ்லாமிய பாரம்பரியத்தின் ஆழமான ஆன்மீக நுண்ணுணர்வைப் பிரதிபலிக்கிறது.

சுய-உதவிப் புத்தகங்களின் அணுகுமுறையுடன் “செக்யூலர் ஃபீல்” தொனிக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இஸ்லாம் தோலுரிக்கப்பட்டு சில ரூமி கவிதைகள் தட்டையான வாசிப்பாக அமைகின்றன. (அதனாலேயே ரூமி மேற்கோள் எதையும் இக்குறிப்பில் சேர்க்கவில்லை.)

மோகமும் முக்தியும்

Rab2

ஒரு கலைப்படைப்பை ரசிப்பதோ கணிப்பதோ அதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது. புரிந்து கொள்ளும் விதம் மாறும் போது அப்படைப்பை பற்றிய நம் முந்தைய கணிப்பும் மாறும். இதன் செயல் முறை விளக்கம் ஒன்று சமீபத்தில் நடந்தேறியது. 2008-இல் பார்த்த திரைப்படம். பார்த்துவிட்டு பொருளற்ற பொழுதுபோக்குப் படம்  என்று நான் பொருட்படுத்தாமல் விட்டுவிட்ட படம். மீசை மாற்றினால் ஆளே மாறிவிடுகிறானாக்கும்! நாயகிக்கு இரண்டு பேரும் ஒருவர் தான் என்று புரிந்து கொள்ளமுடியவில்லையாக்கும்! காதுல பூ! என்று குறை சொல்லிக் கொண்டே rab ne bana di jodi படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

2009 இலிருந்து பஞ்சாபி பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம் மற்றும் வரலாறு பற்றிய சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுஃபி இஸ்லாம் பற்றி இத்ரிஸ் ஷா எழுதிய புத்தகங்கள், புல்ஹே ஷாவின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள், சீக்கியர்களின் புனித கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள சுபி மகானின்  பாடல்கள் போன்றவையும்  அறியக் கிடைத்தன.

இரண்டொரு மாதங்கள் முன்னம் 2008 இல் பார்த்த  rab ne bana di jodi திரைப்படம் பற்றி நினைத்துக்கொண்டிருந்த போது “உருவகக்காதல் வழி தெய்வக் காதலைச் சொல்லும் படம்” என்று அப்படத்தை புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் மின்னல் வெட்டாக தோன்றி மறைந்தது. படத்தை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தப் புரிதலை சரி பார்த்து விட முடியும் என்றிருந்தேன். அந்த வாய்ப்பு நேற்று அமைந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

