உணர்வுக்கு ஓர் அங்கம் சிந்தனைக்கு இன்னொன்று என இருப்பது வடிவக் கோளாறு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத சக ஊழியர் போல் இதயமும் மூளையும் ஆளுக்கொரு திசையில் இயங்குவது ஒரு
தொழில் நுட்பக் குறைபாடு
இதயம் ஒரு லேசான பொருள் அதிக மகிழ்ச்சியில் அதனால் இருக்க முடியாது அதிக துக்கமும் அதனால் தாள முடியாது இவ்விரண்டுமற்று இருந்துவிட்டுப் போகலாம் என்றால் மகிழ்ச்சி-துக்கம் எனப் பெயரிட்டு அனுபவங்களின் மேல் அவற்றை ஏற்றி யாரோ விளையாடிக் கொண்டேயிருக்கிறார்கள்
ஒருவருக்கொருவர்
முதுகு காட்டி
அருகில் மிக அருகில்
இருந்தாலும்
ஒருவரின் கண்ணை
அடுத்தவர் பார்த்ததில்லை
அதோ பார் கூழாங்கல்
என்று சொன்னால்
அவன் கண் கரும்பாறையை பார்க்கும்
எனக்கு சிரிக்கத் தெரியாது
அவனுக்கு சிரிப்பதை நிறுத்தத் தெரியாது
அடுத்தவர்க்கென சிரிப்பது அவன் வாடிக்கை
சிரிக்கும் கணங்களுக்காக
வழி மேல் விழி வைப்பது என் பழக்கம்
அவனின் சிரிப்பொலி ஒரு நாள் நின்றது
அப்போது எனக்கு சிரிப்பு வந்தது
என் சிரிப்பொலி கேட்டதும் அவன் கேட்டான் ;
“கயிறு திறந்துவிட்டதா?”
“இல்லை, இதயம் திறந்துவிட்டது” என்ற என் பதில்
அவன் மோனத்தை அடர்த்தியாக்கியது
என் சிரிப்பொலி இன்னும் வலுத்தது
+++++
குண்டு பூதம்
நண்பர்களை
விருந்துக்கு அழைத்ததில்லை
என்று யோசித்துக் கொண்டிருந்த போது
இல்லாதவர்களை
விருந்துக்கு என்ன…
சாவுக்கும் அழைக்க முடியாது
என்று என்னுள்
இருக்கும்
இரண்டு கொம்பு துருத்தி நிற்கும்
குண்டு பூதம் சொல்லிற்று
பல இலைகளை விரித்து
எனக்கு நானே செய்து கொண்ட
விருந்துபசாரத்தில்
இல்லாத நண்பர்களின்
உணவையும் நானே செறித்தேன்
குண்டு பூதம்
இளைத்துப் போனது
+++++
பதக்கம்
பதக்கம் ஒன்று
காணாமல் போனது
என்றோ பெற்ற பதக்கம்
இழந்து போனதில்
பெரும் வருத்தம்
நிகழ் காலத்தில்
பதக்கத்தை காணவில்லை
எதிர் காலத்துக்குள்
எங்கானும் சென்று ஒளிந்திருக்குமா?
பதக்கம் பெற்ற இடத்தில்
சென்று தேடினால் பயனுண்டென
இறந்த காலம் பயணமானேன்
பதக்கத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தவனை கேட்ட போது
அது பற்றி எதுவும் கேள்விப்பட்டதில்லையென கை விரித்தான்
சாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்ஷுக்களின் குழுவொன்று பிக்ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி சூத்திரத்தை அவர்களுக்கு போதித்தருளினார். இந்த சூத்திரத்தை சுத்தத்தை உச்சரித்து வருமாறும் இது அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பிக்ஷுக்கள் வனத்திற்கு திரும்பிய பிறகு இச்சூத்திரத்தை பயிற்சி செய்து வரலாயினர். பிக்ஷுக்களின் பயிற்சி மர தேவதைகளினுள் மனமாற்றத்தை உண்டாக்கிற்று. பிக்ஷுக்களின் இதயத்துள் எழுந்த அன்பெண்ணத்தின் விளைவாக தேவதைகள் இளகின. பிக்ஷுக்கள் அங்கேயே தங்கி அமைதியாக தியானப்பயிற்சிகளில் ஈடுபட அனுமதித்தன.
