அறை முழுதும் அரவங்கள்

சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இப்போதெல்லாம் பாம்புகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது.

சிறுவயதிலும் இளம் வயதிலும் பாம்புகள் கனவில் பயமுறுத்தும். ஆனால் பொதுவாக ஒற்றை பாம்பு தான் வரும். திருமணமான பிறகு வந்த கனவுகளில் பாம்புகள் ஏராளமாக வரும். நானிருக்கும் ஓர் அறையின் எல்லா அறைகலனிலும் ஒவ்வொரு பாம்பும் படமெடுத்து நிற்பது போன்ற கனவுகள். சாதுவாக படமெடுத்து நிற்கும். சாந்த சொருபமாக த்யானத்தில் ஈடுபடுபவை போல தோற்றமளிக்கும். அல்லது என் தூக்கத்தில் வரும் கனவுக்குள் நுழைந்து அவைகள் படமேடுத்தபடியே உறங்குகின்றனவோ? நான் பயத்தில் வியர்த்திருப்பேன். சப்தநாடியும் ஒடுங்கியிருக்கும். கனவிலிருந்து விடுபட்டவுடன், அந்த பாம்புகளின் சாந்தசொருபத்தை இன்னும் கொஞ்சநேரம் பார்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும்.

இப்போதெல்லாம் பாம்புக்கனவுகள் அதிகமாக வருவதில்லை. கடைசியாக வந்த பாம்புக்கனவில், நான் பாம்புகளோடு பேசிக்கொண்டிருப்பது போல வந்தது.

உண்மையாக சொல்லப்போனால், பாம்பை அதன் இயற்கை சூழ்நிலையில் இதுவரை நான் பார்த்ததில்லை. பாம்புப்பண்ணைகளிலும், விலங்குகள் சரணாலயங்களிலும் தூர நின்று பார்த்திருக்கிறேன். இயற்கை சூழ்நிலையில் பார்த்தால் பயந்துபோவேன் என்றுதான் நினைக்கிறேன். இரவு நேரங்களில் கழிவறையில் சிறுநீரோ மலமோ கழிக்கும்போது "பாம்பு இந்த கழிவறையில் நுழைந்தால் என்ன செய்வது?" என்ற சிந்தனை தோன்றி என்னை சில்லிட வைக்கும். நேரிடையாக தோன்றாமல், நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் பயமுட்ட வல்ல ஒரே ஜந்து பாம்புதானே!

சில வாரங்களுக்கு முன் தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலமொன்றில் ஐந்து நட்சத்திர ஓட்டலோன்றில் காபி பருகிக்கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து மேசையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இளம் தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு வயதான மகனுடன் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தனர். மகன் மேசையைச்சுற்றி ஓடிக்கொண்டு விளையாட்டு காட்டிகொண்டிருந்தான். ஒரு சமயத்தில் கால் தடுக்கி விழப்போனபோது, அவனை தாங்கி நான் பிடித்தேன். பின்னர், நன்றியுணர்ச்சியுடன் என்னை அவர்களுடன் சேர்ந்தமர அழைத்தார்கள்.

ஜிம் வட ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரை சேர்ந்தவர். ஜிம்மின் மனைவி – எலிசபெத்தும் டார்வின் நகரை சார்ந்தவர். அவர்களிருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், அவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கிளையை இந்தியாவில் துவங்கும் நோக்கத்துடன் வந்தனர். இந்தியாவில் ஒரிரு வருடம் வசிக்கும் எண்ணமிருந்தது. சுற்றுலாத்தலத்தையொட்டிய சிறு நகரத்தில் சொகுசு பங்களாவொன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