+++++

எதிர்பாராத விபத்தில் காதலித்தவர் இறந்து போதல், திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் மரணப்படுக்கையில் தந்தை என ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கையின் அதிர்வுகளில் தனிமைப் பட்டுப் போன தானி (அனுஷ்கா ஷர்மா) தந்தையின் கடைசி ஆசைக்கிணங்கி சுரி (ஷாரூக் கான்) யைத் திருமணம் செய்து கொள்கிறாள். சுரி நல்லவன். சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அவன் ஹீரோ இல்லை. தூர நின்று அவளுக்கு வேண்டியதைச் செய்து பரிவு காட்டுகிறான். சுரிக்கு அவள் மேல் காதல். ஏனென்று கேட்டால் அவனுக்கு தானியின் முகத்தில் rabb (இறைவன்) தெரிகிறார். தானி அவன் உலகுக்குள் வந்த பிறகு இறைவனைக் கண்டால் தோன்றும் பரவச நிலையைப் போன்ற ஓர் ஆனந்த உணர்வை அவன் அடைகிறான். அவளுக்கு அவன் மீது காதல் இல்லை. அவனிடம் அன்பைக் காட்ட தன்னிடம் அன்புணர்வேதும் எஞ்சியிருக்கவில்லை என்று தானி சொல்கிறாள். சிறிது காலம் காத்திருந்தால் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு பழைய தானியை அழித்துக் கொண்டு ஒரு புதிய மனுஷியாய் அவனுடைய மனைவியாய் வலம் வருவேன் என்கிறாள். சுரி காதலிப்பதோ பழைய தானியை ; அவள் ஏன் மாற வேண்டும்? அவள் மாறாமல் முன்னம் அவளுள் இருந்த உற்சாகத்துடன் வளைய வர வேண்டும் என்று விரும்புகிறான் சுரி. அவள் மேல் தனக்கிருக்கும் அன்பை பிரியத்தை வார்த்தைகளால் காட்டாமல் ஒரு விளையாட்டில் சுரி ஈடுபடுகிறான். தன்னுடைய முடியை திருத்திக் கொண்டு, இருக்கமான கால்சட்டை மாட்டிக் கொண்டு தானி நடனம் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு ராஜ் என்கிற பெயரில் செல்கிறான். உயிர் நண்பன் பாபியின் சலூனில் ராஜின் மேக்-அப்பை போட்டுக்கொள்கிறான். சுரியின் மனசாட்சி போல கூடவே இருந்து துணையாகவும் அவனுடைய நெஞ்சின் குரல் போன்றும் வருபவன்  பாபி (வினய் பாடக்). சுரியின் குணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு Macho personality யாக, ஆட்டமும் உல்லாசமும் கேளிக்கையுமாக  தானியிடம் நட்பு கொள்கிறான். நட்பு வளர்கிறது. ராஜ் தான் சுரி என்ற உண்மை தானிக்கு தெரியவிடாமல் அவன் நாடகம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ராஜ் அவளிடம் தான் காதலை தெரிவிக்கிறான். தானி சஞ்சலமுறுகிறாள். ராஜின் காதலை ஏற்பதா? அல்லது கணவர் சுரியுடனேயே இருப்பதா என்ற  குழப்பம்! படம் நெடுக மூன்று முறை பொற்கோயில் வருகிறது. அங்குதான் வள் குழப்பத்துக்கு விடை கிடைக்கிறது. பொற்கோயிலின் குளத்துக்கருகே இறைவனை பிரார்த்தனை செய்தவாறு மூடியிருக்கையில் சுரியின் முகத்தில் இறை தெரிவதாக உணர்கிறாள். அவளை அழைத்துப் போவதற்காக வரும் ராஜிடம் “உன்னுடன் ஓடினால் சுரியிடமிருந்து சென்று விடலாம் ; ஆனால் இறைவனிடமிருந்து சென்றுவிட முடியுமா? சுரியின் முகத்தில் எனக்கு இறைவன் தெரிகிறான்” என்று சொல்கிறாள். படத்தின் இறுதிக்காட்சியில்  தானியிடம் சேர்ந்து ஆடுவதற்காக அழைக்கப்படும் ராஜின் இடத்தில் இப்போது சுரி. தானியிடம் சேர்ந்து சுரி ஆடுகிறான். தானிக்கு எல்லாம் தெளிவாகிறது.

அன்பின் சமயமே இறைவனின் ஒரே சமயம் என்னும் பொருள் படும் “மத்தபி இஷ்க்” என்ற கருதுகோள் பாரசீக இலக்கியத்தில் நான்காம் நூற்றாண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு வகை அன்பு அல்லது காதல் பற்றி பேசின சுபி இலக்கியங்கள் – இஷ்க் – இ – ஹகிகி மற்றும் இஷ்க்-இ-மஜாஸி. முன்னது இறை மேல் கொண்ட காதல், பின்னது பிற உயிர்கள் மேல் கொண்ட காதல். பக்திக்காதலை அலசிய சுபி ஞானிகள் மனிதர்களின் பிற உயிர்களின் காதலை இறைக்காதலின் படிமமாக்கிக் கொண்டார்கள்.  கண்ணுக்கெட்டா இறைவனை கொடூரக் காதலி எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள் ;  காதலை வருத்தம் தரும் நோய் என வர்ணித்தார்கள். “ப்யார் ஏக் தர்த்” – “காதல் ஒரு வலி” என்று தானி பல இடங்களில்  கூறுவதை படத்தில் பார்க்கலாம்.     

