போர் மேகம்

இறைவனுடைய சர்வ வல்லமையின், பெருங்கருணையின் குறியீடாக குர்ஆனில் மேகங்கள் பல முறை வருகின்றன. மிகக் குறிப்பிடத்தக்க வசனங்களுள் ஒன்று கீழ் வருவது –

“இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்;மேலும், (நபியே) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்” (25-48)

பூமியில் வாழ்வதற்கு இன்றியமையாத மழையை அல்லாஹ் அனுப்பும் வழிமுறையாக மேகங்கள் இந்த வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. குர்ஆனில் உள்ள பல வசனங்களிலும் அல்லாஹ்வின் சக்தி மற்றும் இயற்கை உலகின் மீதான கட்டுப்பாட்டின் அடையாளமாக மேகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு இன்னொன்று –

“காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதில் அகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காபிர்களை சூழ்ந்தவனாகவே இருக்கின்றான். அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அது அவர்களுக்கு ஒளி தரும்போதெல்லாம் அவர்கள் (அதன் துணையுடன்) நடக்கிறார்கள். அவர்களை இருள் சூழ்ந்துகொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள். மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப்புலனையும் பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.” (2-19/20)

மெக்கப் படைகளுக்கும் முஸ்லீம் படைகளுக்கும் நடந்த ஆதிப் போர் பத்ர் என்னும் இடத்தில் நடைபெற்ற போர். நபியின் தலைமையில் நடைபெற்ற இப்போரில் முஸ்லீம்கள் பெற்ற வெற்றியானது முஸ்லீம் சமூகத்தை (உம்மா) ஒரு தற்காப்பு நிலைப்பாட்டிலிருந்து ஸ்திரத்தன்மை மற்றும் விரிவாக்கம் என்னும் நிலைக்கு நகர்த்தும் திருப்புமுனையாக அமைந்தது. குர்ஆனில் குறிப்பிடப்படும் ஒரே போராகவும் இது அமைந்தது. .

பொயு 624 மார்ச் மாதத்தில் குரைஷ்கள் ஆள் பலத்துடன் ஆயுத பலத்துடன் தந்திரோபாய அனுகூலமிக்க ஓர் இடத்தில் பத்ர் நீரோடைக்கருகே முகாமிட்டிருந்தனர். நபிகளின் தலைமையில் மெதினாவிலிருந்து வந்த முஸ்லீம் படை மிகச் சிறிதாக இருந்தது. அவர்கள் முகாமிட்டிருந்த நிலம் வழுக்கு மணல் பரவியதாக இருந்தது. நடக்கும்போதோ, ஓடும்போதோ பாதம் வழுக்கிச் செல்வதாக இருந்தது. நீரோடை மிகத் தொலைவிலிருந்தது. குரைஷ்கள் நீராடியும், குடித்துக் கும்மாளமிட்டும் இரவைக் கழித்தனர். முஸ்லீம்களின் மனதில் பதற்றம். எப்படி போரிட்டு வெல்லப் போகிறோம்? என்ற கேள்வி அவர்களை அலைக்கழித்தது. ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் முஸ்லீம்களை தூக்கம் தழுவியது. மிக மிக ஆழமான தூக்கம். சிலைகள் போலத் தூக்கம். எத்தனை ஆழமான தூக்கம் என்றால் ஒவ்வொருவருக்கும் தூக்கத்திலேயே இரவு உமிழ்வு. அதிகாலையில் மேகங்கள் இருண்டு மழை பெய்யத் தொடங்கியது. முஸ்லீம்கள் மழையில் நனைந்து தம் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டனர். இயற்கையின் இடையீட்டினால் சடங்கு தூய்மை அமையப்பெற்றது மட்டுமல்லாமல் மழை ஈரம் படிந்து மணல் இறுகி பாதம் வழுக்காமல் நிலத்தில் எளிதாக ஓட முடிந்தது. குரைஷ்கள் முந்தைய நாள் முகாமிட்டிருந்த காய்ந்த சமமான களிமண் நிலம் மழைநீர் ஊறி சேறாகிக் கிடந்தது. குரைஷ்களுக்கு போரின் போது எளிதில் இயங்க முடியா வண்ணம் சேறில் விழுந்தெழுந்து ஓட வேண்டியிருந்தது.

இவ்வாறு, வரலாற்று முக்கியத்துவமிக்க பத்ர் போரில் மேகங்களை அனுப்பி முஸ்லீம்களை வெல்ல வைத்தான் இறைவன்.

இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதாவது –

“(நினைவு கூருங்கள்) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், சாத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.” (8-11)

பாதையில் கற்கள்

ஒவ்வொரு முறையும்
அதே பாதையில் வழி நடத்துகிறாய்

முட்களற்ற
சமன் செய்யப்பட்ட
இயலுமெனில்
பூக்கள் இறைந்து கிடக்கும் பாதையில்
வழி நடத்தக்கூடாதா!

காலில் குத்திய
கல்லை நோக்குகையில்
பளிச்சென பிரகாசம்
கல்லின் மறு பாதி
இருண்டு கிடந்தது
இருட்டும் பிரகாசமுமாய்
கல்லின் இரு புறங்கள்
கல் இருள்கிறதா
பிரகாசிக்க முயல்கிறதா

புவியும் ஒரு கல்
அதன் இருளின் ஒளியின்
மூலம் ஒன்று

செல்லும் பாதையைச்
சலித்துக் கொள்ளாதே

பாதையில் நடக்கையில்
கவனத்துடன்
ஒரு பாதி இருண்டு
மறு பாதி ஒளிரும் கல்லைத் தேடு