பங்களாவின் உரிமையாளர் அந்த வீட்டின் ஒரறையை மட்டும் பூட்டி வைத்திருந்தார். பழைய தட்டுமுட்டு சாமான்களும், பரம்பரை அறைகலன்களும் உள்ளேயிருந்தன. அறைகலன்களோடு குடியிருந்த பாம்புகளைப்பற்றி யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. ஒரு நாள், சமையலறையில் தேநீர் தயாரிக்க வந்த ஜிம் கேஸ் அடுப்புக்கு கீழ் படுத்திருந்த பாம்பை பார்த்தார். தொலைக்காட்சியில் வரும் வனவிலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்க்கும் ஜிம் படுத்திருந்த பாம்பைக்கண்டு “த்ரில்” ஆனார். ஒரு குச்சியின் உதவியுடன், லாவகமாக பாம்பை எடுத்து, கொல்லைப்புறத்தில் உள்ள மதிலுக்கு வெளியே இருந்த வயல் பகுதிக்குள் எரிந்தார். கிட்டத்தட்ட இரு நாளைக்கு ஒருமுறை பாம்பை எடுத்து வெளியே எறியும் பயிற்சி நடந்தது. சில நாட்களுக்கு பிறகு, படுக்கையறையின் தரையில் ஒரு பாம்பு காணப்பட்டது. அப்பொது, ஜிம்மின் மகன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தான். எலிசபெத் தோட்டக்காரனை அழைத்து, அந்த பாம்பை அப்புறப்படுத்தினாள்.

பாம்பின் வரவு பெருக ஆரம்பிக்கவே, ஜிம் வீட்டின் உரிமையாளரை அழைத்து பூட்டியிருந்த அறையை திறக்க வைத்தார். திறந்த அறைக்குள், அவர்கள் கண்ட காட்சி படு பயங்கரமாக இருந்ததாம்…..கிட்டத்தட்ட நாற்பது – ஐம்பது நாகங்கள் அந்த அறைக்குள் காணப்பட்டன. வீட்டுக்காரர் வாயடைத்துப்போனாராம்…..பல வருடங்களாக பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் ஃப்ளோரிங்கை மாற்றும் பேச்சு வந்த போதெல்லாம், கஞ்சத்தனப்பட்டு தட்டிக்கழித்து வந்தது மிகப்பெரும் தவறுதானென ஒப்புக்கொண்டார்.

ஜிம்மும் எலிசபெத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததன் பிண்ணனி இதுதான். வேறு ஒரு பங்களா கிடைக்கும் வரை தங்கியிருப்பார்கள். ”வீட்டு சாமான்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். ”சாமான்களை வேறு வீடு வாடகைக்கு கிடைத்த பிறகே போய் எடுத்து வர வேண்டும்?” என்றார் ஜிம். ”சாமான்களை எடுக்கப்போகும் போதும் பாம்புகள் அங்கு இருக்குமா?” என்று கேட்கலாமென்று பார்த்தேன் ; கேட்கவில்லை.

அன்று இரவு கனவில் மீண்டும் பாம்புகள் விஜயம் செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பாம்புக்கனவு வரவில்லை. நீண்டதொரு ரயிலில், பெயர் தெரியாத ஒர் இடத்திற்கு போவது போல் கனவு கண்டேன். கனவில் ரயில் பாம்புப்புற்றுகள் நிறைந்த ஒர் இடத்தை தாண்டி சென்றது. பாம்புகளெதுவும் புற்றிலிருந்து எட்டிப்பார்க்கவில்லை.

ஒன்று அறிய ஆசை. நிஜம்மாகவே, பாம்புப்புற்றுகளில் பாம்புகள் வாழ்கின்றனவா?

ஒரு குட்டிக்கதை

புறநகரின் ஆள் அரவமில்லாத மாளிகையொன்றில் அரவங்கள் புகுந்து மொய்த்தன. மாளிகைவாசிகள் குலை நடுங்கி வெளியெறினர். பாம்பு பிடிக்கும் மனிதர்களை கூட்டி வந்தனர். பாம்புகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் ஒவ்வொரு உயிரிழந்த பாம்புக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பாம்புகள் வந்து கொண்டேயிருந்தன. மனிதர்கள் சோர்வுற்று இறுதியில் அம்மாளிகையை பாம்புகளின் ஆலயமாக ஆக்கினர். ஆலயம் என்றாலும் பக்தர்களெல்லாரும் தூர நின்றே தரிசிப்பார்கள். பின்னர் புராணக்கதைகள் புனையப்பட்டு அவ்வாலயம் பெயரும் புகழும் பெற்றது.

