ஆபுத்திரன் – 3

உதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ;  அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ;  பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள்.

“உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ

உடற்கழு தனையே லுன்மகன்  றன்னை

எடுத்துப் புறங்காட் டிட்டனர்  யாரே

உயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில்

செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது

அவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி

எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்”       (23 : 74 – 79)

அவள் வாழ்வில் அதுவரை நடந்தவற்றை இராணிக்குச் சொன்னாள். உதயகுமாரனுக்கும் தனக்கும் இருந்த முன்பிறவித் தொடர்பை விளக்கினாள். பஞ்ச சீலத்தை இராணிக்கு போதிக்கிறாள். செய்த தவற்றைப் பொறுக்க வேண்டும் என்று சொல்லி இராணி வணங்கினாள். மணிமேகலை அதைப் பொறுக்காமல் “என் கணவனின் தாயாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இத்தேசத்து மன்னனின் தேவியாகவும் நீங்கள் இருக்கிறீர்கள் ; எனவே என்னை நீங்கள் வணங்குதல் சரியாகாது” என்று சொல்கிறாள். (சிறை விடு காதை)

மணிமேகலை இராசமாதேவியின் அரண்மனையில் இருக்கிறாள் என்று மாதவி கேள்விப்பட்டு, அவளும் சுதமதியும் அறவண அடிகளைச் சென்று அதைப் பற்றி சொல்கிறார்கள். அறவண அடிகள் இராசமாதேவியின் அரண்மனைக்குச் சென்று சந்திக்கிறார், மரியாதைகளுடன் அவரை வரவேற்ற இராணிக்கு வாழ்வின் நிலையாமையை விளக்கி பேதைமை முதலான பன்னிரு நிதானங்களை அறிவுறுத்தினார்.

“தேவி கேளாய் செயதவ யாக்கையின்

மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்

பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்

இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்

பேதைமை செய்கை யுணர்வே யருவுரு

வாயி லூறே நுகர்வே வேட்கை

பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்

இற்றென வகுத்த இயல்பீ ராறும்

பிறந்தோ ரறியிற் பெரும்பே றரிகுவர்

அறியா ராயி னாழ்நர கறிகுவர்”                             (24 : 101 – 110)

 

அருகில் நின்றிருந்த மணி மேகலையிடம் “நீ பிற அறங்களைப் பற்றி அறிந்தவுடன் உனக்கு இதைப் பற்றி விளக்கமாக உரைப்பேன்” என்று சொல்கிறார்.

அறவண அடிகள் விடை பெறும் சமயத்து அவரை வணங்கி மணிமேகலை அங்கு குழுமியிருந்த மாதவி, சுதமதி மற்றும் இராசமாதேவி ஆகியோரை நோக்கி “இச்சான்றோர் சொன்ன நன்மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந்நகரிலிருப்பேனாயின் உதயகுமரன் மரணம் காரணமாக என்னைப் பற்றி தவறாகப் பேசுவர்; இனி நான் இங்கிருந்து செல்வதே சிறந்தது. இனி ஆபுத்திரனாடடைந்து பின்பு மணிபல்லவமடைந்து புத்தபீடிகையைத் தரிசனம் செய்து யாங்கணுஞ்சென்று நல்லறம் செய்து கொண்டிருப்பேன் ; எனக்கு இடரேற்படுமோ என்று நீங்கள் இரங்க வேண்டாம்” என்று சொன்னாள். அவர்களிடமிருந்து விடை பெற்று சூரியன் மறைந்த மாலைப் பொழுதில் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் துதித்து வணங்கி, மேக மார்க்கமாக பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புறத்திலுள்ள ஒரு பூஞ்சோலையில் இறங்கினாள். அங்கிருந்த முனிவனொருவனை வணங்கி “இந்நகரின் பெயர் யாது? இதனையாளும் அரசன் யார்?” என்று கேட்டாள். “இதன் பெயர் நாகபுரம். இதனையாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன் என்பான். இவன் பிறந்த நாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தறியாது ; மண்ணும் மரங்களும் பல வளங்களை அளிக்கும் ; உயிர்களுக்கு ஒரு நோயும் இல்லை” என்று அம்முனிவன் அரசன் பெருமையைக் கூறினான்.

 

உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை