இரு மரங்கள் 

தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசிதிஸ்ஸாரக்காபோதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக் கதை ஒன்று உண்டு. அதே இடத்தில் இன்னொரு போதி மரம் வளர்ந்ததாகவும் அந்த மரம் புஷ்யமித்ர சுங்கன் என்னும் மன்னனால் வெட்டி எறியப்பட்டதாகவும், பின்னர் அடுத்து வளர்ந்த போதி மரம் கி பி ஆறாம் நூற்றாண்டில் கௌட மன்னன் சசாங்கனால் வெட்டி எறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அசோகர் காலத்தில் இருந்த மூல போதிமரத்தின் கிளை இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுராதாபுரத்தில் நடப்பட்டு இன்றளவும் உயிருடன் உள்ளது. உலகின் மிகப்பழமையான தாவரம் என்று தாவரவியல் வல்லுநர்கள் அனுராதாபுரத்தின் போதிமரத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

புத்தருக்கு பல  நூற்றாண்டுகளுக்கு  முன்பாக  இன்றைய  கிழக்கு இரானில் புழங்கியவரும் இறைத்தூதர் என போற்றப்படுபவரும்  சரதுஷ்டிரர் என்றும் ஜொராஸ்டர் என்றும் குறிப்பிடப்படும் ஜொராஸ்ட்ரிய சமயத்தின் நிறுவுனர் சுவர்க்கத்திலிருந்து ஒரு சைப்ரஸ் மரக்கிளையை எடுத்து வந்ததாக ஷாநாமாவில் பிர்தவுசி குறிப்பிடுகிறார். நாட்டின் மன்னனாக இருந்த விஷ்டாஸ்பா ஜொராஸ்டிர மதத்தை தழுவியவுடன் அக்கிளையை இன்றைய இரானில் உள்ள காஷ்மர் எனும் இடத்தில் ஜொராஸ்டிரர் நட்டார் என்பது ஜொராஸ்டிர மரபு. ஜொராஸ்டிரர்கள்  அதை புனித மரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வணங்கி வழிபட்டு வந்தனர். கி பி 861 இல் அப்பாஸித் காலிஃபா அல்முத்தகீல் அம்மரத்தை வெட்டிச்சாய்த்து அதன் மரக்கட்டைகளை சமாராவில் (இன்றைய இராக்) அவர் கட்டிய அரண்மனையின் உத்திரமாக பயன்படுத்திக் கொண்டார். அந்த கோட்டை சமாராவில் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.

 

வரலாற்றை எப்படி அணுகுவது?

வரலாற்றை எப்படி அணுகுவது? காலத்தின் பாய்ச்சல், கருத்துகளின் வெள்ளோட்டம், நிகழ் கலாச்சாரத்தின் உற்பத்தி ஸ்தானம், மனித இனம் முன்னர் செய்த தவறுகளின் பகுப்பாய்வு, இன்னும் எத்தனையோ விதமாக படிக்கலாம்! ஆனால் பெருமிதவுணர்வுடன்? கழிவிரக்கத்துடன்? முன்னர் நடந்த அநியாயங்களுக்கான பழி வாங்கும் உணர்வை தூண்டும் கதையாடலாக? ஓர் உதாரணமாக – ஜொராஸ்டிரர்களின் குறைந்த மக்கள் தொகையைப் பற்றி கேள்விப்படும் போது, விரைவாக மறைந்து போகத்தக்கதொரு கலாச்சாரக் குழுவாக அவர்களை எண்ணும் போது உடனடியாகத் தோன்றும் வருத்தம் / பரிதாப உணர்ச்சி. இது வரலாறை வாசிக்கும் சரியான வழியாக இருக்க முடியுமா?