மாளிகையையொட்டி பூ விற்கும் கடைகள், அர்ச்சனை தட்டு விற்பவர்கள், பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பவர்கள் என்று பலருக்கும் வயிறு நிறைந்தது. நெரிசல் அதிகமாகி, வெளிச்சம் அதிகமாகி… பாம்புகள் ஆலயத்தை விட்டு அகன்றன. ஆலயத்தின் வாசலில் சில பாம்புகள் உயிரை விட்டன. தூர நின்று வழிபடும் பக்தர்களோ பாம்புகள் இல்லாத ஆலயத்தில் பாம்புகள் இருப்பதாக எண்ணி பாம்புத்தெய்வங்களை வழிபடுகின்றனர்.

பாம்பில்லாததோர் இடத்தை ஆலயமாக தொழுவது பகுத்தறிவன்று என்று சொல்லி ஒரு சாரார் கொடிபிடித்தனர். அவர்கள் குரலோங்க பாம்பாலயத்தை தொழுவது நின்றது. மாளிகை வாசிகளின் வழித்தோன்றல்கள் திரும்பி வந்து புனருத்தாரணம் செய்து வசிக்கத்துவங்கினர். வீட்டின் பின்னே ஒளிந்திருந்த குட்டிப்பாம்பை வளர்த்தனர். அங்கு இப்போது பாம்புகளின் சரணாலயம் இருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அந்த மாளிகையில் பாம்புகள் – மனிதர்கள் இருவரும் வாழ்கின்றனர்.

+++++

என்னை மிகவும் கவர்ந்த பாம்பு பற்றிய கவிதையொன்றை கீழே தருகின்றேன்.

கவிதையின் தலைப்பு : பேட்டி***

எழுதியவர் : எம் டி முத்துகுமாரசாமி

கிடா விழுங்கும் மலைப்பாம்பல்ல
நான் என அறிய
வீசினால் தண்ணீர்
அடித்தால் செத்தது
தாண்டினால் பழுது
கக்கினால் ரத்தினம்
கடித்தால் விடம்
சுருட்டினால்
பைந்நாகப் பாய்
விரித்தால்
சிவலிங்கக் குடை
தரிசித்தால்
தன் வாலைத் தானே கவ்வுமிது.

*** “நீர் அளைதல்”கவிதை தொகுதியிலிருந்து.

கவிதை தொகுதியைதரவிறக்க : https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHCwqQ3UxT7ZDNmYjQ1YzctNTk1Ni00MjMyLThkODktNGNmOTYyYjMyMGNi&hl=en_US

தெரிவு

எனது நண்பன் – கார்த்திக்குக்கு, எங்களது HR அணியிடமிருந்து வந்த ஈமெயில் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. “அனுபவமிக்க, ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வல்ல மூத்த நிர்வாகியை தேடுகிறோம். உங்களின் தற்குறிப்பை ஒரு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் கண்டோம். எனவே உங்களை தொடர்புகொள்கிறோம்”

கார்த்திக் கரிசனத்துடன் “என்னடா உங்க ஆளுங்க இன்னொரு மேலாளரை தேடுறாங்களா? ஏதேனும் பிரச்சனையா?” என்று கேட்டான். “அதெல்லாம் ஒன்னுமில்லடா…நிறுவன விரிவாக்கத்துக்காக இன்னொரு ஆளை நியமனம் பண்ணுவாங்களா இருக்கும்?” என்று தைரியத்தை செயற்கையாக எனது குரலில் வரவழைத்து பதில் சொன்னேன்.

எங்களது சிறு நிறுவனத்தில் எத்தனை விற்பனை மேலாளர்கள் வேண்டும்? ஒருவனான நானே, பல சமயங்களில் வேலை-இல்லாமல் இருக்கிறேன். குறிப்பிட்ட பருவத்தில் விளையும் மூலிகைகளை பதப்படுத்தும் வியாபாரத்தில் இருக்கும் நிறுவனத்தில், விற்பனை மேலாளரின் வேலை சில மாதங்களுக்கே. மற்ற நேரங்களில் எல்லாம், விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் அனுப்புகை ஒருங்கிணைப்பே மிஞ்சும். பல சமயம், குறைந்த வேலையின் அளவு என்னை-யே ரொம்ப கவலைபடுத்தும்.