பாலி நெறிமுறை நூல்களில் இரு இடங்களில் இச்சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தநிபாதத்திலும் குத்தகபத்தயாவிலும் இச்சூத்திரம் இடம் பெறுகிறது. தேரவாதத்தில் சொல்லப்படும் நான்கு பிரம்மவிஹாரத்தில் மெத்த (அன்பெண்ணம்) வும் ஒன்றாகும் ; சக-மனித ஒற்றுமையுணர்வை, தியானத்திற்கான மனக்குவியத்தை வளர்ப்பதற்காக இச்சூத்திரத்தின் வாசிப்பு பரிந்துரைக்கப் படுகிறது. பின் வந்த பௌத்த நெறி முறைகளில் மெத்த பத்து பாரமிதைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.
தேரவாத பௌத்த வழிபாட்டு முறைகளில் மெத்தா சுத்தத்தின் வாசிப்பு பிரபலம் ; இந்த சூத்திரத்துக்கு பயம் நீக்கும் சக்தியிருக்கிறதென்ற நம்பிக்கை பௌத்த சமயத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
தனிஸ்ஸாரோ பிக்குவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் கீழே –
குறிக்கோள் திறமுடையோரில் அமைதி நிலைக்குள் நுழையும் எண்ணமுடையோர் இதைச் செய்தல் அவசியம் ; இயலுமையுடன் இருத்தல், நேர்க்குணம் மிக்கவராய், எளிதில் போதனையேற்கத்தக்கவராய், மென்மையானவராய், அகந்தையற்றவராய், சிற்சில கடமைகளுடன், இலேசாக வாழ்ந்து, அமைதியான குணங்களுடன், தலை சிறந்து, எளிமையானவனாய், ஆதரவாளர்களின் எண்ணிக்கை மேல் பேராசையின்றி. ஞானியர் ஒறுக்கும் சிறு செயலையும் செய்யாமலிரு
சிந்தி: இளைப்பில் மகிழ்ச்சி கொள்ளட்டும் ; அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும். உயிர்கள் எத்தன்மையாய் இருப்பினும், வலியுள்ளோரும் நலிவுற்றோரும், விதிவிலக்கின்றி நீளமானதும், பெரிதாக இருப்பதும் நடுத்தரவடிவினதும், குட்டையானதும் நுட்பமானதும், வெளிப்படையானதும் காண்பதும், காணப்பெறாததும் அருகிருப்பதும், தள்ளியிருப்பதும் பிறந்ததும், பிறப்பை நாடுவதும்
அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும். ஒருவரும் அடுத்தவரை ஏமாற்ற வேண்டாம் அல்லது எங்கும் யாரையும் வெறுக்க வேண்டாம் அல்லது கோபத்தாலோ, எரிச்சலாலோ அடுத்தவர் துயருற நினைக்க வேண்டாம்
தன் மகவை, ஒரே மகவைக் காக்கும் பொருட்டு தன் உயிரைப் பணயம் வைக்கும் தாயொருத்தியைப் போல் அனைத்துயிர்கள் குறித்தும் எல்லையிலா இதயத்தை வளர்த்துக் கொள்.
முழுப் பிரபஞ்சத்தின் மீதான நல்லெண்ணவுணர்வுடன் எல்லையில்லா இதயத்தை வளர்த்துக் கொள். மேலே, கீழே, எல்லா பக்கங்களிலும் தடையில்லாமல், பகைமை அல்லது வெறுப்பின்றி நின்று கொண்டோ, நடந்தவாறோ, அமர்ந்து கொண்டோ, அல்லது படுத்துக் கொண்டோ, ஒருவன் விழிப்புடனிருக்கும் வரை கவனத்துடனிருக்கும் தீர்மானம் கொள்ள வேண்டும்.
இதுவே இங்கு, இப்போது உன்னத இருத்தல் என்றழைக்கப்படும்.
தவறான கருத்துகளுக்கிடம் கொடாமல் ஒழுக்கத்துடன், முழுமையான தரிசனத்துடன் புலனின்ப ஆசைகளை முறியடித்த ஒருவன் கருப்ப அறைக்குள் மறுபடி உறங்குவதில்லை