சில வாரம் முன்னர் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் மொத்தம் எஞ்சியிருக்கும் பார்சி மக்கள் தொகை வெறும் 23 பேர்களாம். அந்த 23 பேரில் இளைஞர்கள் வெறும் நான்கு பேராம். மற்றவர்களனைவரும் மரணம் எந்நேரமும் அணுகக் கூடிய வயதில் இருப்பவர்கள். அந்த ஆவணப்படம் என்னை மிகவும் பாதித்தது. ஒரு காலத்தில் உலகின் மூத்த நாகரீகங்களில் ஒன்றாக இருந்த சமய / கலாச்சாரக்குழு எண்ணிக்கையில் இவ்வளவு சுருங்கக் காரணங்கள் என்ன? அவர்களின் கலாச்சாரம் தவழ்ந்த மண்ணில் ஏன் இன்று அவர்கள் இல்லை? (இரானில் இன்று ஜொராஸ்டிரத்தை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கை இருநூறு!)  மிகவெளிப்படையான காரணம் ஏழாம் நூற்றாண்டில் பாரசீகம் அராபியர்களின் கட்டுப்பாட்டில் வந்ததுதான்! இது பற்றிய வரலாற்றுத் தகவல்களை படிக்கத் தொடங்கியதும் அராபியர்களின் அடக்குமுறை, ஜொராஸ்டிரர்களின் எதிர்ப்பை ஒவ்வொருமுறையும் ஒடுக்குதல், அவர்கள் இஸ்லாத்தை தழுவும் வகையிலான சமூக விதிமுறைகளை செயல்படுத்துதல், நெருப்பு கோயில்களை சேதப்படுத்துதல், முதுகெலும்பை உடைக்கும் ஜிஸியா வரியைவிதித்தல், – இவற்றை புரிந்துகொள்வதில் அதிக சிரமம் இருக்க முடியாது. 

ஒன்பதாம் நூற்றாண்டில்  குஜராத் கடற்கரை வழியாக இந்தியாவிடம் தஞ்சம் புகுந்திராவிடில் ஜொராஸ்டிரர்கள் இன்று எஞ்சியிருப்பார்களா? இந்த கேள்விக்கு நாம் ‘இல்லை’ என்று பதிலளிப்போமாயின் மனித வரலாற்றை ஒற்றை குமிழுக்குள் நாம் அடைக்க முயல்பவர்கள் ஆகிறோம். வரலாற்றின் போக்கை தர்க்க ரீதியாக கணித்தல் சாத்தியமில்லை என்னும் பாடத்தை வலுப்படுத்தும் பலதகவல்களில் ஒன்றாகத்தான் நாம் இதைப் பார்க்கவேண்டும். இந்தியா வராமல் தாய் நாட்டில் தங்கி அராபியர்களை எதிர்த்து மடிந்துபோனவர்களின் நோக்கில் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் ‘கோழைகள்’ என்பதாக பார்க்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பதினொன்று நூற்றாண்டுகள் கழித்து ஜொராஸ்டிர சமயத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் அவர்கள்தாம் என்னும் தகவலின் வெளிச்சத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்ல எடுக்கப்பட்ட முடிவின் முக்கியத்துவம் புரியும். 

அரைகுறையான வரலாற்று வாசிப்பிற்குப் பின்னர் ‘அது அநியாயம்’ என்பதாக சீற்றம் அல்லது வருத்தம் அல்லது கழிவிரக்கம் கொள்ளுதல் வரலாற்றின்  இயக்கத்தை, அதன் உண்மையான பாடங்களைப் புரிந்து கொள்ளாமல் செய்துவிடும். வரலாற்றை வாசிப்பதன் நோக்கம் அதீத உணர்ச்சிகளை நம்முள் எழுப்பிக் கொள்வதன்று.

இஸ்லாமிய காலிஃபாக்கள் பெர்சிய சாஸனியப் பேரரசைத் தாக்கி பெர்சியாவை தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆம், கடுமையான போர் மற்றும் வன்முறை தான் அவர்களின் உத்தியாக இருந்தது. ஆனால் ஒன்றை நாம் மறுக்க முடியாது. பலத்த எதிர்ப்பை அவர்கள் சந்திக்காமல் இல்லை. ஜொராஸ்டிரர்களின் எதிர்ப்பு வரலாற்றில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இஸ்லாமிஸ்டுக்களான அராபியர்கள் இரானின் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக ஜொராஸ்டிரர்களுக்கு புது மதத்தை ஏற்பது எளிதாக இருந்தது. அதே சமயத்தில் இஸ்லாமைத் தழுவினாலும் இரகசியமாக பல நூற்றாண்டுகளாக ஜொராஸ்டிர கலாசாரத்தை பின்பற்றுபவர்களாக வே இருந்து வந்துள்ளனர் என்பதுவும் வரலாறு. 