ஆனால் இது நான் கொஞ்சம்கூட எதிர்பாராதது. இந்த சின்ன நிறுவனத்தின் ஏற்றுமதியை நோக்குவதற்கு நான் மட்டும் போதாதா?. சமீபத்தில் வாங்கிய வீட்டுக்கடனை நினைத்துப்பார்த்தேன். பயம் நிறைந்த ஒரு சஞ்சலமான உடல் உணர்வை எனது வயிற்றுப்பகுதியில் உணர்ந்தேன். இப்போது வரும் சம்பளத்தில் தவணையை கட்டுவதே கடினமாகத்தான் இருக்கிறது. வேலை வேறு போய்விட்டால்?

பாஸ்-சின் அறைக்கு போனேன். ஒரு வணிக நாளேட்டில் தன முகத்தை பதித்து எதையோ வாசித்துக் கொண்டிருந்தார். படபடப்புடன் என் நண்பனுக்கு வந்த ஈமெயில்-ஐ பற்றி சொன்னேன். அந்த ஈமெயில்-ஐ காட்டவும் செய்தேன். அமைதியாக அதைப்படித்த முதன்மை நிர்வாக அதிகாரி, “எனக்கு தெரியவில்லை…டைரக்டர்-இடம் பேசுகிறேன் இதைப்பற்றி…நீ எதுவும் கவலைப்பட வேண்டியதில்லை”

முகவாட்டத்துடன் அவருடைய அறை-இலிருந்து வெளியே வந்தேன். பத்து வருடங்களாக இதே நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். புது வேலை தேடுவது எப்படி என்பதே மறந்துவிட்டிருந்தேன். அப்படி வேறு வேலை கிடைத்தாலும், புது சூழ்நிலையில் தாக்குப்பிடிக்கும் திறன் என்னிடம் இருக்கிறதா? என் மீதே எனக்கு சந்தேகம்.

+++++

அடுத்த இரண்டு நாட்களுக்கு எனது பாஸ் அலுவலகத்துக்கு வரவில்லை. வைரல் காய்ச்சல் என்று கேள்விப்பட்டேன்.

எனது அமைதியின்மை தொடர்ந்தது. நேராக HR மேனேஜர்-ஐ சென்று கேட்டு விடலாமா? “என்னை தூக்கி எரிய திட்டமிடுகிறீர்களா?” என்று ! எப்படி போய்க்கேட்பது? அவர் இத்தகைய செய்திகளை ரகசியமாகத்தானே வைத்திருப்பார்?

இதைப்பற்றி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருக்கும் எனது பாஸ்-சும் தெரியாது என்று சொல்கிறாரே? கபட நாடகம் ஆடுகிறாரோ? தொழிற்சாலை நிர்வாகம், நிதி, கொள்முதல் மற்றும் விற்பனை என்று எல்லாவற்றிற்கும் பொறுப்பை ஏற்று, இயக்குனர் வாரியத்திற்கு நேரடியாக பதில்சொல்லும் அளவிற்கு உயர்ந்த பொறுப்பை வகிப்பவருக்கு ஒரு விற்பனை மேலாளரை தேடுவது பற்றி எப்படி தெரியாமலிருக்கும்?

+++++

கார்த்திக் திரும்பவும் போன் செய்தான். “நீ தப்பா நினைக்கலேன்னா நான் இந்த வேலைக்கு அப்ளை பண்ணட்டுமா?” – ஒரு மாதிரியான தயக்கம் தொனிக்கும் குரலில் எழுந்தது இந்த வேண்டுகோள். என்ன பதில் சொல்வது?

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஒரு குளிர்பான நிறுவனத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்தது என்று, தன் குடும்பத்துடன் அங்கு குடி பெயர்ந்தான் கார்த்திக். வசதியான வாழ்க்கை. நல்ல சம்பளம் என்று நன்றாகத்தான் இருந்தான். திடீரென்று ஒரு நாள் தன் வேலையை இழந்தான். அவன் சொன்னவரையில், அவனுடைய உயர் அதிகாரிக்கு இந்தியனான இவனை பிடிக்கவில்லை என்பதே காரணம். வேலை இழந்தபின்னும், வேறு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆஸ்திரேலியாவிலேயே இன்னொரு ஒரு வருடம் ஓட்டினான். சேமிப்பு கரைந்தபோது, இந்திய திரும்பி வந்தான். நல்ல வேலையாக, இந்தியா திரும்பி வந்தவுடன் அவன் மனைவிக்கு ஒரு வேலை கிடைத்தது.