தெய்வீகத்தைப் பேசுகையில் அழகை (“ஜமால்”) காதலியின் முக்கியமானதொரு வெளிப்பாடாக சுபி ஞானிகள் சித்தரித்தார்கள். இது ஒரு பித்து நிலை. இந்த நிலையில் சில மனிதர்களை அவர்கள் தெய்வீகத்தின் மறுவடிவமாக ஏற்றிப் பார்க்கவும் செய்தார்கள். இஸ்லாமிய இறையியல் மறுக்கின்ற “அவதாரம்” என்ற நோக்கில் அவர்கள்  பார்க்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சுபி ஞானியின் பித்த நிலையை சித்தரிப்பாக சுரியின் முகத்தில் இறையைக் காண்பதாக தானி உணர்வதைக் கொள்ளலாம். இறைக்காதலை நாடும் சுபி தத்துவத்தின் படிமமாக மனிதக் காதலாகிய ராஜுடனான காதலை   நிராகரித்து இறைக்காதலின் படிமமாகிய சுரியுடனான காதலை உறுதி செய்யும் தானியின் இறுதித் தேர்வாகக் காண முடியும்.

புல்ஹே ஷா, வாரிஸ் ஷா போன்ற சுஃபிக் கவிஞர்களால் ஞானிகளால் செறிவுற்றது பஞ்சாபி இலக்கியம். சுபிக் கருத்துகளின் தாக்கம்  சீக்கிய சமயத்திலும் விரவியிருக்கிறது. சுபியின் அடிப்படைக்  கருத்தான உண்மை ஒன்றே என்பதை குரு நானக் சீக்கியர்களின் புனிதச் சின்னமான “ஓர் ஓங்காரம்” என்ற எழுத்திலக்கத்தில் பதிவு செய்கிறார். சுபிக்களைப் போன்றே சீக்கியர்களின் வழிபாடும் இசையையொட்டியே அமைந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த செவ்வியல் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியும் சுபி ஞானியுமாகிய பாபா பரீத்-தின் 112 ஈரடிகளை 4 செய்யுட்களை சீக்கிய மதத்தின் ஐந்தாம் குரு – குரு அர்ஜன் – புனித கிரந்தத்தின் அங்கமாக்கியதும் சுபி இஸ்லாமுடன் சீக்கிய மதத்துடனான நெருங்கிய கருத்தியல் தொடர்பைக் காட்டுகிறது.

Rab ne bana di  jodi – படத்தில் பொற்கோயில் மூன்று இடங்களில் வருவதாக முன்னரே சொன்னேன். சலூன் காட்சிகள் அனைத்திலும் சுவரில்  தொங்கும் குருநானக்-கின் திருவுருவம் பின்னணியாக இருக்கிறது.

பஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார்  :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)   

தெய்வக்காதலை மனிதக்காதலிலிருந்து பிரித்துப் பார்க்கும் கண்ணை இன்னும் பெற்றிராத தானி வெறும் மீசையை மட்டும் எடுத்து விட்டு ராஜ்-ஆக மாறும் சுரியைக் கண்டு பிடிக்காமல் இருப்பது கதையின் நிகழ்த்து அம்சம்  என்பதை படத்தை முதல் முறை பார்த்த அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

என்னைப் பொறுத்த வரையில், இரண்டு – மூன்று காட்சிகளை நீக்கியிருந்தால் இந்தப்படம் இன்னும் சிறப்புற்றிருக்கும். சுமோ பயில்வானுடன் சுரி பொருட்காட்சியில் சண்டையிட்டு தானியைக் கவர நினைப்பது, பிறகு, தானி “Macho” அல்ல தான் நாடுவது என்று தெளிவுபடுத்துவது, இறுதியாக ஜப்பானில் தேனிலவு கொண்டாட சென்று வந்ததாக சுரி கொடுக்கும் நகைச்சுவை வர்ணனைகள் – இவையெல்லாம் தேவையற்ற காட்சிகள். ஜப்பான் சுற்றுலாவை விளம்பரம் செய்வதற்காக  ஸ்க்ரிப்ட்டை நீர்க்கச் செய்திருக்கவேண்டாம்!

Rab ne