பின் வந்த நூற்றாண்டுகளில் புதுவகை சமய உட்பிரிவுகள் (‘மதப்’) தோன்றின. யர்சான், அலாவிஸ் போன்ற உட்பிரிவுகள் ஜொராஸ்டிரிய, ஷியா இஸ்லாமிய சமயங்களின் கலவைகளாக இருந்தன. இத்தகைய பிரிவுகளை தம்மை இஸ்லாமியர்களாக காட்டிக் கொள்வதாகவே பயன்படுத்திக் கொண்டனர் இரானியர், ஆனால் வாஸ்தவத்தில் ஜொராஸ்டிரத்தின்  மூலக்கொள்கைகளை நம்புபவர்களாகவே அவர்கள் இருந்திருக்க வேண்டும்.

சுன்னி பிரிவிலிருந்து சமய ரீதியாக கோட்பாட்டு ரீதியாக வேறுபட்ட பிரிவு ஷியா என்பது உண்மைதான். எனினும், துவக்கத்தில் அதிகாரத்தில் இருந்த இஸ்லாமிஸ்ட்டுக்களை மறுக்கும் ரீதியிலேயே ஷியா பிரிவுக்குள் சேர்ந்தனர் இரானியர். அடிப்படையில் பழைய மதக்காரர்கள் (ஜொராஸ்டிரர்கள்) கடைசி வரை புது மதத்தை நம்பவில்லை. பெரும்பான்மையர் இஸ்லாத்துக்குள் வந்தனர் என்பது உண்மை தான், ஆனால், அவர்களின் பழைய மதத்தின் நம்பிக்கைகளும் சடங்குகளும் அவர்களுடனேயே இருந்தன. உதாரணத்திற்கு, சோஷண்ட் என்னும் மீட்பருக்காக காத்திருத்தல் ஜொராஸ்டிரர்களின் மதநம்பிக்கை. இந்தக் குறிப்பிட்ட அம்சம், பன்னிரெண்டாவது இமாமுக்காக (மஹ்தி) ஷியாபிரிவைச்சார்ந்தவர்கள் இன்னும் எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையாக உருமாறியது என்கிறார்கள். 

வரலாற்றின் இயக்கம் hindsight – இன் உதவியால் மட்டுமே உணரக் கூடியதாக இருக்கிறது. உடனடி நிகழ்கால சம்பவத்துக்கான நம்முடைய எதிர்வினைகள் நம் மனச்சமநிலையை மீட்பதற்கான முயற்சிகள். அவ்வெதிர்வினைகளின் உண்மை விளைவை காலத்தின் பாய்ச்சல்தான் சில முறை நமக்கும், பொதுவாக வருங்கால சந்ததிக்கும் நிகழ்த்திக் காட்டும்.                 

About Elly – சில குறிப்புகள்

About Elly – பார்ப்பதற்கு முன்

சில வருடம் முன்னர் ஒரு டி வி டி கடையில் முதன்முறையாக பார்சி மொழிப்படம் ஒன்றை வாங்கினேன். அதற்கு முன்னர் தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை தேடிப்போய் பார்க்கும் வழக்கம் கிடையாது. டி வி டியின் அட்டைப்படமா, அப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது என்ற தகவலா எது என்னை அந்த டி வி டியை வாங்கத் தூண்டியது என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து டி வி டியை உடன் play செய்தேன். “என்னென்னமோ படங்களை வாங்கறே” என்று முதலில் முணுமுணுத்த மனைவியையும் சுண்டி இழுத்தது படத்தின் ஆரம்பம். இரண்டு மணி நேரம் ஓடிய படம் புரிந்து கொள்ள முடியாத மொழியில். உபதலைப்புகளே துணை. விறுவிறுப்பு ஓர் இடத்திலும் குறையாத காட்சி நகர்வுகள். மிகையற்ற நடிப்பு. யதார்த்தமான சித்தரிப்பு. சம காலத்திய இரானின் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அருமைப்பதிவு. பழைய மரபார்ந்த விழுமியங்களுக்கும் நவீனத்தன்மைக்கும் இடையில் நடக்கும் சுவாரசியமான மல்யுத்தம். பொருளாதார வர்க்கங்களுக்கிடையேயான மௌனப்போர். A Separation (2011) – க்கு விருது கிடைத்ததில் அதிசயமே இல்லை.