இவனையோ துரதிர்ஷ்டம் இந்தியாவிலும் விடவில்லை. நல்ல படிப்பு, நல்ல முன்னனுபவம் இருந்தும்,அவன் எதிர்பார்த்த வேலை எதுவும் அவனுக்கு அமையவில்லை. ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த காரணத்தால், அவனுடைய குடும்பத்தினருக்கு வாழ்க்கைத்தரத்தை இந்தியா வந்தும் சுருக்கிக்கொள்ள முடியாமல் போனது. மனைவியின் சம்பளம் மட்டும் அவர்களின் வாழ்க்கைத்தரத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை. சில பொதுவான நண்பர்கள் மூலம் கார்த்திக்கின் உயரும் கடன்சுமை பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன்.

எப்போது அவனிடம் பேசினாலும், வேலையின்மை அல்லது துரதிர்ஷ்டம் – இவற்றைபற்றியே பேசிக்கொண்டிருப்பான். அவனுடைய நல்ல உள்ளத்திற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் துணை நிற்கக்கூடாதா என்று எண்ணிக்கொள்வேன்.

எந்தத்திருப்புமுனையும் இல்லாமல் சோர்வுற்ற நேரத்திலும், ஒரு நல்ல நண்பனாக தனக்கு வந்த நேர்முக அழைப்பை பற்றி எனக்கு சொல்லி என்னை எச்சரிக்கைப்படுத்திய அவன் உள்ளம் என்னை உருகவைத்தது. என்னுடைய பாதுகாப்பின்மை என்னிடமிருந்து விலகியது.

“நீ அப்ளை பண்ணுடா…உன்னுடைய முன்னனுபவத்துக்கு ஏற்ற வேலைடா…உன்னுடைய திறமைக்கு, இந்த வேளையில் நன்றாகவே ஜொலிக்க முடியும்…என்ன இன்பர்மேஷன் வேணும்னாலும் கேளு…நான் சொல்றேன்…”

“ரொம்ப தேங்க்ஸ் டா”

+++++

விடுமுறையிலிருந்து திரும்பிய பிறகும் பாஸ்-சின் மௌனம் தொடர்ந்தது. நான் அவரிடம் பேசிய விஷயத்தை பற்றியோ என்ன நிகழ்கிறது என்றோ அவர் ஒரு விளக்கமும் வழங்கவில்லை. கார்த்திக்கை வேலைக்கு விண்ணப்பிக்க சொன்ன பிறகு, இதைப்பற்றி எந்த விளக்கமும் தேவை இல்லை என்ற மனநிலையிலேயே நானும் இருந்தேன்.

+++++

ஒரு வேலைவாய்ப்பு ஆலோசகரிடம் சில ஆலோசனைகளை எடுத்துக்கொண்டேன். புது பயோ-டாடாவை தயார் செய்தேன். இரண்டு-முன்று நிறுவனங்களின் நேர்முகங்களுக்கும் சென்று வந்தேன். பல வருடங்களாக வேலை செய்தும் மிக அதிகமான சம்பளம் வாங்காமல் ஏன் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல திணறினேன். உண்மையாகக்கூறினால், நான் ஏன் இந்த நிறுவனத்தில் இத்தனை வருடங்களாக வேலை பார்த்துவருகிறேன் என்று எனக்கே தெரியவில்லை?

+++++

கார்த்திக் என்னை அப்புறம் தொடர்புகொள்ளவில்லை. அவனுடைய நேர்முகம் நடந்ததா என்றோ எப்படி நடந்தது என்றோ நான் அறிய முயலவில்லை.