Separation
A Separation

இந்திய கலாச்சாரத்துக்கு மிக அருகில் இருக்கும் இரான் கலாச்சாரப் பின்னணியில் தத்ரூபமான, கலையுணர்வு மிக்க, சற்றே hard-hitting படங்களை உலக திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்கள் இரானிய திரைப்படக் கலைஞர்கள். இரானின் முத்தான இயக்குனர்களில் முதன்மையானவர் Asghar Farhadi. ஆர்ட் படங்கள் என்ற பெயரில் சாதாரண திரைப்பட ரசிகர்களை தூரம் தள்ளும் படங்களில்லை இவை. நகர வாழ்க்கை வாழும் எந்த பார்வையாளனும் எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ளத்தக்க படங்கள். கொஞ்சம் யோசித்தாலும் இத்தகைய படங்கள் நம்மூர் சூழலிலும் எடுக்கப்பட முடியும். ஆனால் எடுக்கப்படுவதில்லை என்பது தான் நிதர்சனம். எண்பதுகளின் மலையாள திரையுலகு இத்தகைய மென்மையான சுவையுடனான படங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த ஆரோக்கியமான போக்கு தொன்னூறுகளின் துவக்கத்தில நின்று போனது நம் துரதிர்ஷ்டம்.

The Salesman
The Salesman

சென்ற வாரம் அமேசான் ப்ரைம் வீடியோவில் 2016க்கான சிறந்த அயல் நாட்டுப்படத்திற்கான விருதை மீண்டுமொருமுறை Asghar Farhadi-க்கு பெற்றுத்தந்த The Sales Man படத்தை ஸ்ட்ரீம் பண்ணினார்கள். ஆர்தர் மில்லரின் Death of a Sales Man நாடகத்தின் பார்சி மொழியில் அரங்கேற்றும் முயற்சியில் இருக்கும் குழுவின் நடிகர்கள் கதையின் நாயகன் – நாயகி ; நிஜ வாழ்க்கையில் இருவரும் தம்பதிகள். அவர்கள் வசிக்கும் வீட்டின் சுவர்கள் விரிசல் விடுகின்றன. குறிப்பாக படுக்கையறைச் சுவரில் பெரும் விரிசல். வேறு வீடு தேடுகிறார்கள். சக-நடிகரின் உதவியில் ஓர் வீடு கிடைக்கிறது. அந்த வீட்டின் முன்னாள் குடியாளரின் சாமான்கள் அங்கு இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் வீட்டு பால்கனியில் குவித்து வைத்துவிட்டு குடி புகுகிறார்கள் இமாதும் ராணாவும்! இமாத் கணவன் ; ராணா மனைவி. முன்னாள் குடியிருப்பாளரின் நிழல் அந்த வீட்டிலிருந்து வெளியேறாமல் இருக்கிறது. அதன் விளைவாக நிகழும் ஒரு சம்பவம் கணவன் – மனைவி இருவருக்கிடையிலான உறவை புரட்டிப் போட்டு விடுகிறது. Family Thriller என்னும் ஜனரஞ்சக feel good படமில்லை. இருவரின் உறவும் அவர்களுக்கே தெரியாதவாறு எப்படி transform ஆகிறது என்பதை சொல்லிச் செல்லும் படம். கதாநாயகன் இமாத் பாத்திரத்தில் நம்மூர் நாயக நடிகர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்னும் வாதம் எனக்கும் என் மனைவிக்குமிடையே ஒரு வாரமாகியும் ஓய்ந்தபாடில்லை. இன்று காலை அலுவலகத்துக்கு கிளம்பும் முன்னர் கவனத்துடன் வீட்டுச்சுவர்களை நோக்கினேன். ஒரு விரிசலும் காணப்படவில்லை!

இதே இயக்குனர் About Elly-யை 2009இல் எடுத்திருக்கிறார் ; படத்தின் ட்ரைலரை யூ-ட்யூபில் பார்த்தேன். மேற்சொன்ன இரண்டு படங்கள் போலவே இதுவும் சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கிறது. The Sales Man இல் நாயகியாக நடித்த Taraneh Alidoosti பிரதான பாத்திரமாக வருகிறார். என் கைக்கு கிடைத்திருக்கிற டி வி டியின் அட்டைப்படத்தில் “இது பற்றி எவ்வளவு குறைவாக முன்னரே அறிகிறோமோ அதுவே சிறந்தது” என்று விமர்சகர் ஒருவரின் மேற்கோள் காணப்படுகிறது. ரிவ்யூ படிக்காமல் படங்களுக்குச் செல்லும் தைரியத்தை இழந்து பல வருடங்களாகிவிட்டன. Asghar Farhadi என்ற பெயர் என் விரதத்தை முறிக்கும் தைரியத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது. இன்றிரவு “About Elly” படத்தை பார்த்து முடிக்கும் வரை இணையத்தில் அதன் ரிவ்யூக்களை படிக்கப் போவதில்லை.

About Elly
About Elly

About Elly – பார்த்த பின் சில குறிப்புகள்

“முடிவில்லாத கசப்புத்தன்மையை விட மேலானது கசப்பான முடிவு” என்று எதிர்பாராமல் சீக்கிரமே முறிந்து போன தன் முதல் திருமணத்தைப் பற்றி அஹ்மத் எல்லியிடம் சொன்னவுடன் அர்த்தமான மௌனத்துடன் உரையாடல் நிறைவு பெறுகிறது. கடற்கரை மணலில் பட்டம் விட முயலும் சிறு குழந்தைகளுக்காக பட்டத்தை மேலே செலுத்தி எல்லி பறக்க வைக்கும் காட்சியின் போது ஏதோ நிகழப்போகிறது என்ற அச்சமூட்டும் உணர்வு பற்றிக் கொள்கிறது. அதற்கடுத்த காட்சிகளில் வேகமும் பதற்றமும் மிகுத்து ஒரு பாத்திரமாக படம் நெடுக வரும் காஸ்பியன் கடலின் அலைகள் மூர்க்கமடைகின்றன.

எல்லி ஏன் காணாமல் போனாள்? என்னும் கேள்விக்கான தேடலாக கதை விரிந்தாலும் கதையின் ஒவ்வொரு பாத்திரமும் சொல்லும் சிறு பொய்கள் தாம் கருப்பொருள்கள். எல்லியின் நண்பியான செபிடேவுக்கு எல்லியின் முழுப்பெயர் என்ன என்று கூட தெரியாது. ஆனால் செபிடே எல்லியை தன் நண்பர் ஒருவருக்கு மணம் முடிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறாள். எல்லியின் புகைப்படம் ஏற்கெனவே அஹ்மதுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. புகைப்படத்திலேயே அவனுக்கு எல்லியை பிடித்துப்போய் விடுகிறது. ஆனால் அவனுடன் வரும் நண்பர்களுக்கு அஹ்மத் எல்லியை சந்திப்பது ஓர் எதேச்சையான நிகழ்ச்சி என்பது மாதிரியான எண்ணத்தை தோற்றுவிக்கிறான். தங்கும் விடுதி கிடைக்கவில்லை என்பதற்காக அஹ்மதும் எல்லியும் கல்யாணமானவர்கள் என்று செபிடே சொல்லும் பொய்யும் கூட எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. சிறு சிறு பொய்கள் ; ஆபத்தற்ற பொய்கள் ; வஞ்சகமிலாப் பொய்கள் ; வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் பொய்கள் சுவாசம் மாதிரி சதா நம்மை சூழ்ந்த வண்ணம் இருக்கின்றன ; இழுத்த சுவாசத்தை விடுவது மாதிரி நாமும் சிறு பொய்களை கக்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் காஸ்பியன் கடலுக்கு மேல் தெரியும் வானம் கறுத்துக் கொண்டே வருவது போன்ற காட்சியமைப்பு சவுகரியமான பொய்களில் மூழ்கி மேலும் மேலும் சரிந்து கொண்டிருக்கும் சமூகத்தின் படிமம்.