+++++

தோல் பதனிடும் நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பெரிய நிறுவனம். பெரிய நிறுவனங்களில் நான் எப்போதும் வேலை செய்தது இல்லை. ஏற்கெனவே நடந்த நேர்முகங்களில் நான் சரியாக பதிலளிக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது. கார்த்திக்கிடமிருந்து ஆலோசனை பெற்றாலென்ன? அவனுக்குதான் பல பெரிய நிறுவனங்களில் பல காலம் வேலை செய்த அனுபவம் இருக்கிறதே!

கார்த்திக் போன்-ஐ எடுத்தவுடன் “நூறு வயசுடா” என்றான்.
“என்ன அப்படி சொல்றே?”
“உங்க நிறுவனத்திலிருந்து எனக்கு ஜாப் ஆப்பர் இன்னிக்கு தான் வந்தது”
ஒரு புறம் மகிழ்ச்சி.மறுபுறம் சோகம்.
“கங்கிராஜுலேஷன்” என்றேன்.
“நீ எனக்கு கீழ வேலை பண்ணுவியாடா?”
“….”
“உங்க பாஸ்-அ கழட்டிவிடப்போறாங்க அடுத்த வாரம்…தன்னோட காரியதரிசிய மொலேஸ்ட் பண்ண முயற்சித்ததா வந்த கம்ப்ளைன்ட்-இல் தன்னுடைய தப்பை உங்க பாஸ் ஒத்துக்கிட்டார்…வேறு வேலை தேடிக்கொள்ள அவர் கேட்ட ரெண்டு மாசம் டைம் அடுத்த வாரம் முடிவடையுது…இன்னும் பத்து நாளைக்குள்ள என்னை ஜாயின் பண்ண சொல்றாங்க…நீ என்னடா சொல்றே?…நான் பாஸ்-ஆ இல்லாம ஒரு குழு அங்கத்தினன் மாதிரி உன்கூட வேலை செய்வேன்…நீ கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம்”

கார்த்திக்-கின் வேலையின்மை பிரச்னை முடிவுக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியே. ஒரு நண்பனே பாஸ்-ஆக வருவதிலும் பிரச்னைகள் இருக்கக்கூடும். ஆனால் அதைப்பற்றி அப்போது யோசிக்கவேண்டுமென்று நான் கருதவில்லை.

பாஸ்-இன் அறையிலிருந்து நூறடி தூரத்திலேயே என் அறை இருக்கிறது. பாஸ்-இன் மன்மத லீலைகள் இவ்வளவு நடந்திருக்கிறது…நான் அறிந்திருக்கவே இல்லை. ஆனால் நண்பனுக்கு வந்த நேர்முக அழைப்பு பற்றிய செய்தி மட்டும் என்னை எட்டி…பாதுகாப்பின்மை, அமைதியின்மை, உள்ளநெகிழ்ச்சி, விட்டுகொடுக்குமுணர்வு என்று பல்வேறான உணர்ச்சிப்ரவாகங்களை என்னுள் எழுப்பியிருக்கிறது. எந்த செய்தி நம்மை அடையும் என்பதும அவை எத்தகைய உணர்வுகளை நம்முள் எழுப்பும் என்பதும் எதை பொறுத்து அமைகிறது? இதற்கு விடை தெரியாது. ஆனால், எப்போது ஒரு குறிப்பிட்ட கணத்தில் பாதுகாப்பின்மையை இழந்து விட்டுக்கொடுப்போம் என்ற உணர்வு தோன்றியதோ.அப்போது என்னுள் ஏதோ ஒன்றுதான் அந்த உணர்வு மாற்றத்தை தெரிவு செய்திருக்கக்கூடும் என்ற திடீர் உட்பார்வை எனக்கு ஆழமான ஆனந்தத்தை அளித்தது. இப்போது என்னுள் தெளிவு நிறைந்திருந்தது. சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு வேலை தேட ஆரம்பித்த நான், இக்கணம்முதல் தன்னினைவுடன் தெரிவு செய்து வேலையை தேடவேண்டும்.

“உனக்கு கீழ வேலை பன்னரதுலே ஒரு பிரச்னையும் இல்ல..சந்தோஷம்தான்…உனக்கு நான் எதுக்கு போன் பண்ணேன்னா, ஒரு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்திருக்கு…அதுக்கான தயாரிப்பில் நீ எனக்கு கொஞ்சம் உதவி செய்வாயா?”