நமக்கு நடுவில் வரும் ஓர் அந்நியர் திடீரென மறைந்து விடுகிறார் எனில் அந்நியர் மீதான கரிசனத்தை விட அந்த மறைவு நமக்கேற்படுத்தப் போகும் அசவுகர்யம் தான் பெரிதாகப் படும். அப்போது அந்த அந்நியர் பற்றி தெரிந்த மிகக் குறைந்த தகவல்களின் மேல் நம் கற்பனை வர்ணத்தைப் பூசி அந்த அந்நியரை அடையாளம் காண முயற்சிப்பது நம் பொது இயல்பு. எல்லி மறைந்து விட்டாள். எல்லி யார் என்ற கேள்விக்கு முதலில் பதில் தேட வேண்டும். அவள் யார்? நாயகியா? வில்லியா? துரோகியா? பயந்தவளா? கிடைக்கும் விடையைத் பொறுத்து அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிய வரலாம். எல்லியை முழுதாகத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிகிறது. அவளை அழைத்து வந்த செபிடேவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவளுக்குத் தெரிந்த விவரங்கள் மிகவும் குறைவு போலத் தெரிகிறது. பின் தன் நண்பனுக்கு நிச்சயம் செய்யும் முடிவுடன் எல்லியை பிக்னிக்குக்கு செபிடே ஏன் கூட்டிக்கொண்டு வரவேண்டும்? மேலோட்டமான சில விவரங்கள் மட்டும் தெரியும். பிறவற்றை செபிடே யூகம் செய்து கொண்டு பொறுப்பற்ற நிச்சயதார்த்த முயற்சியில் ஈடுபடுகிறாள என்று தானே அர்த்தம். நம்மை சுற்றியிருப்போர் பற்றி நாம் எப்படி தெரிந்து கொள்கிறோம்? முக்கால்வாசி யூகம் கலந்த கற்பனை வாயிலாகத்தான். அந்த கற்பனை கலாச்சார எதிர்பார்ப்புக்குள்ளும் சாதாரண மனித இயல்புக்குள்ளும் அடங்கியதாகவே இருக்கும். எல்லியின் காணாமல் போதல் ஒரு விபத்து எனில் அவள் யார் என்ற கேள்விக்கான பதில் நம்முடைய கற்பனையில் என்னவாக இருக்கும்? அது விபத்தில்லை ; பிரக்ஞை பூர்வ நிகழ்வு எனில் நம்முடைய கற்பனையில் எல்லி யார்?

மூலக்கருவைத் தவிர இன்னொரு விஷயமும் கவனிக்கத் தக்கது. நவீனத்துவப் பட்டை பொருத்தப்பட்டு ஜொலிப்பது போலத் தோன்றினாலும் சிறு கீரலில் ஆணாதிக்கத்தின் முகம் எளிதில் வெளித்தெரியும் செபிடே – அமிர் உறவு முறையில் செபிடேவின் கள்ளத்தனம் ஓர் எதிர்ப்புச் செயல் என்றே கருதத் தோன்றுகிறது. எல்லியைப்பற்றி செபிடேவுக்கு எவ்வளவு தெரியும் என்பது பற்றிய ஊகம் நம் எண்ணத்தில் ஊறி படத்தின் ட்யூரேஷனை ஒரு மணி நேரம் ஐம்பத்தொன்பது நிமிடத்துக்கும் அதிகமாக நீட்டி விடுகிறது. படத்தை பார்த்து முடித்து பதினைந்து மணி நேரங்கள் ஆகிவிட்டன. சிந்தனையில் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

About Elly – க்கு அடுத்து….

Asghar Farhadi-யின் இயக்கத்தில் 2013இல் வெளிவந்த The Past அநேகமாக நான் பார்க்கப்போகிற அடுத்த படமாக இருக்கும். இந்த படத்தின் நல்ல ப்ரின்டை உப-தலைப்புகளுடன் ஸ்ட்ரீம் செய்கிற நல்ல இணைய தளத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.